யார் தமிழனவிரோதி?; கிராமம் தமிழர் அடையாளமா? ஜாதி வெறியின் கோட்டையா?

2195237_ambedkar_periyar

சாதி வேறுபாடுகளுக்கு எதிராக தீவிரமாக போராடுவதுதான் முதன்மையானது என்று நீங்கள் தொடர்ந்து எழுதிய பிறகும், இணையத்தில் உள்ள தமிழ்த்தேசியவாதிகள் அதற்கு பதில் சொல்லாமல் தனிப்பட்ட முறையில், உங்களுக்கு எதிராக தமிழினவிரோதி, தெலுங்கன் என்று உங்களை தொடர்ந்து திட்டி எழுதிகொண்டு, மீண்டும் சாதி வேறுபாடுகள் பார்க்காமல், தமிழர்களாவே ஒன்று சேருங்கள், தமிழுக்காக போராடுங்கள் என்று அழைக்கிறார்களே?

தமிழ்ச்செல்வன்

கிராமத்தில் இருநது நகரத்த்தி்ல் வந்து குடியேறியவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், சினிமாக்காரர்கள் இவர்கள் எப்போதும், தங்கள் கிராம வாழ்க்கையைப் பற்றி பெருமையாக, ‘அந்த அழகான குளம்,  மாரியம்மன் கோயில் ஆலமரம், ஆறுமுக கோனார் வீட்டு டீ கடை, அப்பாவியான கிராமத்து மக்கள்,  அந்த மாந்தோப்பு,  சுத்தமான காத்து, சுவையான கிணத்து தண்ணீ…’ என்று சிலாகித்து கொள்வார்கள்.  தங்கள் எழுத்துக்களிலும், திரைப்படங்களிலும் அதை தீவிரமாக பதிவும் செய்வார்கள்.

இப்படி கிராம வாழ்க்கை குறித்து, பெருமை கொள்கிறவர்கள் பிற்படுத்தப்பட்ட, பார்ப்பனரல்லாத உயர்ஜாதிக்காரர்களாகத்தான் இருப்பார்கள். மிக பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்கள் நாட்டுப்புற வாழ்க்கையை சிலாகிக்க மாட்டார்கள். ஏனென்றால் இந்திய  கிராம முறை மிகத் தீவிரமான ஜாதிய உணர்வு நிறைந்ததாக, தலித் விரோ்தம் கொண்டதாக இருப்பதே அதற்குக் காரணம்.

டாக்டர் அம்பேத்கர் இந்திய கிராமங்களைப் பற்றி சொல்லும்போது,இந்து கிராமம் இந்து சமூக அமைப்பின் செயல்முறை விளக்க வரைபடமாகும். அதில், இந்து சமூக அமைப்பு முழுவீச்சில் செயல்படுவதைக் காணலாம். சராசரி இந்து, இந்தியக் கிராமத்தைப் பற்றியப் பேசும்போதெல்லாம் பேரானந்தத்தில் திளைக்கிறார். உலகிலேயே வேறேங்கும் ஈடு, இணை காணமுடியாத இலட்சிய சமூக அமைப்பு அது என்று அவர் எண்ணுகிறார்

இது (கிராமம்) தீண்டாதவர்களைச் சுரண்டி வாழ்வதற்காக இந்துக்களால் உருவாக்கப்பட்ட ஒரு வகைக் காலனி ஆதிக்கமாகும். தீண்டாதவர்களுக்கு உரிமைகள் எதுவும் இல்லை. அவர்கள் வாழ்வதெல்லாம் காத்திருக்கவும், பணி செய்யவும், பணிந்து நடக்கவுமே செய்வதற்கு அல்லது செத்து மடிவதற்கு என்றார்.

பெரியாரும், கிராமங்களை நகரங்கள் சுரண்டி தின்பதற்காகவும், அதன் ஜாதிய அபினமானத்திற்காகவும்,நாட்டில் கிராமங்களே எங்கும் இல்லாதபடி அவற்றை ஒழித்து விடுவதேயாகும். அதுமாத்திரமல்லாமல் கிராமங்கள் என்கிற வார்த்தை அகராதியில் இல்லாதபடி செய்துவிட வேண்டும் அரசியலிலும் கூட கிராமம் என்ற வார்த்தை இருக்கக் கூடாது. என்று கண்டித்தார்.

இந்த இரு தலைவர்களின் கிராமங்களின் மீதான கோபம், காந்தியின் கிராமராஜ்ஜியத்திற்கு நேர் எதிரானது. உண்மையானது. நேர்மையானது.

கிராமத்திற்குள், ஜாதி இந்துக்கள் சகஜமாக ‘போக வர’ இருக்கிற இடங்களுக்கு எல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் ரகசியமாக கூட போக முடியாது. அதையும் மீறி போனால், பிணமாகத்தான் வேண்டும்.

ஜாதி இந்துவிற்கு அழகானதாக இருக்கிற குளம், தாழ்த்தப்பட்டவருக்கு ஆபத்தானதாக இருக்கிறது. தாழ்த்தப்பட்டவர் அழகான குளத்தில் ஆசையாக இறங்கி கால் நினைத்தால்,  அவரை ஊனமுற்றவராக மாற்றிவிடுவார்கள் ‘அப்பாவியான’ கிராமத்து மக்கள்.

சுவையான கிணத்து தண்ணீரை ருசி பார்த்தால்,   ஆலகால விசத்தை குடித்த சிவனின் உயிர் காக்க தொண்டை குழியை பிடித்து அமுக்கிய பார்வதியை போல், தண்ணீர் தொண்டைக்குள் இறங்குவதற்கு முன் ஒரே அமுக்காக அமுக்கி தாழ்த்தப்பட்டவரின் உயிர் போக்குவார்கள் ஜாதி இந்துக்கள்.

ஆறுமுக கோனார் வீட்டு டீ கடை, ரெட்டை டம்பளரோடு இருக்கிற அவமானச் சின்னம்.

மாரியம்மன் கோயில் ஆலமரம், கோயிலினுள் நுழைந்து பக்தியோடு அம்மனை கும்பிட்டால், அந்த ஆலமரம்தான் தாழ்த்தப்பட்டவருக்குத் தூக்குமேடை.

மாந்தோப்பு – தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துபட்டு கொலை செய்யப்படுகிற  இடம்.

கிராம வாழ்க்கை முறை இவ்வளவு கொடூரமாக இருந்தால், ஒரு தாழ்த்தப்பட்டவர் எப்படி அதை சிலாகிப்பார்?

அதுபோல், ‘ ஈழப்பிரச்சினையோடு தமிழகப் பிரச்சினை பொருத்தி பார்ப்பது பொருத்தமல்ல. இந்தப் போக்கு,  ஈழ மக்களின் துயரங்களுக்காகப் போராடுகிற தன்மையை வலுவிழுக்கச் செய்யும். தமிழ்நாட்டுப் பிரச்சினையும், ஈழ மக்கள் பிரச்சினையும் ஒன்றல்ல. ஜாதிகளுக்கு எதிராக, தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடத்தப்படுகிற வன்கொடுமைகளுககு எதிராக, குரல் கொடுப்பதுதான் தமிழக அரசியல் சூழலுக்கு முதன்மையானது.  தமிழ்த் தேசியவாதிகள் இந்து மத எதிர்ப்பு, ஜாதி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு இவைகளுக்கு முதன்மை கொடுக்க வேண்டும்’ என்று நாம் சொன்னால், அதில் உள்ள நியாயத்தை தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கிற தமிழ்த்தேசியவாதிகள், புரிந்து கொள்கிறார்கள். ஒத்துக்கொள்கிறார்கள்.

அதற்கு மாறாக, தமிழர்களிடம் பிளவை உண்டு பண்ணுபவனாக, நம்மீது குற்றம்சாட்டி, கோபம் கொண்டு வசவு வைப்பவர்கள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். அல்லது தலித் அல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.

இதற்கு காரணம் தமிழ் உணர்வு அல்ல; ஜாதி உணர்வும், தலித் விரோதமும்தான். அவர்களின் தமிழ் உணர்வு அவர்களின் ஜாதி உணர்வுக்கு, மத உணர்வுக்கு எதிரானதாக இல்லை. அதனால்தான் தமிழ் உணர்வு பீய்ச்சி அடிக்கிறது. ஆனால், பெரியார்-அம்பேத்கரின் அரசியல், அவர்களின் ஜாதி உணர்வுக்கு வேட்டு வைப்பதாக இருப்பதால்தான் இந்தக் கோபம். அல்லது அவர்களை புறக்கணிக்கிறத் தன்மை. இதை தீவிரமாக வலியுறுத்துவதால்தான், என்னை தமிழுக்கு, தமிழனுக்கு எதிரானவனைப்போல் சித்தரிக்க முயலுகிறார்கள்.

மத மூடத்தனங்கள் நிரம்பியிருக்கிற தமிழை ‘காட்டுமிராண்டி மொழி’ என்று சொன்ன பெரியார்தான், தமிழ் மீது இந்தி ஆதிக்கம் வந்தபோது எதிர்த்து நின்றார்.

அப்போது தமிழறிஞ்ர்கள், கம்பராமாயணத்தில் கவிழ்ந்துகொண்டு இலக்கிய தாகம் தீர்த்துக் கொண்டும், பெரிய புராணத்திற்கு பேன் பார்த்துக்கொண்டும் இருந்தார்கள்.

அதுபோல், ஜெயகாந்தன் – பார்ப்பனர்கள் நிறைந்த சபையில், தமிழை, தமிழறிஞர்களை கேவலப்படுத்தி சமஸ்கிருதத்தை உயர்த்திப் பேசியபோது,  அதே மேடையில் ஏறி ஜெயகாந்தனை கண்டித்தவன் நான்தான்.   அப்படி பேசியதற்காக,  தமிழகம் முழுக்க தோழர்களாலும், பெரியார் தொண்டர்களாலும் ஜெயகாந்தனுக்கு எதிர்ப்பும், மன்னிப்பு கேட்கும்  சூழலை உருவாக்கியவனும் நான்தான்.  என்னை போன்ற பெரியார் தொண்டர்கள்தான். தமிழறிஞர்களோ-தமிழன உணர்வாளர்களோ அல்ல.

மாறாக, அதே கூட்டத்தில் பார்வையாளராக வந்திருந்த ‘பிள்ளைமார் தமிழறிஞர்கள்-கவிஞர்கள்-எழுத்தாளர்கள்’ சிலர், அமைதியாக ஜெயகாந்தினிடம் பல்லைக் காட்டிக் கொண்டு அசடு வழிந்து கொண்டிருந்தார்கள்.

ஈழத்தமிழர்களுக்கான போராட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம், கட்சி வேறுபாடின்றி ஜாதி வேறுபாடின்றி மாபெரும் எழுச்சியை ஏற்படு்த்திய தியாகி முத்துக்குமார், என் உடலை காவல் துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்என்று தமிழனத்திற்கான தன் உயிலில் எழுதியிருந்தார். ஆனால், அங்கிருந்த தமிழினத் தலைவர்களும், தமிழன உணர்வாளர்கள் பலரும் முத்துக்குமார் உடலை உடனே எடுத்து எரித்துவிடுவதில், காவல் துறையைவிட அதிக ஆர்வம் காட்டினார்கள்.

உணர்வுமிக்க வழக்கறிஞர் நண்பர்களோடு இணைந்து, முத்துக்குமார் உடலை அன்று எடுக்க முடியாத சூழலை ஏற்படுத்தி, அதை மறுநாளுக்கு மாற்றியது பெரியார் தொண்டானாகிய  நான்தான்.

