தங்கர்பச்சான், கமல், வைரமுத்து: 7ஆம் அறிவு தமிழரின் பெருமை

தங்கர்பச்சான், கமலஹாசன், வைரமுத்து போன்ற திரைப்படத் துறையினர் அனைவரும் ‘7ஆம் அறிவு தமிழரின் பெருமையை சொல்லும் படம்’ என பாராட்டி தள்ளுகிறார்களே?

நா. இரவிச்சந்திரன், வெண்ணிப்பறந்தலை.

பொதுவாக சினிமாக்காரர்கள் இன்னொரு சினிமாவை பாராட்டி பேசுவது புதிதல்ல. அவர்களின் பாராட்டுக்கு பின்னணியில் நட்பு. சொந்தம், வியாபாரம், வாய்ப்பு, அரசியல் தொடர்பு இதுபோன்ற சுயலாபங்கள் மறைந்திருக்கும். அவர்கள் ஒரு படத்தை விமர்சித்து பேசினால்தான் செய்தி.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் நவம்பர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = `தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்

‘பேராண்மை’ அசலும் நகலும்

7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல

7 ஆம் அறிவு தமிழர்களும் அவர்களின் 4 ஆம் ‘வர்ண’ உணர்வுகளும்

அவன்-இவன்; பாலாவின் ஜல்லிக்கட்டு

யதார்த்தமா காட்ற ‘தில்’லு ஒரு டைரக்டருக்கும் இல்ல..

இடஒதுக்கீடு நாட்டை கெடுத்துவிட்டது

தகுதியானவர்களுக்கு வாய்ப்பில்லாமல், இடஓதுக்கீடு நாட்டை கெடுத்துவிட்டது?

கமலக்கண்ணன், ஞ்சாவூர்.

உண்மைதான். பல நூற்றாண்டுகளாக நாட்டை இடஓதுக்கீடுதான் கெடுத்துவிட்டது.

தலையில் பிறந்தவன் பிராமணன். அவனுக்கு அரசின் அதிக சலுகைகளும் சமூகத்தில் உயரிய மரியாதையும், அவன் கொலையே செய்தாலும் தண்டனை கிடையாது,

தோளில் பிறந்தவன் சத்திரியன். அவன் எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும் அவனும் அவன் பரம்பரையும்தான் மன்னராக வரவேண்டும்.

அடுத்து வைசியன். அவன் ஊழல், கலப்படம் செய்தாலும் அவன் பரம்பரைதான் வணிகம் செய்யவேண்டும்.

கடைசியாக சூத்திரர்கள். அவர்கள் இழிவானர்கள். பரம்பரையாக அடிமை வேலை செய்யவேண்டும்.

இந்த நாலு வர்ணத்திலும்கூட இடம் இல்லாதவர்கள் சண்டாளர்கள். பஞ்சமர்கள். என்று பல நூற்றாண்டுகளாக இடம் பெற்று வந்த இடஓதுக்கீடு, மனு வகுத்த இடஓதுக்கீடு.

இதுதான் இந்தியாவின் வெட்கக்கேடு. இந்த முறைதான் நாட்டை கெடுத்து விட்டது.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் நவம்பர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

ராஜமரியாதை

என்ன செய்து கிழித்தார் பெரியார்?

2ஆயிரம் ஆண்டுகளாக பல்லக்கு சுமந்தவர்கள்

அவன்-இவன்; பாலாவின் ஜல்லிக்கட்டு

மாட்டுக்கறி உண்ணும் தமிழர்களை மூட்டித் தள்ளி குத்திக் கிழித்த ‘அவன்-இவன்’

‘‘அவன்-இவன்’ படம் வந்தபோது நான் எழுதிய விமர்சனங்களை ஒன்றாகத் தொகுத்து வெளியிடச் சொல்லி நண்பர்கள் கேட்டார்கள். வெளியிட்டிருக்கிறேன்:

*

இந்தப் படத்துல வர்றா மாதிரியான போலிஸ் ஸ்டேசன்… அடடாடா.. என்ன ஒரு அன்பான, அழகான காவல்துறை?

உண்மையிலேயே போலிஸ்காரங்க நல்லவங்க மட்டுமில்ல, அப்பாவிங்க கூடதான். தேவையில்லாம நம்ம ஜனங்கதான் அவுங்கள பாத்து பீதி அடையது. இத்தனைக்கும் ‘அதிகமான கிரிமினல்கள் உள்ள போலிஸ் ஸ்டேசன்’ என்று அந்தப் படத்தல வரும் நீதிபதியே சொல்ற ஊர்லேயே இவ்வளவு அன்பான போலிஸ்!

சேது, பிதாமகன், நான் கடவுள், அவன்-இவன் வரைக்கும், எல்லாக் கதாபாத்திரங்களும் ஒரே தொணியிலதான் வசனம் பேசுது. வசனத்துலேயும் பாலாவோட பங்களிப்புத்தான் அதிகமாகத் தெரியுது.

அவருக்குக் கோர்வையா எழுத வராது போல, தான் சொல்றத பக்கத்துல இருந்து எழுதி, அதைக் காப்பி எடுத்து கொடுக்கிறதுக்கு ஒரு ஆளு வேணும்போல…

இந்தப் படத்துலேயும் வசனம் ராதாகிருஷ்ணனோ, ராமகிருஷ்ணனோ ஒருத்தரோட பேரு வருது..

ஜமீன் கிட்ட ரெண்டு திருட்டுபசங்க… வாடா… போடா…ன்னு கூப்பிடற அளவுக்கு நெருக்கமா இருக்கிறாங்க… அவுங்களுக்குள்ளே எப்படி அந்த உறவு ஏற்பட்டது?

அதிக அழுத்தம் கொடுத்துக் காண்பிக்கப்பட்ட இரும்பு பெட்டி திறக்கிற காட்சி, திரைக்கதையில் ஒரு லீடா இல்லாம, துண்டா வெளிய போயிடுச்சு,

ஜமீனா வர ஜி.எம். குமாரு ஏன் நடுத்தர வர்க்கத்துச் சென்னைத் தமிழ் பேசுராரு?

இந்தக் காட்சியல… அது இல்ல, அந்தக் கட்சியிலே இது இல்ல என்பது போன்ற கேள்வி எல்லாம் நான் கேட்க போறதில்ல…

மற்றவர்கள் கேட்க முடியாத அல்லது கேட்க விரும்பாத ஒரு விசயத்தைப் பற்றிதான் இந்த விமர்சனம்.

***

அடுத்தவன் வீட்டுக்குள்ள குதிச்சுத் திருடறது, கழுத்தறுத்துக் களவாடறது, பொம்பள தாலி அறுக்கிறது, கள்ளச் சாவி போட்டு பொட்டி தொறக்கிறது… இதுபோன்ற செயல்கள் செய்கிற திருட்டு பசங்களோடு நெருக்கமா, அன்பா இருக்கிற அய்நஸ் என்று அழைக்கப்படுகிற ஜமீனுக்கு,

இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வது மாபெரும் சமூகக் குற்றமாகத் தெரிவது ஏன்?

‘மாடுகள்இறைச்சிக்காகவிற்பனைசெய்துதவறுஎன்றுகாட்டவில்லை, அதைமுறைப்படிலைசன்ஸ்வாங்கிசெய்யவேண்டும். இப்படிதிருட்டுத்தனமாகசெய்யக்கூடாதுஎன்பதுதான்காட்சியாக்கப்பட்டிருக்கிறது’ என்று பதில் வரலாம்.

கழுத்தறுத்துக் களவாடறது, பொம்பள தாலி அறுக்கிறது, அடுத்தவன் வீட்ல குதிச்சுத் திருடறது, கள்ளச் சாவி போட்டு பொட்டி தொறக்கிறது இதெல்லாம் முறைப்படி லைசன்ஸ் வாங்கித்தான் நடக்குது என்று நம்புகிற அப்பாவியா அய்நஸ்.

ஆட்டுக்கறி விற்பவர்களில் எத்தனை பேர் லைசன்ஸ் வாங்கி விற்பனை செய்கிறார்கள். இன்னும் நெருக்கிச் சொன்னால், ஆடுகளை வெட்டி தோலை உறித்துக் கறியாகப் பிரிப்பது வரை எல்லாம் சாலைகளிலேயே நடக்கிறது. குறிப்பாகத் தென் மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழைமைகளில் வழியேற திறந்தவெளியில் புதுப் புது ஆட்டுக்கறி கடைகளைக் காணலாம்.

ஆனால், இதுபோல் பகிரங்கமாக, பார்ப்பவர்கள் அருவருப்பு அடைவதுபோல் மாடுகளைப் பொது இடங்களில் வெட்டி பிரித்து இறைச்சியாக விற்பதில்லை.

