பெரியார்; தலித் விரோதியா?

https://i0.wp.com/vemathimaran.com/wp-content/uploads/2008/09/periyar71.jpg?w=1170

ந்தை பெரியார், தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை அல்லது தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக இருந்தார் என்று பொய் பிரச்சாரம் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.

சமூக அக்கறையாளர்கள் போர்வையில் இப்படி பெரியாருக்கு எதிராக பேசுகிறவர்கள் சுயஜாதி வெறியார்களாகவே இருக்கிறார்கள். பெரியாரை விமர்சித்துவிட்டு; அவருக்கு மாற்றாக, தன் ஜாதியை சேர்ந்த தலித் விரோதிகளையும், தலித் துரோகிகளையும் இன்னும் அண்ணல் அம்பேத்கர் காலத்தில் அவருக்கு எதிராக இருந்தவர்களையும், அவருக்கு துரோகம் செய்தவர்களையும் பரிந்துரைக்கிறார்கள்.

ஆதிக்க ஜாதிகளின் தலித் விரோததிற்கு எதிராகவும், ஜாதி ஒழிப்பிற்காகவும், தீண்டாமை எதிர்ப்பிற்காகவும் எந்த செயல் திட்டங்களோ, சிறிய அளவிலான முயற்சியோ, ஏன் சிந்தனையோ கூட இல்லாமல், நேர் எதிராக வெறும் ஜாதி உணர்வை ஊட்டி இளைஞர்களை சீரழிக்கிற மிக மோசமான இன்றைய சூழலில், ‘சிந்தனையாளன்’ இதழில் வெளியாகி இருக்கிற இந்தக் கட்டுரையை மிக முக்கியமானதாக கருதி, இங்கே வெளியிடுகிறேன்.

-வே. மதிமாறன்

சுயமரியாதை இயக்கமும் சாதி ஒழிப்பும்

கனலி

சுயமரியாதை இயக்கத்தின் முதன்மைக் குறிக்கோள்களில் ஒன்று சாதியொழிப்பு. தந்தை பெரியார் தம் வாழ்வின் பெரும்பகுதியைச் சாதியும் மூடநம்பிக்கையும் ஒழிந்த புதிய தமிழகத்தைக் காண வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே செலவிட்டார். பெரியார் மறைந்து 37 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனால் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான போர் இன்னும் தொடர்கிறது.

1929ஆம் ஆண்டு பிப்ரவரி 17, 18 தேதிகளில் செங்கல்பட்டில் நடைபெற்ற முதலாவது மாகாண சுய மரியாதை மாநாட்டில் சாதி, தீண்டாமை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இன்னும் கால்பங்கு வெற்றியைக்கூட அடையவில்லை என்பது கவலை தரும் நிலையாகும். அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் ஒன்று வருமாறு:

4(அ) மனிதநேயத்தின் அடிப்படையிலும், தேசிய முன்னேற்றத்திற்குத் தேவை என்ற முறையிலும் தீண்டாமை என்னும் நிறுவனத்தை ஒழிக்கப் பாடுபடுமாறு இம்மாநாடு அழைக்கிறது. எந்த ஒரு மனிதரும் தீண்டத்தகாதவராக, அணுகத்தகாதவராக, பார்க்கத் தகாதவராகக் கருதப்படக் கூடாது. எந்த ஒரு சமூக ரீதியான அல்லது குடியுரிமை ரீதியான பாரபட்சங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த மக்கள் மீதும் பிரயோகிக்கக்கூடாது. அனைத்துக் குடிமக்களுக்கும் அனைத்துவிதமான பொதுச்சாலைகள், குளங்கள், கிணறுகள், குடிநீர்க் குழாய்கள், கோவில்கள் மற்றும் மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் சம உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்.

தொடக்கமே சாதி எதிர்ப்பு:

சுயமரியாதை இயக்கத்தைக் காணும் முன் பெரியார் தீவிர காங்கிரசுக்காரராகவும், காந்தியப் பற்றாளராகவும் இருந்தார். ஆனால் அவர் காங்கிரசிலிருந்த காலத்திலேயே சாதியத்தையும் தீண்டாமையையும் கடுமையாக எதிர்த்தார். 1922 திருப்பூர் காங்கிரசு மாநாட்டை ஒட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் இவற்றுக்குப் பாதுகாப்பாய் உள்ள இராமாயணத்தையும் மனு ஸ்மிருதியையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என முழங்கினார்.

