பானுமதியும் பாபாவும், பெண்களும் ஆண்களும், கொடிய மிருகம், சமச்சீர் கல்வி, வைரமுத்து
ஊழலுக்கு எதிரான பாபாராம்தேவ் உண்ணாவிரதம் பாராட்டுக்குரியதுதானே?
–அப்துல்காதர், திருநெல்வேலி.
எம்.ஜி.ஆர். நடிந்து, இயக்கிய நாடோடி மன்னன் திரைப்படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல், ‘காடு வெளைஞ்சென்ன மச்சா(ன்), நமக்கு கையும், காலும்தானே மிச்சம்’ அதாவது விவசாயம் எல்லா நல்லதான் நடக்குது, ஆனால் விவசாயிதான் பட்டினியா கிடக்கிறான், என்பதை மிகத் துல்லியமாக சொன்ன வரி.
படத்தில் இந்த வரிய பாடுகிற பானுமதி காதுல ரெண்டு தங்க லோலாக்கு, மூக்குத்தி அதுக்கு கீழ ஒரு தங்கத் தொங்கட்டான், கழுத்துல நெக்லசு, தங்கம் ஆரம், தங்க வளையல், அதுக்கு மேல ரெண்டு தங்க கைப்புடி, தங்க ஒட்டியானம் இதையெல்லாம் போட்டுக்கிட்டு அந்தம்மா, பாடுவாங்க, ‘காடு வெளைஞ்சென்ன மச்சா(ன்), நமக்கு கையும், காலும்தானே மிச்சம்’ அப்படின்னு.
பலருக்கு வாய் முற்போக்காக பேசும், வாழ்க்கை அதற்கு நேர் எதிரா இருக்கும். அடுத்தவர்களின் ஊழல், ஜாதிவெறி, பகட்டு, மோசடி இவைகளை சுட்டிக் காட்டுகிறவர்களே, அவைகளுக்கான நேர் எதிர் உதாரணமாக இருப்பார்கள்.
அதுபோல், ராம்தேவ் ஆச்சாரமும், கார்ப்பரேட் தனமும் கலந்து செய்த கலவை. அதாவது இந்துமதத்தையும், முதலாளித்துவத்தையும் மிக்சியில் போட்டு அரைத்த ஒரு கலவைதான் ராம்தேவ். இந்தக் கலவைதான் இன்றைய எல்லா சாமியார்களின் மூலதனம்.
மாட்டுக்கறியை சாப்பிடக்கூடாதுன்னு உபதேசிக்கிற, இந்த பசு நேசன்தான் மனிதக் கறியை மிக்சியில் போட்டு அரைத்து லேகியமாக விற்றார்.
யோக பயிற்சி எடுப்பவர்ளுக்கு தந்த ஆயுர் வேத லேகியத்தில், மாடு, மனித எலும்புத்தூள்களை கலப்படம் செய்து ஊழல் புரிந்தவர்தான் இந்த அக்மார்க் அவதாரப் புருசன் ராம்தேவ். இதை சிபிஎம் கட்சியைச் சேர்ந்த பிருந்தா கரத் போன்றவர்கள் அம்பலப்படுத்தியிருக்கிறா்கள்.
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் மாறி, மாறி ஊழல் குற்றச்சாட்களை அள்ளி விசுவதைப்போல், ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு, பிஜேபி,காங்கிரசைப் பார்த்து ஊழல் கட்சி என்று சொல்வதைப்போல்தான். அதாவது ஒரு கேவலம், கழிசடையை குற்றம் சொல்வதுபோல்.
இவர்களின் ஊழல் எதிர்ப்பு, நகைக்கடை மாடல் போல் இருந்துக் கொண்டு வறுமையால் வாடுவதுபோல் பாடுன பானுமதி பாட்டு மாதிரி வேடிக்கையானது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட.
எந்தக் காலத்திலும் பெண்களின் மனதை புரிந்த கொள்ளவே முடிவதில்லையே ஏன்?
–எஸ்.எம். சிவராமன், சென்னை.
பெண்களை வெளிப்படையாக பேசுவதற்கு அனுமதிக்காத ஆணாதிக்க சூழல்தான் அதற்குக் காரணம்.