அப்படியிருக்க, பாலாவின் ஜமீன் அய்நசுக்கு, மாடுகள் மேல் ஏற்பட்ட இரக்கம், ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்..’ என்ற வள்ளலார் பாணியிலான உயிர்கள் மீது கொண்ட அன்பினால் அல்ல,

ஒரு ஜாதி இந்துவுக்கு இருக்கிற மாடுகளின் மீதான புனித உணர்வும், மாடுகளை உண்கிற தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான காழ்ப்புணர்ச்சியும்தான்.

சைவம் சாப்பிடுகிறவர், அசைவ உணவை சாப்பிடுவதை எப்படி அருவருப்பாகப் பார்க்கிறாரோ, அதுபோலவே, ஆடு, கோழி, மீன் சாப்பிடுகிற ஜாதி இந்து மாட்டுக்கறி சாப்பிடுவதை அருவருப்பாகப் பார்க்கிறார்.

சைவ உணவு சாப்பிடுகிறவர்களின் மாமிச உணவு மீதான அவர்களின் அருவருப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆடு, கோழி, மீன் சாப்பிடுகிறவர்கள் மாட்டுக்கறியை அருவருப்பாகப் பார்க்கிற மோசடியை என்னவென்று சொல்வது?

ஆடு, கோழிகளைப் பார்க்கும்போதே நாக்கில் எச்சில் ஊற வைக்கிற உணவு பொருளாகவும், மாடுகளைப் புனிதமாகவும் பார்க்கிற ஜாதி இந்து மனோபாவத்தை, உலகின் எந்த நாட்டு மக்களிடத்திலும் பார்க்க முடியாது

இந்த மோசடிக்குள்தான் மறைந்திருக்கிறது தீண்டாமைக்கான மூலக்கூறு.

இதுபோன்ற ஜாதி இந்து உணர்வுதான் ஜமீன் உணர்வாகவும் வடிந்திருக்கிறது இந்தப் படத்தில்.

அநேகமாக எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் ஜாதிய அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. விசால், ஆர்யா கதாபாத்திரங்களின் தந்தை, ‘நம்பள மாதிரி களவானி குடும்பத்துல சம்பந்தம் வைச்சாலும் வைப்பேன்..’ என்று வருகிற வசனமும்,

படம் பார்க்கிறவர்கள், ஜமீன் அய்நஸை பாளையக்கார எட்டயபுர ஜமீனாக (தெலுஙகு நாயக்கர்) நினைத்துக் கொள்ளப் போகிறார்கள், என்பதினால், ‘மனுநீதிசோழன், எங்க முப்பாட்டன் கானாடுகாத்தான் சேதுபதியோட சொந்த மச்சினன்’ என்ற வசனம் ஜாதி பெருமையோடு நெருக்கமாக முக்குலத்தோர் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது.

இப்படி நேரடியாக ஜாதி அடையாளம் காட்டப்படாமல், குறிப்பால் ஜாதி அடையாளத்தை உணர்த்தப்பட்ட ஒரே கதாப்பாத்திரம் மாடுகள் விற்பவர்.

‘மாடுகள் இறைச்சிக்காக விற்பனை, ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறத்தில் மாட்டுக்கொட்டகையிலேயே வீடு’ இந்தக் குறியீடுகள் அவரைத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால்தான் அந்தக் கதாபாத்திரத்திற்குப் பெயர்கூட வைக்கவில்லை.

பெயர் சொன்னால் ஒரு வேளை நேரடியாக ஜாதி அடையாளம் தெரிந்துவிடும் என்ற காரணமும் இருக்கலாம்.

ஜமீன் அய்நஸ், முக்குலத்தோர் பிரிவைச் சேர்ந்த ஒரு ஜாதி இந்து என்பதால், கள்ளர் சமுதாயத்தை நெருக்கமாகவும், மாடுகளைப் புனிதமாகவும், மாட்டுக்கறி விற்பனையைச் சமூக விரோதமாகப் பார்க்கிறார்.

ஆனால், இயக்குநர் பாலா அவரும் ஏன் அவ்வண்ணமே பார்க்கிறார்? அய்நசுக்கும் பாலாவிற்கும் என்ன தொடர்பு?

*

இயக்குநர் பாலா vs ஜமீன் – ‘சும்மா…‘

தங்கம் இதழ் ஆசிரியர் :

பாலா தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திர இயக்குநர். இவர் எடுத்த ஐந்து படங்களும் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவை.

இவரது ஐந்தாவது படமான அவன்-இவன் தற்போது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘தன் இனத்தைச் சேர்ந்தவர்களையும் சொரிமுத்து அய்யனார் சாமியையும் அவமானப்படுத்திவிட்டார்’ எனச் சிங்கம் பட்டி ஜமீன் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்த வேளையில் வே. மதிமாறன் தன் இணயதளத்தில், ‘பாலாவை சாதி உணர்வற்றவர் என்று காட்டுவதற்காகவே அவர் இனத்தவர்கள் செய்யும் வேலை இது. அதுமட்டுமின்றித் தலித்துகளைப் பாலா அவமானப்படுத்துகிறார்’ என்று எழுதி வரும் அவரைத் தங்கம் இதழுக்காகச் சந்த்தித்தோம்:

‘தன் ஜாதிக்காரர்களுக்கு எதிராகவே பாலா படம் எடுத்துவிட்டார் என்பதெல்லாம் சும்மா.

மாட்டுக்கறித் தின்பவர்கள் மோசமானவர்கள், மாடுகள் புனிதமானது, என்கிற ஜாதி இந்து கண்ணோட்டம்தான் இந்தப்படத்தில் அழுத்தி சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் கறிக்காகக் காட்டப்படுகிற ஆயிரக்கணக்கான மாடுகளில் ஒரு மாடுகூட எருமை மாடு இல்லை.

இத்தனைக்கும் தமிழகத்திலிருந்து கேரளாவிற்குக் கறிக்காகப் போகிற மாடுகளில் எருமை மாடுகள்தான் அதிகம்.

ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களின் மூலம் இவர்கள் அதிகமாக உறிஞ்சிக் குடிப்பது எருமை பாலைத்தான். ஆனால், பசுவைதான் புனிதமாகக் கருதுவார்கள். நன்றி கெட்டவர்கள்.

மாடுகளை (பசு) மனி்தர்களை விட மேன்மையாகவும், மனிதர்களை மாடுகளை விடக் கேவலமாகவும் (தீண்டாமை) நடத்துகிற நாடு இது.

மற்றப்படி, ஜமீன்களுக்கும் பாலாவிற்கும் நடக்கிற சண்டையை நடிகர் வடிவேலு பாணியில் உதட்டைக் குவித்துச் சொல்வதானால், ‘சும்மா..’

இந்தச் சண்டையில் பாலாவிற்குத்தான் லாபம். அவரை ஜாதி உணர்வற்றவராக அடையாளப்படுத்தும்.

ஆனால், அவன்- இவன் படம் அதையா சொல்கிறது?

*

‘அவன்-இவன்’ பாலாவை

‘அப்படி’ புரிந்துகொண்டால் நான்பொறுப்பால்ல..

அவன் இவன் படத்தில் பாலா மாடுகளைப் புனிதமாகச் சொல்லவில்லை, அவைகளைத் துன்புறுத்தக்கூடாது என்றுதான் சொல்லியிருக்கிறார். தலித்துகளை இழிவாகவும் அவர்காட்டவில்லை. தங்கம் இதழில் உங்கள் விமர்சனம் ஒரு சார்பாக உள்ளது.

-மருது, திண்டுக்கல்.

மாட்டுக்கறியை உண்பவர்கள் இஸ்லாமியர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும்தான். படம் பார்ப்பவர்கள், மாட்டு வியாபாரியை இஸ்லாமியராகப் புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான், ‘ஒட்டகத்தை வெட்டி கொடுக்குறாங்களே… அது என்ன?’ என்று ’குர்பானி’யை தவறாக உச்சரிக்க வைத்திருக்கிறார். அதன் நோக்கம் மாட்டு வியாபாரி தாழ்த்தப்பட்டவர் என்பதை அழுத்தமாகச் சொல்வதற்காகத்தான்.

மாடுகளை இறைச்சிக்காகக் கொல்வதைப் பற்றிதான் அந்தப் படம் கண்டித்தது. துன்புறுத்துவது பற்றி ஒரு இடத்தில் கூடச் சொல்லப்படவில்லை. ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளுக்குச் சாராயம் குடிக்க வைப்பது, கண்ணில் மிளாகய் பொடி தூவுவது, வாலை கத்தியால் குத்துவது போன்ற கொடுமைகளைதான் துன்புறுத்துவதாகக் காட்டியிருக்கவேண்டும்.

