உள்ளே-வெளியே ‘பிராமின்ஸ் ஒன்லி’ வாடகை விருந்தாளி

‘ஆச்சாரம்’ அல்லது ‘ஆசாரம்’ என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு, ‘ஒழுக்கம்’ என்று அர்த்தம் சொல்லுகிறார்கள்.

ஆனால் அந்தச் சொல்லை பயன்படுத்துகிறவர்கள்  ‘ஒழக்கம்’ என்ற அர்த்தத்தில் மட்டும் பயன்படுத்துவதில்லை. புரிந்து கொள்பவர்களும் அப்படி மட்டும் அதை புரிந்து கொள்வதுமில்லை.

“எங்க பாட்டிதான் ரொம்ப ஆச்சாரம். நாங்க ஆச்சாரம் எல்லாம் பாக்கிறதில்ல.” என்று ஒரு பெண் சொன்னால்,
“எங்க பாட்டிதான் ரொம்ப ஒழுக்கம். நாங்க ஒழுக்கம் பாக்கறதில்ல” என்று அதை மிக நேரடியாக யாரும் அர்ததப்படுத்திக் கொள்ளமுடியாது.

அப்படி எனில் ‘ஆச்சாரம்’ என்பது சுத்தமா?

ஒரு நாளைக்கு நாற்பது வேளை குளித்தாலும், அசைவ உணவை உண்ணாதவராக இருந்தாலும், மிகத் தீவிரமான பக்திமானாக இருந்தாலும் ஒரு தாழ்த்தப்பட்டவரை ‘ஆச்சாரமானவராக’, ‘பிராமணராக’  சமூகம் கருதாது.

குளிக்காமல் இருந்தாலும், குடித்து விட்டு ரோட்டில் விழுந்து கிடந்தாலும், விபச்சாரிகளோட பொழுதெல்லாம் இருந்தாலும், கொலை செய்தாலும் சுருங்கச் சொன்னால், ஜெயேந்திரனைப் போல் வாழ்ந்தாலும் –

ஒரு பார்ப்பனரை சமூகம் ஆச்சார கேடானவராக கருதி அவர் மீது தீண்டாமையை பிரயோகிக்காது.

‘ஆச்சார உயர்வு’, ‘பார்ப்பன மேன்மை’ என்பதும், ‘தீண்டாமை’ யும் வளர்ப்பில் இல்லை. பிறப்பில் இருக்கிறது என்பதுதான் இந்து மதம். பார்ப்பனியம்.

பிறப்பால் தாழ்த்தப்பட்டவராக இருந்த காரணத்தால்தான் மற்ற நாயன்மார்களை விடவும், ஒழக்கமாக, நேர்மையாக, சிறந்த பக்திமானக இருந்த நந்தனாருக்குமட்டும், ‘பார்ப்பன அடியாள், களவானி பயல் சிவன்’ காட்சி தரவில்லை.

இந்த ஆச்சாரம் என்பது தன் ‘மேன்மை’யை உயர்த்திக் சொல்வதற்காக மட்டும் உருவானதில்லை. அடுத்தவர்களை தாழ்த்திச் சொல்வதற்காகவே உருவானது.
ஒரே வரியில் எளிதில் விளக்க வேண்டும் என்றால்,
‘அடுத்தவர்களை தாழ்த்துவதின் மூலம் தன்னை உயர்த்திக் கொள்வது’அதற்கு பெயரே ஆச்சாரம். அதை சில எடுத்துக்காட்டுகள் மூலம் பார்ப்போம்.

‘பிராமின்ஸ் ஒன்லி’

குடுமி வைப்பதுதான் ஆச்சாரம். கிராப் வைத்துக் கொண்டார்கள். மீசை இல்லாமல் இருப்பதுதான் ஆச்சாரம். மீசை வைத்துக் கொண்டார்கள். காபி, டீ குடிப்பது ஆச்சாரமில்லை. மாறாக, காபியே இன்று ஆச்சாரமாக அவதாரம் எடுத்துருக்கிறது.

மாதவிலக்கு சமயங்களில் வீட்டின் புழக்கடையில் இருந்து வீட்டிற்குள் வருவதே ஆச்சாரக் கேடு. இன்று வேலைக்கே வருகிறார்கள். மடிசார் கட்டாமல் இருப்பதே ஆச்சாரக் கேடு. இன்று ஜீன்ஸ் பேண்டில் வருகிறார்கள். பெண்கள் சினிமா பார்ப்பதே ஆச்சாரக் கேடு.

ஆனால் அந்தக் காலத்து வசுந்தர அவுங்க பொண்ணு வைஜெயத்தி மாலா, பிறகு ருக்மணி அவுங்க பொண்ணு லட்சுமி, அவுங்க பொண்ணு ஐஸ்வர்யா, சந்தியா அவுங்க பொண்ணு ஜெயலலிதா இதற்கும் நடுவுல சவுகார் ஜானகி அவுங்க பேத்தி வைஷ்ணவி, சச்சு, வெண்ணிராடை நிர்மலா, ஹேமாமாலினி, ஸ்ரீவித்யா,  சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், சுகன்யா, திரிஷா, மல்லிகா ஷெராவத், சொர்ணமால்யா, பிரியா மணி, வசுந்தரா… என்று ‘ஆச்சார’ மாக நிறையப் பேர் இருக்கிறார்கள்.

(வேலைக்குப்போவதையும் நடிக்க வந்ததையும் தவறு என்று சொல்லவில்லை. மற்ற ஜாதிக்காரர்களால் ஏற்படும் `ஆச்சாரக்கேட்டிற்காக` அவர்களை அவமானப்படுத்துகிற ஆச்சாரமானவர்கள், இவைகளை கண்டிப்பதில்லை.)

முட்டைகூட இன்று ஆச்சாரமான உணவாக மாறியிருக்கிறது.

விதவைகளை சங்கராச்சாரியார்கள் பார்ப்பதே ஆச்சாரக் கேடாக இருந்தது.ஜெயேந்திரனை போன்ற சங்கராச்சாரி விதவைகளுக்கு  மறுவாழ்வு கொடுக்கிற அளவுக்கு மாறி இருக்கிறார்கள்.