1925இல் காரைக்குடியில் நடைபெற்ற மாவட்ட அரசியல் மாநாட்டில் தமிழர்களுக்குச் சாதிமுறை புதிதானது. மனுஸ்மிருதியின் வழியாகத்தான் பார்ப்பனர்களால் தமிழர்கள் மீது சாதிமுறை திணிக்கப் பட்டது. பார்ப்பனர் தவிர்த்த மற்ற அனைவரும் சூத்திரர்தான் என்று பேசினார்.

காங்கிரசிலிருந்து வெளியேறியபின் சாதியொழிப்புக் கருத்தில் காந்தியாருடன் கடுமையாக மோதினார். ஒருவர் தனது விருப்பப்படி எந்த ஒரு சாதியையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்கிற காந்தியின் தவறான கருத்தை எதிர்த்தார். சாதிமுறையை ஒழிப்பது என்பது வருணாசிரம தருமத்தை ஒழிப்பதில்தான் அடங்கியுள்ளது என்ற கருத்தில் உறுதியுடன் செயல் பட்டார்.

சாதி எதிர்ப்புக் கருத்தியலில் சலியாத உறுதி:

1927 திசம்பர் 4 அன்று வடார்க்காடு மாவட்டம், குடியாத்தத்தில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் மனுதர்ம சாஸ்திர நூல் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. 1928 தொடங்கி ஒரு குறிப்பிட்ட காலம் வரை பெரியாரைப் பின்பற்றித் தத்தம் சாதிப் பெயர்களைக் கை விட்டவர்களின் பெயர்கள் குடிஅரசு ஏட்டில் வெளி வந்தன. சுயமரியாதைக்காரர்கள் தங்கள் சாதிப் பெயரைப் பயன்படுத்துவதினின்று விலகி நிற்க வேண்டும் எனப் பெரியார் குடிஅரசு ஏட்டில் வேண்டுகோள் விடுத்தார்.

1930 மே 10, 11 தேதிகளில் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாட்டிற்குப் பம்பாயைச் சேர்ந்த எம்.ஆர். ஜெயகர் தலைமை யேற்றார். அம்மாநாட்டில் ‘சாதிகளும் அவற்றின் தீய போக்குகளும் இந்தச் சமூகத்திலிருந்து சாதிய வேறு பாடுகளையும் பாகுபாடுகளையும் முற்றிலுமாக அகற்ற வேண்டும்’ என்பதையே காட்டுகிறது. அதன் பிறகே சமூக அமைதியும், நல்லிணக்கமும் பல்வேறு சமூகங்களிடையே ஏற்படும். சாதியொழிய வேண்டும் என்பதே சுயமரியாதை இயக்கத்தின் முதன்மைக் கொள்கைகளில் ஒன்றாகும் என அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 1931இல் விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது மாகாண சுயமரியாதை மாநாடு தொடங்கி 1944இல் சேலத்தில் நடைபெற்ற பதினாறாவது மாகாண நீதிக்கட்சி மாநாடு வரை இதே நிலைப்பாட்டில்தான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தாழ்த்தப்பட்டோர் சிக்கல் குறித்தும், தீண்டாமையை ஒழித்தாக வேண்டும் என்னும் கருத்துக்கு முதன்மை தந்தும் குடிஅரசு ஏடு தொடர்ந்து செய்திகள் வெளியிட்டது.

இந்துச் சனாதனவாதியும் கடைந்தெடுத்த பிற்போக்குப் பார்ப்பனருமாகிய மதன்மோகன் மாளவியா பம்பாயில் 1932 செப்டம்பர் 30ஆம் நாள் நடைபெற்ற “அரிஜன சேவா சங்க”த் தொடக்க விழாவில் பேசும் போது “தீண்டாமைக்கு நமது சாஸ்திரங்களில் இடமில்லை. தன்னுடன் சேரும் உபநதிகளில் அசுத்தத்தை அகற்றி நீரைத் தெளியச் செய்யும் கங்கா நதியைப் போலத் தேவ ஆலயங்கள் தன்னிடம் வரும் தீண்டாதவர்களையும் புனிதமாக்கும்” என்கிற கொழுப்பான சொற்களை வெளிப்படுத்தினார். இந்தச் சாதிவெறித் தலைவரின் பேச்சுக்குக் குடிஅரசு ஏடு (9.10.1932) தன் கடுங்கண்டனத்தை வெளியிட்டது.

பெரியாரும் அம்பேத்கரும்:

பெரியார் மிகவும் மதித்துப் போற்றிய மாபெரும் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஆவார். பிறப்பால் ஏற்றத்தாழ்வு பாராட்டப்படுவதைக் கண்டித்தும் சாதியத் தோற்றம் மற்றும் வளர்ச்சியைச் சாடியும் அம்பேத்கர் எழுதிய மிகச் சிறந்த ஆய்வு நூலான ‘சாதியை ஒழிக்க வழி’ என்ற நூலைக் குடிஅரசு வெளியீடாக 1937 இல் பெரியார் தமிழில் அச்சிட்டுத் தமிழக மெங்கும் பரப்பினார்.