ஆனால், இந்தக் கொடுமைகளைப் பற்றிப் படம் குறிப்பால்கூட உணர்த்தவில்லை. ஜல்லிக்கட்டில், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாகக் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பங்கு கொள்கிறார்கள். அதைக் காண்பித்தால் அவர்களின் எதிர்ப்பை எதிர் கொள்ளவேண்டிவரும்,. தென் மாவட்டங்களில் படத்தை வெளியிட முடியாது.

ஜல்லிக்கட்டு கொடுமையைக் காட்டாததற்கு அது மட்டும் காரணமல்ல, பாலாவின் ஜாதி உணர்வும்தான் என்று நீங்கள் புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

*

mathimaran.wordpress.com சூன் மற்றும் திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஆகஸ்ட், செப்டம்பர் மாத இதழ்கள்.

தொடர்புடையவை:

7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல

7 ஆம் அறிவு தமிழர்களும் அவர்களின் 4 ஆம் ‘வர்ண’ உணர்வுகளும்

கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = `தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்

‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’

பேராண்மை’- சென்சாரின் சிறப்பு

‘பேராண்மை’ அசலும் நகலும்

இயக்குநர் மகேந்திரனின் கதாநாயகிகள் மற்றும் அவர் படங்களை திரும்ப எடுத்த மணிரத்தினம், வசந்த்

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

பாரதிராஜா: கலைஞன் தேவராகிய கதைச் சுருக்கம்

பாரதிராஜாவை திறமையான இயக்குநர் இல்லை என்பது போல் போன தங்கம் இதழில் நீங்கள் குறிப்பிட்டது ரொம்ப அதிகம்.

என். மலைச்சாமி, திருப்பூர்.

‘திறமையான இயக்குநர் இல்லை’ என்று நான் குறிப்பிடவில்லை.

தமிழின் மிக அழகியலான, நேர்த்தியான முதல் திரைப்படம் 16 வயதினிலே. இந்தப் படத்தின் நாயகன் எளிய சப்பானி. படத்தில் யாருக்கும் ஜாதிய அடையாளம் இல்லை. கிழக்கே போகும் ரயிலில் சவரத் தொழிலாளிதான் நாயகன். இவை எல்லாம் பாரதிராஜா என்கிற கலைஞன் எடுத்த படங்கள்.

மண்வாசனை, முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே இவைகள் எல்லாம் பாரதிராஜா என்கிற தேவர் எடுத்த படங்கள். முதல் மரியாதை திரைக்கதையும், காட்சி அமைப்பும் நவீனமாக, அழகியலோடு இருந்தாலும் அதன் ஜாதி உணர்வு இயக்குநரின் கலை நேர்த்தியை ஒரு குறுகிய வட்டத்தினுள் சொருகி விட்டது.

முதல் மரியாதையில், வடிவுக்கரசி சிவாஜிக்கு எதிராக தன் உறவினர்களை (தேவர்) அழைத்து விருந்து வைப்பார். உறவினர்கள் சிவாஜியை இழிவாக பேசும்போது, அருவாளை உருவி, ‘நான் தேவன்டா..’ என்று ஜாதி வீரம் பேசுவார். அப்போ விருந்து சாப்பிடுறவங்க யாரு சீனாக்காரங்களா?

ஒரு தலித் பெண்ணை கொலை செய்தது தன் ஜாதிக்காரனே என்று தெரிந்தும் அவனுக்கு தண்டனை வாங்கித் தந்த நீதிமான் என்று சிவாஜி கதாபாத்திரத்தை தலித் தோழன் அடையாளத்திற்குள் திணிக்க முயன்றாலும், தன் காலில் குத்திய முள்ளைக் கூட குனிந்து எடுக்காமல், ‘செங்கோடா..’ என்று  ஒரு  தாழ்த்தப்பட்டவரை அழைத்து, அந்த முள்ளை எடுப்பது போன்ற காட்சியில் தலித் விரோதமும், ஜாதி திமிரும்தான் வெளிப்பட்டது.

பார்ப்பன ஆதிக்கத்தை கேள்வி கேட்க வந்த வேதம் புதிது, பார்ப்பனியத்தின் இன்னொரு வடிவமான சுயஜாதி அபிமானத்தை சுற்றி வந்து மீண்டும் பார்ப்பனியத்தின் கால்களிலேயே விழுந்தது. அதனால்தான் வயது முதிர்ந்த அந்த பாலு தேவர், பார்ப்பன சிறுவன் முன் பரிதாபமாக கை கட்டி நின்றார்.

பாரதிராஜா திறமையானவர்தான். தமிழ் சினிமாவின் வடிவத்தையே தலைகீழாக மாற்றிய மகா கலைஞன்தான். ஆனால்…

அவர் பெரிய இயக்குநராக பிரபலமாவதற்கு முன் கலைஞனாக இருந்தார். பிரபலமான பிறகு தேவராகிவிட்டார். ஆனாலும், அவர் இயக்குர் ஆனதற்கு, அவருடைய ஜாதி உணர்வு எந்த வகையிலும் உதவவில்லை என்பதை அவர் உணரத் தவறிவிட்டார்.

ஆம், ஆரம்பகாலத்தில் அவருக்கு உதவிய எஸ்.பி. பாலசுப்பிரணியம் தெலுங்கர். அவரை உதவியாளராக சேர்த்துக் கொண்ட புட்டண்ணா ஒரு கன்னடர். அவரின் முதல் பட தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு தேவர் இல்லை.

பாரதிராஜாவை மிகப் பெரிய இயக்குநராக கொண்டாடுகிற தமிழர்களில் தேவர் ஜாதி அல்லாதவர்களே மிக மிக மிக அதிகம். ஆனால், அவர் படமோ தேவர் ஜாதி தமிழர்களை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறது.

இது என்ன நியாயம்?

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2011 நவம்பர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

பாரதிராஜா சொல்வது உண்மையா?

இயக்குநர் மணிவண்ணனின் ‘ஆன்மா’ பாரதிராஜா-விகடனை மன்னித்தாலும் துரோகத்தை மன்னிக்காது!

16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்

யதார்த்தமா காட்ற ‘தில்’லு ஒரு டைரக்டருக்கும் இல்ல..

பாலாவின் அவன்-இவன்; ‘அவனா நீ..?’

இயக்குநர் பாலா Vs ஜமீன் – ‘சும்மா…’

கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = `தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்

கம்யுனிஸ்டுகள், தமிழ்த் தேசியவாதிகளை விட அதிமுகவே மேல்!

வுண்டமணியை வில்லனோ, நாயகனோ மிக மோசமாக திட்டினால், கோபத்தில் கவுண்டமணி தன் பக்கத்தில் இருக்கும் செந்திலை ஓங்கி அறைவார்.

“அவுரு திட்டுனதுக்கு, என்னை எதுக்குண்ணே அடிக்கிறீங்க?” என்று பரிதாபமாக புலம்புவார் செந்தில்.

அதுபோல், பிரதமர் மன்மோகன்சிங் நிதி உதவி இல்லை என்று சொல்லிவிட்டாராம், அந்தக் கோபத்தில் முதல்வர் ஜெயலலிதா தனக்கு ஓட்டுப் போட்ட மக்களை வெளுத்து வாங்கியிருக்கிறார்.

பால், போக்குவரத்து, மின்சாரம் இந்த மூன்றையும் தனி தனியாக விலை ஏற்றி இருந்தால்,

‘இப்படி அடிக்கடி விலை ஏத்துனா நாங்க என்னதான் பண்றது?’

என்று மக்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக பேசுவார்கள் என்பதினால், ஒட்டுமொத்தமாக உயர்த்தப்பட்டிருக்கிறது, ‘இரண்டுநாள் புலம்புவாங்க அப்புறம் பழகிடுவாங்க’ என்கிற கணக்குத்தான்.

இப்படி மூன்றையும் ஒன்றாக விலை உயர்த்தியதில், லாபம் அடைந்தவர்கள் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஓட்டுக் கேட்ட, கம்யுனிஸ்ட் கட்சியிகளும், தமிழ்த்தேசியவாதிகளும்தான். குறிப்பாக கம்யுனிஸ்டுகள் consolidated அடையாளப் போராட்டத்தை நடத்திட்டு போயிடுவாங்க.

பின்ன என்னங்க அம்மா ஆட்சியில ஒரு போராட்டத்தை நடத்திட்டு வீட்டுக்குப் போய் வாசல்ல செருப்பை கழட்டி விடறதுக்குள்ள, அடுத்த ‘நல’ த்திட்டதை அறிவிச்சிடுறாங்க. இந்த வாட்டிதாங்க கொஞ்சம் ஓய்வா இருக்கு.

