திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் அல்ல; ஆனால், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களில் கணிசமான பேர் திமுக காரர்கள்தான்.
விடுதலைப் புலிகளை ஆதரிக்கிற ஈழ ஆதரவு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது, நன்கொடை தருவது என்பதை திமுகவின் தமிழ் உணர்வு கொண்ட தொண்டர்களிடம்தான் இன்றும் காண முடிகிறது.
தலைமையை மீறிய இந்த அரசியல் உணர்வு மரியாதைக்குரியதாக இருக்கிறது.
ஈழப் பிரச்சினையின் காரணமாகவே பல தொண்டர்கள் திமுகவிலிருந்து வெளியேறியும் இருக்கிறார்கள். (வைகோ மற்றும் அவரை ஆதரித்தவர்கள்)
இதற்கு நேர் எதிராக, அதிமுகவின் தலைவர் எம்.ஜி.ஆர் தீவிரமான விடுதலைப் புலிகளின் ஆதரவாளர், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிறைய பண உதவி செய்தவர் என்று அவரை பற்றிய புகழுரை இன்றும் பேசப்படுகிறது.
அதற்கு நேர் மாறாக, ஒரே ஒரு அதிமுக காரரைக்கூட விடுதலைப் புலிகள் ஆதரவாளராகவோ, ஈழ விடுதலை ஆதரவாளராகவோ பார்க்க முடியவில்லை.
குறிப்பாக, ஈழப் பிரச்சினையை தன் கட்சிக்குள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அவர் தன் தொண்டர்களிடம் அறிமுகம் கூட செய்யவில்லை.
அதற்கு அடையாளமாகத்தான் எம்.ஜி.ஆருக்கு பிறகு, தனி ஈழத்திற்கும், புலிகளுக்கும் எதிரான ஒருவர் அந்தக் கட்சிக்கு தலைவராகவும் வர முடிந்தது.
ஜெயலலிதா பகிரங்கமாக, புலிகளுக்கு எதிராகவும், தனி ஈழத்திற்கு எதிராகவும் கருத்து சொன்னபோது, விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளரான எம்.ஜி.ஆர் மீது, பக்தி கொண்ட தொண்டர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது மட்டுமல்ல,
“அய்யோ.. விடுதலைப் புலிகளா, அவுங்க மோசமான ஆளுங்கப்பா… ராஜிவ் காந்தியையே கொன்னுட்டானுங்கப்பா..” என்றும்,
“அட, இலங்கைக்குபோய் அவுங்க நாட்ல இருந்துகிட்டு.. தமிழ் ஆளுங்க ஏம்பா தனிநாடு கேக்குறாங்க? அதனாலதாம்ப அவன் இவனுங்கள சுடுறான்..” என்றும் பொறுப்பற்று பேசுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.
விடுதலைப் புலிகளுக்கு தீவிரமான ரகசியமாக ஆதரவு தெரிவித்த எம்.ஜி.ஆர்., தன் கட்சிக்குள் தொண்டர்களிடம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாககூட அல்ல, ஈழ மக்களுக்கு ஆதரவாகக்கூட அரசியல் உணர்வை ஊட்டாமல் போனது ஏன்?
எம்.ஜி.ஆர் தன் தொண்டர்களை அரசியல் படுத்தியிருந்தால் அது புலிகளுக்கு ஆயுதம் கொடுத்ததைவிட மிகப் பெரிய உதவியாக ஈழ மக்களுக்கு இருந்திருக்கும்.
குறிப்பாக, லட்சக் கணக்கான தமிழர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட காலங்களில், தமிழகத்தில் ஈழ மக்களுக்கு ஆதரவாக போராடுகிற அரசியல் உணர்வு இருந்திருந்தால், அந்த மக்களை நாம் காப்பாற்றி இருக்கலாம்.
காந்தி, பெரியார், அம்பேத்கர் இவர்கள் உடையில் யாருடைய உடை எளிமையானது? -எல்.ரகுராம், பாண்டிச்சேரி
டாக்டர் அம்பேத்கருடைய உடல் மொழியும் எப்போதும் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதாக இருக்கும். காந்தி, நேரு போன்ற தலைவர்களை சந்திக்கும் படங்களில் கம்பீரமும், அலட்சியமும் வெளிப்படும். எல்லோரையும் குற்றவாளிகளாக பார்க்கிற தொனியும், என்னை விட பெரிய அறிவாளி எவன் இருக்கான் இங்கே, என்கிற ஆயிரம் ஆண்டு கோபம் அவருடைய ஒவ்வொரு அசைவுகளிலும் வெளிப்படும்.
