எது பெரிய குற்றம்; கொள்ளையா? கொலையா?

தமிழக, கேரள மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலிக்காரர்களுக்கு ராஜமரியாதை-திருட்டு குற்றம் சாட்டப்பட்ட இந்திய இளைஞர்களுக்கு மரணதண்டனை

சென்னையில் 5 இளைஞர்களை காவல் துறையினர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். அவர்கள் வட இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றும், வங்கித் திருடர்கள் என்றும் காவல்துறை அறிவித்திருக்கிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்களை, குற்றவாளிகளை விசாரிப்பதுதான் காவல்துறையின் நடிவடிக்கை. ஆனால், விசாரனையற்ற தீர்ப்பாக இந்த மரணதண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.

அவர்கள்தான் திருடர்கள் என்றே இருக்கட்டும். அதற்கு துப்பாக்கி சூடா தண்டனை?

ஆனால், ‘எங்களை அவர்கள் சுட்டார்கள், பதிலுக்கு நாங்கள் சுட்டோம்’ என்கிறது காவல் துறை.

சுற்றி வளைக்கப்பட்டு, ஒரு வீட்டுக்குள் இருப்பவர்கள், எப்படி தப்பி ஓட முடியும்? சுற்றி வளைக்கப்பட்ட அவர்களின் நிலை கைதிகளின் நிலைதானே. கூடுதல் காவலர்களை வர வைத்து, காத்திருந்தால் நிச்சயம் அவர்களை கைது செய்திருக்கிலாம்.

இப்படி சுட்டுக் கொல்வதினால், மற்ற கொள்ளையர்களுக்கு பாடமாக இருக்கும் என்று நினைத்து அதை செய்தார்களோ?

ஆனால், இது போன்ற என்கவுன்டர்கள் பலமுறை நடத்தியிருக்கிறார்கள். அப்படி இருந்தும் மீண்டும் இந்த என்கவுன்டர் நடத்தப்பட்டிருக்கிறது என்பதே, இது தீர்வல்ல என்பதற்கு சாட்சி.

அவர்கள் 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டதினால், பதில்கள் அற்ற பல கேள்விகள் இருக்கின்றன.

அவர்கள்தான் சம்பந்தப்பட்ட வங்கி கொள்ளையர்களா?

ஒருவரின் படத்தை வைத்து மற்ற நால்வரையும் குற்றவாளிகளாக முடிவு செய்தது எப்படி?

5 பேருமே குற்றவாளிகள் என்பதற்கு என்ன ஆதாரம்? யாரோ ஒருவர் சொன்ன தகவலின் அடிப்படையில் எப்படி முடிவுக்கு வரமுடியும்?

அவர்களில் தம்பி, உறவினர், நண்பர்கள் யாராவது உடன் தங்கியிருக்கலாம் அல்லவா?

அவர்கள் வங்கி கொள்ளயைர்கள் அல்லாமல், காவல்துறையே அடிக்கடி சொல்வதுபோல், நாட்டுக்கே ஆபத்து விளைவிக்கிற பயங்கரமான தீவிராவதிகளாக இருந்தால், அவர்களின் பின்னணியை யார் அறிவது?

சுட்டுக் கொன்றதற்கு பிறகு ‘அவர்கள்தான் வங்கி கொள்ளையர்கள்’ என்ற முன் முடிவோடு விசாரனையை தொடங்குவது என்ன நியாயம்?

அங்கிருக்கும் பணம் அந்த வங்கியில் இருந்த பணம்தான் என்பதற்கு என்ன ஆதாரம்?

ஏனென்றால், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் எண்களை வங்கியில் குறித்து வைக்கவில்லை என்று காவல் துறையே சொல்லியிருக்கிறது.

**

பணத்தை விட உயிரின் மதிப்பு மலிவாகி போய்விட்டது. 15 லட்ச ரூபாயை மீட்பதற்கு விலை 5 உயிர்கள்.

பெண்கள் அணிந்திருக்கிற நகைகளுககு ஆசைப்பட்டு, அவர்களை கொல்கிறவர்களின் செயல்போலவே காவல்துறையின் நடிவடிக்கை இருப்பது என்ன நியாயம்?

இந்திய எல்லைக்குள் தமிழக, கேரள மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி நாட்டவர்களை விருந்தினர் மாளிகையில் வைத்து உபசரிக்கும் நாட்டில், அநியாயமாக இளைஞர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது.

‘வட இந்திய இளைஞர்கள்’ என்று அடிக்கடி காவல் துறையினர் சொல்கிறார்கள். இதையே தமிழ்த் தேசியவாதிகள் சொன்னால் பிரிவினை வாதிகள் என்று முத்திரை குத்துவார்கள்.

வட இந்தியா என்பது இந்தியாவின் தனி பகுதியா? தனி நாடா?

காவல் துறையில் வட இந்தியர்கள் உயர் அதிகாரியாக இருக்கலாம். குற்றவாளிகளில் வட இந்தியர்கள் இருக்கக் கூடாதா?

வட இந்தியாவிலிருந்து குறைந்த கூலிக்கு ஆட்களை அழைத்துவந்து, பிறகு வேலை முடிந்ததும் அவர்களை அநாதையாக விட்டு விட்டு போகிற நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை?

வட இந்தியாவோ, தென்னிந்தியாவோ யாராக இருந்தாலும், திடீர் என்று வேலை இல்லை என்றால் அவர்கள் பிழைப்புக்கு இதுபோன்ற சமூக விரோத நடவடிக்கைகளில்தான் ஈடுபடுவார்கள்.

தங்கள் வீடு, நிலத்தை விற்று இங்கு வந்து பொறியியல் கல்வி படித்த இளைஞர்கள், உரிய வேலை கிடைக்காதபோது அவர்கள் திரும்ப ஊருக்கும் செல்லமுடியாது. சமூக விரோத நடவடிக்கைகளில்தான் ஈடுபடுவார்கள். அவர்களிடம் அதிக கட்டணம் வாங்கி அவர்களை நடுத் தெருவில் நிறுத்திய கல்வி நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை?

வேலைக்கு ஆட்களை குறைந்த கூலிக்கு அழைத்து வந்து, பிறகு அவர்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு செல்கிற நிறுவனங்கள், தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் இதுபோன்ற குற்றங்களை குறைக்க முடியும். தடுக்க முடியும்.

இல்லையென்றால், துப்பாக்கி முனையில் கொள்ளைகளும், கொள்ளைகளுக்கு எதிராக கொலைகளும்தான் தமிழகத்தின் தொடர் கதையாக இருக்கும்.

அதெல்லாம் சரி, எது பெரிய குற்றம்?

கொள்ளையா? கொலையா?

2012/02/24/அன்று எழுதியது.

தொடர்புடையவை:

வாளுக்கும் தங்கத்திற்குமானப் போர்..

சிறுமி பிரணதியின் மரணம் குறித்த உண்மையறியும் குழுவின் அறிக்கை