தனிவாக்காளர் தொகுதி ஏற்பாட்டை எதிர்த்துக் காந்தி உண்ணாநிலைப் போராட்டம் என்னும் சண்டித் தனத்தில் ஈடுபட்ட போது பெரியார் முழுமையாக அம்பேத்கர் பக்கம் நின்றார்.

இரண்டாவது வட்டமேசை மாநாட்டிற்குத் தாழ்த்தப் பட்ட மக்கள் பிரதிநிதியாக அம்பேத்கர் மட்டும்தான் அழைக்கப்பட்டிருந்தார். இதனால் வருத்தமுற்ற எம்.சி. இராசா தமக்கு நேர் எதிரான முகாமில் சென்று செயல்பட்டார். பூனா ஒப்பந்தத்தில் காந்தியின் கருத்துக்கு ஆதரவாகக் கையொப்பமிட்டார். இச்செயலைக் கண்டித்தும் அம்பேத்கர் நிலையை ஆதரித்தும் குடிஅரசு ஏட்டில் தலையங்கமும் கட்டுரைகளும் (28.2.1932, 13.3.1932) எழுதப்பட்டன.

பெரியாரும் தமிழகத் தலித் தலைவர்களும்:

பெரியார் ஐரோப்பியப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிவந்த பிறகும்கூட சுயமரியாதை இயக்கம் என்பது பரந்த அளவிலான பார்ப்பனரல்லாத சூத்திரர்களையும், தாழ்த்தப்பட்டோரையும் உள்ளடக்கிய ஒரு வரலாற்று அணி என்ற அடிப்படைப் புரிதலுடனேயே செயல்பட்டார். தாழ்த்தப்பட்டோரின் விடுதலை என்பதற்குத் தொடர்ந்து அழுத்தம் தந்து வந்தார்.

பெரியார், ஐரோப்பியப் பயணத்திலிருந்து திரும்பி வரும் வழியில், இலங்கையில் சில நாட்கள் செலவிட்டார். கொழும்பு ‘ஆதிதிராவிட அபிவிருத்தி சங்கத் தார்’ அளித்த வரவேற்பின் போது அவர் பேசுகையில் “பாஷாபிமானம், தேசாபிமானம், மனிதாபிமானம், குலாபி மானம் என்ற சொற்களின் உட்கருத்தைப் புரிந்து கொண்டால்தான் தாழ்த்தப்பட்டோர் ஈடேற வழியுண்டாகும்” என்று கூறினார் (குடிஅரசு 6.11.1932).

அவ்வரவேற்புக் கூட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசிய எஸ்.ஆர். முத்தய்யா பெரியாரது தொண்டு முழுவதும் தங்களது (தாழ்த்தப்பட்டோரது) விடுதலையையும் சுதந்தரத்தையும் அளிக்கக் கூடியது என்றும் தங்கள் சமூகம் அவரை என்றும் மறக்காது என்றும் கூறினார் (குடிஅரசு 13.11.1932).

11.11.1932இல் தமிழகம் திரும்பிய பெரியாருக்குச் சென்னையில் தரப்பட்ட முதல் வரவேற்பில் கலந்து கொண்ட அமைப்புகள் ஆதிதிராவிடர் சங்கமும், தாழ்த்தப்பட்டோர் தொண்டர் படையும் ஆகும் (குடிஅரசு 27.12.1932). நாடு திரும்பியதும் பெரியார் ‘குடிஅரசில்’ எழுதிய முதல் தலையங்கமும் தாழ்த்தப்பட்டோர் பிரச்சனை குறித்ததுதான். (பெரியார் : சுயமரியாதை சமதர்மம், எஸ்.வி. இராசதுரை-வகீதா, நூல் முதல் பதிப்பு, பக்.194, 195).

ஈ.வெ.ரா.வுக்குப் ‘பெரியார்’ பட்டம் வழங்கிய தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டில் முதன்மைப் பங்காற்றிய மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

கிளர்ச்சிகளும் போராட்டங்களும்:

1.சமபந்தி விருந்துகள்: சாதிக் கொடுமைக்கு எதிராக அந்நாளில் பல ஊர்களில் சுயமரியாதை இயக்கத் தோழர்களால் சமபந்தி விருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 1927 சனவரி 2ஆம் தேதி நாகப்பட்டனத்திலும் 1932 ஏப்பிரல் 24ஆம் தேதி கோயம்புத்தூரிலும் நடத்தப்பட்ட இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நூற்றுக்கணக்கான பேர் பங்கேற்றனர். அவர்கள் அனைவர்க்கும் ஆதிதிராவிடத் தோழர்கள் உணவு பரிமாறினர். அனைவரும் சாதி வேறுபாடுகள் களைந்து விருந்துண்டனர்.