கோட் சூட் அணிந்து, கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்கிற அந்த கம்பீரம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கும்.
‘காந்தி, நேரு, பட்டேல் இன்னும் அனைத்து ஆதிக்க ஜாதிக்காரர்கள் நீங்க எல்லோரும் ஒரு அணி. நான் தனி. மோதிப் பாக்கலாமா? தில்லு இருக்கா?’ என்று சவால் விட்டு கூப்பிடுவதுபோலவே இருக்கும் அவர் கம்பீரம்.
அந்த எதிர்ப்பு குறியீட்டின் வடிவமாகத்தான் அவருடைய உடையும் இருக்கும். அவருடைய உடல் மொழியும், அவரின் எழுத்துக்களைப்போல் கூர்மையானது.
காந்தி உடை அவருடைய சிந்தனைகளைப்போலவே செயற்கையாக இருக்கும். அது அவருக்கு தேவையான உடை என்பதை விடவும், அவர் போட்டுக் கொண்ட வேடத்திற்கு பொருத்தமான உடை என்கிற பாணியில்தான் இருக்கும்.
அதனால்தான், கடும் குளிர் கொண்ட டெல்லி போன்ற ஊர்களில் இருக்கும்போது கூட அந்தக் குளிருக்கு ஏற்ற உடை உடுத்தாமல், தன் வேடத்திற்கு ஏற்ற அரை ஆடை உடுத்தினார். காரணம் ‘கன்டினியுட்டி காஸ்ட்யூம்’ என்பதினால்தான்.
‘ஏழைகள் உடுத்துகிற உடை’ என்று காரணம் சொன்னார் காந்தி. ஆனால், ஏழைகளை தன் வசப்படுத்துகிற பாணியில்தான் அதை உடுத்தினார். அதனால்தான் பிர்லா மாளிகையில் இளைப்பாறினார்.
அண்ணல் அம்பேத்ரின் உடை ஆதிக்கத்திற்கு எதிரான குறியீடு என்றால், காந்தியின் உடை அடிமைத்தனத்தை நிலை நிறுத்துவதற்கான குறியீடு.
காந்தி எளிமையாக வாழ்வதற்கு நிறைய செலவு செய்தார். உண்மையில் எளிமை என்பது, ஒரு இடத்தில் எது எளிதில் கிடைக்கிறதோ அதைப் பயன்படுத்திக் கொள்வதுதான்.
இஸ்லாமியர் வீட்டு திருமணத்தில், பிரியாணி மட்டும்தான் கிடைக்கிறது என்றால் அங்கு அதை உண்பதுதான் எளிமை. மாறாக, அங்கு இல்லாத தயிர்சாதம் தான் நான் சாப்பிடுவேன் என்றால், அந்த நேரம் அதை வாங்குவதற்கு நிறைய செலவு செய்யவேண்டும்.
அதுபோல் எளிமைக்காக நிறையச் செலவு செய்தவர் காந்தி.
பெரியார்தான் தனக்கென்று எந்த சுயமதிப்பும் கொள்ளாதவர்.
பெரியார் தன்னை ஒரு தமிழனாகவோ, இந்தியனாகவோ, தமிழ்த் தேசியவாதிகள் சொல்வதுபோல் கன்னடனாகவோ, தன்னை ஒரு பார்ப்பனரல்லாதவனாகவோ, தன்னை ஒரு ஆணாகவோ கூட அவர் மதிப்பிட்டது கிடையாது. அது அவர் உடுத்தும் உடையில் எப்போதும் பிரதிபலிக்கும்.
எது சவுகரியமாக இருக்கிறதோ அதுதான் அவருக்குரியது. வீட்டில் இருக்கும்போது ஒரு உடை. வெளியில் இருக்கும்போது வெறு ஒரு உடை என்கிற பாணி ஒருபோதும் அவரிடம் இல்லை.
வீட்டிலும் லுங்கிதான். டெல்லியில் ஜின்னா வீட்டு விருந்தில் கலந்து கொண்டபோதும் லுங்கிதான். நல்ல உடை, கெட்ட உடை என்றெல்லாம் அவர் யோசித்ததாகவே தெரியவில்லை.
மக்களின் சுயமரியாதைக்கு பாடுபட்ட அவர் ஒருபோதும் தன் சுயமரியாதை குறித்து அக்கறை எடுத்துக் கொண்டதே இல்லை. தன் மீது வீசப்பட்ட செருப்பையும், அணிவிக்கப்பட்ட மாலையையும் ஒரே மாதிரியாக பார்த்தவர்.