ஆனால், இன்று?

முத்துக்குமாரை  ஈழமக்களின் ஆதரவு தீப்பபந்தமாக,  மாற்றுவதை விட்டுவிட்டு, திமுக எதிர்ப்பாளராக மட்டுமே மாற்றிக் கொண்டார்கள், இந்த சவடால் தமிழ்த்தேசியவாதிகள்.

அவர் பெயரை கூட்டம் சேர்ப்பதற்காகவும், புத்தகம் விற்பதற்கான ஒரு நல்ல பிராண்டாகவும், ஜாதி அடையாளம் தந்தும் அவமானப்படுத்துகிறார்கள், ஜாதி உணர்வு தமிழ்த்தேசியவாதிகள்.

எப்போது எதை செய்யவேண்டும்? எதற்கு முன்னுரிமை தரவேண்டும்? என்று தெளிவாகத் தெரிந்திருப்பவன்தான் சமூக அக்கறை உள்ளவனாக இருக்க முடியும். மாறாக, அரசியல் தெளிவின்றி வெறும் ஆர்வமும், கோபமும் இருந்தால் அவர்களை சந்தர்ப்பவாதிகள்தான் பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்வார்கள். சமூகத்திற்கு எந்த நன்மையும் ஆகாது.

***

தமிழறிஞர்களுக்கு எதிராக, ஜெயகாந்தன் பேசிய விவகாரத்தை பற்றி தெரிந்து கொள்ள, நெல்லை கண்ணனை கண்டித்து, குமுதத்திற்கு நான் எழுதி ‘அது’ பிரசுரிக்க மறுத்த இந்தக் கடிதத்தை, மீண்டும் பிரசுரிக்கிறேன்.

பாரதி + ஜீவா = ஜெயகாந்தன்

16.5.2005 தேதியிட்ட குமுதம் இதழில் ஜெயகாந்தனுக்கு நெல்லை கண்ணன் எழுதிய கடிதத்தை மறுத்த ஒரு கடிதம்.

23.4.2005 அன்று மாலை மயிலாப்பூர் ஆர்.கே.சபாவில் சமஸ்கிருத ஸேவ ஸமிதி சார்பாக ஜெயகாந்தனுக்கு நடந்த பாராட்டுவிழாவில், ஜெயகாந்தன் பேசி, அந்த அநாகரிகமானப் பேச்சை நான்தான் வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்தினேன்.

குமுதத்தில் ஜெயகாந்தன் பேசியதாக நெல்லை கண்ணன் குறிப்பிட்டிருக்கிற அந்த வாக்கியங்கள் அப்படியே, மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் தங்களின் துண்டு பிரசுரத்தில் குறிப்பிட்டு, ஜெயகாந்தனுகுக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து 28.4.2005 அன்று ராணி சீதை அரங்கத்தில் அவருக்கு நடந்த மற்றொரு பாராட்டு விழாவில் அவர்கள் விநியோகத்ததில் இருந்தது.

அடுத்து, ‘ஸம்ஸ் கிருத ஸேவா ஸமிதி’யில் ஜெயகாந்தன் பேசிய மக்கள் விரோதப் பேச்சை, அம்பலப்டுத்தியவன் என்கிற முறையிலும், அதே மேடையில் நிகழ்ச்சி முடிந்தபிறகு, ஜெயகாந்தனிடம், ‘‘உங்களுக்க இங்கு நடந்த பாராட்டு விழா, உங்கள் திறமைக்கு கிடைத்த பாராட்டல்ல. உங்களின் இந்தச் செயலுக்கு கிடைத்ததுதான்’’ என்று சொன்வன் என்ற முறையிலும், (‘‘ஆமாம், அதற்காகதான் இந்தப் பாராட்டு’’ என்றார் ஜெயகாந்தன் . அருகில் முனைவர் பொற்கோ இருந்தார்.)நெல்லை கண்ணன் கடிதத்தில் உள்ள அபத்தங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஜெயகாந்தனின் தமிழ், தமிழர் விரோதப் போக்கை கண்டிக்கிறார் நெல்லை கண்ணன். சரிதான். ஆனால், உங்களின் ஞானத்தந்தை பாரதியும், ஜீவாவும் போல் நீங்கள் இல்லை என்று கண்ணன் சொல்லியிருப்பது, ‘பா.ஜ.க மதவெறி கட்சி’ என்று சொல்லுகிற ஒருவர், ‘ஆர் எஸ்.எஸ், அற்புதமான கட்சி’ என்று சொல்லுவது போல் இருக்கிறது.