2. பொதுக்குளத்தில் நீர் எடுத்தல்: இரயில்வே உண வகங்களிலும், தனியார் உணவு விடுதிகளிலும் ‘பிராமணர்களுக்கு மட்டும்’ என வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகைகளை அகற்ற சுயமரியாதை இயக்கத்தினரால் வீச்சான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பது வரலாறு.

பார்ப்பனரல்லாத தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்கள் பொதுச்சாலைகள், குளங்கள், கிணறுகள் மற்றும் கோயில்கள் ஆகியவற்றில் தங்களுக்குரிய உரிமைகளை அனுபவிக்க இயலாத நிலையை எதிர்த்துப் பல ஊர்களில் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

கோயில் நுழைவுப் போராட்டங்கள்:

1927 பிப்ரவரி 3இல் மதுரையிலும், 8ஆம் தேதி திராவிடன் ஏட்டின் ஆசிரியர் ஜே.எஸ். கண்ணப்பர் தலைமையில் திருவண்ணாமலையிலும், 1929 ஏப்பிரல் 4ஆம் தேதி ஈரோட்டிலும் அதே ஆண்டு திசம்பர் 16ஆம் தேதி திருவாரூரிலும் நடைபெற்ற கோயில் நுழைவுப் போராட்டங்கள் பற்றிய விவரங்கள் குடிஅரசு ஏட்டில் விரிவாகப் பதிவாகியுள்ளன.

நீதிக்கட்சி ஆட்சியில்:

நீதிக்கட்சி ஆட்சியின்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும் மாவட்டக் கவுன்சில் தலைவருமான ஊ.பு.அ. சௌந்தர பாண்டியன் அனைத்துப் பேருந்து உரிமையாளர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் ‘ஆதிதிராவிடர் களைப் பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்காத வண்டிகளுக்கு உரிமம் இரத்து செய்யப்படும்” என்று கடுமையாக எச்சரித்தார்.

1932ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதியன்று சென்னைச் சட்டமன்றத்தில் டாக்டர் சுப்பராயன் ஒடுக்கப் பட்ட மக்கள் கோயிலில் நுழைய வகை செய்யும் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்தார். அஃது ஓர் அறிவுபூர்வமான நடவடிக்கை என்று சுயமரியாதை இயக்கம் இச்செயலைப் பாராட்டியது.

பெரியாரும் அவருடைய சுயமரியாதை இயக்கத்தினரும் சாதி ஒழிப்புக்காகவும் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் எண்ணிறந்த போராட்டங்களை நடத்தியுள்ளனர் என்றாலும் பெரியாரின் அரசியல் வாரிசுகள் எனப்படுவோரால் 1967 முதல் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது. ஆனாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகள் குறையவில்லை. சிற்றூர்களில் தேநீர்க்கடைகளில் தனிக்குவளை முறை நீடிக்கிறது. நகரங்களில் சாதி நாகம் பதுங்கி இருந்து தலைகாட்டுகிறது.

உழைப்புச் சாதியினரான பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்டோரைச் சகமனிதர்களாக ஏற்று வாழ முற்படாத வரை தமிழர்க்கும் தமிழ்நாட்டிற்கும் முன்னேற்றம் என்பது முயற்கொம்பே!

(குறிப்பு : இக்கட்டுரைக்கான தரவுகள் பலவும் முனைவர் பி.எஸ். சந்திரபாபு அவர்கள் எழுதியுள்ள ‘தமிழகத்தில் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சி’ என்ற நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. வெளியீடு : பாரதி புத்தகாலயம்.)

சிந்தனையாளன்பிப்ரவரி-2011

தொடர்புடையவை:

பெரியாரின் ஊழல்

‘பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்

காமராஜர், கக்கன், கம்யூனிஸ்டுகளின் எளிமையும்; பார்ப்பன, தேசிய, தமிழ்த்தேசியவாதிகளின் சதியும்

‘பெரியார்-தமிழுக்கு, தலித் மக்களுக்கு, இலக்கியத்திற்கு எதுவுமே செய்யவில்லை?’- அவதூறு பரப்பும் அடியார்களுக்கு…

என்ன செய்து கிழித்தார் பெரியார்?

பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்

டாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்

11 thoughts on “பெரியார்; தலித் விரோதியா?

  1. ஐயா! வேர்ட்பிரசு தமிழ் தளங்களிடையே இணைப்புக்கள் பரிமாற்றப்பட்டால் என்ன? எனது தளமுகவரி அருவிஒலி.wordpress.com தயை செய்து மறுமொழி அனுப்பவும். -சானக்கியன் sameermbm@gmail.com

  2. சிறப்பான் கட்டுரை.
    கனலிக்கு வாழ்த்துக்கள்

  3. ///பிறப்பால் ஏற்றத்தாழ்வு பாராட்டப்படுவதைக் கண்டித்தும் சாதியத் தோற்றம் மற்றும் வளர்ச்சியைச் சாடியும் அம்பேத்கர் எழுதிய மிகச் சிறந்த ஆய்வு நூலான ‘சாதியை ஒழிக்க வழி’ என்ற நூலைக் குடிஅரசு வெளியீடாக 1937 இல் பெரியார் தமிழில் அச்சிட்டுத் தமிழக மெங்கும் பரப்பினார்.///

    ஆமாம் புரட்சியாளர் அம்பேத்கர் ஆங்கிலத்தில் வெளியிட்ட அதே ஆண்டே தந்தை பெரியார் தமிழில் கொண்டு வந்தார்.

  4. மிக சிறப்பான கட்டுரை. சிந்தனையாளன் இதழ் எங்கு கிடைக்கும்?

  5. இணையத்தில் படிப்பதைவிட அவர்கள் பத்திரிகையை பணம் கட்டி வாங்கி படிப்பது அதன் வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கும்.
    அந்த பத்திரிகையின் முகவரியை கொடுங்கள்.

  6. எப்படி நான் பிராமணன் என்று தன்னை நினைத்து கொள்வது தவறோ,எப்படி நான் முதலியார்,நான் செட்டியார்,நான் தேவன் என்ற எண்ணுவது தவ்றோ அதே போல் தான் நான் தலீத என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு மற்றவர்களுடன் முரண்பட்டு,மற்ற சமூகத்தினரின் சில தவறான செயல்களை தனக்கு சாதகமாக பயன்ப்டுத்திக் கொண்டு தலீத அடையாளத்துடன் வாழ்வது,அம்பெத்கரை தவிர மற்ற அனைத்து தலைவர்களையும் குறைச் சொல்லி பேசுவது,இது நல்ல முதிர்ச்சியான பார்வை அல்ல,
    ஒரு நல்ல மனிதன்,சமூகத்திற்கு யாரெல்லாம் நல்லது செய்தார்களோ அவர்களை மதம் ,சாதி கடந்து பாராட்டுவான்,அவன் தான் பகுத்தறிவுள்ள மனிதன்,

  7. சிந்தனையாளன் திங்களிதழ்
    தொடர்பு முகவரி: 19, முருகப்பா தெரு, சேப்பாக்கம், சென்னை – 05.
    தொலைபேசி: 044-28522862, 94448 04980
    ஆண்டுக் கட்டணம்: ரூ.120, வாழ்நாள் கட்டணம்: ரூ.1000

  8. தமிழன் நெல்லுக்காக இரைத்த நீர் எத்தனை சதவிகிதம் தமிழனை சேர்க்கிறது என்று கேட்ட ஒரே தலைவன் மருத்துவர் ராமதாஸ் மட்டுமே??

    பெரியார் தமிழ்த்தேசியம் பேசினால் அது சரி. தமிழன் பேசினால் அது தவரறா?- Dr. V. Pandian….

    நன்றாகச் சொன்னீர்கள். எத்தனை பேருக்கு புரியபோகிறது???

    தமிழன் நெல்லுக்காக இரைத்த நீர் எத்தனை சதவிகிதம் தமிழனை சேர்க்கிறது என்று கேட்ட ஒரே தலைவன் மருத்துவர் ராமதாஸ் மட்டுமே?? என்ன செய்வது – எல்லாருக்கும் பேராசை-
    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று புரிய மறுக்கிறார்களே???

    கணக்கெடுக்க தயாரா திராவிடம் பேசுவோர்??? DK/ DMK – கட்சிகளை TK/TMK என்று மாற்ற அடம் பிடித்தால்- இருக்கும் மற்றவர்களும் சிந்திக்க வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம். வாழ்க வாடிய பயிரைக் கண்டு மனம் வாடிய, வள்ளலார் பிறந்த தமிழ் நாடு. தமிழா இன உணர்வு கொள்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading