சாதி இந்து எதைச் செய்தாலும் அது புனிதமானதுதானா?;காந்தியம்: மலத்தில் பொறுக்கிய அரிசி

பேராசிரியர் அரச. முருகுபாண்டியன்


-பேராசிரியர் அரச. முருகுபாண்டியன்

 தோழர். வே. மதிமாறன் எழுதிய காந்தி நண்பரா? துரோகியா என்கிற நூல் அங்குசம் வெளியீடாக வந்துள்ளது. நேற்றுதான் (21.01.2012) அந்நூல் கிடைக்கப் பெற்று வாசித்து முடித்தேன். எழுத்தாளர் மதிமாறன் ஏற்கனவே எழுதிய நூல்களையும் அவைகள் ஏற்படுத்திய அதிர்வுகளையும் நான் அறிவேன்.

குறிப்பாக பார்ப்பன பாரதியை அவர் ஆதாரப்பூர்மாக அம்பலப்படத்திருந்த பாரதி ஜனதா பார்ட்டி என்கிற நூலில் அவர் பாரதி மீது வைத்த விமர்சனங்களுக்கு பாரதி ஆய்வாளர்கள் பாரதிபக்தர்கள் பாரதிதாசர்கள் ஒருவர்கூட மறுப்பேதும் சொல்லவில்லை.

இந்த கள்ள மவுனத்திற்குப் பின்னால், ஒளிந்துகொண்டிருப்பது அப்பட்டமான பிழைப்புவாதம். சாதி வெறியர்களும் மதவெறியர்களும் ஏகாதிபத்திய தாசர்களும் ஒளிந்து கொள்ளும் இடமாக பாரதி இன்றும் இருந்து வருகிறான். அவனை தாங்கிப் பிடிக்கும் பிழைப்புவாத கம்யுனிஸ்டுகளுக்கும் இது பொருந்தும்.

தமிழ் அறிவுலகம் என்பது சூனியங்களால் நிரம்பிக்கிடப்பதை நேர்மையாக சிந்திக்கிற யாரும் உணர முடியும். மகாகவியை தோலுரித்த மதிமாறன் இப்போது மகாத்மா வைத் தோலுரித்திருக்கிறார்.

இந்துத்துவம், சாதியம், முதலாளியம், எப்படி மீண்டும் மீண்டும் புத்துயிர் பெறுகிறதோ அதைப் போலவே காந்தியும் புதுப்பிக்கபடுகிறார். மார்க்சீயம், அம்பேத்கரியம், பெரியாரியம் பேசி ஆளும் வர்க்கத்தை, ஆதிக்க சாதிகளை பகைத்துக் கொள்வதைவிட, காந்தியம் பேசி பொது நீரோடத்தில் தன்னை இணைத்துக் கொள்ளவே பெரும்பாலான பிழைப்புவாத அறிவுத் துறையினர் முயற்சிக்கின்றனர். காந்தியம் சர்வரோக நிவாரணியாக முன்னிறுத்தப்படுகிறது.

காந்தியை அவர் வாழுகிறபோதே அம்பலப்படுத்தியவர்கள் அண்ணல் அம்பேத்கரும் தந்தை .வெ.ராவும்தான். அவர் மகாத்துமா இல்லை என்பதுமட்டுமல்ல அவர் மனிதரே இல்லை ஒரு மனநோயாளி எனறு நிறுவினர் இருவரும்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வஞ்சம் இழைத்த காந்தியை, ராம்சே மெக்னால்டு முட்டாள் மனிதாபிமானமற்றவர் என்றே எழுதினார். ( பார்க்க இரட்டை வாக்குரிமை தொடர்பான காந்திராம்சே மெக்னால்டு கடிதங்கள்)

சாதியை சாகுவம்வரை நியாயப்டுத்திய, கேடுகெட்ட இந்துமதத்தை, ராமனை தன் உயிர் எனப் போற்றி, பகத்சிங், நேதாஜி, ..சி போன்ற புரட்சியாளர்களை வெறுத்த, சமூகப் பொருளாதார அறிவற்ற, மனம்போன போக்கில் உளறிக்கொட்டுவதும் அதற்கு உள்ளொளி என்று நியாயம் கற்பித்துக்கொண்டதும், ஆங்கிலேயருக்கு வாலாட்டிக் கொண்டே விடுதலை முழக்கமிட்ட ஒரு கோமாளி காந்தி.

சாதியால் மனநோய் பிடித்திருக்கும் ஒரு சமூகம் காந்தியைக் கொண்டாடாமல் என்ன செய்யும்? காந்தி போதையால் தள்ளாடுகிற சமூகத்தின் பிடறி மயிரைப் பிடித்திழுதது சுய நினைவுக்கு கொண்டு வருகிற முயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

அந்த முயற்சியின் விளைவாக முன்பே வெளியான மூன்று நூல்களில் ஒன்று காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் வெளியீடு, இரண்டாவது பகத்சிங்கும் இந்திய அரசியலும் என்று சுப. வீரபாண்டியனின் நூல், மூன்றாவது காந்தியின் தீண்டாமை என்னும் மருத்துவர். ஜெயராமன் (புதுக்கோட்டை) எழுதிய நூல்.

அந்த வரிசையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல் மதிமாறன் எழுதிய காந்தி நண்பரா? துரோகிய என்கிற நூல்.

காந்தி எங்களுக்கு (தீண்டப்படாதோருக்கு) நல்ல நண்பரும் இல்லை நாணயமான எதிரியும் இல்லை என்றார் அறிவர் அம்பேத்கர். இங்கே மதிமாறன் நண்பரா எதரியா என்று கேட்கவில்லை. நண்பரா? துரோகியா என்றே கேட்கிறார்.

காந்தி தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் துரோகம் இழைக்கவில்லை. ..சி போன்றவர்களுக்கும் கூட துரோகமிழைத்திருக்கிறார் என்பதையும் மதிமாறன் ஆதாரத்தோடு நிரூபிக்கிறார். எனவே காந்தியை எதிரி என்று சொல்வதை விடவும் துரோகி என்பதே பொருந்தும்.

நூலின் முதற் பகுதி காந்திய ஆதரவு அறிவாளிகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று தொடங்குகிறார். பெரியாரியமும் அம்பேத்கரியமும் எவ்வாறு காந்தியத்திற்கு நேர் எதிரரானது என்பதை பல் ஆதாரங்களோடும் அனுபவங்களோடும் எடுத்துவைக்கிறார்.

பெரியாரும் அம்பேத்கரும் சமூகமாற்றத்தின் குறியீடுகள். காந்தியோ பழமைவாதத்தை பாதுகாக்கும் சனாதனவாதி. எப்படி மூவருக்கும் ஆதரவாளராக இருப்பது? மார்க்சீயம் நட்பு முரண் பகைமுரண் என்று பேசும். காந்தி பகை முரண் என்பதை மார்க்சீயம் படித்த மேதாவிகள் உணராமல் போனது எப்படி? சுய ஆதாயமா? அல்லது சாதிய மோகமாக? அல்லது புணூலுக்குள் அடைக்கலம் தேடும் அவலமா? காந்தியை ஆதரிப்பதென்பது ராமராஜ்ஜியம் என்கிற வருணாசிரம ராஜ்ஜியத்தில்தான் போய்ச் சேரும். இதற்குத்தான் ஆசைப்பட்டார்களா அறிவுஜீவிகள்?

தென்னாப்பிரிக்காவில் மாரிஷ்ட்பர்க் ரயில் நிலையத்தில் காந்திக்கு ஏற்பட்ட அவமரியாதை நிறவெறியால் ஏற்பட்டதாகத்தான் இதுநாள்வரை காந்திய பக்தர்கள் பேசிவந்துள்ளார்கள். அதை காந்தியின் சத்திய சோதனை என்ற நூலிலிருந்தே ஆதாரம் காட்டி காந்தி டிக்கட் எடுக்காமல் பயணம் மேற்கொண்டதால்தான் அந்த அவமானம் நேரிட்டது என்று அம்பலப்படுத்துகிறார் மதிமாறன்.

பயணச்சீட்டு கூட வாங்காமல் பயணம் செய்த காந்தியை நேர்மையின் வடிவமாக முன்றுத்தினால் இந்தியர்களின் சிந்தனைப் போக்கை என்னவென்று சொல்வது? இதையே தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர் ஒருவர் செய்திருந்தால் இந்த சமூகம் அவரை எப்படியெல்லாம் அவமானப்படத்தியிருக்கும். ஒரு சாதி இந்து எதைச் செய்தாலும் அது புனிதமானதுதானா?

அடுத்த இயல் காந்தி படுகொலையும் அப்பாவி அகிம்சா மூர்த்திகளும் என்ற தலைப்பில் இந்துத்துவத்தின் காந்தியத்தின் சமூக விரோதக் கருத்துக்களை விரிவாகப் பேசிச் செல்கிறார். சாதியைப் பாதுகாக்கவே பெரிய புராணம் உருவாக்கப்பட்டது எனறும் பிறசாதி மக்களைப்போல் தலித்துக்கள் இறைவனை வழிபட நினைக்கக்கூடாது என்கிற கருத்தையும் கொண்டுதான் நந்தனார் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் நிறுவுகிறார்.

காந்தியின் மதச்சார்பின்மை (?) க்கு மதிமாறன் தரும் விளக்கம் அருமை. இஸ்லாமியர்களை விரோதிகளாக சித்தரிக்கிற பார்ப்பனிய இந்து பயங்கரவாதிகளை எதிர்த்து செயல்படுவதல்ல காந்தியின் நோக்கம். அவரின் தன்முனைப்பு அரசியலின் விளைவாவக அவரை அறியாமல் முளைத்த முற்போக்குக் கிளை அது இந்த வரிகளில் மதிமாறனின் தேர்ந்த தெளிந்த சிந்தனைகள் தெரிப்புக்களாக விழுகின்றன.

தொடர்ந்து, கோவணம் கட்டிய காந்தியும் கோட் சூட் போட்ட  அம்பேத்கரும் என்ற தலைப்பில் பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை எழுதுகிறார். தலைப்பே அங்கதமாக ஒலிக்கிறது. காந்தி தாழ்த்தப்பட்ட மக்களை அரிஜன் என்று அழைத்தது எதற்கென்று கேட்டால் மதிமாறன் வரிகளிலேயே சொல்கிறேன்,

‘தொடர்ந்து, ஏழைகளைப் போல் உடை உடுத்திய காந்தி, அவர்களைப் போல் குடிசையில் வாழவில்லை. மார்வாடி வீட்டு மாடி, பிர்லாவோட மாளிகை இன்றைக்கு பணக்காரர்கள் வார விடுமுறை நாட்களில் ஓய்வு எடுக்கிற ரிசாட்கள் பாணியில் அமைந்த அன்றைய குடில்கள், இது போன்று முதலாளிகள் நிழலில்தான் ஓய்வெடுத்தார்.

என்று காந்தியின் எளிமை வேடத்தை தோலுலிக்கிறார் மதிமாறன்.

கோட் சூட் போட்ட டாக்டர் அம்பேத்கர்தான் கோவணம் கட்டிய ஏழைகளின் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிசெய்தார். அண்ணல் அம்பேத்கரின் உடை ஆதிக்கத்திற்கு எதிரான குறியீடு என்றால், காந்தியின் உடை அடிமைத்தனத்தை நிலை நிறுத்துதவதற்கான குறியீடு என்று காந்தியின் கபடத்தனத்தை போட்டு உடைக்கிறார் மதிமாறன்.

அடுத்த இயல் .உசியின் தியாகமும் காங்கிரசின் துரோகமும் என்ற தலைப்பில் ..சிக்கு காந்தியால் இழைக்கப்ட்ட துரோகத்தைப் பதிவுசெய்கிறார். ..சியின் தியாகம் நாம் அறிந்ததுதான். ஒரு விடுதலைப் போராட்ட வீரராக, ஒரு தொழிற் சங்கத் தலைவராக அவர் அடைந்த இன்னல்கள் ஏராளம்.

ஆங்கிலேயேரோடு சமசரம் செய்துகொள்ளாத அவரது வீரம் என்றும் பின்பற்றததக்கது. பல்வேறு போரட்டங்களில் ஈடுபட்ட ..சிக்கு கொடிய தண்டனை கிடைத்தது. தண்டனை முடிந்து சிறையிலிருந்து வறிய நிலையில் திரும்பிய ..சியின் குடும்ப வறுமையைப் போக்க தென்னாப்பரிக்க தமிழர்கள் ரூ.5000 ம் நிதியை திரட்டி அதை ..சியிடம் ஒப்படைக்குபடி காந்தியிடம் கொடுத்திருக்கிறார்கள்.

..சி கடிதம் மூலமும் நேரிலும் பலமுறை கேட்டும் உத்தமர் அகிம்சாமூர்த்தி மகாத்துமாக அநதப் பணத்தை ..சியிடம் தரவே இல்லை. இதுதான் தேசப்பிதாவின் வண்டவாளம் என்று காந்தியின் திருட்டை தண்டவாளத்தில் ஏற்றுகிறார் மதிமாறன்.

..சி சிறையிலிருந்தபோது அவரிடம் நிலவிய சாதி மனோபாவத்தை அவரது குறிப்புகளே உணர்த்துகின்றன பின்னாளில் பெரியாரின் தாக்கத்தினால் ..சி பார்ப்பனசாதிஎதிர்ப்பாளராக மாறினார் என்றும் மதிமாறன் குறிப்பிடுகிறார்.

அடுத்த கேள்வி பதிலாக வாஞ்சிநாதன்; தேசப்பற்றால் மூடப்பட்ட ஜாதிவெறி என்கிற தலைப்பில் ஆஷ் மீது வாஞ்சிநாதன் கொண்ட வெறுப்பு சுதந்திர தாகத்தால் ஏற்பட்டதல்ல வருணாசிரம மோகத்தால் ஏற்பட்டது என்கிறார். அதை வாஞ்சிநாதனின் கடிதமே மெய்பிக்கிறது. இருந்தும் கூட இடதுசாரி எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் (தொ.மு.சி. ரகுநாதன் தொடங்கி பேராசிரியர் . சிவசுப்பிரமணியம் வரை) வாஞ்சிநாதனை தேசப்பற்றாளர் என்றே எழுதி வருகின்றனர். பெரியாரில்வாதிகளே அதைத் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

அவ்வகையில் மதிமாறனும் வாஞ்சிநாதனை பார்ப்பனவெறியன் என்றே நிறுவுகிறார். தொடர்ந்து வரும் கேள்வி பதில் பகுதிகளில் திடீர் காந்தியவாதி அன்னா அசாரேயையும் பாபா ராம்தேவையும் விமர்சிக்கிறார் இவர்களின் அரசியலின் பின்னால் ஒளிந்திருப்பது பார்ப்பன நலனே என்றும் நிறுவுகிறார்.

அரச பயங்கரவாதத்தால் எத்தனையோ ஒடுக்குமுறைகள் நிகழ்ந்திருக்கின்றன. இயற்கை வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களால் சூரையாடப்படும்போது, பழங்குடியினர் தலித்துக்கள், சிறுபான்மையினர் ஒடுக்குமறைக்கு உள்ளாகிறபோது வாய்மூடி ஊமையாயிருந்த அன்னா அசாரே ஊழலுக்கெதிராக போராட்டம் நடத்துவது கேலிக்கூத்து என்று அருந்ததிராய் போன்ற சமூக ஆர்வலர்கள் பேசினார்கள்.

மதிமாறனும் கேள்வி எழுப்புகிறார். அங்கதம் ஓங்கி ஒலிக்க மதிமாறனின் உரையாடல்கள் முன்வைக்கும் கருத்துக்கள் தமிழ்ச் சூழலில் மிகவும் கவனம் கொள்ளத்தக்கதாகும்.

பார்ப்பனியமும் முதலாளியமும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரி என்றார் அண்ணல் அம்பேத்கர். அந்த வரிசையில் காந்தியமும் நமக்கு எதிரிதான் காந்தி ஒரு துரோகிதான் என்று நிறுவுகிறார் மதிமாறன்.

பாரதி ஜனதா பார்ட்டி போல இந்நூலும் அதிர்வலைகளை உருவாக்கட்டும். பெரியாரியமும் அம்பேத்கரியமும் வெல்லட்டும்.

**

பொறையாறு அரசு கல்லூரியில் வணிகவியல் பேராசிரியராக பணிபுரிகிறார் பேராசிரியர் அரச. முருகுபாண்டியன்அம்பேத்கரிய ஆய்வாளர்.

பெரியார், டாக்டர் அம்பேத்கர் வழியில்  சமூகநீதி அரசியல் களத்தில் தீவிரமாக பயணிப்பவர்; எழுத்தாளர். பேச்சாளர்.

அம்பேத்கர்பெரியார் கருத்துக்களின் அடிப்படையில் ‘போதி’ என்ற அமைப்பை தொடங்கிகாரைக்குடியில் உள்ள தனுது இல்லத்திலேயே  தொடர்ந்து கருத்தரங்கங்கள் நடத்தி வருகிறார்.

**

புத்தகம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள:

‘அங்குசம்’ ஞா. டார்வின் தாசன் – 94443 37384

கோயம்புத்தூர்: வழக்கறிஞர் பாலா – 98942 30138 –

திருச்சி : நாக. குணராஜ் – பெரியார் நூல் நிலையம் – 98655 96940

தஞ்சை: தோழர் எழிலரசன் – 94885 45546