தமிழ் முதலாளிகளின் தாக்குதல்களும், தமிழர்களின் படுகொலைகளும்


சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் மீண்டும் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இப்படி ஒவ்வொரு முறையும் தொழிலாளர்கள் மன்னிக்கவும் கொத்தடிமைகள் கொல்லப்படுவது; நீண்டநாள் நோய்வாய்பட்டவர்களின் மரணம்போல் எதிர்பார்த்த ஒன்றாகத்தான் புரிந்து கொள்ளப்படுகிறது.

பலமுறை பட்டாசு பலிவாங்கிய உயிர்களில் ஒரு உயிர்கூட பட்டாசு அதிபர்களின் உயிரில்லை என்பதே இது விபத்தல்ல, கொலைதான் என்பதற்கு சாட்சி.

பச்சைத் தமிழர்களால் நடத்தப்படுகிற இந்த உள்ளுர் அணுஉலையான பட்டாசு, தீப்பெட்டி கம்பெனிகள், விருதுநகர் மாவட்டதையே சூறையாடி வருகிறது.

விருதுநகர் மாவட்ட தமிழர்களின் விவசாயம், கல்வி, அடிப்படையான வாழ்வாதாரம் எல்லாம் பறிக்கப்பட்டிருக்கிறது.

கூடங்குளம் அணுஉலை வந்தால் எப்படி அந்தப் பகுயில் இருக்கிற மீனவர்களின் தொழில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சீர்குலைந்துபோகுமோ, அதற்கு ஒரு மிக பிரம்மாண்டமான உதாரணமாக இருக்கிறது விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு, மற்றும் தீப்பெட்டி கந்தக தொழிற்சாலைகள்.

மற்ற எல்லா தொழில்களிலும்; குறைந்த சம்பளம். அதிகவேலை என்று வாழ்க்கைக்கு உத்திரவாதம் இல்லாமல்தான் வேலை செய்கிறார்கள். ஆனால், சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் மிக மிக அதிகமான வேலையும், மிக மிக குறைநத் சம்பளம் மட்டுமல்ல, உயிருக்கே உத்திரவாதம் இல்லை.

விற்பனையில், ‘நுகர்’வோரிடம் மிக அதிகமான பட்டாசு விலையால் கொள்ளையடிக்கிற நிறுவனங்கள். தன்னிடம் வேலை செய்கிறவர்களுக்கு மூன்று வேளை உணவுக்கு போதுமான அளவிற்குக் கூட சம்பளம் தருவதில்லை.

சிவகாசியில் வெடி மருந்திற்கு இருக்கிற மரியாதை, அங்கிருக்கிற மனித உயிர்களுக்குக் கிடையாது.

உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, தற்கொலைக்கு தயாராகிறவர்களைப்போல்,
உடல் முழுவதும் வெடிமருந்துகளால் பூசப்பட்டு, வேலை’ செய்கிறவர்கள்தான் சிவகாசி பட்டாசு ஆலை கொத்தடிமைகள்.

ஆயிரம் ஆண்டுகளாக வானம் பார்த்த பூமியாக சிறப்பாக விவசாயம் செய்த தமிழனின் விவசாயம், விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு கம்பெனி அதிபர்களால் தீர்த்துக்கட்டப்பட்டிருக்கிறது.

பட்டாசு தொழிற்சாலைகள் வந்ததற்குப் பிறகுதான் அந்தப் பகுயில் விவசாயம் முற்றிலுமாக சீர்குலைந்து போனது.

இன்று நாடெங்கும் ரியல் எஸ்டேட் பிசினஸ் கொடிகட்டி பறக்கிறது ஆனால், சிவகாசி சுற்று வட்டார கிராமங்களில் உள்ள நிலங்களுக்கு, எந்த விலையேற்றம் இல்லாமல் மதிப்பற்று கிடக்கிறது.

50 ஏக்கர் நிலம் வைத்திருக்கிற நிலக்கிழாரும், நிலமற்ற கூலி விவசாயியும் அங்கு ஒன்றுதான். இருவரின் குடும்பமுமே பட்டாசு கம்பெனி அடிமைகள்தான்.

அங்கிருக்கிற சிறிய அணைகளில் தண்ணீர் தேங்கமால் பார்த்துக் கொள்வது, ஏரி, குளங்களை பராமரிக்காமல் அவைகளை மேடுகளாக மாற்றி குடிநீருக்கும் பிரச்சினையாக்கி செயற்கை பஞ்சத்தை உருவாக்கியது,

இப்படி விவசாயத்தை சீர்குலைப்பதின் மூலமாக, விவசாயிகளை விவசாயத்திலிருந்து அப்புறப்படுத்தி, அவர்களை பட்டாசு தொழிற்சாலை நோக்கி விரட்டியடித்தது..

இப்படி பல ஆண்டுகளுக்கு முன் பட்டாசு அதிபர்களுக்கு ஆதரவாக விருதுநகர் மாவட்டத்தை வீணடித்த அரசு யாருடைய தலைமையிலான அரசு?

குழந்தைகளின் கல்வியை தடுத்து, குழந்தை தொழிலாளார் முறை உருவாவதற்கு காரணமாக இருந்த பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு அனுமதியும் அல்லது ஆசிர்வாதமும் கொடுத்த முதல்வர் யார்?

பட்டாசு அதிபர்களுக்கு ஆதரவாகவும், விருதுநகர் மாவட்ட விவசாய உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் ‘தொழில் நகரம்’ என்ற பெயரில் கொலை நகரமாக சிவகாசியை உருவாக்கிய அந்த புண்ணியவான் அல்லது புண்ணியவான்கள் யாரோ, அவர்களே இந்தக் கொலைகளை செய்த, செய்கிற கிரிமனல்கள்.

மண்ணையும் மக்களையும் கொன்று நடத்தப்படுகிற மனிதாபிமானம் அற்ற இந்த தொழிலை முற்றிலுமாக தடை செய்யவதுதான் இதற்கு ஒரே தீர்வு.

அணுஉலையை எதிர்த்து தீவிரமாக போராடுவதைப்போல், பட்டாசுக் கம்பெனிகளை முற்றிலுமாக ஒழித்துக் கட்டும் வரைபேராடுவதுதான் விருதுநகர் மாவட்ட உழைக்கும் மக்களுக்கும், மண்ணுக்கும் நாம் செய்கிற விடிவு.

மக்களை பட்டாசு நெருப்பிலிருந்தே காப்பாற்றாத இந்த அரசு, அணுஉலை ஆபத்திலிருந்து எப்படி காப்பாற்றும் என்று நாம் கேட்பது போலவே,

படுகொலைகள் செய்கிற பட்டாசு நிறுவனங்களுக்கு எதிராக போராடி அவைகளை நிறுத்த முடியாத நம்மால், ஆபத்து நிறைந்த அணுஉலையை மட்டும் எப்படி தடுத்து நிறுத்த முடியும் என்று சிவகாசி மக்கள் கேட்டால் நம்மிடம் என்ன பதிலிருக்கிறது?

**

பட்டாசு கம்பெனி முதலாளிகள் என்கிற வார்த்தைக்கு பதில், அதிபர்கள் என்கிற வார்த்தையை பயன்படித்திருக்கிறேன். இரண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம்…? இருந்தாலும்,

சம்பளம்கூட ஒழுங்காக தராத மட்டமான முதலாளிகளை பற்றி, மாமேதை காரல் மார்க்ஸ் சொல்வார், ‘இவர்கள் முதலாளிகளாக இருக்கக் கூட லாய்கற்றவர்கள்’ என்று.

அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, தமிழ் தொழிலாளிகளை கொன்று குவிக்கிற தமிழ் முதலாளிகளுக்கு நன்றாக பொருந்துகிறது.

தமிழ் தொழிலாளியை சுரண்டும்போது, தமிழ் முதலாளி எப்படி தமிழ் உணர்வை பார்ப்பதில்லையோ,

தொழிலாளிக்கு விரோதமான போக்கை கையாளும்போதும் ஜாதி உணர்வு கொண்ட எந்த முதலாளியும் ஜாதி பாசத்தையும் காட்டுவதில்லை.

*

செப்டம்பர் 9-2012 அன்று எழுதியது.

தொடர்புடையவை:

பிண ‘வாசத்தை’ மீறும் பூ நாற்றம்

ஜெயேந்திரனா? பங்காருவா? ஜாதியா? வர்க்கமா?

தமிழன்; வர்க்க உணர்வும் – ஜாதி உணர்வும் கலந்து செய்த கலவை

எல்லாவற்றையும் ஜாதிதான் தீர்மானிக்கின்றது?

10 thoughts on “தமிழ் முதலாளிகளின் தாக்குதல்களும், தமிழர்களின் படுகொலைகளும்

  1. Indisputable facts sir!!

    The only permanent solution to avoid such tragedy in future is to close the fireworks industry and make alternative permanent income for the poor people

    Rgds
    Gopalakrishnan.S

  2. விபத்து நடந்து உயிர் பலி வாங்கியபின் ,இழப்பீடு குடுத்தும் குழு அமைத்தும் என்ன பயன் ?இவை கண் துடிப்பே அன்றி நீண்டகால நலனில் அக்கறையற்ற தமிழக அரசின் மெத்தன போக்கையே காட்டுகிறது …தங்களின் கருத்தில் உள்ள உண்மை ஆழமாக சிந்திக்க வேண்டிய ஒன்று ….இது ஒன்றே நிரந்தர தீர்வு ..

  3. after a long day… you sought for peoples’ essentials & Human rights.
    Happy carry on .,

  4. நான் மரித்துப்போகிற வரை கூறுவேன்.இது முற்றிலும் சாதியாலான சமூக ஏற்பாடு.அறுபதுகளில் பெரும்பண்ணையார்களாக வாழ்ந்த நாயக்கர் இனமும் அன்றிலிருந்து இன்றுவரை அடிமைகளாக நீடிக்கும் பட்டியலினமும் ஒரே தட்டில் ஒரே அறையில் வெறும் அறுபது,எண்பது ரூபாய்கூலிக்கு தினம் தினம் மரணக் கிணறு இறங்குகிறார்கள்.ஆனால்,அவர்களை ஒரே வர்க்கம் என்று இணைக்க நடந்த,நடக்கிறமுயற்சியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சீய கம்யூனிஸ்ட், எம்.எல்,தொழிற்சங்கங்கள் மோசமாக தோற்றுப்போயிருக்கிறது. ஆனால் இப்போது சாதிச்சங்கங்களின் எழுச்சி அபரிமிதமாக வளர்கிறதுஇன்னும் பத்து வருடங்களில் தமிழ் மண்ணில் வாழ்க்கை நடத்துகிற 456 சாதிகளுக்கும் தனித்தனி குரு பூஜைகள் கண்டுபிடிக்கப்படும்.மாதம் ஒரு முறை காவல் தடுப்பு அரண்கள் உருவாக்கி.தடங்கள் இடம் மாறும் அபாயம் நெருங்கிவருகிறது. இது மார்க்ஸ் எதிர்நோக்காத ஒன்று.

  5. சிவகாசி,திருத்தங்கல்,விளாம்பட்டி,சித்துராஜபுரம் ஆகிய நான்கு ஊர்களில் சுமார் எட்டுவருடங்கள் பணியாற்றிய வங்கி அணுபவம் பெருவாரியான விதவைகளையும்,தீக்காயம் பட்டவர்களையும்,காசநோயாளிகளையும் நேர்காணநேர்ந்திருக்கிறது. எனவே பட்டாசுகளையும் கரிமருந்துவாசனையையும் நெருங்குகிற நேரமெல்லாம் ஒரு இனம் புரியாத கலக்கம் வந்துசேர்கிறது.நமக்கு எதிரி அதிபர்கள் அல்ல ஜாதீய தாதாக்கள்.

Leave a Reply

%d bloggers like this: