தமிழனின் ஆட்சியை சோனியா தலைமையில் அமைப்போம்!

Sonia-Gandhi

கேரளா, கர்நாடக, ஆந்திரா உட்பட எல்லா மாநிலங்களில் அந்த மண்ணின் மைந்தர்களே ஆளுகிறார்கள். தமிழ்நாட்டை பெருந்தலைவர் காமராஜர் ஒருவரை தவிர, வேறு தமிழன் ஆளவில்லை.

ஈ.வெ.ராமசாமி போன்றவர்களாலும், திராவிட இயக்கத்தின் பேரிலும், வேற்று மொழிக்காரனே ஆண்டு இருக்கிறான். வந்தேறிகளை விரட்டி அடித்துவிட்டு இனிவரும் தேர்தல்களில் தமிழக முதலமைச்சராக ஒரு தமிழனை தேர்தெடுக்க வேண்டும்.

-சேனாதிபதி, சென்னை.

இதுவரை இருந்த முதல்வர்கள் தமிழர்களா இல்லையா என்கிற விவாதத்தை ஒதுக்கி வைத்துவிட்டு; நீங்கள் சொல்வதை ‘உண்மை’ என்று ஒத்துக் கொண்டே பேசுவோம்.

மக்கள் விரோத; இதே நாடாளுமன்ற, சட்டமன்ற அரசியல் அமைப்புக்குள் மற்ற மாநிலங்களைப்போல் மண்ணின் மைந்தர்களே முதல்வராக வருவதுதான் உங்கள் லட்சியம் என்றால்,

அதுக்கு எதுக்கு பெரியார் எதிர்ப்பு, திராவிடர் எதிர்ப்பு, தமிழ்த் தேசியம் என்கிற ‘பில்டப்’.

காங்கிரஸ் என்ற புரட்சிகர கட்சிக்கு ஓட்டு போடுங்க ஜென்டில்மேன்; அது ப. சிதம்பரம், குமரி அனந்தன் போன்ற பச்சைத் தமிழர்களை உங்களுக்கு பரிசாகத் தரும்.

நீங்கள் சொல்கிற அண்டை மாநிலங்களில், காங்கிரஸ், பி.ஜே.பி போன்ற தேசிய கட்சிகள்தான் மண்ணின் மைந்தர்களை முதல்வராக்கி இருக்கிறது.

நம்ம பாண்டிச்சேரியில் கூட பச்சைத் தமிழர்களை காங்கிரஸ்தான் முதல்வராக்கி வருகிறது.

தமிழகத்தில்கூட தமழ்த் தேசியம் பேசிய பெரியாரை எதிர்த்துவிட்டு, இந்திய தேசியத்திற்காகவே வாழ்ந்த, தீவிர தமிழ்த் தேசியவாதிகள் கொண்டாடுகிற தேசியத் தலைவர் கமாராஜரை முதல்வராக்கியது காங்கிரஸ்தான்.

இப்போதுகூட அந்தக் கட்சி மட்டும்தான் மீண்டும் காமராஜ் ஆட்சியை கொண்டுவருவதாக அறிவித்திருக்கிறது.

சோனியா காந்தி தலைமையில் தமிழ்த் தேசியத்தை அணிவகுத்து, ஒரு பச்சைத் தமிழரை முதல்வராக கொண்டு வாருங்கள். வாழ்த்துகள்.

அன்னை சோனியாவின் ஆசிர்வாதங்கள் உங்களின் தமிழ்த் தேசிய கனவிற்கு முழுமையாக கிடைக்கிட்டும்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் நவம்பர் 2012 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

பாரதமாதா – தமிழ்த் தாய்: மூணாவது தெரு முக்குல குடியிருக்காங்க..

‘திராவிட இயக்கம் மாயை’ டாக்டர் ராமதாஸ் கருத்து சரிதான்… ஆனால்..

‘இன்னுமா நம்பள ஊருக்குள்ள நம்புறாய்ங்க?’-அது அவுங்க தலவிதி

‘புலிக்கு பயந்தவன் எம்மேல வந்து படுத்துக்க’ பாமகவின் 3 வது அணி முயற்சி

டாக்டர் அம்பேத்கரின் தமிழ் உணர்வும்; முற்போக்காளர்கள், அறிஞர்கள், தமிழனவாதிகளின் ஜாதி உணர்வும்

தமிழ்த்தேசியம்+இந்திய தேசியம்=பெரியார் எதிர்ப்பு

‘ஜாதி உணர்வை தன் ஜாதிக்காரனிடமும், தமிழ் உணர்வை அடுத்த ஜாதிக்காரனிடமும் ஊட்டு’; இதுக்குப்பேர்தான் திராவிட எதிர்ப்பு

‘பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்க போல

பெண்களும் திருமணமும்: ஜாதி வர்க்கம் பெரியார்

சினிமாவிற்கு பாட்டுத் தேவையில்லை; தங்கர் பச்சான் சரியாதான் சொன்னாரு

Clipart Image Of Cartoon Music Note

தங்கர் பச்சான் சினிமாவிற்கு பாட்டுத் தேவையில்லாத ஒன்று சொல்லியிருக்கிறாரே?

-எழிலரசன், பாண்டிச்சேரி.

தமிழ் சினிமா உருவாகி 81 ஆண்டுகள் ஆகிவிட்டன. இவ்வளவு ஆண்டுகளில் சினிமா தமிழர்களிடம் எதை உருப்படியாக பதிய வைத்திருக்கிறது என்று பார்த்தால், இசையை (பாடல்கள்) தவிர வேறு ஒன்றுமில்லை.

தங்கர் பச்சான் போன்ற பல இயக்குநர்கள் எடுத்த படங்களை, நினைவில் வைத்துக்கொள்வதற்கே அந்தப் படங்களின் இசையமைப்பாளர்கள்தான் காரணமாக இருக்கிறார்கள்.

‘அழகி’ படத்தை இசைஞானியின் இசை இல்லாமல், இரண்டு ரீல் கூட பார்க்க முடியாது.

ஆனாலும், தங்கர் பச்சானின் இந்தக் கருத்தோடு ஓரளவுக்கு நான் ஒத்துப் போகிறேன்.

இளையராஜாவின் பாடல்களைக் கேட்கும்போது நமக்குள் பல உன்னதமான காட்சிகள் உருவாகிறது. தங்கர் பச்சான் போன்ற இயக்குநர் அதை படமாக்கும்போது ‘அய்யோ’ என்னடா இது..?’ என்று நொந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

அதனால் படத்தில் பாடல் காட்சிகளை வைக்காமல், ஆடியோ ரீலிஸ் மட்டும் செய்தால் கூட போதும். பாடல்களை காலத்திற்கும் கேட்கிற ரசிகர்கள் அந்த காட்சிகளை கற்பனை செய்து கொள்ள முடியும்.

குத்துப் பாட்டு, குலுக்காட்டம் எல்லாம் வைச்சிதான் பாடல்களை காட்சி படுத்துகிறார் தங்கர்.