காதல், திருமணம், செக்ஸ், நட்பு, ஆண்கள், அரசியல், இலக்கியம், சினிமா, குடும்ப உறவுகள் இவைகள் குறித்து பெண்கள் தங்களின் சொந்தக் கருத்துக்களை, விருப்பு, வெருப்புகளை சொல்வதைவிட அந்தச் சூழலுக்கு என்ன சொன்னால், தன்னை மற்றவர்கள் தவறாக நினைக்க மாட்டார்களோ அல்லது எது பிரச்சினை அற்றதோ அதை சொல்வது.
அதனால்தான், தான் மிகவும் நேசிக்கிற ஒருவரையோ, ஒரு விசயத்தைப் பற்றியோ அதற்கு நேர் எதிரான நிலை எடுத்து, உறுதியாக எதிர்த்து, மறுத்துப் பேசுகிற அளவிற்கு பெண்கள் மாறிவிடுகிறார்கள். இதனால், அவர்கள் மிகப்பெரிய மனஉளைச்சலுக்கும் உள்ளாகிறார்கள்.
இப்படி பெண்களை வெளிப்படையாக பேச அனுமதிக்கவும் மறுத்து, அதன் பிறகு பெண்களை புரிந்துகொள்ளவே முடியவில்லை என்று புலம்புவது ஆணாதிக்க கோமளித்தனங்களில் ஒன்று.
‘எல்லா நேரங்களிலும் பெண்கள், தான் சொல்வதற்கு தலையாட்ட வேண்டும் என்று ஆண்கள் விரும்புவதில்லை?’ என்பதும் பெண்களுக்குத் தெரியும். அதற்கேற்பவும் பெண்கள் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
சில நேரங்களில் பெண்கள் தங்களை எதிர்த்து, மறுத்து பேசுவதையும், ஆண்கள் விரும்புகிறார்கள். அந்த எதிர்ப்பும், மறுப்பும் ஆண்களுக்கு லாபமாக இருக்கும் பட்சத்தில்.
‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைப்படத்தில், தன்னை மறுமணம் செய்து கொள்ளச் சொன்ன கணவனை மறுத்து, ‘சொன்னது நீ (த்) தானா… சொல்..?’ என்று உருக்கமாகப் பாடிய மனைவியின் நிலையைதான் ஆண்கள் விரும்புவார்கள்.
மாறாக, ‘சரி அத்தான், நீங்கள் சொன்ன மாதிரியே… டாக்டர மறுமணம் செஞ்சிக்கிறேன்’ என்பதை பணிவோடும், அழகையோடும் சொல்லியிருந்தால்கூட, நோயாளி கணவன் அந்த நிமிடமே அதிர்ச்சியில் செத்திருப்பான். படம் பார்த்த ஆண்கள், ‘இவ எல்லாம் ஒரு பொம்பள?’ என்று திட்டித் தீர்த்திருப்பார்கள்.
கணவன் தன் திருமணத்திற்கு முன்பான காதல் அனுபங்களை சொல்வைதக் கேட்டு, மனைவியும் அதுபோல் பகிர்ந்து கொண்டால், அன்பான கணவன் ஆயுதம் தாங்கிய கணவனாக மாறிவிடுவான்.
பெண்கள் வெளிப்படையாக பேசுவதை ஆண்கள் விரும்புவதில்லை என்பதைவிடவும், அதை தாங்கிக் கொள்கிற சக்தி ஆண்களுக்கு இல்லை என்பதே உண்மை.
கடந்த தலைமுறையில், கலப்பு திருமணங்கள் நிறைய நடந்தும் கூட இந்த தலைமுறையில் சாதி உணர்வற்ற வாரிசுகளை பார்ப்பதே அரிதாகஇருக்கிறதே?
–சு. தமிழ்மணி, விழுப்புரம்.
பழைய மாயாஜாலப் படங்களில், ஒரு கொடிய மிருகத்தை, கதாநாயகன் கத்தியால் வெட்டினால், அதன் உடலிருந்து சிந்திய ரத்தம் இன்னும் நான்கு கொடிய மிருகங்களாக விஸ்வரூபம் எடுக்கும். அதுபோல், ஜாதிமறுப்பு என்ற கத்தி கொண்டு, ஜாதி என்கிற கொடியமிருகத்தை வெட்டினால், அது இன்னும் இரண்டு ஜாதிகளாக விஸ்வருபமாக நிற்கிறது.