பார்ப்பனர் கடல்கடந்து வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது. ‘பொண்டாட்டியையே ஒருத்தன் தூக்கிகிட்டு போய்ட்டாக்கூட  பாலங்கட்டி போய்தான் திரும்ப கூட்டிட்டு வரணும்’ என்று ராமாயண கதையிலும் எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இன்றைய நிலை – காலை ஜப்பானில் காபி, மாலை நியூயார்க்கில் காபரே, இரவில் தாய்லாந்தில் ஜாலி என்று வாழ்கிறார்கள்.
அப்படியானால் முற்றிலுமாக ஆச்சாரத்தை கைவிட்டுவிட்டார்களா?

தன் ஜாதிக்குள் தன் உறவுக்குள் ஆச்சாரத்தைக் கடைப்பிடிப்பதை விட்டுவிட்டார்கள் அல்லது  கைவிடுவது எங்கு லாபமோ, அங்கு விட்டிருக்கிறார்கள்.
ஆச்சாரத்தைக் கடைப்பிடிப்பதினால் எங்கு நஷ்டமில்லையோ, அங்கே ஆச்சாரத்தைக் கடைப்பிடித்து அடுத்த ஜாதிக்காரர்களை, மதக்காரர்களை அவமானப்படுத்தி தன்னை மேன்மைப் படுத்திக் கொள்கிறார்கள்.

இந்த நாகரீகமானவர்கள்தான் இன்னமும்  ‘பிராமின்ஸ் ஒன்லி’ என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.
நகர்புறங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீடு தர மறுக்கிற பிற்படுத்தப்பட்ட ஜாதிவெறியர்களும் இருக்கிறார்கள்.

அவர்களின் இந்தக் கேவலமான ஜாதி வெறியின் அவமானம் ஓர் அளவுக்கு அவர்களுக்கு உறைத்திருப்பதினால்தான் அந்த உணர்வை பகிரங்கப்படுத்திக்கொள்ளாமல் சுற்றி வளைத்து விசாரித்து தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால் வீடு தர மறுக்கிறார்கள்.

ஆனால் இது போன்று  எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல், ‘எங்கள் ஜாதிக்காரர்களுக்கு மட்டும்தான்’ என்று பகிரங்கமாக போர்டு வைத்திருக்கிற ஒரே ஜாதி, இந்த ‘ஆச்சார’ ஜாதிதான்.

அதற்கு அவர்கள் சொல்லுகிற காரணம் “நாங்கள் ரொம்ப ஆச்சாரமானங்க. சைவம். அசைவம் சாப்பிடுகிறவர்கள் யாராவது அருகில் குடி வந்தால், அது எங்களுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்”

நியாயந்தான். அப்படியானால் என்ன ‘போர்டு’ வைக்க வேண்டும்?
‘வெஜிடேரியன் ஒன்லி’
அப்போ எதுக்கு ‘பிராமின்ஸ் ஒன்லி’ போர்டு?

இப்போ புரியுது இல்ல, ஆச்சாரத்திற்கான அர்த்தம்.

வாடகை விருந்தாளி

ப்படி ‘பிராமின்ஸ் ஒன்லி’ போர்டு வைத்து, ஆச்சாரத்தைக் காப்பற்றுகிற இவர்கள்தான், இன்னொருபுரம் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி சாப்பிடுகிற பார்ப்பனரல்லாதவர்களுக்கு தன் வீட்டில் தங்க இடம் தந்து, அவர்களுக்கு ‘சைவ சாதத்தை’ சமைத்துப் போடுகிறார்கள்.

‘பேயிங் கெஸ்ட்’  ‘வாடகை விருந்தாளி’  என்று விருந்தை வியாபாரமாக்கியப் பெருமை தமிழகத்தில் இந்த ‘ஆச்சாரமானவர்களை’ யே சேரும்.

ஆம், சொந்த ஊரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட , இஸ்லாமிய சிறுபான்மை மக்களை  அவமானப்படுத்துகிற ஆச்சாரமானவர்கள் – சுற்றுலா பயணிகளாகவும், இந்திய கலாச்சாரம் என்றால் அது கர்நாடக சங்கீதம் என்று தவறாக தெரிந்து கொண்டு, இங்கே இசை கற்றுக் கொள்ள வருகிற அமெரிக்க, ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ வெள்ளைக்காரர்களுக்கு, தங்கள் வீட்டிலேயே வாடகை விருந்தாளிகளாக தங்க வைத்து, அவர்களுக்கு ‘சாதம்’ செய்து ‘பரிமாறி’ இசையை கற்றுத்தந்து, திருமண வயதில் பெண்ணிருந்தால் திருமணமும் செய்து அனுப்புகிறார்கள்.

சென்னை பெசன்ட்நகரில் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்த  ராமனாதன் என்கிற கர்நாடாக இசை தெரிந்தவரிடம்,  அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவைச் சேர்ந்த ‘பென்னட்’ என்பவர் வீணை கற்றுக் கொள்ள வந்தார்.

அவருக்கு தன் வீட்டில் தங்க இடம் தந்து, ‘சாதமும்’ போட்டு தனது மகள் கீதாவையும் திருமணம் முடித்து வைத்தார்.
அந்தப் பெண்தான் பின்னாட்களில் ‘கீதா பென்னட்’ என்ற பெயரில் கலிபோர்னியாவில் இருந்து தமிழ் பத்திரிகைளில் கதை எழுதிக் கொண்டிருந்தார்.

ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்த லதா என்ற பெண், ஒரு பத்திரிகைப் பேட்டியில்,

“எங்க குடும்பம் ரொம்ப ஆச்சாராமான குடும்பம். சினிமா பார்க்கவே எங்க அப்பா, அம்மா எங்களை அனுமதிக்க மாட்டார்கள்.” என்று சொல்லியிருந்தார்.

இப்படி சொன்னவர் யாரை திருமணம் முடித்துக் கொண்டார் தெரியுமா? சிகிரெட், குடி பழக்கமும் நிரம்பிய, காதல் தோல்வியடைந்து பைத்தியம் பிடித்த நிலையில் பொது இடங்களில் சண்டை போட்டதாக சொல்லப்பட்ட ஒரு பார்ப்பனரல்லாதவரை. ஒரு நடிகரை.

அந்தத் திருமணம் காதல் திருமணம் அல்ல. ஆச்சாராமான பெற்றோர்கள் பார்த்து முடித்து வைத்த திருமணம்.
அந்த மாப்பிளையின் பெயர் நடிகர் ரஜினிகாந்த்.

