டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: த.மு.எ.ச; தானே தன் முகத்திரையைக் கிழித்துக்கொண்டது

‘அம்பேத்கர் திரைப்படம்: முற்போக்காளர்களின் முகத்திரையும், த.மு.எ.ச வின் தந்திரமும்’ என்ற கட்டுரையில் தோழர் மதியவன் எழுப்பிய குற்றச்சாட்டுகளை மறுத்து, தமுஎசவின் மாநிலக்குழு உறுப்பினர்  தோழர் அ. உமர் பாருக் எழுதிய பதில்களின் மேல் பல கேள்விகளை எழுப்பி உள்ளார் தோழர் மதியவன்.

*

வணக்கம், தோழர் அ.உமர் பாருக்.

எனது கட்டுரை தேனி மாவட்டத்தில் த.மு.. அம்பேத்கர் திரைப்படத்தை வெளியிட்டது பற்றியது என்பது சத்தியமா நீங்க சொல்லித்தான் தெரியும் தோழர்! ஆரம்பமே அமக்களப் படுத்தியிருக்கீங்களே….

`தேனி மாவட்டத்தில் த.மு.எ.ச  அம்பேத்கர் திரைப்படத்தை வெளியிட்டது’ என்ற இந்தப் பொய்யான பரப்புரை யாருக்காக தோழர். படம் பார்க்கக் கிடைக்காத மக்களுக்காகவா?

டிசம்பரில், “அரையாண்டுத் தேர்வு நடந்துகொண்டிருப்பதால் அம்பேத்கர் திரைப்படத்தை த.மு..ச தான் நிறுத்திவைத்துள்ளதுஎன்று தேனி மாவட்ட த.மு..ச தலைவர் காமுத்துரை சொல்லியது, த.மு..ச விற்கே தெரியாது என்றால், தலைவரை பதவி நீக்கம் செய்துவிட்டீர்களா என்ன..? அப்படியெல்லாம் செய்துவிடாதீர்கள். வேண்டுமானால் வழக்கம் போல் தீர்மானம் மட்டும் நிறைவேற்றிக்கொள்ளுங்கள்.அம்பேத்கர் திரைப்படத்தை வெளியிடுவது என்று தீர்மானம் போட்டீர்கள் அல்லவா? அது மாதிரி.

எனது கட்டுரையில், தேனி மாவட்ட  த.மு.எ.சவின் பெரு முயற்சிகள் புறந்தள்ளப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறீர்கள்.

உண்மையில் தேனி மாவட்ட த.மு.எ.ச வின் மாபெரும் முயற்சிகளை மிகச் சிறப்பாகக் கூறியிருப்பதாகவே உணருகிறேன். என்ன முயற்சி என்பதில் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம் தோழர்!

“தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் தமிழில் ஒரே ஒரு படப் பெட்டியைத்தான் தயார் செய்து வைத்திருந்ததாம்!” எனக்குத் தெரியுமா என்று வேறு கேட்டிருக்கிறீர்கள்?

அம்பேத்கர் திரைப்படத்தைப் பற்றி தேனி  த.மு.எ.ச விற்கு எதுவுமே தெரியாது என்பது மட்டும், எனக்கு நல்லாவே தெரியும் தோழர்.

அம்பேத்கர் திரைப்படம் டிஜிட்டல் முறையில் வந்தது என்பதும், டிஜிட்டல் முறையில் எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் என்பதும், தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் 100 பிரதிகள் வரை தயார் செய்து வைத்திருந்ததும் எனக்குத் தெரியும் தோழர். கூடுதல் செய்தியாக, மிகவும் வசதி குறைந்த திரையரங்குகளான கொட்டகைகளில் திரையிடக்கூடிய படச்சுருள் பிரதிகள்கூட 3 தயாராக இருந்தது என்பதும் தெரியும் தோழர். உங்களுக்குப் உதவாத இன்னொரு தகவல், தேனியில் பாத்திமா திரையரங்கைத் தவிர அனைத்துத் திரையரங்கிலும் (சிறப்புக்காட்சி நடைபெற்ற வசந்த் திரையரங்கு உட்பட) இந்த 100 பிரதிகளையும் திரையிட முடியும். பாத்திமாவிலும்கூட அந்த 3 படச்சுருள்களை திரையிடமுடியும்!

தலித் அமைப்புகள் தோல்வியைத் தழுவிய சூழலில், த.மு.எ.ச வெளியிட்டுவிட்டதாம்! (அந்த சிறப்புக் காட்சியைத்தான்!)

தலித் தோழர்கள் திரையிட்டது ஒரு சில இடங்களாகவே இருந்தாலும், அவைகள் அனைத்தும் மக்களுக்கான காட்சியாகவே இருந்தது என்பதை தோழருக்குத் தெளிவாக தெரியப்படுத்த விரும்புகிறேன்.

கோவையில் ஆதித் தமிழர் விடுதலை முன்னணி தோழர்களும், கோவை சோமனூரில் படத்தை திரையிட்டார்கள்…

சிறப்புகாட்சியாக, அதாவது ஒரே ஒரு காட்சியாக இல்லாமல் வழக்கமான காட்சியாகவே திரையிட்டதால் தமுஎசவின் சிறப்பு விருந்தினர்களான, மாவட்ட ஆட்சியருக்கோ, வருவாய்த்துறை அதிகாரிக்கோ அங்கு வேலையில்லாமல் போனது. தோழர்கள் எதிர்பார்த்ததும் மக்களை மட்டும்தான். இந்த சாதாரண காட்சியிலேயே, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவயமாகத் திரையிட்டார்கள் ஆதித் தமிழர் விடுதலை முன்னணி தோழர்கள்.

தேனி த.மு.எ.ச திரையிட்டது , சிறப்புக்காட்சி என்பதால் 20 ரூபாய் மட்டும் வாங்கிக்கொண்டது. இன்றைய பொருளாதார நிலையில் மாவட்ட ஆட்சியரையும் வருவாய்த்துறை அதிகாரியையும் மக்கள் 20 ரூபாய் கொடுத்தால், நேரில் பார்க்கலாம் என்பது எவ்வளவு பெரிய சாதனை.

அடுத்து அரசு அதிகாரியை வழிமறித்தது நியாயமானதாம், ஆனால் அது நடைபெற்றிருக்க வேண்டிய இடம் அரசு அலுவலகமாம்!

மக்கள் பணத்தில் எடுக்கப்பட்ட தங்கள்  தலைவரின் திரைப்படத்தை, அனைத்து மக்களும் பார்த்துப் பயன்பெறும் வகையில், தொடர்ந்து திரையிட வலியுறுத்தி, அதே திரைப்படத்தின் ஒருகாட்சியை மட்டும் துவக்கிவைக்க வந்த அரசு அதிகாரியை முற்றுகையிட்ட, மக்களின் நியாமான போராட்டத்தைக்கூட கொச்சைப்படுத்தியுள்ளது உங்கள் எழுத்துகள். நான் முந்தைய கட்டுரையில் எழுதியிருந்த த.மு.எ.ச வின் கள்ளத்தனம்” என்ற வார்த்தைகளுக்கு வலுச்சேர்த்த தேனி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்திற்கு நன்றிகள்.

திரையரங்கு பேனர்கள் கிழித்தெரியப்பட்டதாம்! (எந்த படத்திற்கான  பேனர் என்பதை சொல்லாமல் விட்டதில் உள்ளது த.மு.எ.ச வின் கள்ளத்தனம்).

தோழருக்கு, ஒரு தகவலை சொல்லிக்கொண்டு தொடர்கிறேன்;

Oxford university “The makers of the Universe” என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்தில் கடந்த பத்தாயிரம் வருடங்களில், உலகில் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்குப்  பங்களித்த 100 மாமனிதர்களைப் பட்டியலிடுகிறது  Oxford university. அதில் 4வது இடத்தில் இருக்கும் பெயர் என்ன தெரியுமா…? டாக்டர் பாபாசாகேப் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்(முதலிடம் அம்பேத்கர் தன் குருவாக ஏற்றுக்கொண்ட புத்தருக்கு).

இவ்வளவு சிறப்பிற்குரிய உலகம் ஏற்றுக்கொண்ட ஒரு  மாமனிதனின் வரலாற்றுத் திரைப்படம் , தேனியில் எதோ ஒருமூலையில் உள்ள திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கையில் (அதுவும் சிறப்புக்காட்சியாக), வெளியில் “நடுநிசி நாய்கள்” என்று 8 க்கு 10 ல் வைக்கப்பட்ட பேனரை ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் கிழித்தது, த.மு.எ.ச விற்குத் தவறாகிவிட்டது?

பேனரை கிழித்ததாலும், தலித் அமைப்புகளின் கொடிகள் கட்டப்பட்டதாலும் திரையரங்கு உரிமையாளர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டனராம்! ஒடுக்கப்பட்ட மக்களை திட்டமிட்டே இழிவுபடுத்துகிறது  தங்களின் எழுத்துக்கள்.

