ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்

கவிஞர் கண்ணதாசன் கொஞ்சகாலம் நாத்திகராக இருந்தார். அப்போ, கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார். கெரசின், தீப்பெட்டி, கையில் கம்பராமாயணம், கொளுத்த வேண்டியதுதான் பாக்கி. ஒரு நிமிசம் யோசிச்ச கண்ணதாசன், சரி அப்படி என்னதான் இருக்கு இதுல. ஒருவாட்டி படிச்சுட்டு எரிச்சிடலாம்னு, படிக்க முயன்றார்.

பின்னர் அவர் அந்த புத்தகத்தை எரிக்கவே இல்லை. முழுவதுமாக படித்து முடித்த பிறகு, அந்தப் புத்தகத்தை வைத்து அதன் முன் விழுந்து வணங்கினார். நாத்திகராக இருந்த கண்ணதாசன் ஆத்திகராக மாறிட்டார்!

என்று நடிகர் ரஜினிகாந்த் ஒரு நிகழ்ச்சியில் இப்படியும் பேசியிருக்கிறார்.

இப்படி பேசிய ரஜினிகாந்த் மேல் எனக்கு கோபம் இல்லை.

ரஜினியிடம் எதையாவது வித்தியாசமாக பேசி, அவர் கவனத்தை கவர்ந்து தன்னை எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக காட்டிக் கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் எவனோ ரஜினியிடம் பொய் சொல்லியிருக்கிறான்.

பெரியார் இயக்கத்தை பற்றி தவறாகவும், கண்ணதாசனை பெரிய இலக்கிய ரசிகனாகவும் பெருமைப் படுத்தி பொய் தகவலை ரஜினியிடம் தந்த, அந்த எழுத்தாள கூமுட்டை எவன்னு தெரியல. அவன் மேலதான் கோபம்.

கம்பராமாயணத்தை எரித்த பெரியார் இயகத்தவர்கள் எவரும் அதை படிக்காமல், எரிக்கவில்லை. இன்னும் சரியாக சொன்னால் படித்ததினால்தான் எரித்தார்கள்.

கருவூர் ஈழத்து அடிகள், குத்தூசி குருசாமி, திருவாரூர் தங்கராசு போன்ற மேதைகள் கம்பராமாயணத்தை கந்தலாக்கி தொங்க விட்டிருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, கம்பராமாயணத்தை கரைத்துக் குடித்த ‘இந்து தமிழ் அறிஞர்களை’, நேருக்கு நேர் விவாதத்திற்கு அழைத்து தோற்கடித்து, கம்பராமாயணத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய பெருமை பெரியார் இயக்கத்தையே சேரும்.

குறிப்பாக பெரியாரோடு இருந்தபோது அண்ணா கம்பராமாயணத்திற்கு எதிராக, தமிழ் அறிஞர்களான, ரா.பி.சேதுபிள்ளை, சோமசுந்தர பாரதியார் போன்றவகளோடு ஓரே மேடையில் விவாதித்து, கம்பராமாயணத்தின் யோக்கியதையை அம்பலப்படுத்தினார். அண்ணாவோடு விவாதிக்க முடியாமல் அவர்கள் இருவரும், ‘ரயிலுக்கு நேரமாச்சு..’ என்று பாதியிலேயே ஓடிய சம்பவங்கள்தான் தமிழகத்தில் உண்டு.

அதன் பிறகு கம்பராமாயண ரசிகர்கள், பக்தர்கள் யாரும் பெரியார் தொண்டர்களிடம் விவாததிற்கு வராமல் தூர இருந்து மண்ணை வாரி தூற்றி தங்கள் இயலாமையை வெளிப்படுத்தினார்கள்.

ஏனென்றால், ‘ரா.பி.சேதுபிள்ளை சோமசுந்தர பாரதியார் போன்ற தில்லாலங்கடிகளுக்கே இதுதான் நிலமை என்றால், நம் நிலை என்னவாகும்?’ என்ற பயமே காரணம்.

மற்றபடி பெரியார் இயக்கத்தவர்கள் யாரும், கம்பராமாயணத்தை படிக்காமல் எரிக்கவில்லை.

தமிழ் இலக்கிய, இலக்கணத்தில் பயிற்சி இல்லாத, பள்ளிக் கல்வியைக்கூட முறையாக படிக்காத பெரியார் தொண்டர்கள் கூட, ராமாயணத்தை உரைநடையாக படித்து, அதை புரிந்துகொண்டுதான் எதிர்த்தார்கள். எதிர்க்கிறார்கள்.

பெருமை பொங்க ராமாயணத்தை சிலாகித்து பேசுகிறவர்களின் பேச்சிலிருந்ததே, அவர்களின் வார்த்தைகளிலிருந்தே, எதிர்கேள்வி கேட்டு, அவர்களை அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.

பெரியார் கற்றுத் தந்த, இந்த விவாத முறை, ‘தர்க்க அறிவு’ இந்தியாவிலேயே பெரியார் தொண்டர்களிடம் மட்டுமே உள்ள சிறப்பு.  அதனால்தான் ராமனும், ராமாயணமும் அயோத்தியில், வடநாட்டில் அனுமாரைப்போல் தன் வாலில் பற்றிய தீயை நாடு முழுக்க பற்ற வைத்துக் கொண்டு இருக்கும்போது, தமிழ் நாட்டில் ‘வாலாட்டிய’ ராமனின் வாலை ஒட்ட நறுக்க முடிந்தது.

உண்மை இப்படி இருக்க, பெரியார் தொண்டர்கள் கண்மூடித்தனமாக ஒரு விசயத்தை எதிர்ப்பார்கள் என்கிற அர்த்ததில் ரஜினியிடம் சொன்ன எழுத்தாள கூமுட்டையின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மாறாக, வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணத்தை ஆதரிக்கிறவர்கள்தான் அதை படிக்காமலேயே ஆதரிக்கிறார்கள். அதற்கு ரஜினியே உதாரணம்.

மற்றபடி, கம்பராமாயண எதிர்ப்பையும், பெரியார் பணியையும் மதிப்பீடுவதற்கு அளவுகோல் கண்ணதாசன் அல்ல; இந்து மதத்தையும், பார்ப்பனிய ஆதரவு நிலையையும், பெரியார் இயக்க எதிர்ப்பையும், சந்தர்ப்பவாதத்தையும் மதிப்பிடுவதற்கு வேண்டுமானால் கண்ணதாசனை சிறந்த உதாரணமாக காட்டலாம்.

முத்தையா என்ற தனது பெயரை கண்ணன் மீது கொண்ட பிரியத்தினால், கண்ணதாசன் என்று மாற்றி வைத்துக் கொண்டு கம்பராமாயணத்தை எரிக்க போனவரின் யோக்கியதை இப்படிதான் இருக்கும்.

கம்பராமாயணத்தின் மீது பெரியார் இயக்கத்தினர் கேட்ட கேள்விகள், பதில் சொல்வதற்கு நாதியற்று தலைமுறை தாண்டி இன்னும் அப்படியேதான் இருக்கிறது.

ரஜினிக்கு கண்ணதாசன் மூலமாக பெரியார் இயக்கத்தை குறித்து தவறான தகவலும், கம்பராமாயணத்தின் பெருமை குறித்தும் பேசிய எழுத்தாள புடுங்கிகள் அதற்கு பதில் சொல்லலாமே? தங்களை இன்னும் பெரிய மாமேதைகளாக ரஜினியிடம் காட்டிக் கொள்வதற்கு நல்ல வாய்ப்புதானே? வாங்க… கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க.. பரிசை தட்டிக்கிட்டு போங்க..(பரிசு ரஜினி குடுப்பாரு)

இந்து மதம்தான் உலகின் சிறந்த மதம். கண்ணன்தான் கடவுளிகளிலேயே சிறந்தவன் என்று அர்த்தமுள்ள இந்து மதம், யோக மாலிகா, ராக மாலிகா என்று இந்து பெருமையோடு எழுதிக்கொண்டிருந்த கண்ணதாசன், கிறித்துவ பாதிரியார்களின் ‘பாசமான’ ‘கவனி’ப்பால் ஈர்க்கப்பட்டு, சாகும்போது மரணசாசனம்போல் இயேசு காவியம் எழுதிவிட்டு செத்துவிட்டார்.

ஆக, கண்ணதாசனின் சந்தர்ப்பவாதத்தை, தேவைகளுக்கு அடிமையாகிற மனோபாவத்தை குறிப்பிடுவதற்கு வேண்டுமானல், ரஜினியிடம் இலக்கிய கூமுட்டைகள் இப்படி சொல்லியிருந்தால் பொறுத்தமாக இருந்திருக்கும்:

கவிஞர் கண்ணதாசன் கொஞ்சகாலம் நாத்திகராக இருந்தார். அப்போ, கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார். கெரசின், தீப்பெட்டி, கையில் கம்பராமாயணம்,  கொளுத்த வேண்டியதுதான் பாக்கி.

ஒரு நிமிசம் கம்பராமாயணத்தை பிரிச்சு பார்த்த கண்ணதாசன், அப்படியே ஆனந்தத்தில் அதிர்ச்சி ஆயிட்டாரு. ஏன்னா அதோட ஒவ்வொரு பக்கதிலேயும் நூறு நூறு ரூபாய்களா இருந்தது.

பின்னர் அவர் அந்த புத்தகத்தை எரிக்கவே இல்லை. அப்படியே அமுக்கி வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போயிட்டாரு. அந்தப் புத்தகத்தை வைத்து அதன் முன் விழுந்து வணங்கினார். நாத்திகராக இருந்த கண்ணதாசன் ஆத்திகராக மாறிட்டார்!

இலக்கிய கூமுட்டைகள் ரஜினிகாந்திடம் இப்படி சொல்லியிருந்தால் அது கண்ணதாசனின் வாழ்க்கைக்கு மிக நெருக்கமாகவும். நம்பகத் தன்மை உள்ளதாகவும் இருந்தருக்கும்.லாஜிக்கும் இடிக்காமல் இருக்கும்.

ஆனால், சொல்லமாட்டார்கள்.

 ஏனென்றால் இவர்களும் கண்ணதாசனைபோலவே பணம், புகழ், பிரபலபோதைக்கு அலைகிற எழுத்தாளர்கள்தானே.

அதாங்க காரிய கூமுட்டைகள்.

தொடர்புடையவை:

கம்பராமாயணத்தில் அறிவியல்!

‘கண்ணதாசன் சிறந்த கவிஞர்’; தமிழர்களின் மூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்று

கண்ணதாசன் வரிகளை வாசித்து கல்லடி கிடைத்தால்; கண்ணதாசனோ, நானோ பொறுப்பல்ல..