இப்போது புரிகிறதா ஆச்சாரத்தை கைவிடுவதற்கான காரணம்.

**

வீட்டுக்கு வந்து முடிவெட்டும், முகம் மழிக்கும் பழக்கம் இந்திய நகரங்களில் வெள்ளைக்காரகளின் வருகைக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைந்து,  முடிதிறுத்தும் நிலையமாக மேன்மையடந்தது. ‘ஆச்சாரமானவர்கள்’ முடிவெட்டும் கடைக்கு போவது ஆச்சாரக் கேடாக கருதப்பட்டது.

வெறுவழியில்லாததால், முடிவெட்டிய பின்  வீட்டுக்கு பின் பக்கமாக  சுற்றி வந்து தலையில் தண்ணி தெளித்து, சில பரிகாங்களை செய்து  அந்த ‘தீட்டை’கழித்துவிடுவார்கள். முடிவெட்டும் தோழரை ‘அம்பட்டன்’ என்று அவமரியாதையும் செய்வார்கள். இப்படி மற்றவரை அவமானப்படுத்தி ஆச்சாரத்தைக் காப்பாறினார்கள்.

இப்போது ஆச்சாரத்திற்கான அர்த்தம் இன்னும் தெளிவாக புரிந்து இருக்கும்.

ஆண் முடிவெட்டும் கடைக்குப் போவேதே ஆச்சாரக் கேடு என்றால்,  பெண்போவது?
இன்றைக்கு ஆச்சாரமான குடும்பத்துப் பெண்கள்தான், அழகுபடுத்திக்கொள்ள அதிகமாக பார்பர் ஷாப்புக்கு போகிறார்கள்பார்பர்ஷாப்புக்கு போவதே ஆச்சாரக் கேடு என்றால், ‘பார்பர் ஷாப்‘ வைத்திருப்பது எவ்வளவு பெரிய ஆச்சாரக் கேடு?

ஆம்இன்று பெண்களுக்கான பார்பர்ஷாப்‘ வைத்திருப்பதில் 90 சதவீதம் ஆச்சாரமான குடும்பத்துப் பெண்களே.
அதற்கு அவர்கள் வைத்திருக்கிற பெயர், ‘பியூட்டி பார்லர்.’

நம் தோழர்களை அம்பட்டன்‘ என்று இழிவு செய்த செய்கிற அவர்கள்,அதே வேலையை செய்கிற அவர்களுக்கு அவர்களே வைத்துக் கொண்ட பெயர் என்ன தெரியுமா?
பியூட்டிசியன்
எப்படி இருக்கிறது நியாயம்?

ஆச்சாரத்தை கை விடுவதற்கான காரணம் இன்னும் தெளிவாக புரிகிறது இருக்கும்.

இந்த ஆச்சாரமானவர்களின் உள்ளேவெளியே’ விளையாட்டை புரிந்து கொள்ளும்போதுஇந்த மனோபாவத்தை ஒரே வரியில் விளக்கிய தந்தை பெரியாரின் அந்த மேற்கோள் பிரம்மாண்டமாய் நம் நினைவில் நிற்கிறது. (வார்த்தைகள் என்னுடையது) “பார்ப்பனர்கள் சுத்த சைவம்தான். ஆனால் ஒரு ஊர்ல நண்டு மட்டும்தான் சாப்பிடக் கிடைக்கும் என்றால், நடுவுல இருக்கிறது மட்டும் எனக்கு கொடுங்கன்னு கேப்பாங்க”
   நண்டில் உண்பதற்கான பகுதியே நடுபாகம்தான்.

*

திராவிடர் கழகத்தின் மாதமிருமுறை இதழான ‘உண்மை’ யில் 2008 ஜனவரி பொங்கல் சிறப்பதழில் எழுதியது.

பார்பனப் பத்திரிகைகள் சங்கரமடத்தின் நாடித்துடிப்பு !


‘இந்திக்காரனையும் உன்னையும் விரட்டுவோம்’: என்ன உன் பிரச்சினை.. உனக்குத் தேவை அல்வாவா?

வந்தேறி இந்திக்காரனுக்கு வால் பிடிக்கும் நீ தமிழனா? உன்னை போன்ற துரோகிகளுக்கு தக்க பதிலடி தருவோம்?

-தமிழ்மறவன்.

சென்னை சவுக்கார்பேட்டில் உள்ள சேட்டுகளும் மற்ற வட இந்திய ‘உயர்’ ஜாதி வட்டிக்கடைக்காரர்களும் அகர்வால் பவன் வைத்து தமிழர்களுக்கு ‘அல்வா’ கொடுக்கலாம்.

ஆனால், வட இந்திய தாழ்த்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மக்கள் இரண்டு வேளை சோறு சாப்பிடுவதற்கு தமிழ் நாட்டுக்கு பஞ்சம் பிழைக்க வந்தா… அவர்களுக்கு எதிரா மட்டும் உன் தமிழ் உணர்வு பொத்துக்கிட்டு பீறிட்டுக் கிளம்பும்….

என்ன உன் பிரச்சினை?

உனக்குத் தேவை அல்வாவா?

போ.. சவுக்கார்பேட் உள்ளபோய் அகர்வால் பவன்  முன்னாடி நின்னுக்கிட்டு உரிமையோடு சொல்லு….

‘தமிழ்நாடு தமிழனுக்குத்தான் சொந்தம்… வந்தேறிகளுக்கு இடமில்லை..’ என்று.

சேட்டு நல்லா குடுப்பான்..

அல்வா..

அவுங்க அடியாள வைச்சி.. அதான் புரட்சித்தலைவியின் போர்படையான காவல்துறை மூலமா..

வாங்கி சாப்ட்டு.. முடிஞ்சா வா…

உள்ள இருக்கறது எல்லாம் பிதுக்கி வெளியே வந்துடும்..

ஆனால், face fresh ஆயிடும்.

தொடர்புடையது:

அவுங்க வரலாம்.. இவுங்க வரக்கூடாதா?

அவுங்க வரலாம்.. இவுங்க வரக்கூடாதா?

இது தமிழர்களோடு உறவாடி நல்லபடியா உள்ள போயிகிட்டுதானே இருக்கு...