பாரதி + ஜீவா = ஜெயகாந்தன்

பாரதியின் ஜிராக்ஸ் காப்பிதான் ஜெயகாந்தன். ‘ஸமஸ் கிருத ஸேவ ஸமிதியில்’ ஜெயகாந்தன் சொன்னக் கருத்து, கருத்தென்ன ஒவ்வொரு வார்த்தையும் பாரதிக்குச் சொந்தமானது.

‘‘வரண் வேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்’’ – ஜெயகாந்தன்.

“வேதமறிந்தவன் பார்ப்பான் – பல

விந்தை தெரிந்தவன் பார்ப்பான்

நீதி நிலை தவறாமல் – தண்ட

நேமங்கள் செய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி –

பிறர்பட்டினி தீர்ப்பவன் செட்டி

……………………………………………………..

…………………………………………………….

நாலு வகுப்பும் இங்கொன்றே – இந்த நான்கினில் ஒன்று குறைந்தால்

வேலை தவறிச் சிதைந்தே – செத்துவீழ்ந்திடும் மானிடச் சாதி”

பாரதியார்

‘‘தமிழைவிட சமஸ்கிருதம் உயர்வானது. சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது’’ -ஜெயகாநதன்

“இந்தியாவில் பெரும்பான்மையான பாஷைகள் ஸமஸ்கிருதத்தின் திரிபுகளேயன்றி வேறல்ல. அங்ஙனம் திரிபுகளல்லாததுவும் ஸமஸ்கிருதக் கலப்புக்குப் பிந்தியே மேன்மை பெற்றனவானம்.”

’‘நமது முன்னோர்களும் அவர்களைப் பின்பற்றி நாமுங் கூடப் புண்ணிய பாஷையாக கொண்டாடி வரும் ஸமஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதை தெய்வபாஷை என்று சொல்வது விளையாட்டன்று. மற்ற ஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்கு தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா? அதன் பொருட்டே அதைத் தெய்வபாஷை யென்கிறொம்.”

“எந்த நாட்டினரைக் காட்டிலும் அதிகமாக யதார்த்தங்களைப் பரிசோதனை செய்து பார்த்த மாஹான்கள் வழங்கிய பாஷை”

“தமிழர்தகளாகிய நாம் ஹிந்தி பாஷையிலே பயிற்சி பெறுதல் அவசியமாகும்.  ‘இங்கிலிஷ் பாஷை அன்னியருடையது, நமது நாட்டிற்குச் சொந்தமானதன்று. நமது நாட்டில் எல்லா வகுப்பினர்களுக்கும் ஸ்திரமாகப் பதிந்துவிடும் இயற்கை உடையதன்று. ஹிந்தியோ அங்ஙனமன்ற”’

பாரதியார் (பாரதியார் கட்டுரைகள் தொகுப்பு)

ஆக, என்றும் பேசுகிற வாய் ஜெயகாந்தனுடையதாக இருக்கலாம். அதிலிருந்து வருகிற வார்த்தைகள் பாரதியுடையது.ஜெயகாந்தனை விமர்சிக்கற ஒருவர் பாரதி ஆதரவாளராக இருக்க முடியாது.  இருக்க கூடாது.

அடுத்து ப.ஜீவானந்தம்

தந்தைபெரியரை எவ்வளவோ பேர் அவதூறாக, கேவலமாக எழுதியும் பேசியும் இருக்கிறார்கள். ஆனாலும் ப. ஜீவானந்தம் பெரியாரை கேவலப் படுத்தியதுப் போல்,. இதுவரை யாரும் செய்ததில்லை. இதோ பெரியார் மீது ஜீவா அடித்துச் சேற்றில் இருந்து சில துளிகள்.

சுயமரியாதைத் தந்தை, சிந்தனை சிற்பி, புரட்சிப் பெரியார் என்ற பெரிய பட்டங்களைச் சூடி, சமதர்ம இயக்கத்தை பொதுமக்கள் புரட்சி எழுச்சியை காட்டிக் கொடுத்திருக்கிறார்.

அழுகிப் போன ஜமீன்தாரி, நிலச் சுவான்தாரி வர்க்கத்தின் பாதை. பிற்போக்குப் பணமூட்டைகளின் பாதை, ஈரோட்டுப் பாதை.

1935 மார்ச் 10 ஆம் நாள் குடி அரசு மூலம் மானங்கெட்டத்தனமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். பொய்புளுகுகளோடு. கனமான பாஷைப் பிரயோகத்தில் டாட்டன் ஹாமையும் மிஞ்சினார் ஈ வெ.ரா என்பது உறுதி. (பா.ஜீவானந்தம் எழுதிய ஈரோட்டுப் பாதை சரியா? என்ற நூலிலிருந்து)

இதுதான் ஜீவாவின் ‘நேர்மை’ . இந்த ஜீவாவிடம் இருந்து ஜெயகாந்தன் கற்றுக்கொண்டது, மார்க்சியத்தை அல்ல. பெரியார் மீதான காழ்ப்புணர்ச்சியை, திராவிட இயக்கத்தின் மீதான வெறுப்பை. அதனால்தான் ‘ஜெயந்திரன்’ போன்ற எவ்வளவு மோசமான விஷயத்தையும் ஆதரிக்கிற ஜெயகாந்தன்,

தன்னுடைய சந்தர்ப்பவாதத்திற்காகக் கூட திராவிட இயக்கங்களை ஆதரிப்பதில்லை, என்பது மட்டுமல்ல, அவைகளை தொடர்ச்சியாக எதிர்த்துக் கொண்டே வந்திருக்கிறார். சமீபத்தில் ஞானபீட விருது பெற்றமைக்காக வாழ்த்துச் சொல்ல முயற்சித்த கலைஞரை திட்டமிட்டு அவமானப்படுத்தியது வரை.

ஆக, தமிழைத்தாண்டி சமஸ்கிருத மதிப்பும், வேதம், பகவத்கீதை, இந்து, இந்தி இவைகள்தான் இந்தியா என்கிற பாரதியின் துடிப்பும்- பெரியார் மீதான காழ்ப்புணர்ச்சி, திராவிட இயக்க எதிர்ப்பு என்கிற ஜீவாவின் வெறுப்பும் கலந்து செய்த கலவைதான் ஜெயகாந்தன்.

இந்த ‘தத்துவ’ பின்னணியே ஜெயகாந்தனுக்கு ‘ஞான பீட விருது ’ வரை பெரிய அங்கீகாரத்தைப் பெற்று தந்திருக்கிறது. இதற்குப் பெயர்தான் ஜெயகாந்தனிசம். இப்படியாக உண்மை இருக்க, நெல்லை கண்ணனோ அசலைப் புகழ்ந்து, நகலை நக்கல் செய்கிறார். இதுவும் ஒருவகையில் ஜெயகாந்தனிசமே.

***

குமுதம் இந்தக் கடிதத்தைப் பிரசுரிக்கவில்லை. பாரதிக் குறித்த விமர்சனம் இடம் பெற்றிருப்பதே அதற்குக் காரணம். எல்லோரையும் கேலி செய்கிற குமுதம், இதுவரை பாரதிப் பற்றிய சின்னக் ‘கீறலை’க் கூட வெளியிட்டதில்லை என்பதே என் ஞாபகம்.

‘ஜெயேந்திரன் கொலை செய்தார்’ என்று அரசு ஆதாரங்களைச் சொல்லி கைது செய்த போதிலும்,‘இல்லை அவர் கொலை செய்து இருக்கமாட்டார்’ என்று நம்ப மறுக்கிற அவரின் பார்ப்பனப் பக்தர்களைப் போல், ‘பாரதி இந்து மத, பார்ப்பனச் சிந்தனையாளர்கள்தான்’ என்பதை அவரின் எழுத்து உதாரணங்களோடு நான் நிருபித்த போதும், (‘பாரதி ’ய ஜனதா பார்ட்டி நூலில்) பாரதி பக்தர்கள் அதை நம்ப மறுக்கிறார்கள். இருக்கட்டும்.

மூடநம்பிக்கைகள் ‘முற்போக்காளர்களிடம்’ (அறஞர்கள்) இருக்கமுடியாது என்று நினைப்பதுக் கூட ஒருவகையான மூட நம்பிக்கைதானே. அதற்காக குமுதத்தை ‘முற்போக்கு’ என்று சொல்வதாக அர்த்தமில்லை.

குமுதம்-முற்போக்காளர்களும்- மதவாதிகளும் உள்ளார்ந்த உணர்வோடு, சந்தித்துக் கொள்கிற மையப்புள்ளி பாரதி என்பதற்காகச் சொன்னேன்.

இந்த கடிதத்தைப் பிரசுரித்த சிந்தனையாளன், கவிதாச்சரண், நாளைவிடியும் இதழ்களுக்கு நன்றி.-வே.மதிமாறன்

16.5.2005

14 thoughts on “யார் தமிழனவிரோதி?; கிராமம் தமிழர் அடையாளமா? ஜாதி வெறியின் கோட்டையா?

  1. சாதிக்கு அடிபடையாக இருப்பதே இந்த கிராமங்கள்தான் .தமிழ் உணர்வு என்று பேசுபவர்கள் பெரும்பாலும் சாதி உணர்வாளர்களாக இருப்தால்தான் அவர்கள் கருத்துக்கு மதிப்பு இல்லாமல் இருக்கிறது. இங்கு உள்ள சாதி உணர்வும் ஒரு காரணம் ஈழ மக்களின் இந்த நிலைக்கு. இந்த சாதி உணர்வுதான் நமது ஒற்றுமையை கெடுகிறது.அதே சமயம் , இந்த சாதி வெறி பிடித்த தமிழ் உணர்வாளர்களுக்கு !? எதிராக பேசுவதாக நினைத்து கொண்டு மேதகு பிரபாகரன் அவர்களையும் ,விடுதலைபுலிகளையும் கண்மூடித்தனமாக சிலர் எதிர்கின்றனர் ,தங்கள் காழ்புணர்ச்சியை வெளிபடுதுகின்றனர்.அதுவும் கண்டிக்கத்தக்கதே !

  2. Saathigal ilai yendru solu nanbargal india vil irukum vilage ai poi paarungal…

    Ungaluku puriyum..

    Intha Aandu nanbar Sasi avar ooruku poi paarthen appo dhan enaku theriyum india vil oru 1 Name la 2 vilage iruku…

    intha kodumaigal elm oolikka nam poradda Vendum…

    Varungal…

  3. சாதி ஒழிப்பும் பெண் எழுச்சியும் தான் ஒருவன் மனிதனாக வாழ்வதற்கான ஆதாரங்கள். இவற்றை எவன் முன்னெடுக்கவில்லையோ அவன் மனித இனத்திற்கே கேடுவிலைப்பவன், மனித இனத்திற்கு எதிரானவன்.