கேனப்பய, கிறுக்குப்பய… படத்துகெல்லாம் முதல் காட்சியிலேயே திரையரங்கு வாசல் கதவுகள் பிய்த்து எறியப்பட்டது உங்களுக்குத் தெரியாதா? பறிகொடுத்த உரிமையாளர்கள்கூட கூட்டத்தைப் பார்த்து மகிழ்ச்சியாகவே  பேட்டியளித்துள்ளனர். அம்பேத்கர் பட பேனர் இருக்க வேண்டிய இடத்தில் “நடுநிசி நாய்கள்” என்று இருந்த பேனர், அதுவும் படம் முடிந்ததும், குப்பைக்குப் போகும் பேனரைக் கிழித்ததில் திரையரங்கு உரிமையாளர்கள் அப்டியே Shock ஆயிட்டாங்கலாம்.

போடியிலும் கம்பத்திலும் தலித் தோழர்கள், அடையாளத்திற்காக போராட்டத்தை நடத்திவிட்டு (அந்த சிறப்புக் காட்சியை) வெளியிட துணை நின்றார்களாம்!

அதான் அடையாளத்திற்காக என்று நீங்களே சொல்லிவிட்டீர்களே. தலித் என்பதற்காக அனைவரையும் கண்மூடித்தனமாக நம்பிவிட முடியாது தோழர். த.மு.எ.ச. விலும்கூடத்தான் தலித்கள் இருக்கிறார்கள்!

சரி, த.மு.எ.ச ஏன்  திரையரங்கில் அம்பேத்கர் திரைப்படத்திற்கான பேனர் வைக்கவில்லை?

கொல்லைப்புறத்துக் காட்சிக்குப்போய் யாராவது பேனர் வைப்பார்களா?  படத்தை துவைக்கி வைப்பவருக்குப் பின்னாலேயே, படப் பெட்டியும் சென்றுவிடப்போகிறது. பிறகு எதற்கு பேனர் கீனர் எல்லாம் என்று விட்டு விட்டீர்களோ?

பல ஆண்டுகளாக, பல அமைப்புகள் போராடி கிடைக்காத அம்பேத்கர் திரைப்படத்தின் பொட்டி த.மு..ச விற்கு கிடைத்ததன் காரணமும் இதுதான்.  த.மு.எ.ச.வும்  நம்பிக்கைக்கு விசுவாசமாகவே  நடந்துகொண்டுள்ளது.கூடுதலாக தம்பட்டம் மட்டும் போட்டுக்கொண்டது….

அம்பேத்கர் படத்தை அடர்ந்தகாடாக வெளிக்கொண்டுவரும் முயற்சியில் திரைப்பட கழகத்தோடு பேசிவருவதாக கூறியிருக்கிறீர்கள்.

ஒரு மலராகக் கொண்டுவந்தால் கூட போதும், மக்களுக்காக கொண்டுவாருங்கள் அந்த மலரை, மலர்வனமாக அவர்கள் மாற்றிக்கொள்வார்கள்.

நன்றி தோழர்.

தோழமையுடன்

மதியவன்

“டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் திரைப்படம்

பரப்புரைப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு”

 

முன்னர் நான் எழுதிய கட்டுரையில் அம்பேத்கர் திரைப்படம், கோவை சென்டிரல் திரையரங்கில் திரையிடப்பட்டதில், ஆதிதமிழர் பேரவையின் பங்களிப்பு விடுபட்டுவிட்டது. ஆதிதமிழர் பேரவை  தோழர்களுக்கும் , சோமனூரில் சாதாரண காட்சிகளையே சிறப்பாகத் திரையிட்ட “ஆதி தமிழர் விடுதலை முன்னணி” தோழர்களுக்கும் இங்கே நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

-மதியவன்

தொடர்புடையவை:

டாக்டர் அம்பேத்கர் திரைப்பட வெளியீடு பற்றிய குற்றச்சாட்டும்; தமுஎசவின் விளக்கமும்

அம்பேத்கர் திரைப்படம்: முற்போக்காளர்களின் முகத்திரையும், த.மு.எ.ச வின் தந்திரமும்

அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி
*
ஆஸ்கர் ரவியின் சகோதரர் அம்பேத்கர் படத்தை முடக்கினாரா?
*
60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ…
*
டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: வழக்கறிஞர் சத்தியசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கும் நன்றி
*
டாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்?
*
‘அம்பேத்கர் திரைப்படத்தை உடனடியாக வெளியிடு’-பெரியார் தொண்டர்களின் போராட்டம்