தமிழகத்தில் வட இந்தியர்கள் வேலை தேடி வந்த வண்ணம் இருக்கிறார்களே? இதற்கு என்னதான் தீர்வு?

கனல்

தமிழகத்திற்கு வட நாட்டில் இருந்து தொழில் அதிபர்கள் தொழில் தொடங்கி லாபம் சம்பாதிக்க வரலாம்;   தொழிலாளர்கள் வேலைத் தேடி வாழ்க்கை நடத்த வரக்கூடாதா?

நடிகர் சோ வா… ஆலோசனை தருகிறார்..

தமிழ்ப்புத்தாண்டை சித்திரைக்கு மாற்றியது, சமச்சீர் கல்வியை எதிர்த்தது, சேது பாலத்தை ராமர் பாலமாக பாதுகாக்க வேண்டும் என்று அறிவித்தது என்று தமிழக அரசின் நடடிவடிக்கை தொடர்ந்து பார்ப்பன ஆதரவு தன்மை கொண்டதாக இருக்கிறது. இதற்குக் காரணம், ஜெயலலிதாவிற்கு சோ தான் ஆலோசனை தருகிறாராமே?

-கனல்

இதுபோன்ற விவகாரங்களில் ஜெயலலிதாவே ஒரு ‘சோ’ தானே.

இந்து மதத்திற்கு காந்தி முகமூடி; காந்திக்கு தேசப்பிதா முகமூடி

நீலவேந்தன்

 பேச்சாளர், கவிஞர்

பொதுவாக ஒரு புத்தகம் படித்து முடித்தவுடன் நமக்குள் ஏதேனும் ஒரு சலசலப்பையோ, மாற்றத்தையோ ஏற்படுத்த வேண்டும். சமீப காலத்தில் அவ்வாறு படித்து முடித்தவுடன் எனக்குள் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்திய புத்தகம், எழுத்தாளர் வே,மதிமாறன் அவர்கள் எழுதியுள்ள காந்தி நண்பரா? துரோகியா? என்கிற புத்தகம்.

நாம் எல்லோருமே போருக்குப் போகிறோம் பெரும்பாலான சமயங்களில் ஆயுதம் ஏதும் இல்லாமலே! காந்தி தாழ்த்தப்பட்ட மக்களின் எதிரி! அம்பேத்கரின் விரோதி!! ஏன்? எப்படி? என்று கேட்டால் தெரியாது. காந்தி நமக்கு எதிரி என்று உணர்ச்சியூட்டப்பட்டிருக்கிறோம். அறிவூட்டப்பட்டிருக்கிறோமா?

காந்தி எதிரிதான் என்று அறிவூட்டியிருக்கிறார் மதிமாறன்.

இன்றைக்கு ஒரு நபர் வெளிநாட்டுக்குப் படிக்கப்போனாலே பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்துக்கொள்ளும் காலத்தில், இன்றைக்குச் சரியாக 96 ஆண்டுகளுக்கு முன்பாக 1916ம் ஆண்டில் தனது 25ம் வயதில் அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மானுடவியல் துறை தொடர்பான கருத்தரங்கில் தன்னார்வமாக கலந்து கொண்டு முன்வைத்த இந்தியாவில் சாதிகள் – தோற்றம், வளர்ச்சி, அமைப்பியக்கம் எனும் தலைப்பிலான ஆய்வுக்கட்டுரையை முன்வைத்தவர் புரட்சியாளர் அம்பேத்கர்.

இன்றைக்கும் சாதியம் பற்றிய எவரொருவரின் ஆய்வும் இந்தக்கட்டுரையைத் தொடாமல் முடிந்து விடாது. ஆனால் புரட்சியாளரின் இத்தகைய மேதைமைத்தனத்தையும், சாதி ஒழிப்புச்சிந்தனையையும் புறம் தள்ளிவிட்டு, அவர் சொந்த சாதியினர் என்பதற்காகவே தலித்துகள் அவரைப்போற்றுவதும், அவர் சொந்தசாதியினர் இல்லை என்பதற்காக பிறசாதியினர் அவரைப்புறந்தள்ளுவதும் புரட்சியாளருக்கு இழைக்கப்படும் மேலுமொரு அவமானமாகும்.

அத்தகைய புரட்சியாளர் அம்பேத்கர் அம்பலப்படுத்திய ராமராஜ்ஜியத்தை தூக்கிப்பிடித்த காந்தியின் அயோக்கியத்தனத்தை காந்தியின் வரிகளில் இருந்தே அம்பலப்படுத்தியுள்ள எழுத்தாளர் மதிமாறன் அவர்களின் சமூகக்கடமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

நூலின் 16ம் பக்கத்தில் சொந்த நாட்டு மக்களிடம் தீண்டாமையயும், வெளிநாட்டுக்காரர்களிடம் அடிமை உணர்வையும் காட்டுகிற பார்ப்பனர்களைப்போல தென்னாப்பிரிக்காவில் காந்தி நடந்து கொண்டார் என்று காணப்படுகிற வரிகள் ஆயிரமாயிரம் அர்த்தம் பொதிந்த செய்தியாகும்.

இந்த செய்திக்கு ஆதாரமாக தென்னாப்பிரிக்காவில் காந்தி மேற்கொண்ட பயணத்தின்போது, நடந்த நிகழ்வுகளை அதிலும் குறிப்பாக காந்தியின் வார்த்தைகளில் இருந்தே சுட்டிக்காட்டி, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு பொய்யை வைத்து “மகாத்மா” என்கிற பிம்பத்தை கட்டியமைத்திருக்கிறார்கள் எனும் செய்தி அதிர்ச்சியானது மட்டுமல்ல! தெருத்தெருவாக எடுத்துச்செல்லப்பட்டு மக்களை விழிப்பூட்ட வேண்டிய செய்தியாகும்.

ஏதோ காந்தியைத் திட்டுவதினாலேயே நம் கொள்கை எதிரிகளான கோட்சே வகையறாக்கள் மகிழ்ந்து விடக்கூடாது என்று, காந்தியின் துரோகத்தை மறக்கவும் மாட்டோம்! பார்ப்பன கோட்சேவின் கொலைவெறியை மன்னிக்கவும் மாட்டோம்!! என்று இரு பெரும் கருத்தியல் எதிரிகளையும் சம தொலைவில் வைத்து பெரியாரின் பேரன் என்பதை நிரூபித்து விட்டார்.

கோவணம் கட்டிய காந்தி கோட் சூட் போட்ட பிர்லா போன்றவர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டார்.

கோட் சூட் போட்ட அம்பேத்கர் தான் கோவணம் கட்டிய ஏழைகளின் பிரச்னைகளை தீர்க்க முயற்சி செய்தார் என்ற வரிகளில் முற்போக்கு முகமூடி போட்ட அதிமேதாவிகள் புரிந்து கொள்ள வேண்டியது ஏராளம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியத்துணைக்கண்ட அரசியலை சாரமாக்கி புரிந்துகொள்ள ஏதுவான வகையில் போட்டிருக்கிற அம்பேத்கர், பெரியார் காந்தி படங்களைத் தாண்டி எதுவும் சொல்வதற்கு இல்லை.

காந்தியின் எழுத்துக்களில் இருந்தே தான் எழுப்புகிற கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டு காந்தியை ஆதரிக்கட்டும் என்று எழுத்தாளர் மதிமாறன் விடுக்கிற சவாலுக்கான பதிலை வாய்ச்சொல் வீரர் தமிழருவி மணியன் வகையறாக்களுக்கே விட்டு விடுகிறோம்.

இந்த புத்தகத்தை வாசிப்பதோடு நின்றுவிடாமல் தமிழகத்தின் சேரிகள் தோறும் கொண்டு சேர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு அம்பேத்கரிஸ்டுகளிடம் இருக்கிறது. அது அவர்களின் கடமையாக கருத வேண்டியதில்லை. அது அம்பேத்கரிஸ்டுகளின் பணியை எளிமையாக்க வந்த வாய்ப்பு என்பதால்.

வன்கொடுமை ஒழிக்க தீண்டாமையை ஒழிக்க வேண்டும். தீண்டாமையை ஒழிக்க சாதியை ஒழிக்க வேண்டும். சாதியை ஒழிக்க இந்து மதத்தை ஒழிக்க வேண்டும். இந்து மதம் தனது கோரமான முகத்தை காந்தி முகமூடி அணிந்து மென்மையாகக் காட்டிக்கொண்டிருக்கிறது.

ஆக, காந்தியை அம்பலப்படுத்துவதே, தொடக்கப்புள்ளியாக இருக்கும் என்பதால், தங்கள் பணியைச் சுலபமாக்க வந்துள்ள கருத்தியல் ஆயுதமான இந்தப்புத்தகத்தை ஏந்திக்கொண்டு சாதி ஒழிப்புப்போருக்கு போவோம் வாருங்கள் என்று உரிமையுடனும் தோழமையுடனும் அழைக்கிறேன்!

போர் ஆயுதம் தந்த எழுத்தாளர் மதிமாறனுக்கு எங்கள் நன்றியை வார்த்தைகளால் சொல்லப்போவதில்லை. சாதி ஒழிப்புப்போரை முன்னைவிட வேகமாக எடுத்துச்செல்லும் செயலால் காட்டுவோம்!!

 என்றும் சாதி ஒழிப்புப் பணியில்
நீலவேந்தன்.
ஆதித்தமிழர் பேரவை
9443937063

தோழர் நீலவேந்தன் பேச்சாளர், கவிஞர்.

அதைவிட சிறப்பு தொடர்ந்து களத்தில் இறங்கி போராடுகிறவர். கூடங்குளம் அணுஉலையை ஆதரித்து தமிழக அமைச்சரவை அறிவித்தவுடன், அதை கண்டித்து தமிழகத்தின் முதல் போராட்டத்தை ஆதித் தமிழர் பேரவை சார்பாக நடத்தியவர். தோழர்களுடன் முதலில் சிறை சென்று, கடைசியாக ஜாமினில் விடுதலையானார்.

சில ஆண்டுகளுக்கு முன் திருப்பூரில் பழ. நெடுமாறன், உலகத் தமிழர் மாநாடு நடத்தி அதில் உலகின் தலைசிறந்த தமிழருக்கான விருதை, தமிழ் விரோதியும், சமஸ்கிருதம்தான் சிறந்த மொழி என்ற கருத்துடையவரும், கோவை மாவட்டத்தில் இந்து அமைப்புகளுக்கும், கவுண்டர் ஜாதி சங்கங்களுக்கும் புரவலராக இருக்கும் பொள்ளாச்சி மாகாலிங்கத்திற்கு வழங்கினார்.

அதே மேடையில் பொள்ளாச்சி மகாலிங்கத்தை விமர்சித்து, அவருக்கு தருகிற விருது கண்டத்திற்குரியது என்று பேசிய காரணத்தால், அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

இவருடைய கவிதையை உள்ளடக்கமாக கொண்டுதான் தோழர் அ.ப.சிவா ‘துக்கம்’ குறும்படத்தை எடுத்திருந்தார்.

புத்தகம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள:

‘அங்குசம்’ ஞா. டார்வின் தாசன் – 94443 37384

கோயம்புத்தூர்: வழக்கறிஞர் பாலா – 98942 30138 –

திருச்சி : நாக. குணராஜ் – பெரியார் நூல் நிலையம் – 98655 96940

தஞ்சை: தோழர் எழிலரசன் – 94885 45546

தொடர்புடையது:

காந்தி: பிம்பங்களை உடைத்தெறிவது வரலாற்றுக் கடமை

சாதி இந்து எதைச் செய்தாலும் அது புனிதமானதுதானா?;காந்தியம்: மலத்தில் பொறுக்கிய அரிசி

உணவு உடை இருப்பிடம்-பெரியார் அம்பேத்கர் காந்தி

மகாத்மா: விமர்சனப்படுத்துவது தேவையானது, ஆரோக்கியமானது, சுவாரசியமானதும் கூட

புராண காலத்திலும் அதன் பிறகு ‘நவீன’ பாரதியிடமும் .. அதுபோலவே இன்றும்..

அதென்னங்க பார்ப்பன இந்துப் பார்வை?

-என். குமார்.

அடுத்தவன் மனைவி மீது ஆசைப்பட்டு அவளை கடத்தி சென்று கை படாமல் வைத்திருந்தாலும் அவன் ஒழுக்கக்கேடன். அவனுக்கு மரணதண்டனைதான் தீர்ப்பு என்று ராவணன் மூலமாக நீதி சொன்ன பார்ப்பனியம்,

அடுத்தவர்களின் ஏகப்பட்ட மனைவிகளை கவர்ந்து அவர்களிடம் உடல்ரீதியாக உறவும் வைத்துக் கொண்ட பெண் பித்தன் இந்திரனை தேவர்களின் தலைவர்களாக கொண்டாடுவதை பழைய புராண, இலக்கியத்தில் உள்ள பார்ப்பன இந்து பார்வை என்று சொல்லலாம்..

‘நவீன’ இலக்கியத்தின் ‘தந்தை’யான பாரதியார், பெண்ணை நிர்வாணபடுத்த முயற்சிப்பதை கண்டித்து,

பாஞ்சாலி சபதத்தில், பாஞ்சாலியின் குரலாக

தேவி திரௌபதி சொல்வாள்; – ஓம்
தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்;
பாவி துச்சாதனன் செந்நீர் – அந்தப்
பாழ்த்துரியோதனன் ஆக்கை இரத்தம் ,
மேவி இரண்டுங் கலந்து – குழல்
மீதினற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல் முடிப்பேன் யான் – இது
செய்யுமுன்னே முடியே’ என்றுரைத்தாள்.

என்று வீர முழக்கம் இடுகிறார்.

பெண்ணுக்கு நேர்ந்த வன்கொடுமைக்கு எதிராக, அப்படி பொங்கிய பாரதியே இன்னொரு இடத்தில்,

குளத்தில் குளிக்க சென்ற பெண்களின் துணியை தூக்கிக்கொண்டு, அவர்களை கை இரண்டையும் மேல தூக்கி கும்பிட்டபடி நிர்வாணமாக மேலேறி வந்தால்தான் துணியை திருப்பி தருவேன் என்று பெண்களிடம் பொறுக்கித் தனம் செய்த ஈவ்டீசிங் பேர்வழி கண்ணனின்  (இவன்தான் பாஞ்சாலி மானம் காக்க தன் கை கொடுத்தான்) இதுபோன்ற ஈனச் செயல்களை,

‘தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன் தெருவிலே பெண்களுக்கொ யாத தொல்லை’  என்று பெருமித்தோடு கொஞ்சி மகிழ்கிறார்.

இது நவீன இலக்கியத்தில் உள்ள பார்ப்பன இந்துப் பார்வை.

இதுபோல் பல நியாய தர்மங்கள், பார்ப்பனர்களால், பார்ப்பன எழுத்தாளர்களால், ஊடகங்களால் ‘நான் ரொம்ப ஸ்ட்ரிட்டு..’ என்ற பாணியில் இன்றும் வழங்கப்படுகிறது.

நூல்கள் அறிமுக விழா

***

தொடர்புடையது:

உணவு உடை இருப்பிடம்-பெரியார் அம்பேத்கர் காந்தி

காந்தி: பிம்பங்களை உடைத்தெறிவது வரலாற்றுக் கடமை

சாதி இந்து எதைச் செய்தாலும் அது புனிதமானதுதானா?;காந்தியம்: மலத்தில் பொறுக்கிய அரிசி

மகாத்மா: விமர்சனப்படுத்துவது தேவையானது, ஆரோக்கியமானது, சுவாரசியமானதும் கூட

மகாத்மா: விமர்சனப்படுத்துவது தேவையானது, ஆரோக்கியமானது, சுவாரசியமானதும் கூட

ச.முகமது அலி

ஆய்வாளர்-எழுத்தாளர்
ஆசிரியர்-காட்டுயிர் மாத இதழ்

முன்பு பாரதியாரின் ஒளிவட்ட மர்மத்தை உடைத்த மதிமாறன் அவர்களின் அண்மை வெளியீடு தான் ‘காந்தி; நண்பரா துரோகியா?’ என்ற நூல். இது காந்தியைக் கட்டுடைக்கிறது. ஆம் வலிமை வாய்ந்த தமது ஆராய்ச்சியின் மூலம் அந்த இராஜ விக்ரகத்தின் உள்ளீடை மட்டுமல்ல, அதன் பக்தர்களின் பித்தங்களையும் அம்பலப்படுத்திய வகையில் இந்தியாவின் நேர்மையான எழுத்தாளர்களில் ஒருவராக மதிமாறன் அறியப்பட்டுவிட்டார்.

அறிவியலாளரோ, அரசியல்வாதியோ யாராயினும் அவர்களை நுண்மாண் நுழைபுலத்தோடு ஆராய்ந்து விமர்சனப்படுத்துவது தேவையானது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும், சுவாரசியமானதும் கூட. இதுவே ஒரு சரிநிகர் சமுதாயத்தைக் கட்டமைப்பதும் மாற்றியமைப்பதற்குமான அடித்தளம். வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு முதல் தர பிற்போக்கு நாடான நமது நாட்டில் தான் எதைத் தொட்டாலும் அதை சாதியோடு, சமயத்தோடு, கடவுளோடு முடிச்சுப் போட்டு வைக்கப்பட்டுள்ளது. எனவே கலை, இலக்கியம், விஞ்ஞானம் என நாம் எங்கே போனாலும் கொக்கரித்தெழும் மதவாதக் கொடூரர்களால் முத்திரை குத்தப்படுவதோடு அவர்களால் சீர்திருத்தமோ, சமத்துவமோ, நவீனமோ எதையும் குத்திக் குதறும் அபாயம் அன்றும், இன்றும் உண்டு.

அந்த கொலைபாதகப் பண்பாட்டுக்கே  பலியான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை வெகு நீண்ட காலத்திற்கு முன்பே விமர்சனப்படுத்தி, அம்பலப்படுத்தியவர்கள் இந்தியாவில் இருவர்; ஒருவர் அம்பேத்கர், இன்னொருவர் ஈ.வே.இராமசாமி. இது முந்தைய தலைமுறை. இன்றைய தலைமுறையில் இவ்விமர்சன மரபில் இருப்போர் தமிழகத்தில் இருவர்; ஒருவர் மதிமாறன், மற்றவர் மருத்துவர் செயராமன். செயராமனின் நூல் ‘காந்தியின் தீண்டாமை’ விமர்சனப்படுத்தியது என்றால், மதிமாறனின் நூல் அம்பலப்படுத்துகிறது எனலாம்.

காந்தி இந்தியாவுக்கு எதுவும் செய்திடாமலேயே ‘பிதாவாகி’ விட்டதற்கான காரணம் என்னை பொருத்தவரை கோவணமும், ஆங்கிலமும் தான். இதையடுத்த மூன்றாவது கருத்தை காந்தியே குறிப்பிடுகிறார்…  ‘நான் அரசியல்வாதியல்ல, அரசியல் பேசுகின்ற சமயவாதி’ (இந்த சமயவாதப் போக்கினால் தான் பாகிஸ்தானே உருவானது என்பது வேறு கதை) இன்றைய சூழலில் நுனி நாக்கு ஆங்கில மொழிச் சாமியார்கள், வெற்றிகரமாக தமது வியாபாரத்தை நடத்திக் கொண்டிருக்க முடிவதும் இந்தப் பின்னணியில் தான்.

இந்த ஆங்கில மொழி (இரகசிய) மோகம் அரசியல், ஆன்மீகவாதிகளுக்கு மட்டுமல்ல பெரிய பெரிய தமிழ்த்தேசிய, தாய்த் தமிழ்வாதிகளையும் ஆட்டிப் படைத்துகொண்டிருப்பது ஒரு சுவை முரண். விசித்திரமான இவர்களும் சரி மற்றவர்களும் சரி தமது மேதாவிலாசத்திற்கு ஒன்றை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள்; அதுதான் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பு மட்டுமல்ல மொழிநடைகூட. இதில் ஒரு முக்கிய நகைச்சுவை, காந்தி உள்ளிட்ட இவர்கள் அனைவருக்கும் ஆங்கில மொழி மட்டும்தான் தேவை. ஆனால், ஆங்கில பண்பாட்டை வெறுப்பார்கள். ஆனால் இவர்கள் எழுத்துக்கள், பேச்சுக்கள் அனைத்திலும் ஆங்கிலப் பண்பாட்டுப் பாதிப்பு மிளிரும். இந்த வழியில்தான் பண்டைய தமிழ் இலக்கிய இயற்கை மரபானது மூடநம்பிக்கைத் தமிழர்களால் மூழ்கடிக்கப்பட்டுவிட்டது.

காந்திக்கு மட்டும் ஆங்கிலம் எழுத, பேசத் தெரியாமல் இருந்திருந்து… இந்தி கூட அல்ல, குசராத்தி மட்டுமே தெரிந்திருந்தால் எவ்வளவுதான் அவர் “ஒளிவட்டம்” உள்ளபடியே பிரகாசமாக இருந்தாலும் தேசப் பிதாவாக அவர் போற்றப்பட 100 விழுக்காடு வாய்ப்பே வந்திருக்காது. மாறாக குசராத்தின் சத்ய சாய்பாபாவாகவே அவர் இருந்திருக்க முடியும்.

நூல் முழுவதிலும் காணப்படும் மதிமாறனின் தார்மீகக் கோபத்தில் இருக்கும் நியாய உணர்வை, சவால் விட்டு அவர் காட்டும் புள்ளி விவரங்கள் மற்றும் ஆய்வுகளிலிருந்து தெளிவாக ஏற்றுக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக இந்தியர்களின் மூளைகளில் பதித்து வைக்கப்பட்டிருக்கும் ‘தென்னாப்பிரிக்க இரயிலில் ஒரு வெள்ளைக்காரன் காந்தியைத் தாக்குதல்’ சம்பவத்தின் உண்மை நிலையை மதிமாறனுக்கு முன்பு வரை ஏன் எந்த மதியூகிகளும் கண்டுபிடிக்க முடியவில்லை? என்பது போன்ற கேள்விகளுடன் தொடர்ச்சியாக பல புதிய எண்ணங்களும் உருவாக நூல் வாய்ப்பளிப்பது ஒரு சிறப்பு.

காந்தியின் இளவயதில் அவர் கருப்பாக, காதுகள் அகன்று அவர் தாயாருக்கே அவர் அருவெறுப்பாக இருந்ததாக நாம் முன்பு படித்திருக்கிறோம். மிடுக்கான தோற்றத்தில் வெள்ளை வெளேர் என சூட், கோட் அணிந்திருக்கும் ஒரு ஆங்கிலேயன் பயணச் சீட்டு இன்றி இரயிலில் எடக்கு மடக்காகப் பேசும் ‘அசிங்கமான’ ஒருவரைப் பார்த்தால் கோபம் வருமா, வராதா என்பது பொதுப் பார்வையில் சிந்திக்கத் தக்கதே. அதே இரயிலில் எத்தனையோ இந்தியர்கள் பயணித்துக் கொண்டுதான் இருந்திருப்பர். ஏன் அம்பேத்கர் கூட ‘நிறவெறி’ கொண்ட அமெரிக்காவின் கொலம்பியா வரை சென்று படித்து வரவில்லையா… என்னவாகி விட்டது? (பெரியாரை விடுங்கள் அவர் சிவந்த நிறத்தை உடையவர் என விவாதத்திற்கு இழுக்காது விட்டு விடலாம்) இயல்பாகவே ஆங்கிலப் பண்பாட்டைப் பார்த்தால் ஏற்படும் ஆத்திரம், சமய காந்தியின் இரத்தத்தில் உண்மையாகவே கலந்திருக்கிறது. எனவே, ஆங்கிலப் பண்பாட்டை வெறுக்கும் மனோபாவத்துடன், தாம் ஒரு பாரிஸ்டர்-வழக்கறிஞர் என்ற மமதையோடு ஆங்கிலேயர் ஒருவருடன் பயணச் சீட்டு வாங்காமல் மல்லுக்கு நிற்கும் ஆளுமை கொண்டவராகவே நமக்குப் புலப்படுகிறது. இப்படிப்பட்ட பலரை இங்கே, இப்போதும் கூட பேருந்தில், இரயிலில் நாம் காண முடியும்.

மேலும் காந்தியின் வாரிசுகளிலும், பக்தர்களிலும் லட்சக்கணக்கானோர் இன்றும் வெளிநாடுகளில் வாழ்ந்தும், சுற்றிக் கொண்டும் இருக்கிறார்களே எப்படி? அவர்கள் காந்தி போலவே நடந்து கொள்கிறார்களா? அல்லது காந்தி போலவே மனோபாவம் கொண்டிருக்கிறார்களா என்பதை ஆய்வுக்குட்படுத்தவும் இந்நூல் தூண்டுகிறது.