தங்கர் பச்சான் எதை கண்டிக்கிறோரோ, அதையே அவர் தீவிரமாக செய்வார். அதனால் அவர் கருத்தை அவரே மறுக்கும்போது, மதிக்காதபோது நாம் ஏன் அதை பொருட்படுத்த வேண்டும்.

*

அம்மாவின் கைப்பேசி வெளியாவதற்கு முன் எழுதியது.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் நவம்பர் 2012 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

டி.எம்.சவுந்தரராஜனுக்கு பாடத் தெரியாது: இளையராஜா அப்படியா சொன்னார்?

எம்.ஜி.ஆர், சிவாஜி; டி.எம்.எஸ் குரலில் வித்தியாசம் காட்டியது உண்மையா?

பெண்களும் திருமணமும்: ஜாதி வர்க்கம் பெரியார்

18-03-2012 அன்று சென்னை விருகம்பாக்கத்தில் தோழர் சஹானாஸ் – தோழர் விக்னேஷ்வரன் இருவருக்கும் நடந்த புரட்சிகர மணவிழாவில் நான் பேசியது.

 இணையத்தில் ஒளிபரப்புதவற்கு ஏற்றவகையில் இதை மாற்றி தந்த அன்பிற்கினிய தம்பி க. ஸ்ரீதருக்கு நன்றி.

தொடர்புடையவை:

பணமா? பாசமா?

வைகுண்ட பதவியை அடைய பெரியார் பாணி்;ஜுனியர் விகடன் அழைக்கிறது

Vaikunda Ekadasi

ந்தை பெரியார் திராவிடர் கழகம், பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 ஆம் தேதி சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் கருவறை நுழைவுப் போராட்டதை அறிவத்துள்ளது.

‘இந்து மக்கள் கட்சி’ என்ற ஒன்று, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘கோயில் கருவறையில் நுழையும் நீ உன் தாயின் கருவறையில் நுழைவாயா?’       ‘கருவறைக்குள் நுழைந்தால் கல்லறைக்குள் செல்வாய்’ என்று ‘பஞ்ச்’ டயலாக்கோடு சென்னை நகரமெங்கும் சுவரொட்டி ஒட்டி உள்ளது.

தினமும் கோயில் கருவறைக்குள் பலமுறை சென்று வருகிறார்களே அர்ச்சகர்கள், குருக்கள், பட்டாச்சாரிகள், தீட்சிதர்கள் அவர்கள் எல்லாம் தங்கள் தாயின் கருவறைக்குள் சென்று வருகிறார்கள் என்று அர்த்தமாகாதா?

இப்படி அர்ச்சகர்கள், குருக்கள், பட்டாச்சாரியார்கள், தீட்சிதர்களை இந்து மக்கள் கட்சி அவமானப்படுத்தலாமா?

அது மட்டுமல்ல, ‘கருவறைக்குள் நுழைந்தால் கல்லறைக்குள் செல்வாய்’ என்பது அர்ச்சகர்கள், குருக்கள், பட்டாச்சாரிகள், தீட்சிதர்களை கொலைகாரர்கள் போல் சித்தரிப்பது முறையா?

பெரியார் தொண்டர்களை கேவலப்படுத்த நினைத்து ஆத்திரத்தில், இப்படி அறிவிழக்கலாமா? அதனால்தான் பெரியார் ‘கடவுளை மற; மனிதனை நினை’ என்றார்.

*

இன்று (22-12-2012) காலை தோழர் ஆறுமுகம் (பி.எஸ்.என்.எல்) தொலைபேசியில் அழைத்தார். பெரியா் நினைவு நாளன்று வைத்திருக்கும் தன் மகளின் திருமணத்திற்கு மறந்துவிடாமல் வரவேண்டும் என்று நினைவூட்டினார். முன்பே நேரிலும் தன் துணைவியாரோடு வந்து அழைத்திருந்தார்; இருந்தாலும் அவருக்கு ஒரு சந்தேகம்; நான் வாரமல் போய்விடுவேனோ என்று.

அப்போது அவர்தான் சொன்னார், ‘ஜுனியர் விகடனில் கருவறை நுழைவுப் போரட்டத்தைப் பற்றி செய்தி வந்திருக்கிறது. அதில் பெரியார் பற்றி  ஏடாகூடமான ஒரு குறிப்பும் வந்திருக்கிறது. அதை பாருங்கள்.’  என்று அந்தப் பக்கங்களை ஸ்கேன் செய்து அனுப்பியும் வைத்தார்.

கோயில் கருவறை நுழைவுப் போராட்டதைப் பற்றிய செய்தி வெளிட்ட ஜுனியர் விகடன், ‘கபாலீ்ஸ்வரர் கோயில் கலாட்டா!’ என்று தலைப்பிட்டு,  அதற்குள் பெட்டி செய்தியாக ஒரு குட்டி செய்தியை வெளியிட்டிருக்கிறது:

பெரியாரும் வைகுண்ட ஏகாதசியும்!

மூடநம்பிக்கை ஒழிப்பு, சுயமரியாதை, சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, கடவுள் மறுப்பு என்று தனது வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவிட்ட பெரியார் 1973-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி காலமானார். அன்று வைகுண்ட ஏகாதசி. அதற்குப் பிறகு 39 ஆண்டுகள் கழித்து, இந்த ஆண்டுதான் பெரியார் நினைவு நாளும் வைகுண்ட ஏகாதசியும் ஓரே நாளில் வருகிறதாம்.’

இப்படி ஒரு கண்டுபிடிப்பின் மூலம் தன் வாசகர்களுக்கு என்ன சொல்லவருகிறது என்பதையும் ஜுனியர் விகடன் தெளிவாக சொல்லியிருந்தால், நாம் அதைப் பற்றி விளக்கி எழுத வேண்டிய தேவை எழுந்திருக்காது.

அநேகமாக தன் வாசகர்களுக்கு குறிப்பாக வைணவ வாசகர்களுக்கு, ‘நீங்கள் வைகுண்ட பதவியை அடைய வேண்டுமானால், இனி பெருமாளை வணங்குவது, திருப்பதிக்கு வேண்டிக்கொண்டு அடிக்கடி செல்வது, விரதம் இருப்பது; குறிப்பாக வைகுண்ட ஏகாதசி அன்று கண்முழித்து விரதம் இருப்பது இதெல்லாம் தேவையில்லை.

பெரியார் வழியில் கடவுளை எதிர்த்து திவீரமாக பிரச்சாரம் செய்யுங்கள். குறிப்பாக ராமன் படத்தை செருப்பால் அடியுங்கள். நீங்கள் வைகுண்ட பதவிக்கு செல்லலாம்.

வாருங்கள் வைணவர்களே, பக்தர்களே; பெரியார் போல் ராமன் படத்தைச் செருப்பால் அடித்து, வைகுண்ட பதவியை அடைவோம்.

என்று அறிவிப்பதாக இருக்கிறது ஜுனியர் விகடனின் ‘அரிய’ பெரியார் பற்றிய புதிய தகவல்.