ஜாதி மறுப்பு திருமணங்கள், ஜாதிஒழிப்பு என்ற அரசியல் நிலையிலிருந்து நடந்தால்தான் ஜாதியை ஒழிக்க முடியும். ஜாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகள், ஜாதிகளுக்கு எதிரான மனோபாவம் கொண்ட வாழ்க்கை நடத்தினால்தான் அவர்களின் வாரிசுகள் ஜாதி உணர்வற்றவர்களாக இருப்பார்கள்.
மாறாக, ‘உன் ஜாதி உனக்கு, என் ஜாதி எனக்கு’ என்று வாழ்ந்தால், ஒரு ஜாதி என்பது போய் இரண்டு ஜாதி உணர்வாளர்களாக, பழைய மாயாஜாலப் படங்களில் வந்த கொடிய மிருகத்தைப்போல், விஸ்வரூபம் எடுப்பார்கள், வாரிசுகள்.
பிறகு, முற்போக்கான அம்சங்களை பின்னுக்குத் தள்ளி. இரண்டு ஜாதிக் குதிரைகளில் சவாரி செய்து பிரமுகராகவும் மாறிவிட்டால், தன்ஜாதி உணர்வை பிரமுகர்களின் வழியாக சொறிந்து கொள்கிற ஜாதிய உணர்வாளர்களும்,
‘அவுங்க அம்மா எங்க ஜாதிக்காரர்’,‘ அவுங்க அப்பா எங்க ஜாதிக்காரர்’ என்று உரிமை கொண்டாடுவார்கள்.
அப்புறம் என்ன.. நாடு நல்லா வௌங்கிடும்…?
ஆறாவது முறையாக கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு தேசிய விருது வழங்கப்பட்டிருக்கிறது, வாழ்த்துக்கள் சொல்லுங்களேன்.
–எஸ். பிரேமா, சென்னை.
வைரமுத்துவின் சினிமா பாடல்களில் உள்ள சிறப்பான வரிகளை பாராட்டினால், ‘அதற்கு முழு பொறுப்பும் தனக்கே’என்று பெருமையுடன் ஒத்துக்கொண்டு, அந்தப் பாடல்களைப் பற்றி சிலாகித்து பெருமை பொங்க பேசுகிற வைரமுத்து,
தான் எழுதிய ஆபாசப் பாடல்களுக்கும், ஆங்கிலம் கலந்து எழுதிய பாடல்களுக்கும் மட்டும், ‘அது இயக்குநரின் விருப்பம், கதாபாத்திரத்தின் கருத்து, என்னை நீங்கள் என் கவிதைகளில்தான் காணவேண்டும், திரைப்பாடல்களில் அல்ல, அந்தப் பாடல் வரிகள் கதைக்கான சூழல்’ என்று கதையளப்பார்.
அதனால், அவர் எழுதிய ஆபாசப் பாடல்களுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டு அவர் வருத்தம் தெரிவித்தால், அடுத்த வினாடியே அவர் தேசிய விருது பெற்றதற்காக நாம் வாழ்த்துச் சொல்வோம்.
(‘போயா… யோவ்… உன் வாழ்த்த எடுத்து குப்பையில போடு’ என்று நினைக்கிறீர்களோ?)
சமச்சீர் கல்வி என்னதாங்க ஆகும்?
–வி.ஜானகி, சென்னை.
அதுசரி, சமச்சீர் கல்வி என்ற பெயரில், கார்ப்பேரேசன் பள்ளிக்கூடத்துல படிக்கிற மாணவர்களுக்கும், சர்ச் பார்க்குல படிக்கிற Students க்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டு வந்தா,
சர்ச் பார்க்குல படிக்கிற Students… களுக்கும் அவுங்க Parents…...களுக்கும் எவ்வளவு அசிங்கம்…..
இதப் பாத்துக்கிட்டு, சர்ச் பார்க் கான்வெண்டோட முன்னாள் Student சும்மா இருப்பாங்களா?
இந்த முறை தமிழ் சினிமாக்கள் நிறைய தேசிய விருதை பெற்று வந்திருக்கிறதே?
–சிரா, சென்னை.
ஒரு விவாதத்திற்காக, விருதுகள் பெற்ற படங்கள் சிறந்த படங்கள் என்றே ஒத்துக் கொள்வோம். அப்படியானால், மோசமான படங்களை எடுத்தவர்களுக்கு யார் தண்டனை தருவது?
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சூன் மாத இதழுக்காக வாசகர் கேள்விகளுக்கு நான் எழுதிய பதில். http://ebook.thangamonline.com/jun2011/
தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகள்!… அருமையான பதில்கள்!