மிக குறிப்பா தா. பாண்டியனை பெரிய நெருக்கடியில இருந்து அம்மா பாதுகாத்து இருக்காங்க. பாவம் வயசான காலத்துல அவருக்கு எவ்வளவு சங்கடம், அடிக்கடி ‘அம்மா திமுக அரசு க்கு எதிராக அறிக்கை குடுக்கறது. விலையேற்றத்தை விட, அவருக்கு பெரிய மனஉளைச்சலா இருக்கும்.  ஒரு வயதானவரை மனஉளைச்சலில் இருந்து பாதுகாத்த, இந்த அரசை அந்த வகையில பாராட்டலாம்.

நாம இப்படி கிண்டல எழுதுறதைகூட உண்மை என்று நினைத்து,

‘எதிர்க்கட்சிகளின் மீதும் கனிவோடு அக்கறைகொண்டு, மூன்றுக்கும் ஒன்றாக (Three-in-one) விலையேற்றிய புரட்சித்தலைவி அம்மாவின் ஜனநாயகத் தன்மைக்கு பாராட்டுவிழா’ என்று யாராவது கிளம்பிட போறங்க, அதுவேற பயமாக இருக்கு.

**

அதிமுக அரசின் இந்த விலையேற்ற விளையாட்டைவிடவும், பண்பாட்டு ரீதியான திட்டங்கள்தான் மிகுந்த ஆபத்தானதாக இருக்கிறது.

சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பு, தமிழ்புத்தாண்டை திருவள்ளுவர் தினத்திலிருந்து மீண்டும் சமஸ்கிருத சித்திரைக்கு ‘இந்துபுத்தாண்டாக’ மாற்றியது. பரமக்குடி தூப்பாக்கிச் சூடு, சித்தரா பவுர்ணமியை சிறப்பாக அறிவிப்பது. நூலகத்தை இடமாற்றுவது, கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்திலும் மூவரின் தூக்கிற்கும் மூன்று கோணங்களில் காய் நகர்த்தி கடைசியில் தூக்கையும் அணு உலையையும் ஆதரிப்பது இவைகள்தான் ஒரு நூற்றாண்டுக்கு தமிழ் சமூகத்தை நாசம் செய்துவிடும்.

கம்யுனிஸ்டுகளும், தமிழ்த்தேசியவாதிகளும் எந்த பிரச்சினையை முன்னிறுத்தி, அதிமுகவிற்கு ஓட்டுக் கேட்டார்களோ, அதே பிரச்சினை அதைவிட அதிகமாகியிருக்கிறது.

தேர்தலின்போது, ‘இதைவிட மோசமாகத்தான் இருக்கும்’ என்று சொன்னவர்களை இழிவான வார்த்தைகளால் விமர்சித்த இவர்கள், கொஞ்சமும் நேர்மையற்று.

தங்கள் நிலைபாட்டுக்கு எந்த விளக்கமும் தராமல், அதிமுக அரசை தீவிரமாகவோ, மேம்போக்காகவோ கண்டிக்கிறார்கள், கவிதை எழுதுகிறார்கள், அலோசனை சொல்கிறார்கள்.

முதல்வர் ஜெயலலிதாகூட, விலையேற்றத்திற்கான காரணத்தை நியாயப்படுத்தி இரண்டு முறை விளக்கம் அளித்திருக்கிறார். குறைந்த பட்சம் அதுபோன்ற ஒரு பண்புகூட இவர்களிடம் இல்லை.

விலையேற்றத்திற்கும், ‘ஆதிக்க பண்பாட்டு’ ரீதியான திட்டங்களுக்கும் குற்றவாளி அதிமுக அரசு மட்டுமல்ல, அதற்கு ஓட்டுக் கேட்டவர்களும்தான். (ஓட்டுப் போட்ட மக்கள் அல்ல.)

ஆகவே, அதற்குரிய விளக்கத்தை அளித்தப் பிறகே, இவர்கள் அதிமுக அரசை கண்டிப்பது குறைந்தபட்ச அறிவு நாணயம் உள்ள செயல்.

இல்லையேல்….

இவர்களைவிட அண்ணாதிமுகவே மேல்.

தொடர்புடையவை:

ஈழமக்கள் துயரம்; திருப்பதிக்கு முடிச்சுப்போடடு வைக்கறதும், தேர்தலுக்கு ஓட்டுப் போட்டு வைக்கறதும் ஒன்னுதான்

ஈழத்தமிழரை பலியிட்டு ‘தேர்தலோ தேர்தல்’

சமையல்; ஆண்களும் பெண்களும்

ஓட்டல்களில், திருமணங்களில் இப்படி பொது நிகழ்ச்சிகளில் சமைக்கும் ஆண்கள், வீட்டில் சமைப்பதில்லை. ஆனால் சமையல் என்றாலே பெண்கள்தான் என்று சொல்வது என்ன நியாயம்?

பிரேமா, சென்னை.

ஓட்டல்களில், திருமணங்களில், பொதுநிகழ்ச்சிகளில் சமைத்தால் வருமானம் வரும். வீட்டில் சமைத்தால்?

அதனால்தான் ஆண்கள் வீட்டில் சமைப்பதில்லை.

செய்யும் வேலைக்கு வெறும் சோறு மட்டும் போட்டால், கொத்தடிமைத்தனம்தான் மிஞ்சும். அதுதான் பெண்களுக்கு நேருகிறது.

அடிமைத்தனத்தை அன்பால் பிசைந்து உண்கிறார்கள் பெண்கள்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் நவம்பர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்

சானிடரி நாப்கின்; நமது கருத்தும், அதிமுக அரசின் திட்டமும்

இலவச சானிடரி நாப்கின் திட்டம்: இந்தியாவிலேயே முதன்முறையாக

பெண்களுக்கான இடஒதுக்கீடு: தெய்வக் குத்தம்

ஈவ்டீசிங்

பாலியல் தொழிலா? விபச்சாரமா?

பாலியல் முதலாளி

கடலை மன்னர்களின் உருவ வழிபாடு

பொண்டாட்டிய நம்பறவனுக்கு பேர்தான் புருசன்..

பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது!

சோசலிச ரஷ்யாவின் வீழ்ச்சியும் கடாபி படுகொலையும்

கடாபி படுகொலை செய்யப்பட்டிருக்கிறாரே?

ஜான்சன், நெல்லை.

மவ்மார் அல் கடாபி கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

ஆனால். பாலைவனப் பகுதியில் புதைக்கப்பட்டதோ அமெரிக்க எதிர்ப்பு.

‘முஸ்லிம் எல்லாம் ஒத்துமையா இருப்பாங்க தெரியுமா?’ என்பது பச்சைப் பொய் என்று ஒவ்வொரு முறையும் இஸ்லாமிய நாடுகள் நிரூபித்து வருகிறன்றன.

இஸ்லாமிய மதக் கருத்துக்களுக்கு எதிராக ஒரு இஸ்லாமியர் கருத்துக் கூறினால், அவரை எதிர்ப்பதிலும், ஒழித்துக் கட்டுவதிலும்தான் இஸ்லாமிய நாடுகளும், இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்களே தவிர, ஏகாதிபத்திய எதிர்ப்பிலோ, இஸ்லாத்திற்கு எதிரான இந்துமதவெறி எதிர்ப்பிலும் மதசார்ற்றவர்களோடு இணைந்து செயலாற்றுதில் அந்த ஒற்றுமையை காட்டமாட்டார்கள்.

அப்பாவி பெண்ணை ‘ஒழுக்கக் கெடு’ என்று குற்றம் சாட்டி, கல் எறிந்து கொன்று தங்கள் வீரத்தை காட்டுகிற சவூதி அரேபிய மாவீர்கள்தான், இஸ்லாமிய நாடுகளை அமெரிக்காவிற்கு காட்டிக்கொடுக்கிற சுப்பிரமணிய சுவாமிகளாக இருக்கிறார்கள்.

அமெரிக்கா போன்ற ஏகாபதிபத்திய நாடுகளை போலவே, இஸ்லாமிய நாடுகளும், ‘கம்யுனிசம் மிக மோசமானது’ என்ற கருத்துக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

உண்மையில், ரஷ்யாவில் ஏற்பட்ட சோசலிசத்திற்கு எதிரான முதலாளித்துத்தின் மாற்றம், ரஷ்யாவை விட, சர்வதேச அரசியலில் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளானது, அரபு நாடுகள்தான்.

ரஷ்யாவில் சோசலிச ஆட்சி நடந்தவரை, பெட்ரோலுக்காக அமெரிக்க மற்றும் அய்ரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள், அரபு நாடுகளை தாக்கமால் இருந்ததன. ஒட்டுமொத்த ஏகாபதிபத்திய நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்தது ஒற்றை நாடான சோசலிச ரஷ்யா.

சோசலித்தின் வீழ்ச்சிதான், அரபு நாடுகளின் மீது ஏகாபத்திய நாடுகள் நடத்தும் தாக்குதலுக்குக் காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சோசலித்தின் வீழ்ச்சியிலிருந்துதான் அரபு நாடுகளின் அழிவும் ஆரம்பமானது.

இங்கும்கூட மதசார்ப்பற்ற முற்போக்காளர்களின் வீழ்ச்சி, இஸ்லாமியர்களின் வீழ்ச்சி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மதசார்ப்பற்ற முற்போக்காளர்கள் வீழ்ந்தால், மோடிகள்தான் முளைப்பார்கள்.

இஸ்லாமிய தீவிரவாதம், தேர்தல் சந்தர்ப்பவாத அரசியலில் இருந்து விலகி மதசார்ப்பற்ற முற்போக்காளர்களோடு இணைந்தால்தான் இந்துமதவெறி தாக்குதலில் இருந்து இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். இல்லையேல், இஸ்லாமிய பெயரையே தீவிரவாதத்தின் குறியீடாக மாற்றிவிடுவார்கள்.

எவ்வளவு தீவிரமான இந்து அபிமானியாக. அமெரிக்க அடிமையாக இருந்தாலும், ‘அப்துல் கலாம்’ என்று பெயர் வைத்திருந்தாலே போதும் அவமானப்படுத்துவதற்கு.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2011 நவம்பர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

அமெரிக்காவின் ராஜகுரு போப்பும், கிறிஸ்துவ தமிழ்த் தேசியவாதிகளின் மதவெறியும், ஈழமக்களின் துயரமும்

ஒபாமா; அமெரிக்காவின் அப்துல்கலாம் அல்லது வெள்ளைமாளிகையில் ஓர் கறுப்பு புஷ்

சந்திரபாபு, பின்லேடன், ஜாதியா? வர்க்கமா? விக்ரம்,கே.வி. மகாதேவன்

வர்க்க உணர்வு, ஜாதி உணர்வு எது தமிழர்களிடம் அதிகம் இருக்கிறது?

கே. அப்துல் காதர், கோவை.

இரண்டும் பின்னிபிணைந்துதான் இருக்கிறது.

ஒருவர் மிகவும் ஏழ்மையில், குடிசைப் பகுதியிலிருந்து படித்து உயர் வருவாய் உள்ளவராக மாறினால், அவர் குடிசைப் பகுதியிலிருந்து விலகி, தன்னைப்போலவே அதிக வருவாய் உள்ளவர்கள் குடியிருக்கும் பகுதியில் குடியேறுகிறார் அல்லவா?

இதுதான் வசதி வந்தப் பிறகு மாறுகிற வர்க்க உணர்வு.

அப்படி உயர்வருவாய் உள்ளவர்களோடு சேர்ந்து வாழ விரும்பி இடம் பெயர்கிறவர் தலித்தாக இருந்தால், அவருக்கு அந்தப் பகுதியில் வாடகைக்கு வீடு தர மறுக்கிறானே, அதுதான் ஜாதி உணர்வு.

வர்க்க உணர்வுதான் உண்மையானது. புறத்தில் உள்ளது. ஐம்புலன்களால் உணரக் கூடியது. சூழலுக்கு ஏற்ப மறைக்க முடியாதது. எல்லோருக்கும் ஒர் வர்க்க அடையாளம் உண்டு.

ஜாதி உணர்வு கற்பனையானது, புறத்தில் இல்லாதது. அய்புலன்களால் உணர முடியாதது. சூழலுக்கு ஏற்ப வெளிப்படுத்த, மறைத்துக் கொள்ளக்கூடியது. மனிதர்களுக்கு தேவையில்லாதது.

..

திரை இசைப் பற்றி நிறைய எழுதுகிறீர்கள். இனிமையான இசை என்பது மிகவும் இசை நுட்பங்கள் நிரம்பியதாகத்தான் இருக்க வேண்டுமா?
எஸ். பிரேமா, சென்னை.

நல்ல பாடல், திறமையான அதாவது நிறைய டெக்னிக்ஸ் உள்ளவையாக இருந்தால் மட்டும் போதாது; கேட்பவனின் ஆன்மாவை தொடுவதாக இருக்க வேண்டும்.

திரையிசை திலகம் என்று புகழப்பட்ட கே.வி. மகாதேவனின் பாடல்கள் எதை கேட்டாலும் கர்நாடக சங்கீத நுட்பம் நிறைந்ததாக இருக்கும். கேட்கவும் இனிமையாக இருக்கும்.

குறிப்பாக ‘மன்னவன் வந்தானடி..தோழி..’ இந்தப் பாடல், நுட்பமான இசை, மிக நேர்த்தியான கர்நாடக சங்கீத வடிவத்தில் அமைந்த பாடல் என்று இசை வல்லுநர்கள் சிலாகிக்கிறார்கள்.

இந்தப் பாடலின் இடையில்; வீணையின் கொஞ்சல், ஆணின் குரலில் நடனத்துக்குரிய ‘ஜதி’ மையமாக சுசிலாவின் குரல் இவைகள் ஒரு குவியமாக ஒன்றிணைந்து, உன்னத உலகத்தை சிரிஷ்டிக்கும்.

ஸ, ரி, க, ம, ப, த, நி இந்த ஏழு சுரங்களையும் தனி தனியாக சொல்லி, அதற்கு ஒவ்வொரு எழுத்துக்கும் ஒருவரி என்று பின்னியிருப்பார் கே.வி. மகாதேவன்.

உதாரணமாக, … கருணையின் தலைவா… … மதிமிகு முதல்வா…

இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் இனிமையாக இருக்கும். ஆனால்,இதுபோன்ற சிறப்பான இசை நுட்பங்கள் இல்லாமல் எளிமையான இசை வடிவத்தில் அவர் உருவாக்கிய,

‘உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல…’ ‘நலந்தானா..’ போன்ற பாடல்கள்தான் கேட்பவரை உருக வைத்து ஆன்மாவை தொட்டது.

பின்லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதினால், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது என்பது உண்மையாகிறதுஎன்று . சிதம்பரம் சொல்லியிருக்கிறாரே?

சிரா. சென்னை.

உண்மைதான். பின்லேடன் போன்ற தீவிரவாதிக்கு மட்டுமல்ல, அமெரிக்க ராணுவத் தீவிரவாதிகளுக்கும் அடைக்கலம் தந்திருக்கிறது பாகிஸ்தான்.

தங்கள் நாட்டினுள், தங்களின் ராணுவத் தலைமை அலுவலகத்திற்கு அருகில் வேறு  நாட்டு ராணுவ சிப்பாய்கள் உள்ளே புகுந்து, அந்த நாட்டு ராணுவத்திற்கே தெரியாமல், சர்வதேச அளவில் தேடப்படுகிற ஒருவரை பெரும் சண்டைக்குப் பிறகு சுட்டுக் கொன்றிருக்கிறது, அந்நேரம்…பாகிஸ்தான் ராணுவம் என்ன கோடைகால ஓய்வுக்காக குளிச்சியான பகுதிக்கு போயிடுச்சா?

ஒரு தர்க்கத்திற்கு… ‘பின்லேடனாவது தலைமறைவா இருந்தாரு, பாகிஸ்தான் ராணுவத்தினால் கண்டுபிடிக்க முடியல’ என்று ஒத்துக்கொள்ளலாம். ஆனால், அமெரிக்க ராணுவம் இப்படி பகிரங்கமாக உள்ளே புகுந்திருக்கே, இது எப்படி பாகிஸ்தான் அரசுக்கும் ராணுவத்திற்கும் தெரியாமல் இருக்கும்?

அமெரிக்க ராணுவம் அத்துமீறி இன்னொரு நாட்டினுள் நுழைந்ததை பற்றி ஏன் வாய் திறக்க மறுக்கிறார் சிதம்பரம்? அந்த விசுவாசத்தில்தான் இருக்கிறது பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் உள்ள ஒற்றுமை.

நல்ல இசை மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் நல்ல நடிகர்களும் இருக்கிறார்கள், அவர்களைப் பற்றி…?

. தமிழ், திருச்சி.

எம்.ஆர்.ராதா, மனோரமா, பாலைய்யா, ரங்காராவ், சிவாஜி கணேசன், ஸ்ரீதேவி என்று பல சிறப்பான நடிகர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள்.

இதில் நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களின் நடிப்பு முன்மாதிரி இல்லாதது, சுயம்புவானது. பெரியாரின் தொண்டர் என்பதற்காக சொல்லவில்லை. ஒரு படத்தில் நடிகவேள் வில்லனாக வந்தால், கூடவே நகைச்சுவை, குணச்சித்திரம் என்று மூன்று, நான்கு பரிமாணங்களில் தன் நடிப்பை வெளிப்படுத்துவார்.

அதேப்போல், தமிழ் சினிமாவின் நவீன நடிகர் என்றால் அது சந்திரபாபுதான்.

அவரை தழுவிதான் பின்நாட்களில் நாகேஷ், கமல்ஹாசன், பிரபுதேவா என்று பெரிய கூட்டமே உண்டானது. இன்றைக்கும் பலபடங்களில் அவருடைய dance movements தான் பயன்படுத்தப்படுகிறது. பிரபு தேவா அதிக அளவில் அதை செய்திருக்கிறார்.

இன்றைய நடிகர்களில் வடிவேலு, விக்ரம் சிறப்பாக நடிக்கிறார்கள். குறிப்பாக, பிதாமகனில் விக்ரம், அதுபோன்ற குணாதிசயங்கள் கொண்ட மனிதர்கள் யதார்த்ததில் இல்லை. தன் கற்பைனையில் புதிதாக ஒரு மனிதனை உருவாக்கி இருந்தார்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம்மே மாத இதழில் வாசகர் கேள்விகளுக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

பகுத்தறிவு கமலின் மதவெறி, பக்திமான் ஏ.பி.நாகராஜனின் மதநல்லிணக்கம்-அழகிகள்-திராவிட இயக்க சினிமா-எது வீரம்?

காதலர் தின வர்த்தகம்-விஜயகாந்த்-கமல்ஹாசன்-கிரிக்கெட்-தமிழ்சினிமாவின் ஆதிக்கஜாதி உணர்வு

சிவாஜி-கமல்-சேரன்-இளையராஜா-எம்.எஸ்.வி-ராகுல் காந்தி

பெரியார் எதிர்ப்பு, திரை இசை, மகேந்திரன், ரஜினி, விஜய், ‘சரோஜா’ கவுதம், மிஷ்கின், சானிடரி நாப்கின்

பானுமதியும் பாபாவும், பெண்களும் ஆண்களும், கொடிய மிருகம், சமச்சீர் கல்வி, வைரமுத்து

தங்கம் இதழை  ஆன்லைன் வழியாக பார்க்க:

http://ebook.thangamonline.com/may2011/

ஏழாம் அறிவு தமிழர்களும் அவர்களின் 4 ஆம் ‘வர்ண’ உணர்வுகளும்

தூணிலும் துரும்பிலும் இருக்கும் ஸ்ரீ ரங்கநாதனுள் இருப்பதோ, புத்தர்; நாமத்தைப்போட்டு ரங்கநாதனாக ஏமாற்றினார்கள். அதுவே பின்னாளில் ‘நாமம்’ என்பதே ஏமாற்றுவதற்கான குறியீடாக மாறியது. ‘என்ன நாமத்த போட்டுட்டானா..’ என்று.

7 ஆம் அறிவு விமர்சனத்தைப் படித்துவிட்டு பல தோழர்கள் சிறப்பாக, சரியாக இருக்கிறது என்றார்கள்.

இந்து மதவாதிகள், ‘நீ கிறிஸ்துவர்களிடம் பணம் வாங்கிவிட்டாய். கெட்டு ஒழிந்து போ’ என்று முனிவர்களுக்குரிய கோபத்தோடு சபித்தார்கள். இன்னும் சிலர், ‘நீ கிறித்துவன்தானே அதான் புத்திய காண்பிச்சிட்ட..’ என்று எனக்கு ஞானஸ்நானம் செய்து வைத்தார்கள்.

Manimaran Karunanidhi என்கிற பெயரில் ஒரு ‘அம்பி’ தொடர்ந்து எனக்கு ஆபாசமாக பல பின்னூட்டங்களை எழுதி வருகிறார், அவர் என்னுடைய இணையப் பக்கத்தை தடை செய்ய world press க்கு புகார் அனுப்பச் சொல்லி வாசகர்களுக்கு பரிந்துரைக்கிறார்.

Hi All,

Today i have sent a request to close this mathimaran’s blog to world press.

Mathimaran lost his mind control. His aim to comment one particular community and write good about a community which is feeding for him and for his family.

Those who feel the same to report abuse and want to close this mathimaran’s blog,

Please use following link and report abuse.

http://en.wordpress.com/abuse/

Manimaran Karunanidhi
manimaran.karunanidhi@gmail.com
148.87.19.222 (ip)

இந்து தமிழ்த்தேசிவாதிகளோ, இன்னும் ஒருபடி மேலேபோய் ‘நீ தமிழனை இழிவு படுத்திவிட்டாய். போய் சாவுடா. அடுத்த ஜென்மத்துல வேற இனத்துல போய் பொறந்துக்க. தமிழ்நாட்ல இருக்காதே’ என்று சிங்கள ராஜபக்சே தமிழர்களை ‘இலங்கையில் இருக்காதே’ என்று கொக்கரிப்பதுப் போல் கொதித்தார்கள்.

இன்னும் சிலரோ, ‘உன்னை 7 ஆம் அறிவுக்கு விமர்சனம் எழுத சொன்னவனுங்க நல்லாவே இருக்க மாட்டானுங்க’ என்று என் நண்பர்களை சபித்தார்கள்.

இந்த கோபங்கள் எல்லாம், இயலாமையாகத்தான் வெளிபட்டதே தவிர, ஒரு வார்த்தைக்கூட நான் எழுதியதற்கு பதிலாக வரவில்லை.

‘மாமன் மகள்’ திரைப்படத்தில், சாவித்திரியை ஒருதலையாக காதலிக்கும் சந்திரபாபு, ஒரு அட்டையில் சாவித்திரி படத்தை வரைந்து வாயில் ஒரு ஓட்டை போட்டு, அதன் வழியாக சாத்துக்குடி சுளைகளை ஊட்டிக் கொண்டிருப்பார். சுளைகள் அட்டையின் பின் பக்கமாக கீழே விழுந்து கொண்டிருக்கும்.

சந்திரபாபுவின் காதல் தூதராக வரும் துரைராஜ் அதைப் பார்த்து, அந்த ஓட்டையில் வாயை வைத்து, ‘சாவித்திரி’க்கு ஊட்டும் சாத்துக்குடி சுளைகளை தின்று கொண்டிருப்பார். அதைப் புரிந்த சந்திரபாபு, தன் இன்னொரு கையில் இருக்கும சிகரெட்டால் துரைராஜ் நாக்கை சுட்டுவிடுவார்.

அலறி துடிக்கும் துரைராஜை பார்த்துவுடன் சந்திரபாபு, ‘டேய் அவள பாத்தியாட, என்ன சொன்னா?’ என்பார்.

‘அய்யய்யோ முதலாளி, என் நாக்கை சுட்டுட்டிங்களே’ என்று அலறுவார் துரைராஜ். அதை பொருட்படுத்தாமல் மீண்டும் சந்திரபாபு, ‘டேய் அவள பாத்தியாட?’ என்பார்.

‘முதலாளி எனக்கு நாக்கு எரியுது. என்னால தாங்க முடியலையே. இந்த மாதிரி பண்ணிட்டீங்களே, என்னால ஒரு வார்த்தைக் கூட பேச முடியாது’ என்று தொடர்ந்து புலம்பிக் கொண்டிருப்பார்.

கடுப்பான சந்திரபாபு, ‘அடப்பாவி, தேவையில்லாம இவ்வளவு வார்த்தை பேசுற. ஒரே ஒரு வார்த்தை என் ஆள பாத்தியா, இல்லையானு சொல்லக்கூடாதா?’ என்பார்.

அதுபோல் தேவையில்லாமல், நிறைய புலம்புகிற, சபிக்கிற இந்து மற்றும் இந்து தமிழ்த்தேசியவாதிகள் ஒரே ஒரு வார்தையையாவது நமக்கு பதிலாக தந்திருக்கலாம். மாறாக நான் தமிழர்களை இழிவுபடுத்தியதாக அபாண்டம் சொல்கிறார்கள்.

நானா தமிழர்களை இழிவுபடுத்தினேன்? 7 ஆம் அறிவுதான் தமிழர்களின் பெருமையாக, இந்து பார்ப்பன பெருமைகளைக் காட்டி, சூத்திரத் தன்மையை தமிழன் அடையாளமாக இழிவுபடுத்தியிருக்கிறது.

///விஞ்ஞானி என்றால், கண்டிப்பாக பார்ப்பனப் பெயர்தான். இந்தப் படத்திலும் சுபா சீனிவாசன்தான் ஆராய்ச்சியாளர். (சித்த வைத்தியரான சீனிவாசன், தன் பொண்ணுக்கு வச்ச பேரப் பாரு.) இதுதான் 7 ஆம் அறிவின் தமிழ் உணர்வு.

இவர்களுக்கு எம்.ஜி.ஆர் எவ்வளவோ பராவயில்லை. அவரின்உலகம் சுற்றும் வாலிபன்படத்தில் விஞ்ஞானிக்குமுருகன்என்ற தமிழ் பெயரை வைத்திருந்தார்./// என்று 7 ஆம் அறிவு பற்றி எழுதியபோது குறிப்பிட்டிருந்தேன்.

‘முருகன்’ என்று பெயர் வைபத்தில்கூட எனக்கு உடன்பாடு இல்லை. பெரியாரைப் போல் மதசார்பற்ற தமிழ்ப்பெயர்களை வைப்பதைதான் நான் கடைப்பிடிக்கிறேன். ஆதரிக்கிறேன். ஆனால், தமிழ்ப் பெருமை பேசுகிற 7 ஆம் அறிவு ஒப்பிட்டளவில்கூட ‘முருகன்’ என்கிற தமிழ்ப் பெயரைக்கூட ஏன் தேர்தெடுக்கவில்லை?

சுபஸ்ரீ, காயத்திரி, சுரேஷ், ரமேஷ், பாலாஜி போன்ற பெயர்களை மட்டுமல்ல, கந்தசாமி, சுப்பிரமணியன், சுப்பிரமணியசாமி இதுபோன்ற சமஸ்கிருத பார்ப்பனப் பெயர்களையும் ‘இந்து’ என்பதற்காக ‘இந்து’ தமிழர்கள், விரும்பி வைத்துக் கொள்கிறார்கள். ஆனால், ‘முருகன்’ ’ஆறுமுகம்’ ‘ஏழுமலை’ ‘பழனி’ ‘திருப்பதி,  என்கிற இந்து தமிழ்ப்பெயர்களை ‘இந்து’ என்பதற்காக பார்ப்பனர்கள் வைப்பதில்லை.

ஆக 7 ஆம் அறிவின் தமிழ் விரோதப் போக்கை, சூத்திர தன்மையை, அடிமைப்புத்தியை சுட்டிக் காட்டி எழுதினேன்.

ஆனால், பாவம் ‘தமிழர்கள்’ சூத்திரர்களாக இருப்பதிலேயே சுகம் காண்கிறார்கள். இந்த அடிமை மனோபாவம்தான், படத்தின் இயக்குநர் தமிழரும் ரசிக தமிழர்களும் Tally ஆகிற இடம்.

***

///பெரியம்மை, காலரா போன்ற தொற்று நோய்களால், சித்த வைத்தியத்தில் சிறந்தவர்களான தமிழர்கள் கும்பல் கும்பலாக செத்துக் கொண்டிருந்தபோது, போதிதர்மனாக வந்து தமிழர்களுக்கு  மருத்துவம் பார்த்தது வெள்ளைக்காரன்தான். (அவுனுக்கும் வந்துடுமோ என்ற பயம்தான்) வெள்ளைக்காரன் வருகைக்குப் பிறகுதான் பெரியம்மை போன்ற நோய்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, அற்ப ஆயுள் இந்தியர்களுக்கு, ஆயுள் 60 வயதை தாண்டியது./// என்று விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

இதை,  தமிழர்களின் சித்த வைத்தியத்திற்கு எதிராக நான் எழுதிவிட்டதாக கோபித்துக் கொண்டார்கள். சித்த வைத்தியத்தின் சிறப்புகளை அறியாதவன் அல்ல நான். ஆனால், தீவிர இறைநம்பிக்கை, ஜோதிடம் போன்ற மூடநம்பிக்கைகளோடு நெருங்கிய தொடர்பு கொண்ட காரணத்தால், பெரிய அளவில் வளர்ந்து உலகம் முழுக்க மாற்று மருத்துவமாக பரவி இருக்க வேண்டி சித்த வைத்தியம், மூடநம்பிக்கை என்ற முட்டு சந்தில் போய் நின்று விட்டது.

‘இந்த மருந்த சாப்பிடுங்க. சரியாகும். கடவுள் இருக்கான். நம்பிக்கையா இருங்க.’ என்று மருத்துவர் பேசுவது தப்பில்லை.

மாறாக, ‘ஏழு வாரம் தொடர்ந்து, சனீஸ்வரன் கோயிலுக்கு போயிட்டு வாங்க. அங்க போய் இந்த மருத்தை அர்ச்சனை தட்டுல வைச்சி தீவார்த்தன காண்பிச்ச பிறகு சாப்பிடுங்க. கண்டிப்பாக நோய் சரியாகிவிடும்’ என்றால் அது எப்படி வைத்தியமாகும்?

மருத்துவர்கள் இறை நம்பிக்கை, ஜோதிட நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கலாம். ஆனால் மருத்துவமே அப்படி மாறினால், அது தன் சிறப்புகளை, நம்பகத்தன்மையை இழந்துவிடும் என்பதற்கு சித்த வைத்தியமே சாட்சி.

modern medicine என்று சொல்லப்படுகிற அலோபதி வைத்தியமுறை மருத்துவர்களிடம் மூட நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அந்த மருத்துவத்தில் மூடநம்பிக்கை இல்லை. மாறாக, அது வணிகம் என்ற பெரும் சகதியில் சிக்கியிருக்கிறது.

இப்படித்தான் பெரியம்மையை, நோயாக பார்க்காமல் கடவுளாக பார்த்தார்கள். ‘ஆத்தா எறங்கி இருக்கா, அவள குளுர வைச்ச அவளே போயிடுவா..’ என்று  பக்தியாக பேசினார்கள். இதனால்தான் பெரியம்மைக்கு மருத்துவமும் பார்க்கவில்லை. மருந்தும் கண்டுபிடிக்கவில்லை.

வெள்ளைக்காரன் வந்து பெரியம்மையை நோய் என்று கண்டு, தன் மருத்துவத்தால் ஆத்தாவுக்கு ஆப்பு அடிக்கவில்லை என்றால், ஆத்தா ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஆப்படிச்சிட்டு போயிருப்பா.

***

இந்து மதத்தின் மீதும், பிராமணர்கள் மீது உனக்கு என்ன அப்படி கோபம்? உன் தனிப்பட்ட கோபத்தை எல்லாம் தமிழிடமும், தமிழர்களிடம் காட்டாதே?’ என்று கோமாளித்தனம் செய்கிறார்கள்.

தனிநபர்களின் மீதான அபிப்ராயத்தை அவர்கள் சார்ந்திருக்கிற, ஜாதி, மதம் இவைகளோடு தொடர்புபடுத்தி பார்ப்பதுதான் ஜாதி அபிமானிகளின் புத்தி. ஒருவரால் உதவி, லாபம கிடைத்தால் அவரை புகழ்வதும், அவரோடே சண்டையானால், ‘அவன் ஜாதி புத்திய காண்பிச்சிட்டான்’ என்பதும், ‘அவனுக்கிட்ட இருக்கிற மத வெறி நம்ம ஆளுங்ககிட்ட இல்ல’ என்பதும்தான் இவர்கள் கடைப்பிடிக்கிற காழ்ப்புணர்ச்சி அரசியல்.

அதுபோலவே நம்மையும் பார்க்கிறார்கள். எனக்கு ஒரே ஒரு பார்ப்பனரோடுகூட தனிப்பட்ட முறையில் எந்த தகராறும் இல்லை. அவ்வளவு ஏன் எனக்கு தனிப்பட்ட முறையில் பார்ப்பனர்கள் யாரும் தீங்கு செய்ததில்லை. மாறாக அந்த சமூகத்தைச் சேர்ந்த என் நண்பர்கள் எனக்கு நன்மைதான் செய்திருக்கிறார்கள்.

என்னுடைய தனிப்பட்ட நட்பிற்காக அல்லது விருப்பத்திற்காக சமூகத்தில் இருக்கிற பார்ப்பனிய ஆதிக்கத்தை ‘இல்லை’ என்று சொல்லமுடியுமா?

7 ஆம் அறிவு ஆங்கிலத்திற்கு எதிராக பாரதியாரைப்போல், தமிழ்ப் பெருமை பேசுகிறது. தமிழ் ஒன்றும் மட்டம் இல்லை என்று கோபப்படுகிறது. சரிதான்.
ஆனால், தமிழை நீச மொழி, இழிவான மொழி என்று சொன்னது யார்?

சீனாக்காரனா? ஜப்பான்காரனா? வெள்ளைக்காரனா? மலையாளியா? கன்னடக்காரனா? தெலுங்கனா?
இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பாரதியாரைப்போலவே பம்முகிறது 7 ஆம் அறிவு.

தமிழை ‘குரங்குமொழி’ என்று சொன்ன, விஞ்ஞானி நெல்சனை ‘வாயிலேயே போடுவேன்’ என்று கோப்பப்பட்டு நவீன அறிவியல் ஆராய்ச்சிக்கு தமிழ் உகந்த மொழிதான் என்று நிறுவுகிறது 7 ஆம் அறிவு. சரிதான். அதை ஒத்துக் கொள்கிறோம்.

நவீன ஆராய்ச்சிக்கே உகந்ததாக இருக்கிற தமிழ், கேவலம் கோயிலில் அர்ச்சனை செய்தவற்கு உகந்த மொழியல்ல எனறு சொல்லுகிற சிவாச்சாரியர்கள், பட்டாச்சாரியர்கள், தீட்சிதர்கள் ‘வாயிலேயே போடுவேன்’ என்று சொல்லுகிற தைரியம் 7 ஆம் அறிவு உட்பட எந்த தமிழ் உணர்வாளனுக்கு வந்திருக்கிறது? இதைத்தான் நான் அடிமைப்புத்தி என்கிறேன்.

பல்லவர்கள் ஆட்சியில் தமிழுக்கு முக்கியத்துவம் இருந்தது. தேவராம், திருவாசகம் போன்றவைகள் புகழ்பெற்றது. ஞானசூனியமான உனக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று வெத்து வார்த்தைகளை சுழற்றுகிறார்கள்.

உண்மையில் பல்லவர் ஆட்சியில் தமிழ் உயர்ந்த நிலைக்கு போகவில்லை. சமஸ்கிருதம்தான் உயர்ந்தநிலைக்கு போனது. அதுவே ஆட்சி மொழியாகவும் இருந்தது. தேவாரம், திருவாசகத்திற்குகூட தெருவில் பாடுவதற்கும் கோபுரவாசலில் நின்று பாடுவதற்கும்தான் அனுமதி இருந்ததே தவிர, கர்பகிரகத்திற்குள் பாடுவதற்கு அனுமதி இல்லை. தமிழுக்கு, தமிழனுக்கு அதற்கான அருகதை இல்லை என்று காரணம் சொல்லப்பட்டது. இன்றளவும் அதுதானே நீடிக்கிறது.

சுடு, சொரணை, மானம், ஈனம் உள்ள எவனும் சுருங்கச் சொன்னால், சுயமரியாதை உள்ள எவனும், அவன் தமிழனாக. பக்தனாக இல்லாவிடினும்கூட, தமிழுக்கு நேரும் இந்த அவமானத்தை தட்டிக் கேட்பான். வள்ளலார், பெரியார் போன்றவர்கள் அதைத்தான் செய்தார்கள்.

ஆனால், சுயமரியாதை இல்லாதவன் தொடர்ந்து சூத்திரனாகவே இருக்க விரும்பி, சந்துல நின்னு எட்டிப்பார்த்து, வந்தவரைக்கும் லாபம் என்று சாமிய கும்பிட்டு வருவான்.

சிற்ப கலையில் சிறந்து விளங்கிய பல்லவர்கள் தமிழர்கள்தான், அவர்களால் தமிழ்நாடு பெருமை பெற்றது. மகாபலிபுரம் சிற்பங்களால் தமிழ்நாடு உலகஅளவில் புகழ் பெற்றது. உனக்கு கொஞ்சமாவது நன்றி இருக்கா? அவர்களை விமர்சிக்க உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?’ என்ற பாணியிலும் வீசுகிறார்கள்.

ஆமாம். பல்லவர் ஆட்சியில் கற்களுக்கும், சிற்பங்களுக்கும், சிலைகளுக்கும் இருந்த மரியாதை தமிழுக்கும், தமிழுர்களுக்கும் இல்லை.

இப்படியே போனா,

‘பல்லவர்களால்தான் மகாபலிபுரம் புகழ் பெற்றது. அதனால்தான் இன்னைக்கு நாம week end ல மகாபலிபுரத்துல ரூம் போட்டு ஜாலிய இருக்கோம். கொஞ்சம்கூட நன்றி இல்லாம அந்த பல்லவர்களை போய் திட்டுறீயே?’ என்பார்கள் போலும்.

நவம்பர் 9, 2011 அன்று எழுதியது.

தொடர்புடையது:

7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல

அவன்-இவன்; பாலாவின் ஜல்லிக்கட்டு

இலவச சானிடரி நாப்கின் திட்டம்: இந்தியாவிலேயே முதன்முறையாக

சட்டசபை தேர்தல் நேரத்தில் திமுக-அதிமுக இரண்டும் போட்டிப் போட்டுக் கொண்டு இலவசத் திட்டங்களை, குறிப்பாக பெண்களுக்கு திருமணம் இலவசத் தி்ட்டங்களை அறிவித்தன.

அதைக் கண்டித்து. பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்’ என்று தங்கம் இதழிலும் http://vemathimaran.com/2011/04/04/article-385-1/ எழுதியிருந்தோம்.

இலவச சானிடரி நாப்கின் திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக அதிமுக தராத போதும், பட்ஜெட்டில், இலவச நாப்கின் திட்டத்தை அறிவித்தது. இப்போது அதை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது அதிமுக அரசு.  அதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தாய்-சேய் நலனை மேம்படுத்த வளர் இளம் பெண்களிடையே சுகாதாரம் மற்றும் அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது மிகவும் அவசியம் என்றும், இது போன்ற சுகாதார விழிப்புணர்வு எதிர்காலத்தில்  ஏற்படும் தொற்றுநோய்கள் மற்றும் கருவுறுதல் தடைபடுவதை குறைக்க வழி வகுக்கும் என்று அரசு கருதுகிறது.

இதனைச் செயல்படுத்தும் விதமாக, அனைத்து கிராமங்களில் உள்ள 10 முதல் 19 வயது வரை உள்ள வளர் இளம் பெண்கள், பிரசவித்த தாய்மார்கள் மற்றும் சிறைச்சாலைகளில் உள்ள பெண் கைதிகள் ஆகியோர் நலனுக்காக இலவசமாக மாதவிடாய் பஞ்சுகள் (Sanitary Napkins) வழங்கிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்தத்  திட்டத்தின்படி கிராமத்தில் வாழும் இளம் பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஆறு மாதவிடாய் பஞ்சுகள் (Sanitary Napkins) கொண்ட ஒரு பை வீதம், மூன்று பைகள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும்.  அதாவது ஒவ்வொரு ஆண்டும் 18 பைகள் ஒவ்வொரு வளர் இளம் பெண்ணுக்கும் வழங்கப்படும்.

இந்த மாதவிடாய் பஞ்சுகள், அரசு பள்ளிகளில் பயிலும் வளர் இளம் மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் மூலமாகவும், மற்ற வளர் இளம் பெண்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட மையங்களில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் கிராமங்களில் உள்ள கிராம சுகாதார செவிலியர்கள் மூலமாகவும் வழங்கப்படும்.

மேலும், இந்தத் திட்டத்தின்கீழ் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கிராம சுகாதார துணை நிலையங்களில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு ஆறு மாதவிடாய் பஞ்சுகள் கொண்ட ஏழு பைகள் வழங்கப்படும்.

இதுவன்றி சிறைச்சாலைகளிலுள்ள பெண் கைதிகளுக்கும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஆறு மாதவிடாய் பஞ்சுகள் கொண்ட மூன்று பைகள் வழங்கப்படும்.

பயன்படுத்தப்பட்ட மாதவிடாய் பஞ்சுகளை தூக்கி குப்பையில் எரிந்து சுற்றுப்புற சுகாதாரம் மாசு அடைவதை தடுக்க அந்தந்த கிராமப்பகுதிகளில் குழிகள் தோண்டி புதைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் இளம் பெண்களால் பயன்படுத்தப்பட்ட பஞ்சுகளை சுகாதார முறையில் அழிக்க சூளை அடுப்பு நிறுவிடவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு பெண்ணிற்கும் வளர் இளம் பெண்கள் நலக் குறிப்பேடு வழங்கப்பட உள்ளது.  வளர் இளம் பெண்களின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு எடை, உயரம், ரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவு ஆகியவை இந்தக் குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டு அவர்களின் நலன் கண்காணிக்கப்படும்.  வளர் இளம் பெண்களின் ரத்த சோகை தடுப்புத் திட்டமாக ஒவ்வொரு பெண்ணிற்கும் வாரந்தோறும் ஒரு இரும்பு சத்து மற்றும் போலிக் அமில மாத்திரை வழங்கப்படும்.  ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடல்புழு நீக்க மாத்திரையும் வழங்கப்படும்.

இந்த புதிய திட்டத்தின் செயல்பாட்டினை கண்காணிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் சுகாதாரத்துறை, சமூக நலத் துறை, பள்ளிக் கல்வித்துறைகளின் அலுவலர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு ஒன்றினை அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்திரவிட்டுள்ளார்.

இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து ஊரகப் பகுதிகளிலும் செயல்படுத்தப்படும் இந்தப் புதிய திட்டத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 44 கோடியே  21 லட்சம் ரூபாய் செலவாகும்,

என அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையவை:

பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்

சானிடரி நாப்கின்; நமது கருத்தும், அதிமுக அரசின் திட்டமும்