தொடர்புடையவை:

இலக்கியத்தில், அரசியலில் உடன் பிறந்த வியாதிகள்

கம்பராமாயணத்தில் அறிவியல்!

பெண்களுக்கான இடஒதுக்கீடு: தெய்வக் குத்தம்

வாகன விபத்து-நெரிசல்: அரசுப் பள்ளி மாணவர்களா audi car மாணவர்களா?

audi Car

‘பெண்கள் இருக்கைகளை மாற்றுங்கள்; மாணவர்கள் உயிரை காப்பாற்றுங்கள்’ என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையில் ‘அரசு பள்ளிகளுக்கு  மட்டுமே என்ற முறையில் காலை, மாலை நேரங்களில் இலவச பஸ்களை அரசு இயக்க வேண்டும். என்று எழுயிருந்தேன். அதை குறிப்பிட்டு பல தோழர்கள், ‘ஏற்கனவே அதிகமான வாகன நெரிசலில் சென்னை தவிக்கும்போது, இதுவும் அதிக நெரிசலை ஏற்படுத்தாதா?’ என்று மெயில் அனுப்பி இருக்கிறார்கள்.

உண்மையில் சாலைகளில் அதிக வாகன நெரிசலை ஏற்படுத்துவது கார்கள்தான். குறிப்பாக காலை வேளைகளில் உயர் நடுத்தர வர்க்கம் மற்றும் செல்வந்தர்கள், தங்கள் குழந்தைகளை கான்வென்ட்டுக்கு காரில்தான் அழைத்துச் செல்கிறார்கள்.

ஒரு கான்வென்ட்டில், 500 குழந்தைகள் படிக்கிறார்கள் என்றால், அநேகமாக 300 குழந்தைகள் தனி தனி கார்களில்தான் பள்ளிக்கு வருகிறார்கள். இப்படி ஒரு பள்ளியிலேயே, ஒரு குழந்தைக்கு ஒரு கார் என்ற விதத்தில் வருவதும்; இதுபோன்றே எல்லா கான்வென்ட்டுகளிலும் நடப்பதினாலேயே சாலை நெரிசல் ஏற்படுகிறது.

பொருளாதார வேறுபாடுகள் குழந்தைகளிடம் தெரியக்கூடாது என்பதற்காக பள்ளியில் எப்படி சீருடை கட்டாயமாக்கப்பட்டிருக்கிறதோ; அதுபோலவே பள்ளிக்கு வரும் குழுந்தைகள் பள்ளி வாகனத்தைதான் பயன்படுத்த வேண்டும். கார் போன்ற வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என்று பள்ளிக்களுக்கு அரசு உத்தரவு இடவேண்டும்.

இந்த முறையால், ‘பள்ளி வாகனத்தில் வரும் குழந்தைகளைவிட காரில் வரும் குழந்தைகள் உயர்ந்தவர்கள்’ என்ற ஏற்றத் தாழ்வு ஏற்படுத்தும் எண்ணத்தை குழந்தைகளிடம் நீக்கும். சாலை நெரிசலையும் போக்கும்.

பொதுவாகவே, சென்னையின் சாலையை சுமார் 80 சதவீதம் இடத்தை கார்களும், மோட்டர் பைக்குகளுமே ஆக்கிரமிக்கின்ற.

ஆனால், மொத்த பயணிகளில் சுமார் 25 சதவீதத்தினர் மட்டுமே கார்களிலும் மோட்டர் பைக்குகளிலும் பயணிக்கின்றனர். மீதமுள்ள 75 சதவீத மக்களின் பயணம் பஸ், சைக்கிள், நடைபயணத்தின் வழியாகத்தான் நடக்கிறது.

ஒரு பஸ்சின் இடத்தை 3 கார்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. ஒரு பஸ்சில் 70 பேர் செல்லும் நிலையில், 3 கார்களில் சராசரியாக 6 பேர்தான் செல்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

கார் கம்பெனிகள் இந்தியாவில் நிறைய துவங்கப்பட்டிருக்கினறன. வெளிநாட்டுக் கார்கள், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு வந்துவிட்டன. வெளிநாட்டுக்கார்கள் இந்தியாவிற்கு விற்பனைக்கு சகஜமாக அனுமதிக்கப்பட்டபிறகுதான், இந்திய சாலைகள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டன. ஏனென்றால் பல லட்சங்கள், கோடி ரூபாய்க்கு மேல் விலையுள்ள கார்கள்; சாலைகள் சீராக இருந்தால்தான் ஓடும். இல்லயேல் விரைவில் பழுதாகி விடும்.

வெளிநாட்டுக் கார்களுக்காக. அதன் கம்பெனிகளுக்காக போடப்பட்டதுதான் இந்திய தங்க நாற்கர சாலைகள். கார்களின் விற்பனை உயர்வதற்கும் கார்களுக்காகவுமே நகரங்களில் மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன.

குறைந்த முன்பணத்தில் மாத தவணை முறையில் கார் வாங்குவது மிக எளிமையாக்கப்பட்டிருக்கிறது. ஒரு லட்ச ரூபாய்க்கும் கூட கார்கள் கிடைக்கின்றன. கார், வசதி என்பதையும் தாண்டி ‘நாங்க கார் வைச்சிக்கோம்’ என்கிற அந்தஸ்தின் அடையாளமாகவும் நடுத்தர மக்கள் மத்தியில் ஒரு எண்ணம் கார் கம்பெனிகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதனால்தான் தினம் தினம் பல நூறு புது புது கார்கள் சாலைகளில் வந்து கொண்டே இருக்கிறது. அதிக அளவில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

கார் விற்பனையை ஒழுங்குபடுத்துவதும் ஒரே குடும்பத்தினர் பல கார்களை வாங்குவதை கட்டுப்படுத்துவதினால்தான் வாகன நெரிசலை குறைக்க முடியும்.

அதுபோலவே, நிறையபேர் பயணிக்கிற பொது போக்குவரத்தை அதிகப்படுத்துவதும், சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களை முறையாக ஒட்டுவதும் வாகன நெரிசலை மட்டுமல்ல, விபத்துக்களையும் தவிர்க்கும்.

வாகன ஓட்டிகளிடமும், பொறுப்பற்று ஒட்டும் முறையை பரவலாக பார்க்க முடிகிறது.

‘தான் மட்டும் எப்படியாவது முன்னேறி விடவேண்டும். அதனால் அடுத்தவன் வாழ்க்கை கெட்டாலும் பரவாயில்லை’ என்கிற வாழ்க்கை பாணியை போலவே, வண்டி ஓட்டுவதிலும் பலர் நடந்து கொள்கிறார்கள்.

முறையற்ற முறையில் அடுத்த வாகனத்தை முன்னேறி, அவர்களை விபத்துக்குள்ளாக்கிவிட்டு திரும்பிகூட பார்க்காமல் போகிற பழக்கம், பரவலாகி வருகிறது. இதுபோன்ற அநாகரிகமான முறையில் வண்டி ஓட்டுபவர்களும் வாகன நெரிசலுக்கு காரணமாகிறார்கள்.