ஒரு உண்மை புரிகிறது; அன்று காந்திக்கு இருந்த ‘அறிவும், தன்னம்பிக்கையும்’ கூட வெள்ளைக்காரன் போட்ட பிச்சை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. வெள்ளையர் இனமே இல்லாமல் ஒரு காலமிருந்து, அதில் பாரதமாதாவின் புதல்வர்களின் இராமராஜ்ஜியத்தில் 1008 புண்ணிய தேசங்களில் ஏதாவது ஒரு தேசத்தில், ஒரு உருமால் சிங் அரசின் வாகனப் போக்குவரத்தில் காந்தி தனது தென்னாப்பிரிக்க வேலையைக் காட்டியிருந்தால் என்னவாகியிருக்கும் அவர் கதி? மனிதாபிமானம், மனித உரிமை, சனநாயகம், சிவில் சட்டம், கல்வி, பட்டம், வழக்கு, வாயிதா, வாதம் இத்தனையையும் அந்நியத்திலிருந்து பெற்றுக் கொண்டு ஒருவர் தமது ஆளுமையைக் காட்டுவது பெரிய வீரமுமல்ல, தர்மமுமல்ல. ஆங்கிலம் தெரிந்து கொள்வதே ஒரு தைரியம் என்று நமது பள்ளிகளில் இப்போதும் நாம் சொல்லித் தருவதில்லையா? ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

‘சர்’களிலிருந்து ‘நோபல்’கள் வரை வெள்ளை ஏகாதிபத்தியத்தின் மொழியை அறியாமல், அவர்கள் அறிவியல் துணையின்றி முன்னுக்கு வந்தவர்கள் எத்தனை பேர்? கைகளை உயர்த்தட்டும். ஆக எதையுமே உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பார்க்கும் போது உண்மைகள் மறைந்து புனிதமாகி விடுவது நமக்குத் தெரியாததல்ல. ஒரு வக்கீலின் விவாதமாகக் கூட வைத்துக் கொள்ளாலாமே. அன்று இரயிலில் நடந்த அச்சம்பவம் காந்தி சொல்லித்தானே நமக்கு தெரிகிறது. அதை நேரில் கண்ட சாட்சி யார்? ஆதாரம் என்ன? ‘புரை தீர்த்த நன்மை பயக்கும்’ என மக்களை உசுப்பி விட, கழிவிறக்கம் காண, 1916 இல் நடந்ததை 1940 இல் சொல்லும் திட்டத்தின் உள்ளீடை நாம் மதிமாறன் நூல் வழியே தான் புரிந்து கொள்கிறோம்.

64 பக்கங்களில் உயர்ந்த தரத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்நூலின் பின் அட்டையில் அம்பேத்கர், பெரியார், காந்தியின் படங்களைத் தந்து சிறு விளக்கங்கள் கொடுத்திருப்பது சரியான வடிவமைப்பு. அதில் காந்தி பற்றிய குறிப்பில் இதையும் சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும்; தினசரி மார்பு, கை, கால், முகச்சவரம் செய்வதும் முடி வெட்டிக் கொள்வதும் உடையமைப்புக்கேற்ற திட்டமிட்ட ஒப்பனையே.

இது போல் பலவித எண்ணங்களையும், தகவல்களையும் மேலதிகப் புரிதல்களையும் மதிமாறனின் ‘காந்தி; நண்பரா? துரோகியா?’ நூல் நமக்குள் உருவாக்கிவிட்டது. இருப்பினும் இது தமிழில் மட்டுமே வெளிவந்திருப்பது தான் பொருத்தமில்லாதது. ஆம் முதலில் இந்நூல் இந்தியிலும், குசராத்தியிலும். மத்திய, உத்தரப் பிரதேசங்களிலும் தான் வெளியிடப்பட்டிருக்கவேண்டும். நவீனமாக இந்தியாவை மறு உருவாக்கம் செய்திட விரும்புவோர் அனைவரும் படித்துப் பார்க்க வேண்டிய இந்நூல் இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு கோடிக்கணக்கில் அச்சிடப்பட்டு வழங்கி இந்தியாவின் ‘புனிதம்’ உடைக்கப்பட வேண்டும். புதிய மனிதம் படைக்கப்பட வேண்டும். இதுவே நூலாசிரியரும், பதிப்பாளரும் வேண்டுவது என்பதாக நாம் அறிகிறோம். அவர்கள் முயற்சிகள் வெல்ல வேண்டும். நாடு உருப்பட வேண்டும்.

ச.முகமது அலி

ஆய்வாளர்-எழுத்தாளர்
ஆசிரியர்-காட்டுயிர் மாத இதழ்
காடுகள் பற்றிய ஆய்வில் இந்தியாவில் உள்ள முன்னணிஆய்வாளர்களில் ஒருவர்.

காடுகளுக்கு சென்று அங்கேயே தங்கி ஆய்வு செய்வது இவரது சிறப்பு.

கறாரான விமர்சனம் இவரின் இன்னொரு சிறப்பு, அதனாலேயே சிறு பத்திரிகை இலக்கியவாதிகளிலிருந்து ‘பெரிய‘ பத்திரிகை வரை உள்ள பழைமைவாதிகள் இவரை திட்டமிட்டு புறக்கணிக்கிறார்கள்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வசித்து வருகிறார்.

ச. முகமது அலியின் நூல்கள்

பறவையியல் அறிஞர் சாலிம் அலி

நெருப்புக்குழியில் குருவி

யானைகள் அழியும் பேருயிர்

இயற்கை செய்திகள் சிந்தனைகள்

பாம்பு என்றால்…

பல்லூயிரியம்

வட்டமிடும் கழகு

தொடர்புடையது:

உணவு உடை இருப்பிடம்-பெரியார் அம்பேத்கர் காந்தி

காந்தி: பிம்பங்களை உடைத்தெறிவது வரலாற்றுக் கடமை

சாதி இந்து எதைச் செய்தாலும் அது புனிதமானதுதானா?;காந்தியம்: மலத்தில் பொறுக்கிய அரிசி