    மேலும் சாதிவெறியும், பெண்ணடிமையும் வளரும் வேர் கிராமங்கள்தான். ஒருவர் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு புலம் பெயர்ந்தால் அவரின் சாதி அழிக்கப்பட்டுவிடும் என்வே அய்யா சொன்னதுப்போல் கிராமங்கள் அகற்றப்பட்டு மக்கள் அனைவரும் ஒன்றெர கலந்திருப்பதுதான் நன்று

  4. சாதீயம் குறித்தான ஒரு அருமையான அலசல், நன்றி.

    ஜெயகாந்தனையும் ஜீவாவையும் நேசிப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு..

  5. methagu prabakaren! nalla kamadi matt. ela porattathin tholviyin ootru kan avarthan yenpathai yeppadi vasathiyaga maranthu poneergal.

  6. யோகேஷ், ஈழ போராட்டத்தின் அடிப்படை தெரியாமல் பேச வேண்டாம். இன்று ஈழ பிரச்சினையை பற்றி பேசுவதற்கே மேதகு பிரபகாரன் அவர்கள் தான் காரனம்.அவர் இல்லாதிருந்தால் என்றைக்கோ தமிழ் இனம் அழிந்திருக்கும், இன்றைய நிலைக்கு காரனம் உங்களை போல் அறியாமையில் இருபோரே. ரஜினிகாந்தை தலைவராக ஏற்றுக்கொள்ளும் சமூகத்தில் மேதகு பிரபாகரன் என்று சொன்னால் காமெடியாகத்தான் இருக்கும்.

  7. yogesh ஏன் உங்களுககு சிங்கள ராஜபக்சேமேல் வராத கோபம் மேதகு பிரபாகரன் மீது வருகிறது. இதுதான் பார்ப்பன புத்தி.

  8. நண்பர்கள் சுந்தரம், மட்ட் அவர்களுக்கு, “பிரபகாரன் இல்லாதிருந்தால் என்றைக்கோ தமிழ் இனம் அழிந்திருக்கும்”.ஆகா! பிரபகாரன் மீது நீங்கள் கொண்டிருக்கும் பக்தி மெய்சிலிர்க்க வைக்கிறது.ஈழ போராட்டத்தின் அடிப்படை தெரியாமல் பேசுவது நானா இல்லை நீங்களா? ஈழ மக்களின் போராட்டத்தை ராணுவ சாகசமாக மாற்றி புறநானுற்று பெருமை பேசி இன்று முள் வேலிக்குள் நிராதரவாக விட்டு சென்றதும் மேதகு பிரபாகரன் தான்.ஈழத்தில் முஸ்லீம்களைப் வெளியேற்றியது , தலித்துகள் ஒடுக்கப்பட்டது , மாற்றுக்கருத்தாளர்கள் கொலை செய்யபட்டது என எவ்வளவு அராஜகங்கள்.
    இவற்றை எல்லாம் பேசினால் “இதுதான் பார்ப்பன புத்தி” யென்று கட்டம் கட்டிவிடுவீர்கள். சபாஷ்!

  9. there is no caste in cities? wat a stupid idea!. try to rent a house in a well developed city like chennai/coimbatore, then you will realise the fact.
    in villages, people are not educated so they consider caste system as a part of their tradition (i agree that it is not good), but wat abt urban areas? even an educated person is conscious about caste.
    this applies to all castes. i see many dalits and minorities treat other caste people in a bad manner just because they wanted to take revenge on something. not all people from upper caste are bad and not all from lower caste are good. the author portrays upper caste people as evil (PS : i do not belong to an upper caste). you have to know the meaning of prejudice (thats what your thoughts are named)

  10. yogesh! i dont know why brahmins hate prabakaran for no reasons. you think they wud have done something for eelam tamils if there were no prabakaran. if so, pls let me know.

  11. //தாழ்த்தப்பட்டவர் அழகான குளத்தில் ஆசையாக இறங்கி கால் நினைத்தால், அவரை ஊனமுற்றவராக மாற்றிவிடுவார்கள் ‘அப்பாவியான’ கிராமத்து மக்கள்.//….அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்..!

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading