..அப்போ அத ‘நீங்க’ செய்ய வேண்டியதுதானே?
எளிய மக்களின் வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் போன்ற மெல்லிய உணர்வுகளை, சோகம் என்ற ஒற்றை உணர்வு விழுங்கி விடுகிறது. பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக சமூக ரீதியாகவும் சிரமங்களை அனுபவிப்பதில் பெண்களே உணர்வு ரீதியாக அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதில் சமீபத்து உச்சக்கட்டம் ‘வாடகைத் தாய்மார்கள்’ என்கிற அவலம்.
வறுமை காரணமாக சிறுநீரகம் போன்ற தன் உடலின் ஒரு உறுப்பை தானம் செய்வதில் ஏற்படுகிற சிரமத்தைவிட கொடியது வாடகை தாயாக இருப்பது. சிறுநீரக தானத்தில் கூட ஒருவருக்கு உயிர் கொடுத்தோம் என்கிற மனநிறைவு இருக்கும். ஆனால், வாடகை தாய்மார்கள் நிலை..?
‘வறுமையில் இருக்கும் பெண்கள்’ என்கிற காரணத்தை தவிர வேறு என்ன காரணம் அவர்கள் இந்த துயர தொழிலுக்கு வருவதற்கு?
‘வாடகைத் தாய்மார்கள் செய்வது பெரிய உதவி. குழந்தை இல்லாமல் தவிக்கும் தம்பதிகளின் துயரத்தை அவர்கள் துடைக்கிறார்கள். இது சமூகத்திற்கு செய்கிற பெரிய நன்மை‘ என்ற பாணியில் பேசுகிறார்கள் இந்த வியாபாரத்தில் முன்னணியில் இருக்கும் கமலா செல்வராஜ் போன்ற மருத்துவர்கள்.
அப்படியானால், பரிதாபத்திற்குரிய பணக்கார தம்பதிகளின் துயரத்தை துடைக்கும் சமூக பணியில், மருத்துவராக மட்டும் இல்லாமல், வாடகைத் தாய்மார்களாக இருந்து கமலா செல்வராஜ் போன்ற மருத்துவர்கள் சமூகத்திற்கு நன்மை செய்யலாமே? ஏன் அதை அவர்கள் செய்ய மறுக்கிறார்கள்?
‘தனக்கு குழந்தை இல்லை’ என்கிற பெண்ணின் துயரம் பெரிதா?
இல்லை, தான் பெற்ற குழந்தையை யாருக்கு தருகிறோம் என்பது கூட தெரியாமல், தெரிந்தே குழந்தையை தொலைத்துவிட்டு தன் வாழ்நாள் முழுவதும் வேதனை படுகிற பெண்ணன் துயரம் பெரிதா?
கேட்டால், ‘அவர்கள் ஒன்றும் சும்மா செய்யவில்லை. பணம் வாங்கி கொண்டுதான் செய்கிறார்கள்’ என்கிறார்கள், இந்த வாடகை மருத்துவர்கள்.
என்ன பொல்லாத பணம்? உண்மையில் யாருக்கு இதில் அதிகம் பணம்? அதை வெளிப்படையாக பேச முடியுமா?
இந்த வாடகைத் தாய்மார்களுக்கு கிடைப்பதோ சொற்ப பணம். இதில் பெரும் பணம் பார்ப்பவர்கள் இடைத் தரகர்கள் போல செயல்படுகிற இந்த மருத்துவர்கள்தான்.
இந்த அவலம் தோய்ந்த வாடகை தாய்மார்கள் முறையை வறுமையில் உள்ள பெண்களுக்கு எதிரான திட்டம் என்று எச்சரித்து, கண்டித்து நான்தான் தமிழில் முதன் முதலில் எழுதினேன்.
13.8.2006 குங்குமம் வார இதழில், இந்த கட்டுரையை எழுதிய காரணத்தினாலு‘ம்’ நான் தினகரன் நாளிதழ் பணியிலிருந்து வெளியேற நேரிட்டது. சதிகளும், துரோகங்களும் நிறைந்த ‘கதை’யை பிரிதொரு நாளில் சொல்கிறேன்.
இந்த கட்டுரைக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட அப்போதைய அதன் ஆசிரியர் இனிய நண்பர் திரு. சாருபிரபா சுந்தருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்றைய மகளிர் தினத்தை முன்னிட்டு மீண்டும் இந்த கட்டுரையை பிரசுரிக்கிறேன்.
***
தாய்மை விற்பனைக்கு
“பெண் என்ன பிள்ளை பெறும் எந்திரமா?” என்று கேட்டார் பெரியார்.
‘ஆம்’ என்கிறது இன்றைய நவீன மருத்துவ விஞ்ஞானம். குழந்தை ‘பாக்கியம்’இல்லாதவர்களுக்கு குழந்தை பெற்றுத் தருவதற்காக, இந்தியாவில் வாடகைத் தாய்மார்கள் உருவாகிவருகிறார்கள்.
இவர்களின் கருப்பையில் ஆணின் உயிர் அணு செலுத்தப்பட்டு, கரு உண்டாக்கப்படுகிறது. அவர்கள் பத்து மாதம் சுமந்து பெற்றுத் தந்தால், ‘கணிசமான பணம்’ தரப்படுகிறது.
ஆம், தாய்மை ஒரு ‘தொழிலாக’ மாற்றப்பட்டிருக்கிறது. வழக்கம்போல் வறுமையைக் காரணம் காட்டி, ஏழைகளைச் சூறையாடுகிற சமூகம். இந்த முறையும் ஏழைப் பெண்களின் வறுமைக்கு மாற்றாக தாய்மையைச் சூறையாடியிருக்கிறது.
மனித உறவுகளில் உன்னதம் என்று சொல்லப்படுகிற தாய்மையையும் வர்த்தகமாயிருக்கிறது.
வசதியான தம்பதிகளுக்குக் குழந்தை பெற்றுக் கொள்வதில் உள்ள குறைபாடு அல்லது குழந்தைப் பெற்றுக் கெள்ளும் ‘பிராசஸ்’ ரொம்ப ‘இம்சை’ என்ற காரணத்தால் குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் அற்ற மனைவி, அதனால் தனது சொத்துக்கு வாரிசு அற்று போய்விடுமே என்ற ‘ஏக்கம்’ இவைகளே வாடகைத் தாய்மார்களை உருவாக்கி வருகிறது.
குழந்தை பெற்றுத்தரும் வரை பத்து மாத காலத்துக்கு இந்தப்பெண்கள் யார் கண்ணிலும் படாமல் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டும். குழந்தைப் பெற்றவுடன் தொப்புள் கொடியோடு குழந்தைக்கும் தாய்க்குமான உறவைத் துண்டித்து கொள்ளவேண்டும்.
ஒருவேளை பிறக்கும் குழந்தை ஊனமுற்று இருந்தால், அந்தக் குழந்தையை தாயிடமே விட்டு விட்டுச் சென்று விடுவார்கள்.
கருவுருகிற பெண் தன் உணவை, தன் சுவாசத்தை, தன் உயிரையே ஊட்டித்தான் குழந்தையைச் சுமக்கிறாள். ஒரு பெண் தாய்மை அடைவது என்பது ஓய்வு நேரத்தில் மெல்லிய வயலினிசையை கேட்பது போல்,இனிமையான அனுபவம் அல்ல. அது உயிர் வலி.
எவ்வளவு நெருக்கமான உறவாக இருந்தாலும், தன்னை உடல் ரீதியாக துன்புறுத்துகிறவர்கள் மீது, கட்டுக்கடங்காத அளவுக்கு வெறுப்பு வருவது மனித இயல்பு. ஆனால், ஒரு பெண்ணை மறுபிறப்பு அடைய வைப்பது மாதிரி பிறக்கிறது குழந்தை.‘என்னை இம்சைப் படுத்திய குழந்தை எனக்க வேண்டாம்’ என்று எந்த தாயாவது குழந்தையை தள்ளி வைப்பாளா?
மாறாக, ‘தன்னைவிட குழந்தைதான் முக்கியம்’ என்கிற உணர்வைதான் ஒரு பெண்ணின் மனதில் கர்ப்பகால நாட்களும், பிரசவவலி என்கிற அந்த மரண தரிசனமும் ஏற்படுத்தி இருக்கும். அதுதான் தாய்மை.
சமூக விரோதியால் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு கருவுகிற பெண், குழந்தைப் பேற்றுக்கொண்டாலும், ‘ச்சீ இந்தக் குழந்தை எவனோ ஒரு பொறுக்கியால் வந்தது. இது எனக்கு வேண்டாம்’ என்று தள்ளி வைக்கமாட்டாள். ஏனென்றால், அது அவள் குழந்தை.
இந்த உணர்வு தாய்மையைத் தவிர வேறு எந்த உறவுகளிலும் கிடையாது. (குழந்தை வளர வளர எதையும் தானாக செய்து கொள்கிற அறிவு வர வர அந்தப்பாசம் தாய்க்கு குறைந்து கொண்டு வருவதும் இயல்பே)
ஆணின் பங்களிப்பு என்பது குழந்தை வளர்ப்பிலும் குறைவே. பெரும்பாலும் குழந்தைக்கும், தகப்பனுக்குமான உறவு குழந்தையின் ஆரோக்கியமான நேரங்களில் குழந்தையை கொஞ்சுவது, குழந்தையோடு விளையாடுவது என்பதாகவே இருக்கிறது.
இன்னும் சரியாக வரையறுத்து ஒரே வரியில் சொல்வதானால்,‘குழந்தையைக் கொஞ்சுவதால் தகப்பனுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. தன் மகிழ்ச்சிக்காகவே அவன் குழந்தையைக் கொஞ்சுகிறான்’.
ஆனால் ஒரு தாய், குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாத நேரங்களில் குழந்தையோடு அதிக நேரம் செலவிடுகிறாள். குழந்தையின் துன்பத்தைத் தன் துனபமாக அனுபவிக்கிறாள்.
குழந்தையைக் குளிப்பாட்டுவது, மலம் கழித்தத் குழந்தையைக் கழுவி சுத்தப்படுத்துவது இவைகள் எல்லாம் தாயின் வேலைகளே.
பல இரவுகளில் குழந்தையின் அழுகைச் சத்தம் தாயைப் பதட்டப்படுத்திவிடும். ஆனால், தந்தையோ எரிச்சலடைவான்.
வாடகைத் தாய்மார்களை உருவாக்குகிறவர்கள், பெண்களின் இந்த உணர்வுகளை மதிப்பதில்லை. இந்த முறை பெண்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நிகழ்த்தப்படுகிற உடல் மற்றும் உளவியல் சார்ந்த வன்முறையாகவே இருக்கிறது.
***
கணவன்- மனைவிக்குள் தகராறு. ‘ஒருவரை ஒருவர் வேவு பார்த்துக் கொண்டு சேர்ந்து வாழ்வதைவிட , இனி பிரிந்து வாழ்வது இருவருக்கும் மரியாதை’ என்று முடிவுசெய்து சட்டரீதியாக தங்கள் விவாகத்தை ரத்து செய்து கொள்கிறார்கள், அப்படி ரத்து செய்து கொள்ளுபோது குழந்தைகளை பங்கிடுகிற துயரமும் நடைபெறுகிறது.
அதுவரை குழந்தை வளர்ப்பில் பெரும் பங்கெடுக்காத கணவன்,மனைவியுடனான மணமுறிவின் போது மட்டும் குழந்தை மீது அதிக உரிமை கொண்டாடுபவனாகக் காட்டிக் கொள்கிறான். தன் மனைவியின் உயிர் ஆதாரம் குழந்தைதான் என்பது அவனுக்குத் தெரியும்.
மனைவியின் மீது வெறுப்புக் கொண்ட கணவன், உளவியல் ரீதியாக அவளைத் துன்புறுத்த, குழந்தைகளை அவளிடம் இருந்து பிரிக்க பெரிதும் முயற்சி எடுத்து குழந்தையை சட்டரீதியாகவோ, சட்டத்திற்குப் புறம்பாகவோ அல்லது குழந்தையிடம் தாயைப் பற்றி மிக மோசமான அபிப்பிராயத்தை உண்டாக்கி, குழந்தை மனதில் தாயின் மீது வெறுப்பு ஏற்படச் செய்தோ பிரித்துக் கொண்டு போன கணவன், குழந்தைகளை நல்லமுறையில் வளர்ப்பதில்லை என்பது நடைமுறையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வாடகைத் தாய்மார்கள் முறையால் இனி அடாவடி ஆண்கள் சார்பாக, ‘குழந்தைகள் மீது தாய்மார்களுக்கு உரிமையில்லை’ என்கிற ஒரு‘பொதுக்கருத்து ’ பரவ வாய்ப்பிருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.
ஆக, இந்த நவீன விஞ்ஞான முறை பெண்களை ‘ கால் டாக்சி ’யைப் போல் ஒரு பொருளாகப் பாவிக்கிறது. பொதுவாகவே இன்றைய நவீன விஞ்ஞான முறைகள் மக்களின் நலன் சார்ந்து இருப்பதை விட, வர்த்தகம் நலன் சார்ந்தே இயங்குகிறது. அதிலும் குறிப்பாக மருத்துவ விஞ்ஞானம் பங்கு மார்க்கெட் போல்தான் நடந்துகொள்கிறது. அதனால்தான் அது எந்த ஒருநோயையும் முற்றிலுமாகக் குணப்படுத்தக் கூடிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதில்லை.
எய்ட்ஸ், கேன்சர் மட்டுமல்ல – சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு, ஆஸ்துமா இந்த நோய்களையும் முற்றிலுமாகக் குணப்படுத்த இன்று வரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இவைகளைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்குத்தான் மருந்துகள் உண்டு.
ஆம், ஒருவர் ஆஸ்துமா நோயாளியாகவோ, சர்க்கரை வியாதிக்காரராகவோ, இரத்தக் கொதிப்பால் பாதிக்கப்பட்வராகவோ இருந்தால் அவர் சாகும்வரை அந்த நோய்கள் அவரை விட்டு விலகாது. மருந்து மாத்திரைகளோடே அவர் மல்லுக்கட்ட வேண்டும். அதுதான் மருந்துக் கம்பெனிகளுக்கு நல்லது. அதனால்தான் ஆயிரத்தில் ஒருவருக்கு வருகிற ‘உறையாத ரத்தம்’ போன்ற நோய்களுக்கு மருந்தே கண்டுபிடிக்கவில்லை, ஆயிரத்தில் ஒருவர் மருந்து வாங்கினால் வியாபாரம் எப்படி நடக்கும்?
***
மருத்துவ விஞ்ஞானத்தின் இந்த நவீன வடிவமான வாடகைத் தாய்மார்கள் முறையால், அதிக லாபம் அடையப்போவது மருத்துவ வர்த்தகம்தான். சமூக ரீதியாக இந்த முறை பெரிய தீங்கையே ஏற்படுத்தும், அதுவும் இந்திய போன்ற மூன்றாம் உலக நாடுகளில்தான் இந்த முறை பெருமளவில் பயன்படுத்தப்படும். காரணம், இந்த முறைக்கு பணக்கார நாட்டுப் பெண்கள் உடன் படமாட்டார்கள். அப்படியே உடன்பட்டாலும் மிகப் பெரிய அளவில் பணம் கேட்பார்கள். அதனால் மலிவு விலையில் தாய்மார்கள் இந்தியாவில் கிடைப்பார்கள் என்பதால், வெளிநாட்டினரும் இந்தியத் தாய்மார்களின் தாய்மையைச் சூறையாட அதிக வாய்ப்பிருக்கிறது.
ஏற்கனவே மாற்றுச்சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு தங்களின் வறுமையை போக்க, சிறுநீரத்தை விற்றனர் நமது நெசவாளர்களும், விவசாயிகளும் என்பது நமது ஞாபகத்தில் கவலையோடு பதிவாகியிருக்கிறது.
ஆக, இந்த நவீன மருத்துவ விஞ்ஞானம் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாட்டுப் பெண்களின் உணர்வுகள் மீது, உரிமைகள் மீது தொடுத்து இருக்கிற தாக்குதலாகவே இருக்கிறது.
இப்படி , தாய்மையை வர்த்தகமாக அனுமதித்தால், இன்று எல்லாப் பொருட்களும் பிளாஸ்டிக் கவரில் கிடைப்பது மாதிரி, இன்னும் கொஞ்சநாளில் தாய்ப்பாலும் ‘சாஷே’ யில் (Sache) கிடைக்கும் அவல நிலையும் வந்துவிடும். –
13.8.2006 தேதியிட்ட‘குங்குமம்’ வார இதழுக்காக எழுதியது,
தொடர்புடையவை:
பொண்டாட்டிய நம்பறவனுக்கு பேர்தான் புருசன்..
பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது!
பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல;
சானிடரி நாப்கின்; நமது கருத்தும், அதிமுக அரசின் திட்டமும்
இலவச சானிடரி நாப்கின் திட்டம்: இந்தியாவிலேயே முதன்முறையாக
////குங்குமம் வார இதழில், இந்த கட்டுரையை எழுதிய காரணத்தினாலு‘ம்’ நான் தினகரன் நாளிதழ் பணியிலிருந்து வெளியேற நேரிட்டது. சதிகளும், துரோகங்களும் நிறைந்த ‘கதை’யை பிரிதொரு நாளில் சொல்கிறேன்.////
பாலிடிக்ஸ் மன்னன் பைத்தியக்காரன் உங்ளிடமும் வேலையை காட்டிவிட்டாரா?
தகவல் பிழை – கருப்பையில் வைக்கப்படுவது ஆணின் உயிரணு அல்ல – சோதனைக்குழாயில் கரு உருவாக்கி 3 நாட்கள் வளர்த்து, அந்தக் கருவையே (அதாவது குழந்தையை) வைக்கிறார்கள். வாடகைத்தாய் அந்தக்குழந்தையின் ‘பயாலஜிக்கல் பேரண்ட்’ அல்ல.
மற்றபடி இது சுரண்டல், தடை செய்யப்பட வேண்டும் என்பதுதான் எனது கருத்தும்.
nalla karuthukkal .nandri vethimaran sir.
2006 li Mikavum paniooda neenga yeluthiya aanitharamana karuthu…
அருமையான, காலத்திற்கு ஏற்ற கட்டுரை. பெண் விடுதலைக்கு போராடிய தந்தை பெரியார் மண்ணில் தான் இவையெல்லாம் நடக்கிறது என்றால், நாம் எதை நோக்கி போய் கொண்டு இருக்கிறோம். நன்றி தோழர்.
கமலா செல்வராஜ் போன்ற பிள்ளைப் பேறு வியாபாரிகள் ”உரிய முறையில்” கவனிக்கப் பட வேண்டும்.
தோழர் என் இணையான பின்னூட்டம்
http://www.facebook.com/note.php?note_id=411503388866112
Thanks, for the heart touching post