துறவிகள் பற்றற்ற நிலை என்கிறார்களே அது பெரியாரிடம் மட்டும்தான் இருந்திருக்கிறது. தன்மதிப்பு அற்ற தலைவர் பெரியார்.
அண்ணல் அம்பேத்கரின் உடை ஆதிக்க எதிர்ப்பு குறியீடு. காந்தியின் உடை ஏழ்மையை தன் செல்வாக்கிற்கு பயன்படுத்திய பாணி, (கிழிந்த உடையில் இருக்கும் கிழவியை கட்டிப்பிடித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த எம்.ஜி.ஆர். பாணி) பெரியாரின் உடை இயல்பானது, எளிமையானது.
**
காந்தி நண்பரா? துரோகியா?’ என்ற நூலிலிருந்து..
**
‘சிந்தனையாளனை’ மாத இதழை தவிர, பெரிய பத்திரிகை, சிறிய பத்திரிகை, கலை,இலக்கிய பத்திரிகை, அரசியல் பத்தரிகை, இயக்க பத்திரிகை என்று வேறு எந்த இதழிலும் நூல் அறிமுகம் பகுதியில் கூட இடம் பெறாமல், தோழர்களின் ஆதரவோடு முதல் பதிப்பு நான்கு மாதத்தில் முடிந்து விட்டது.
புத்தகம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள:
‘அங்குசம்’ ஞா. டார்வின் தாசன் – 94443 37384
கோயம்புத்தூர்: வழக்கறிஞர் பாலா – 98942 30138
திருச்சி : நாக. குணராஜ் – பெரியார் நூல் நிலையம் – 98655 96940
அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார், இந்திய தேசியம் என்பது இந்து தேசியம்தான், பார்ப்பன தேசியம்தான், அவர் இந்து தேசியத்தை, பார்ப்பன தேசியத்தை ஆதரித்தவர் என்று என் நண்பன் சொல்கிறான். உண்மையா?
-கனல்
இந்திய தேசியம் இந்து தேசியமாக இருக்கிறது என்பது உண்மைதான்.
இந்திய தேசியம் என்று உருவாவதற்கு முன்பு தமிழ்நாடு புரட்சிகரத் தமிழ்த்தேசியமாகவா இருந்தது?
ஜாதி வெறியும், தலித் வீரோதமும், பார்ப்பன செல்வாக்கும், பார்ப்பன அடிமைத் தனமும், நிலப்பிரபுத்துவக் கொடுமையும் இன்று இருப்பதைவிடப் பல மடங்கு அதிக அளவில் இருந்தது.
ஒப்பிட்டளவில் பார்த்தால், தமிழ்நாடு தனித் தனியாகத் தமிழ் மன்னர்களால் மட்டுமே ஆளாப்பட்டு வந்தபோது இருந்த நிலையைவிட இன்றைய நிலையில் மேன்மையுள்ளதாகவே இருக்கிறது.
குறிப்பாக, தலித் மக்களின் வளர்ச்சி, அவர்கள் மீது நடக்கும் வன்கொடுமைகளுக்கான எதிர்ப்பு, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, சமூகப் பொருளாதார வளர்ச்சி இவைகள் எல்லாம், தமிழனுக்கு என்று பல நாடுகள் இருந்தபோது இருந்த நிலையைவிட இன்றைய நிலையில் சிறப்பாகவே இருக்கிறது.
ஏகாதிபத்திய பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த இந்திய தேசியம், மற்றும் முதலாளித்துவத்தினால் ஏற்பட்ட நிலப்பிரபுவத்துவ எதிர்ப்பு கூறுகளால் கிடைத்த நன்மை இதைச் சாத்தியமாக்கி இருந்தது.
அதனால்தான், டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்றவர்கள் இந்து மத, பார்ப்பனிய, ஜாதி எதிர்ப்பு அரசியலை மிகத் தீவிரமாகப் பேச முடிந்தது. அதனால் நாமும் தெளிவு பெற்றோம்.
மாறாக, தனித் தமிழ் நாடாக, தனித் தனி நாடாக இருந்திருந்து பார்ப்பனியத்திற்கு எதிராக, ஜாதிக்கு எதிராக, இந்து மதததிற்கு (சைவம், வைணவம்) எதிராகப் பெரியாரும், அம்பேத்கரும் பேசியிருந்தால்,
“யாரங்கே.. இவர்கள் இருவரையும் யானை காலில் மிதத்துக் கொல்லுங்கள்” என்று உத்தரவிட்டிருப்பார்கள் பார்ப்பன அடிமைகளான ஒரிஜினல் தமிழ் மற்றும் மாராட்டிய மண்ணின் மன்னர்கள்.
சரி, அண்ணல் அம்பேத்கர் ஏன் இந்திய தேசியத்தைப் பேசினார்?
தமிழ்நாட்டில் இருப்பதைப் போலவே, இந்தியா முழுக்க ஊருக்கு வெளியே சேரி இருக்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நேர் மேல் இருக்கிற வன்னியர், கள்ளர் ஜாதிக்காரர்கள் எப்படித் தலித் மக்கள் மேல் வன்முறையைத் தமிழ்நாட்டில் நிகழ்த்துகிறார்களோ, அதுபோலவே உத்திரப்பிரதேசம், பிகார், அரியான பகுதியில் இருக்கிற ஜாட், யாதவ் ஜாதி வெறியர்களும் நடத்துகிறார்கள்.
தமிழ்நாட்டில் வன்னியர், கள்ளர்களிடம் தலித் விரோதத்தைத் தூண்டி அவர்களை ஜாதிய அடியாளாகப் பயன்படுத்தி அவர்களை மட்டும் குற்றவாளியாகக் காட்டிவிட்டு, வன்னியர்களையும், கள்ளர்களையும் இழிவானவர்களாகக் கருதுகிற பிள்ளை, முதலி, செட்டி, பார்ப்பனர்கள் போன்ற இன்னும் பிற ஆதிக்க ஜாதிக்காரர்கள் எப்படி நல்லவர்கள் போல் நடிக்கிறார்களோ, அதுபோலவே இந்தியா முழுக்க ‘உயர்’ ஜாதிக்கார்கள் நடந்து கொள்கிறார்கள்.
தலித் விரோதமும், தாழ்த்தப்பட்ட மக்களின் மீது காழ்ப்புணர்ச்சியும் இந்திய தேசியத்திற்கான அடையாளமாகப் பார்வையற்றவர்களுக்கும் தெளிவாகப் புரிவது போல், பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கிறது.
தாழ்த்தப்பட்ட தமிழனின் பிரச்சினை மற்ற ஜாதி தமிழனின் பிரச்சினைகளிலிருந்து வேறுபட்டது; ஆனால், ஒடுக்குமுறைக்கு உள்ளாவதில் தமிழகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், ஆந்திரா, அரியான உட்பட இந்தியா முழுக்க உள்ள தாழ்த்தப்பட்ட மக்களும் ஒற்றுமை இருக்கிறது.
இதை உணர்ந்த டாக்டர் அம்பேத்கர் இந்தியா முழுக்க உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாகப் போராடினார். மாராட்டிய மகர் ஜாதி தாழ்த்தப்பட்ட மக்களின் ஒடுக்குமுறையைப் பற்றி மட்டும் அவர் குறிபிடவில்லை. தமிழ் நாட்டில் திருநெல்வேலியில் ‘கண்ணால் பார்த்தலே தீட்டு’ என்று கொடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளான ‘புதிரை வண்ணார்’ சமூக மக்களின் பிரச்சினை குறித்தும் பேசியியிருக்கிறார்.
அதனாலேயே இந்தியா முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராகக் கொண்டாடப்படுகிறார்.
டாக்டர் அம்பேத்கர் மீதான அவதூறுகளை, தமிழ்த்தேசியம் பேசுகிறவர்களில் தலித் அல்லாதவர்களே இப்படி அள்ளி வீசுகிறார்கள்.
இதற்கு நேர் மாறாக இனனொரு புறத்தில் காந்தி, ராஜாஜி, பாரதி, காமராஜ், முத்துராமலிங்கம், இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர் போன்றவர்களை ஆதரிக்கிறார்கள்; இல்லையென்றால் விமர்சிக்க மறுக்கிறார்கள்.
டாக்டர் அம்பேத்கர் பேசிய இந்திய தேசியத்தில் தலித் மக்களுக்கான விடுதலை என்கிற முற்போக்கான அம்சம் இருந்தது.
காந்தி, ராஜாஜி, பாரதி, காமராஜ், முத்துராமலிங்கம் இவர்களின் இந்திய தேசியத்தில், ஆதிக்க இந்திய வெறியும், காங்கிரஸ் மற்றும் இந்து அமைப்புகளுக்கே உரிய தேசிய இனங்களுக்கு எதிரான வன்மமும்தான் இருக்கிறது.
இந்து மதத்தில் நம்பிக்கை உள்ள, இந்துக் கடவுளான முருகன் மீது அளவுகடந்த பக்தி கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இந்துத்துவுத்திற்கு எதிரான தமிழ் தேசிய தலைவராக இவர்களுக்குத் தெரியும்போது,
இந்திய தேசியத்தை ஆதரித்து இந்து மதத்தை, இந்துக் கடவுள்களைக் கந்தலாக்கிய அண்ணல் அம்பேத்கரை இந்து மதத்தை ஆதரித்தவர் என்று அவதூறு செய்வது திட்டமிட்ட ஜாதி இந்துவின் உணர்வைத் தவிர வேறென்ன?
அம்பேத்கர் பற்றிய இவர்களது விமர்சனம் என்கிற பெயரில் வருகிற அவதூறுகளில், தமிழ் தேசிய உணர்வெல்லாம் இல்லை. ஜாதிய உணர்வுதான் வழிகிறது.
தமிழ் தேசியமோ, தெலுங்கு தேசியமோ, மலையாள தேசியமோ எந்த வகையான விடுதலை குறித்துப் பேசுகிற எவரும் அம்பேத்கரை எதிர்த்து அல்ல, அவரைப் புறக்கணித்துச் செயல்பட்டாலே அவன் ஒரு ஜாதி வெறியனாகவும் தலித் விரோதியாகவும்தான் இருப்பான்.
அம்பேத்கரின் அடிப்படை அரசியலுக்கு எதிராகவே அவரை அவதூறு செய்கிற ஒருவனை நீங்கள் உங்கள் நண்பர் என்று சொல்லாதீர்கள்; அவர் நண்பர் அல்ல எதிரி.
முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆராய முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஒரு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. அதில் தமிழகம் சார்பாக முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், கேரளா சார்பில் முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் ஆகியோர் இடம் பெற்றனர்.
இந்த தீர்ப்பு தமிழகத்திற்கு ஆதரவாக வந்துள்ளது என்றும் கேரளாவை சேர்ந்த நீதிபதி கே.டி.தாமஸ் கேரளாவிற்கு துரோகம் செய்து விட்டார் என்றும் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சரான பி.ஜே.ஜோசப், கடுமையாக விமர்சித்து கேரள மக்களை நீதிபதி தாமசுக்கு எதிராக தூண்டி விட்டுள்ளார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நீதிபதி தாமஸ்,
“அறிக்கையில் திருப்தி இல்லை என்றால் அதுகுறித்து உச்சநீதிமன்றத்தின் ஐவர் குழு மூலம்தான் புகார் தெரிவிக்க வேண்டும். ஜோசப் சொல்வதைக் கேட்டு்ச செய்வதற்காக என்னை உச்சநீதிமன்றம் நியமிக்கவில்லை. ஜோசப் கட்டுப்பாட்டோடு பேச வேண்டும்.
முதலில் அவர் அறிக்கையை முழுமையாக படிக்க வேண்டும். அதன் பிறகே கருத்து தெரிவிக்க வேண்டும். மாறாக மக்களின் உணர்வுகளை, கோபத்தைத் தூண்டும் வகையில் அவர் பேசியுள்ளார். இது தவறானது.
நான் நீதிபதி. இரு மாநிலங்களுக்கும் பொதுவானதைத்தான் நான் சொல்லியுள்ளேன். என்னை கேரளாக்காரன் என்றோ, தமிழ்நாட்டுக்காரன் என்றோ கூறுவதில் அர்த்தம் இல்லை” என்று ஆணித்தரமாக பேசியுள்ள நீதிபதி தாமசுக்கு நம் நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.
ராஜிவ் கொலை விவகாரத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர் மரியாதைக்குரிய நீதிபதி தாமஸ் என்பதும் குறிப்பிடத் தக்கது.
அதுமட்டுமல்ல, ராஜீவ் கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவர் கே.டி.தாமஸ். அவரே அதற்கு தலைமை நீதிபதியும்கூட. அவருடன் நீதிபதிகள் வாத்வா, முகம்மது குயாத்ரி ஆகிய இருவரும் சேர்ந்து அந்த வழக்கை விசாரித்தனர். இதில் நீதிபதி தாமஸ், மூவருக்கு தூக்கு தண்டனை தருவதை எதிர்த்தவர் என்பதும், நளினிக்கு தூக்குத் தண்டனை வேண்டாம் என்று தீர்ப்பளித்தவரும் இவரே.
தி ஏசியன் ஏஜ்’ பத்திரிகைக்கு கடந்த செப்டம்பர் 2, 2011 அன்று ஒரு பேட்டி கொடுத்திருந்தார்:
“ராஜீவ்கொலைவழக்கைவிசாரித்தஅமர்வில்தலைமைதாங்கும்கெட்டவாய்ப்புஎனக்குக்கிட்டியது..” என்று துவங்கி,