ஆக, அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு அந்த அந்தப் பள்ளிகளுக்கென்றே தனியான பஸ்களை இயக்க வேண்டும். குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள்வரையாவது அதை அமல்படுத்த வேண்டும்.

முதுகில் புத்தக மூட்டையை சுமந்து கொண்டு தங்களை தாண்டி சென்று நிற்கிற பஸ்சை ஓடிபோய் ஏற முயற்சிப்பதும், ஏறி கொண்டிருக்கும் பேதே பஸ் புறப்படுவதும் அதனால், அந்தக் குழந்தைகள் தடுமாறுவதை பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது.

தங்கள் உயிரை பணயம் வைத்து குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். இது முறையா?

இதெற்கு சரியான தீர்வு. தமிழகம் முழுவதிலும் இருக்கிற அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் எட்டாம் வகுப்புவரையாவது அந்த அந்தப் பள்ளிகளுக்கென்றே தனி தனியான அரசு போக்குவரத்துகளை இலவசமாக இயக்க வேண்டும்.

தொடர்புடையது:

பெண்கள் இருக்கைகளை மாற்றுங்கள்; மாணவர்கள் உயிரை காப்பாற்றுங்கள்

நடிகர் சிவகுமார் பெரியார் தொண்டன் காலில் விழ வேண்டாம்

sivakumar

‘வயித்தில வந்த கட்டி கேன்சரா இல்லையா என்று பரிசோதனை செய்து கொள்ளும்போது எப்படிபட்ட நாத்திகனும், அது கேன்சர் கட்டியா இருக்கக் கூடாது என்று கடவுளை கும்பிடுவான். அப்படிப் பட்டவர்கள் இல்லை என்றால் என்னிடம் அழைத்து வாருங்கள் நான் அவர்கள் காலில் விழுகிறேன்’ என்று நடிகர் சிவகுமார் சவாலாக சொல்லியிருக்கிறாரே?

-ச. ராமச்சந்திரன், உடுமலை.

அப்போ கடவுள கும்பிடுகிறவர்கள் எல்லாம் வயித்தில கேன்சர் கட்டி பரிசோதனை செஞ்சிக்கிட்டவங்களா?

கடவுள் மறுப்புக் கருத்தை வரட்டுத் தனமாக புரிந்து கொள்வதினால் வருகிற குழப்பம் இது.

தந்தை பெரியாருக்கு நாக்கில் புற்றுநோய் வந்தது, ‘அவர் கடவுளை திட்டியதால்தான் வந்தது’ என்று சிவகுமார் போன்ற சிந்தனை உள்ளவர்கள் அப்போது பற்ற வைத்தார்கள்.

பெரியார் அதன் பிறகுதான் மிகக் கடுமையாக கடவுள் மறுப்புக் கருத்தை பேசினார். புற்றுநோயையும் வெற்றிக் கண்டார்.

பெரியாரை போல், பல தோழர்கள் அதே வீரியத்தோடு இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்களை என்னால் காட்ட முடியும்.

அவர்கள் காலில் எல்லாம் சிவகுமார் விழ வேண்டியதில்லை. ஏனென்றால் காலில் விழுவதை பெரியார் தொண்டர்கள், கடவுளை வழிபடுவதை விடவும் இழிவாக கருதுவார்கள்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் நவம்பர் 2012 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்பில்லாதது:

பெண்கள் இருக்கைகளை மாற்றுங்கள்; மாணவர்கள் உயிரை காப்பாற்றுங்கள்

‘வீடு’; இளையராஜா-ஜெயகாந்தன் – ‘பெரியார் என்கிற பேய்’

vedu

‘வீடு’ இந்தப் படத்தை அது வெளியான போது பார்த்தது. நானும் என் பள்ளித் தோழன் இளங்கோவும் சென்னை பிராட்வே தியேட்டரில் பார்த்ததோம். மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா, பாலசந்தர் இவர்கள் படங்களை விரும்பி பார்ப்போம். படம் பார்த்ததிலிருந்து அடுத்தப் படம் பார்க்கும் வரை அதையே  பேசிக் கொண்டிருப்போம்.

தீவிரமான ரஜினி ரசிகனாக இருந்த நான், மாறிக் கொண்டிருந்த காலங்கள் அது.

‘மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்’ என்று எங்கெல்ஸ் குறிப்பிட்டதைப் போல்;

‘ரஜினி ரசிகன் பகுத்தறிவாளனாக மாறிய இடைநிலைப் படியில் வாசிப்பு மற்றும் ரசனையின் பாத்திரம்’ என்று என் மாற்றத்தை குறிப்பிடலாம்.

இந்த சினிமா ரசனையோடு ராஜேஷ்குமார், இளந்தேவன், மு. மேத்தா, பாலகுமாரன், வைரமுத்து என்று அது ஒரு பக்கம் போய் கொண்டிருந்தது.

விறுவிறுப்பான மர்ம கதைகள் படிப்பதில் ஆர்வம் அதிகமாக இருந்த காலம் அது. பத்திரிகைகள், பாக்கெட் நாவல் என்று எங்கு திரும்பினாலும் ராஜேஷ்குமார்.

ராஜேஷ்குமார் கதைகளை படித்துவிட்டு, அவரை புகழ்ந்து ஒரு கடிதம் எழுதினேன். ‘நெ.1 லைட் ஹவுஸ் தெரு, கோவை’ என்ற முகவரிக்கு..

பதிலுக்கு அவர் ஒரு நடிகரைப் போல் அவரின் படத்தின் மீது கையெழுத்து போட்டு அனுப்பி வைத்தார்.

இளந்தேவனின் கவிதைகளை, அவர் கவியரங்கில் வாசிக்கும் பாணியில் வாயை அகட்டி, குவித்து வார்த்தைகளை அவர் லாவகமாக உச்சரிக்கிற விதத்தில் நானும் வாசித்து மகிழ்வேன்.

‘கோலப் பொடியில் வைத்தப் புள்ளி ஒரு கோடி இருக்குமென வானில் அந்தக் கோலப்  பொடியை வைத்தக் கோதை கோள நிலவு மகள் தானோ?’ இதுபோன்ற அவருடைய கவிதைகள் எனக்கு மனப்பாடம்.

‘மு.மேத்தாவின் கவிதை தொகுப்புகள் இல்லாத கைகளையே பார்க்க முடியாது’ என்கிற காலம் அது. அவரின் ‘கண்ணீர் பூக்கள், வெளிச்சம் வெளியே இல்லை’ என்னை அதிகம் கவர்ந்த நூல்கள்.

புத்தகம் படிக்கும் பழக்கம் என் தந்தையின் மூலமாகவே எனக்கு வாய்த்தது. அவர் நூலகத்திலிருந்து கொண்டு வருகிற நூல்களை நானும் படித்தேன்.

அப்படித்தான் கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’ நாவலை எங்கள் குடும்பமே, நூலகத்திலிருந்து வந்த ஒரே புத்தகத்தை மாற்றி மாற்றி படிப்போம். காஞ்சிபுரத்திற்கு நான் முதல் முதலாக சென்றபோது, ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் முன் நின்று, இந்த இடத்தில்தானே நரசிம்ம பல்லவன் நின்றான், இந்தத் தெருக்களில்தானே அவன் சுற்றித் திரிந்தான் என்ற உணர்வுகள் அலை அலையாக எழும்ப காஞ்சிபுரத்தை சுற்றி வந்தேன்.

கல்கிக்குப் பிறகு மற்றவர்கள் எழுதிய சரித்திர நாவல்கள்  என்னை கவரவில்லை. அதில் அரு. இராமநாதன் எழுதிய ‘வீரபாண்டியன் மனைவி’ யை மட்டும் விரும்பி படித்திருக்கிறேன்.

நண்பன் இளங்கோ சுஜாதாவை விரும்பி படிப்பான். எனக்கென்னவோ சுஜாதா எழுத்துக்களில் ஆர்வம் ஏற்படவில்லை.

லா.சா.ரா, தி.ஜானகிராமன் கதைகளை படித்தபோதெல்லாம் இவர்கள் என்ன நம்ம தலைவர் பாலகுமாரன் மாதிரி எழுதுறாங்க.. என்று தோன்றியது.

பாலகுமாரனை அப்படி தேடி தேடி படித்தேன். அநேகமாக அவருடைய எல்லா நாவல்களையும் படித்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

பாரதியார் என்றால் எனக்கு நிரம்ப பிடிக்கும். காரணம் வாசிப்பல்ல. மற்றவர்கள் அவரை புகழ்ந்து பேசுவதை எழுதுவதை படித்ததினால்.

பாரதியார் பற்றிய வைரமுத்தின் ஒரு கவிராஜன் கதையை படித்து விட்டு பார்ப்பவர்களிடமெல்லாம் அதைப் பற்றியே புல்லரித்து புலம்பிக் கிடந்திருக்கிறேன்.

‘எட்டயபுரத்தில் மட்டும் எப்படி ஒரு பெண்ணுக்கு நெருப்பை சுமந்த கருபை்பை’  என்ற வரியை வைரமுத்துவை விட நான் அதிகம் பேரிடம் சொல்லியிருப்பேன்.

வைரமுத்துவிற்கும் ஒரு கடிதம் எழுதினேன். அவர் ‘நிறைய படியுங்கள்’ என்பதோடு வாழ்த்துச் சொல்லியும் பதில் எழுதினார்.

வாசிப்பில் ஏற்பட்ட இந்த ஈடுபாடு, என்னை ரஜினியிடம் இருந்து விலக்கி கமல் படங்களின் மீது ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியது.

நக்கீரனில் பிரபஞ்சன் எழுதி வந்த சினிமா பற்றிய தொடர், குறிப்பாக பாலசந்தர் படங்களில் பெண்ணியத்திற்கு எதிரான கண்ணோட்டம் குறித்த கடுமையான விமர்சனங்கள், பாலசந்தர் பற்றிய என்னுடைய மதிப்பீட்டை மறு பரிசீலனை செய்ய வைத்தன.

ஜெயகாந்தனை படிக்க ஆரம்பித்த பிறகே இலக்கியம், சினிமா பற்றிய என்னுடைய ரசனை, பார்வை மாற ஆரம்பித்தது. அவருடைய சிறுகதைகள், நாவல்களை தேடித் தேடி படித்தேன்.

அவருடைய கட்டுரைகள், அதே பாணியில் அமைந்த அவர் நாவல்களுக்கு அவர் எழுதிய முன்னுரைகள் என்னை மிகப் பெரிய அளவில் ஈர்த்தன. ‘தன் வரலாறு’ பாணியில் எழுதிய, ‘ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ அவரை பெரிய கதாநாயகனாவே பார்க்க வைத்தது.

எங்கே போனாலும் நண்பர்களிடம் அவரைப் பற்றி பேசுவதும், ‘அவர் இப்படி பேசினார். அப்படி சொன்னார்’ என்று அவரின் இலக்கியஉலக சாகசங்களையும் சிலாகித்து பேசிக் கொண்டிருப்போம்.

உழைக்கும் மக்களின் மொழியான சென்னை தமிழை அவர் அளவுக்கு சிறப்பாக எழுதியவர்கள் இல்லை. சென்னை தமிழை மரியாதைக்குரிய வழக்காக பார்த்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன்.

அது மட்டுமல்ல, எனக்கு தெரிந்து தமிழ் இலக்கிய உலகில் சென்னை வாழ் எளிய மக்களை, கை வண்டி இழுப்பவர், சாலையோர கடைகளில் சோறு விற்கும் பெண், தொழுநோயாளி, பிச்சைக்காரர்கள் இவர்களை முதன்மை படுத்தி அவர்களை சிறப்பானவர்களாக சிறுகதை எழுதியவர்களில் ஜெயகாந்தனே முதன்மையானவர். முக்கியமானவர்.

அவரின் அந்த சிறுகதைகளின் தாக்கத்தாலே நான் அந்த மக்களின் வாழ்க்கை குறித்த மரியாதை கொண்டேன்.

பின்னாட்களில் மேடை ஏறி அவரிடமே சண்டை போடுவேன் என்று நான் நினைத்தில்லை. அதற்கும் அவரும் அவரின் எழுத்துமே காரணம்.

*

‘பெரியார் என்கிற பேய்’ என்னுள் புகுந்த பிறகே இனம், மொழி, இலக்கியம், சினிமா எல்லாவற்றையும் அரசியல் கண்ணோட்டமும் எதையும் விமர்சனப் பார்வையோடும் பார்த்தேன். அதுவரை கடவுள்கள் போல் என்னுள் இருந்த கலை, இலக்கிய புனிதர்கள்; ‘பெரியார் எனும் பேயை’ பார்த்த உடன் ஓடி போய் விட்டார்கள். என் மனம் கவர்ந்த ஜெயகாந்தனுக்கு எதிராக நான் செயல்பட்டதற்கும் ‘பெரியா் என்கிற பேயே’ காரணம்.

ஆனால், நான் ரஜினி ரசிகனாக இருந்த காலத்திலிருந்து இப்போது வரை தொடர்ந்து என்னுடன் பயணிப்பது இசைஞானி இளையராஜாவின் இசை மட்டும்தான்.

அப்போது அவர் இசை எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை விட, இப்போது பல மடங்கு உயர்ந்திருக்கிறது. நான் ரஜினி ரசிகனாக இருக்கும்போது கேட்ட, அதே பாடல்கள்; இப்போது கேட்கும்போது இன்னும் கூடுதல் உன்னதமாக இருக்கிறது. அது இப்போதும் என்னைத் தாண்டி எங்கோ உயரத்திலிருக்கிறது. அதை எப்போது நான் எட்டி முழுமையாக அனுபவிக்க முடியுமோ தெரியவில்லை.

*

பாலுமகேந்திராவின் ‘வீடு’ படத்தை இப்போது பார்த்தால் எப்படி இருக்குமோ?

படத்தில் ராஜாவின் ‘How to name it?’ ஆல்பத்தில் உள்ள இசையை பயன்படுத்தியிருந்தார் பாலுமகேந்திரா.

அதை தவிர்த்திருக்கலாம். இந்தப் படத்திற்காகவே இசையை தனியாக உருவாக்கியிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. இந்த எண்ணம் ‘படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்’ என்ற கருத்தால் அல்ல. ‘How to name it?’ கொடுத்த கற்பனைகள் எல்லையற்று இருந்திருக்கும் என்பதினால்.

இளையராஜாவின் அனுமதியோடு பாலுமகேந்திராவே, காட்சிகளுக்கு ஏற்றார்போல் ‘How to name it?’ ஆல்பத்தைப் பயன்படுத்திக்கொண்டார் என்று நினைக்கிறேன்.

How to name it?’ போன்ற உலகத் தரமான இசை ஆல்பங்களை கேட்கிற ஒவ்வொருவருக்கும் தனி தனியான காட்சிகளை, உணர்வுகளை, அனுபவங்களை உருவாக்கும். அந்த உணர்வுகள் எல்லையற்று விரியும்.

ஆனால், பாலுமகேந்திரா ‘How to name it?’ இசையின் உணர்வை, காட்சியை ‘இப்படித்தான்’ என்று நிர்ணயித்துவிட்டார். அதன் காரணத்தினாலேயே அந்தப் படத்தை நான் திரும்ப பார்க்கவே இல்லை.

அதன் பிறகு எஸ்.வி. சேகர் போன்ற கொடுமைக்காரர்கள், ‘How to name it?’ ஆல்பத்தை தங்கள் நாடகத்திற்கெல்லாம் பயன்படுத்தி அதைப் பாடாய் படுத்தி துன்புறுத்தினார்கள்.

பாலுமகேந்திராவின் ‘வீடு’- இளையராஜாவின் ‘How to name it?’ இசை உன்னதத்தின் மீது நடத்திய தாக்குதலாகவே எனக்குப் படுகிறது.

இருந்தாலும் ‘பெரியார் சுயமரியாதை ஊடக துறை’ யின் இந்த முயற்சி பாராட்டுக்குரியதுதான்.

ஏனென்றால், பெரியா் இயக்கத்திடம் கலை இலக்கியம் குறித்து குறிப்பாக சினிமா பற்றிய கறாரான விமர்சன கண்ணோட்டம் அநேகமாக இல்லை என்றேகூடே சொல்லலாம்.

அந்த வகையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் அதை உருவாக்கும். அதனால் இதை நடத்துகிற தோழர்களுக்கு வாழ்த்துகளை சொல்வோம்.

தொடர்புடையவை:

பாரதி + ஜீவா = ஜெயகாந்தன்

ஜெயகாந்தனுக்குப் பொருத்தமான விருது ‘பத்ம பூஷன்’ மட்டுமல்ல ‘விபிஷணன்’ விருதும்தான்

16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்

பெரியார் திரைப்படமும் இளையராஜாவும்

பார்ப்பன எதிர்ப்பா?இளையராஜா மீதான வெறுப்பா?

இளையராஜா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

டி.எம்.சவுந்தரராஜனுக்கு பாடத் தெரியாது: இளையராஜா அப்படியா சொன்னார்?

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

இயக்குநர் மகேந்திரனின் கதாநாயகிகள் மற்றும் அவர் படங்களை திரும்ப எடுத்த மணிரத்தினம், வசந்த்

பெண்கள் இருக்கைகளை மாற்றுங்கள்; மாணவர்கள் உயிரை காப்பாற்றுங்கள்

bus

டந்த திங்கள்கிழமை சென்னை பெருங்குடி அருகே நேரிட்ட விபத்தில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். இந்தத் துயரமான சம்பவத்தின் அதிர்ச்சிக் காரணமாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாகவே முன் வந்து வழக்கு தொடர்ந்தது.

இது போன்ற உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்பது பற்றி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நேற்று (12-12-12) தமிழக அரசின் விளக்கத்திற்கு பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்:

பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் குறித்து அவர்களின் பெற்றோர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸார் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர். இந்த நடவடிக்கை மட்டும் போதாது.

தொடர்ந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி அல்லது கல்லூரியின் முதல்வருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அத்தகைய மாணவர்களின் பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்பிய பின்னர், அந்த மாணவர்களை கல்வி நிலையங்களிலிருந்து நீக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என அரசுக்கு பரிந்துரை செய்கிறோம் என்று உத்தரவிட்டுள்ளனர்.

இது உத்தரவு என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

சீயோன் பள்ளி வாகனத்திலிருந்த ஓட்டையின் வழியாக ஒரு குழந்தை விழுந்து இறந்போது, நீதி மன்றம் தானாகவே முன்வந்து பல  முக்கியமான உத்தரவுகளையும்  ஆலோசனைகளையும் தந்தது.

ஆனால், பெருங்குடி சம்பவத்தில், அரசும் நீதி மன்றமும் மாணவர்களையே குற்றவாளிகளாகக் காட்டியிருக்கின்றன.

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்தான் அதிகமான அளவில் அரசு பஸ்களில் பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். மிகப் பெறும்பாலும் நடுத்தர வர்க்கம் அதற்கு கீழ் உள்ளவர்களின் குழந்தைகள். குறி்ப்பாக தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள்.

ஒவ்வொரு பள்ளியிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மாணவ, மாணவிகள் இருக்கிறார்கள். இவர்களின் வீட்டிற்கு அருகே பள்ளிகள் இல்லாததால், 5 கிலோ மீட்டரிலிருந்து 15 கிலோ மீட்டர் வரை பயணம் செய்து பள்ளிக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அதனால் கூட்டம் கூடுதலாகிறது.

படிக்கட்டுகளில் பயணிப்பது உயிருக்கு ஆபத்து என்பதைத் தாண்டி, பஸ்சின் உள்ளே நெரிசலில் சிக்கி, மூச்சுத் திணறி, வேர்வை நாற்றத்தில் பயணிப்பதை விட காற்றோட்டமாக படிக்கட்டில் தொங்குவது எவ்வளவோ மேல் என்பதினாலும் படிக்கட்டு பயணம் தொடர்கிறது.

உண்மையில் பிரச்சினையின் அடிப்படை, பள்ளிக்கூட நேரங்களில் தேவையான அளவிற்கு பேருந்துகள் இல்லாததுதான். அதிகமான கூட்டம் காரணமாகவே, மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி செல்லும் பழக்கத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

அதன் காரணமாகவே, மாணவர்களுக்கும் பஸ் கண்டைக்டர், டிரைவர்களுக்குமிடையே ஒர் நல்லுறுவு இல்லாமல் போனது.

இதற்கு நிரந்தர தீர்வு, மாணவர்கள் தங்கள் வீட்டருகே உள்ள பள்ளிக்கூடங்களில் படிப்பதற்கு முதலில் தரமான அரசுப் பள்ளிக்கூடங்களை கூடுதலாக திறக்க வேண்டும். ஏற்கனவே இருக்கின்ற, அரசு பள்ளிகளை, நல்லத் தரத்திற்கு உயர்த்த வேண்டும்.

இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு, பள்ளிக்கூட நேரங்களில் கூடுதலாக பஸ்களை இயக்குவது முக்கியமானது.

மாணவர்கள் நெரிசலில் சிக்கி செத்தாலும் கூடுதலாக பஸ் இயக்குவதில்லை. அதற்கு நேர் எதிராக நெரிசலைத் தவிர்க்க, ஏ.சி பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை.

தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வாங்கிக் கொண்டு, தங்கள் மாணவர்களுக்கு என்று தனியாக பஸ்கள் இயக்குகின்றன.

அதுபோல், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த அந்த பள்ளிகளுக்கு  மட்டுமே என்ற முறையில் காலை, மாலை நேரங்களில் இலவச பஸ்களை அரசு இயக்க வேண்டும். இப்போது உள்ளது போலவே மற்ற பஸ்களிலும் பயணிக்கும் இலவச பாஸ் உரிமையும் இத்துடன் இருக்கவேண்டும்.

மிக முக்கியமாக பஸ்சில் உள்ள இருக்கை அமைப்பு முறையை மாற்றியமைக்க வேண்டியது அதைவிட கூடுதல் முக்கியத்தும் வாய்ந்தது.

ஆம், பஸ்சில் பெண்களின் இருக்கைகள், இரண்டு படிக்கட்டுகளை ஒட்டியே இருக்கின்றன.

பஸ்சில் பயணம் செய்யும் இளம் பெண்களை, மாணவிகளை தங்கள்பால் ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும் மாணவர்கள், இளைஞர்கள் படிக்கட்டுகளில் தொங்கி பல்வேறு சாகசங்களை செய்கின்றனர். இருக்கை அமைப்பு முறை, மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்குவதற்கான மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.

அதனால், பெண்களின் இருக்கைகளை பஸ்சின் வலது புறம் மாற்றுவது இன்றே  செய்ய வேண்டிய மிக முக்கியமானது.

அதன் மூலம் மிக அதிக அளவிலான மாணவர்கள் பஸ்சின் உள்ளே சென்று பயணிப்பார்கள். பெண்களுக்கும் கூடுதல் இருக்கைகள் கிடைக்கும்.

பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்க முடியாத ஆண்கள், பஸ்சின் உள்ளே பயணிக்கும்போது, பெண்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகள் பக்கம் திரும்பி நின்று கொண்டுதான் வருவார்கள். வயதான ஆண்களே அப்படி என்றால், இளைஞர்கள் எப்படி இருப்பார்கள்? அதனாலேயும் அவர்கள் படிக்கட்டுகளில் தொங்குகிறார்கள்.

ஆகவே, பெண்களின் இருக்கைகளை உடனடியாக பஸ்சின் வலது புறம் மாற்ற வேண்டும். அது படிக்கட்டு பயணங்களை தவிர்க்கும். பரிதாப மரணங்களை தடுக்கும்.

போக்குவரத்து ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் சண்டைகள் குறைந்து, நல்லுறவை வளர்க்கும்.

நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பில் இவைகளை உறுதி செய்யும் என்று நம்புவோமாக.

தொடர்புடையவை:

ஷிவ்ராம் அய்யர்-சௌம்யா அய்யர்-Splendor அய்யர்: ஜாதியை ஒழிச்ச HERO

Splendor பறையர்; விளம்பரபடுத்த தயாரா? அல்லது Splendor அய்யருக்கு முடிவு கட்டிய பெரியார் தொண்டர்கள்

பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்

சானிடரி நாப்கின்; நமது கருத்தும், அதிமுக அரசின் திட்டமும்

இலவச சானிடரி நாப்கின் திட்டம்: இந்தியாவிலேயே முதன்முறையாக

விஸ்வரூபம் வெளியீடு; பிரியாணி கிடைக்குமா?

mutton-biryani

 11-12-2012 -அன்று எழுதியது

“விஸ்வரூபம்’ படம், வெளியாவதற்கு, 8 மணி நேரத்திற்கு முன்பாக, டி.டி.எச்., முறையில், ஒரே ஒரு காட்சி, “டிவி’யில் வெளியிட, கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். கமலின் இந்த முயற்சி, தமிழ் சினிமாவை அழித்துவிடும் எனவும், இந்த முயற்சியை கைவிட வேண்டும் எனவும், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கங்கத்தைச் சேர்ந்தவர்கள், வலியுறுத்தி வருகின்றனர்.

இன்னும் சிலரோ, ‘கமல் இந்திய சினிமாவின் வர்த்தகத்தை எங்கேயோ கொண்டு சென்று விட்டார்.’ என்று வரவேற்கிறார்கள்.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு போல், ‘சினிமா வியாபாரத்தில் திரையரங்குகளைத் தாண்டிய ஒரு வருமானம்’, என்கிற பாணியில் குதித்திருக்கிற கமலின் இந்த முயற்சிக்கு,

இயக்குநர்களும், தயாரிப்பாளார்களும் ‘படம் ரிலீசாவதற்கு முன்பே நமக்கு லம்பா கிடைக்கும்போல..’ என்ற கனவில், அவர்களும் இதை வரவேற்று இருக்கிறார்கள்.

ஆனால், எனக்கென்னவோ இது கமல்ஹாசனின் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் தெரிகிறது.

“விஸ்வரூபம்’ படத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு தீவிரமாக இருக்கலாம். அதனால் இந்தப் படத்தை திரையிட்ட முதல் நாளே அதற்கான எதிர்ப்பு அதிகமாகி படத்தில் உள்ள முக்கிய காட்சிகளை நீக்க வேண்டும் என்ற நிலை ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் ஒட்டுமொத்த படத்தையுமே நிறுத்த வேண்டியிருக்கும் என்பதால், அதை டி.டி.எச் முறையில் டிவி’யில் வெளியிடுவதின் மூலம், தன் பணத்திற்கான ‘மினிமம் கேரண்டி’ என்ற பாணியில்தான் இந்த டி.டி.எச் சேவை.

‘துப்பாக்கி’ படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பிற்கு பின்னேதான் கமலுக்கு இப்படி ஒரு யோசனை வந்திருக்க வேண்டும். ஏனென்றால் அதற்கு முன் வரை, குறிப்பாக நவம்பர் 7 தேதி, தனது பிறந்தநாள் அன்று,

“விஸ்வரூபம்’ படம் தான் ஆசியாவிலேயே ஆரோ 3டி என்ற புதிய சவுண்ட் தொழில்நுட்பத்தில் வெளிவரும் முதல்படம். சாதாரணமாக இருக்கும் ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டத்தில் ஒலி இரு பக்கவாட்டிலும் இருந்து கேட்கும்.

ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தில் தலைக்கு மேலிருந்தும் கூட ஸ்பீக்கர்களில் ஒலி கேட்கும். படம் பார்க்கும் போது தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும்.

சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் மட்டும் இந்த தொழில்நுட்பம் அமைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் 30 தியேட்டர்களில் இந்த தொழில்நுட்பம் உள்ளது. அதேபோல ‘விஸ்வரூபம்’ படம் மூலம் தமிழ்நாட்டிலும் குறைந்தது 30 தியேட்டர்களிலாவது இந்த தொழில்நுட்பம் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.” என்று விஸ்வரூபம் காலமாதத்திற்கான காரணம் சொன்னார் கமல்.

விஸ்பரூபம் படத்தை இன்றைய நவீன திரையங்குகளில்கூட பார்ப்பதற்கான வசதிக் கிடையாது. என்று சொன்ன கமல்தான் இப்போது அதை டி.வியில் பார்ப்பதற்கு தீவிரமாக பரிந்துரைக்கிறார். முயற்சிக்கிறார்.

இதில் வெறும் வர்த்தகம் மட்டும் பின்னணியாக இல்லை. நாம் முன்பே குறிப்பிட்டதைப் போல் சர்வதேசிய ‘இஸ்லாமிய தீவிரவாத்திற்கு’ எதிராக அமெரிக்க சார்பு கொண்ட ஒரு அய்யங்கரின் அதிரடி ஆக்ஷன் படமாகத்தான் இருக்கு வேண்டும். வைணவ டச்சஸோடு.

‘என் படத்தை பார்த்து முஸ்லீம்கள் மனம் மாறி, தேவையில்லாமல் சந்தேகப்பட்டு விட்டோமே’ என்று, வருத்தப்படுவர் என, கமல்ஹாசன் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஒரு விசயத்தைக் குறித்து ஆயிரம் விளக்கங்களை விட, ஒரு செயல் அதை தெளிவாக விளக்கிவிடும்.

முக்கியமான இஸ்லாமியத் தலைவர்களுக்குப் படத்தை போட்டுக் காண்பித்தால் அவர்களே படத்தை வரவேற்று அறிக்கை கொடுத்துவிட்டு போகிறார்கள். ஏன் இந்த தேவையில்லாத பதட்டம்? விளக்கம்?

உண்மையிலேயே கமல்ஹாசன் சொல்வதுபோல், விஸ்வரூபம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இல்லை என்றால்..?

ரொம்ப மகிழ்ச்சி.

‘படத்தில் முஸ்லிம்களை அவமதிக்கும் காட்சிகள் இல்லையெனில், கமல்ஹாசன் முன்னிலையில் பத்தாயிரம் ஏழைக் குழைந்தைகளுக்கு பிரியாணி வழங்கப்படும்’ என்று இந்திய தேசிய முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது.

நம்மளும் வரிசையில் நின்னு உலக நாயகன் கையால, ஒரு பிரியாணி பொட்டலத்த வாங்கி சாப்பிட்டு வரவேண்டியதுதான்.

எனக்கென்னமோ, பிரியாணி தானம் நடக்காதுன்னுதான் தோணுது.

பாப்போம் நம்ம ‘அதிர்ஷ்டம்’ எப்படின்னு?

தொடர்புடையவை:

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்?

மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?

விஸ்வரூபம் படத்தின் டிரைலரும் கவுண்டமணி வசனமும்

அ.மார்க்சை அழைத்த; ‘பெரியார் அவதூறு’ பேர்வழிகளை அழைக்காத திராவிடர் கழகத்திற்கு பாராட்டுகள்

dk

லித் விரோத ஜாதி வெறியர்களை கண்டித்து, தர்மபுரியில் ‘ஜாதி-தீண்டாமை ஒழிப்பு’ மாநாடு நடத்தும் திராவிடர் கழகத்திற்கு முதலில் நன்றியும் வாழ்த்தும்.

அந்த மாநாடிற்கு பேராசிரியர் அ.மார்க்சை அழைத்தமை சிறப்பு.

விடுதலைப் புலிகளை விமர்சிக்கிறார் என்பதற்காக அவரை திட்டமிட்டு பெரியார் இயக்கங்கள் புறக்கணித்தன.

ஆனால், திராவிட இயக்கத்தை பெரியாரை; மறைமுகமாக, நேரடியாக மோசமாக, இழிவாக விமர்சிப்பர்களோடு இணைந்து விடுதலைப் புலி ஆதரவு, பிரபாகரன் ஆதரவு, ஈழ ஆதரவு என்று பெரியார் இயக்கங்கள் செயல்பட்டன.

திராவிட இயக்கத்தின் மீது, பெரியார் மீது சொல்லப்பட்ட அவதூறுகளுக்கு பதிலளிக்கும் வேகத்தைவிட; பிரபாகரன், விடுதலைப் புலிகள் மீது சொல்லப்பட்ட அவதூறுகளுக்கு பதில் அளிப்பதில் பெரியார் தொண்டர்களும் பெரியார் இயக்கங்களும் வேகம் காட்டினர்.

இது போன்ற செயல்பாட்டினால், பிரபாகரனை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராகவும், பெரியார் மட்டும் விமர்சனங்களுக்கு உட்பட்டவராகவும் பார்க்கிற நிலை உருவானது.

அதன் விளைவு அந்த மோசடி பேர்வழிகள், பெரியார் நமக்கு எதற்கு? பிரபாகரன்தான் தலைவர், திராவிட இயக்கம் தமிழகத்தை கெடுத்துவிட்டது என்று அவதூறும் குழப்பமும் செய்ய ஆரம்பித்துவிட்டன.

தமிழ்த் தேசிய வேறுபாடுகளை தவிர்த்து, பெரியார் தொண்டர் என்கிற அடிப்படையில் அ. மார்க்சை அழைத்தமைக்காக திராவிடர் கழகத்தை நாம் பாராட்டுவோம். அதற்கு மட்டுமல்ல,

பெரியார், டாக்டர் அம்பேத்கர் பற்றி அவதூறு பரப்புபவர்களை; இலங்கை பிரச்சினை, விடுதலைப் புலிகளின் ஆதரவு, தமிழ்த் தேசியம் போன்ற எந்தக் காரணம் கொண்டும் தங்கள் நிகழ்ச்சிகளுக்கு அழைக்காத திராவிடர் கழகத்தின் செயலுக்காகவும் பாராட்டுவோம்.

தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகளோடு தோழமையாக  இருந்தும் பெரியார் குறித்து மோசமாக எழுதிய ரவிக்குமாரை எப்போதுமே எந்த நிகழ்ச்சிகளுக்கும் அழைக்காததற்காகவும் பாராட்டுவோம்.

விடுதலைப்  புலிகள். தமிழ்த் தேசியம் போன்றவற்றில் மாற்று கருத்து கொண்டவர்கள் என்ற காரணங்களுக்காகவே புறக்கணிக்கபட்ட பல பெரியார் தொண்டர்களையும் அரவணைத்து பெரியார் பணியை தொடருவோம்.

தொடர்புடையவை:

தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா?

ஞாநி’ யை நான் கவுண்டமணியுடன் ஒப்பிடவில்லை

வன்கொடுமை தடுப்புச் சட்டமும் பிற்படுத்தப்பட்டவர்களும்