‘வீடு’; இளையராஜா-ஜெயகாந்தன் – ‘பெரியார் என்கிற பேய்’

vedu

‘வீடு’ இந்தப் படத்தை அது வெளியான போது பார்த்தது. நானும் என் பள்ளித் தோழன் இளங்கோவும் சென்னை பிராட்வே தியேட்டரில் பார்த்ததோம். மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா, பாலசந்தர் இவர்கள் படங்களை விரும்பி பார்ப்போம். படம் பார்த்ததிலிருந்து அடுத்தப் படம் பார்க்கும் வரை அதையே  பேசிக் கொண்டிருப்போம்.

தீவிரமான ரஜினி ரசிகனாக இருந்த நான், மாறிக் கொண்டிருந்த காலங்கள் அது.

‘மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்’ என்று எங்கெல்ஸ் குறிப்பிட்டதைப் போல்;

‘ரஜினி ரசிகன் பகுத்தறிவாளனாக மாறிய இடைநிலைப் படியில் வாசிப்பு மற்றும் ரசனையின் பாத்திரம்’ என்று என் மாற்றத்தை குறிப்பிடலாம்.

இந்த சினிமா ரசனையோடு ராஜேஷ்குமார், இளந்தேவன், மு. மேத்தா, பாலகுமாரன், வைரமுத்து என்று அது ஒரு பக்கம் போய் கொண்டிருந்தது.

விறுவிறுப்பான மர்ம கதைகள் படிப்பதில் ஆர்வம் அதிகமாக இருந்த காலம் அது. பத்திரிகைகள், பாக்கெட் நாவல் என்று எங்கு திரும்பினாலும் ராஜேஷ்குமார்.

ராஜேஷ்குமார் கதைகளை படித்துவிட்டு, அவரை புகழ்ந்து ஒரு கடிதம் எழுதினேன். ‘நெ.1 லைட் ஹவுஸ் தெரு, கோவை’ என்ற முகவரிக்கு..

பதிலுக்கு அவர் ஒரு நடிகரைப் போல் அவரின் படத்தின் மீது கையெழுத்து போட்டு அனுப்பி வைத்தார்.

இளந்தேவனின் கவிதைகளை, அவர் கவியரங்கில் வாசிக்கும் பாணியில் வாயை அகட்டி, குவித்து வார்த்தைகளை அவர் லாவகமாக உச்சரிக்கிற விதத்தில் நானும் வாசித்து மகிழ்வேன்.

‘கோலப் பொடியில் வைத்தப் புள்ளி ஒரு கோடி இருக்குமென வானில் அந்தக் கோலப்  பொடியை வைத்தக் கோதை கோள நிலவு மகள் தானோ?’ இதுபோன்ற அவருடைய கவிதைகள் எனக்கு மனப்பாடம்.

‘மு.மேத்தாவின் கவிதை தொகுப்புகள் இல்லாத கைகளையே பார்க்க முடியாது’ என்கிற காலம் அது. அவரின் ‘கண்ணீர் பூக்கள், வெளிச்சம் வெளியே இல்லை’ என்னை அதிகம் கவர்ந்த நூல்கள்.

புத்தகம் படிக்கும் பழக்கம் என் தந்தையின் மூலமாகவே எனக்கு வாய்த்தது. அவர் நூலகத்திலிருந்து கொண்டு வருகிற நூல்களை நானும் படித்தேன்.

அப்படித்தான் கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’ நாவலை எங்கள் குடும்பமே, நூலகத்திலிருந்து வந்த ஒரே புத்தகத்தை மாற்றி மாற்றி படிப்போம். காஞ்சிபுரத்திற்கு நான் முதல் முதலாக சென்றபோது, ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் முன் நின்று, இந்த இடத்தில்தானே நரசிம்ம பல்லவன் நின்றான், இந்தத் தெருக்களில்தானே அவன் சுற்றித் திரிந்தான் என்ற உணர்வுகள் அலை அலையாக எழும்ப காஞ்சிபுரத்தை சுற்றி வந்தேன்.

கல்கிக்குப் பிறகு மற்றவர்கள் எழுதிய சரித்திர நாவல்கள்  என்னை கவரவில்லை. அதில் அரு. இராமநாதன் எழுதிய ‘வீரபாண்டியன் மனைவி’ யை மட்டும் விரும்பி படித்திருக்கிறேன்.

நண்பன் இளங்கோ சுஜாதாவை விரும்பி படிப்பான். எனக்கென்னவோ சுஜாதா எழுத்துக்களில் ஆர்வம் ஏற்படவில்லை.

லா.சா.ரா, தி.ஜானகிராமன் கதைகளை படித்தபோதெல்லாம் இவர்கள் என்ன நம்ம தலைவர் பாலகுமாரன் மாதிரி எழுதுறாங்க.. என்று தோன்றியது.

பாலகுமாரனை அப்படி தேடி தேடி படித்தேன். அநேகமாக அவருடைய எல்லா நாவல்களையும் படித்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

பாரதியார் என்றால் எனக்கு நிரம்ப பிடிக்கும். காரணம் வாசிப்பல்ல. மற்றவர்கள் அவரை புகழ்ந்து பேசுவதை எழுதுவதை படித்ததினால்.

பாரதியார் பற்றிய வைரமுத்தின் ஒரு கவிராஜன் கதையை படித்து விட்டு பார்ப்பவர்களிடமெல்லாம் அதைப் பற்றியே புல்லரித்து புலம்பிக் கிடந்திருக்கிறேன்.

‘எட்டயபுரத்தில் மட்டும் எப்படி ஒரு பெண்ணுக்கு நெருப்பை சுமந்த கருபை்பை’  என்ற வரியை வைரமுத்துவை விட நான் அதிகம் பேரிடம் சொல்லியிருப்பேன்.

வைரமுத்துவிற்கும் ஒரு கடிதம் எழுதினேன். அவர் ‘நிறைய படியுங்கள்’ என்பதோடு வாழ்த்துச் சொல்லியும் பதில் எழுதினார்.

வாசிப்பில் ஏற்பட்ட இந்த ஈடுபாடு, என்னை ரஜினியிடம் இருந்து விலக்கி கமல் படங்களின் மீது ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியது.

நக்கீரனில் பிரபஞ்சன் எழுதி வந்த சினிமா பற்றிய தொடர், குறிப்பாக பாலசந்தர் படங்களில் பெண்ணியத்திற்கு எதிரான கண்ணோட்டம் குறித்த கடுமையான விமர்சனங்கள், பாலசந்தர் பற்றிய என்னுடைய மதிப்பீட்டை மறு பரிசீலனை செய்ய வைத்தன.

ஜெயகாந்தனை படிக்க ஆரம்பித்த பிறகே இலக்கியம், சினிமா பற்றிய என்னுடைய ரசனை, பார்வை மாற ஆரம்பித்தது. அவருடைய சிறுகதைகள், நாவல்களை தேடித் தேடி படித்தேன்.

அவருடைய கட்டுரைகள், அதே பாணியில் அமைந்த அவர் நாவல்களுக்கு அவர் எழுதிய முன்னுரைகள் என்னை மிகப் பெரிய அளவில் ஈர்த்தன. ‘தன் வரலாறு’ பாணியில் எழுதிய, ‘ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ அவரை பெரிய கதாநாயகனாவே பார்க்க வைத்தது.

எங்கே போனாலும் நண்பர்களிடம் அவரைப் பற்றி பேசுவதும், ‘அவர் இப்படி பேசினார். அப்படி சொன்னார்’ என்று அவரின் இலக்கியஉலக சாகசங்களையும் சிலாகித்து பேசிக் கொண்டிருப்போம்.

உழைக்கும் மக்களின் மொழியான சென்னை தமிழை அவர் அளவுக்கு சிறப்பாக எழுதியவர்கள் இல்லை. சென்னை தமிழை மரியாதைக்குரிய வழக்காக பார்த்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன்.

அது மட்டுமல்ல, எனக்கு தெரிந்து தமிழ் இலக்கிய உலகில் சென்னை வாழ் எளிய மக்களை, கை வண்டி இழுப்பவர், சாலையோர கடைகளில் சோறு விற்கும் பெண், தொழுநோயாளி, பிச்சைக்காரர்கள் இவர்களை முதன்மை படுத்தி அவர்களை சிறப்பானவர்களாக சிறுகதை எழுதியவர்களில் ஜெயகாந்தனே முதன்மையானவர். முக்கியமானவர்.

அவரின் அந்த சிறுகதைகளின் தாக்கத்தாலே நான் அந்த மக்களின் வாழ்க்கை குறித்த மரியாதை கொண்டேன்.

பின்னாட்களில் மேடை ஏறி அவரிடமே சண்டை போடுவேன் என்று நான் நினைத்தில்லை. அதற்கும் அவரும் அவரின் எழுத்துமே காரணம்.

*

‘பெரியார் என்கிற பேய்’ என்னுள் புகுந்த பிறகே இனம், மொழி, இலக்கியம், சினிமா எல்லாவற்றையும் அரசியல் கண்ணோட்டமும் எதையும் விமர்சனப் பார்வையோடும் பார்த்தேன். அதுவரை கடவுள்கள் போல் என்னுள் இருந்த கலை, இலக்கிய புனிதர்கள்; ‘பெரியார் எனும் பேயை’ பார்த்த உடன் ஓடி போய் விட்டார்கள். என் மனம் கவர்ந்த ஜெயகாந்தனுக்கு எதிராக நான் செயல்பட்டதற்கும் ‘பெரியா் என்கிற பேயே’ காரணம்.

ஆனால், நான் ரஜினி ரசிகனாக இருந்த காலத்திலிருந்து இப்போது வரை தொடர்ந்து என்னுடன் பயணிப்பது இசைஞானி இளையராஜாவின் இசை மட்டும்தான்.

அப்போது அவர் இசை எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை விட, இப்போது பல மடங்கு உயர்ந்திருக்கிறது. நான் ரஜினி ரசிகனாக இருக்கும்போது கேட்ட, அதே பாடல்கள்; இப்போது கேட்கும்போது இன்னும் கூடுதல் உன்னதமாக இருக்கிறது. அது இப்போதும் என்னைத் தாண்டி எங்கோ உயரத்திலிருக்கிறது. அதை எப்போது நான் எட்டி முழுமையாக அனுபவிக்க முடியுமோ தெரியவில்லை.

*

பாலுமகேந்திராவின் ‘வீடு’ படத்தை இப்போது பார்த்தால் எப்படி இருக்குமோ?

படத்தில் ராஜாவின் ‘How to name it?’ ஆல்பத்தில் உள்ள இசையை பயன்படுத்தியிருந்தார் பாலுமகேந்திரா.

அதை தவிர்த்திருக்கலாம். இந்தப் படத்திற்காகவே இசையை தனியாக உருவாக்கியிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. இந்த எண்ணம் ‘படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்’ என்ற கருத்தால் அல்ல. ‘How to name it?’ கொடுத்த கற்பனைகள் எல்லையற்று இருந்திருக்கும் என்பதினால்.

இளையராஜாவின் அனுமதியோடு பாலுமகேந்திராவே, காட்சிகளுக்கு ஏற்றார்போல் ‘How to name it?’ ஆல்பத்தைப் பயன்படுத்திக்கொண்டார் என்று நினைக்கிறேன்.

How to name it?’ போன்ற உலகத் தரமான இசை ஆல்பங்களை கேட்கிற ஒவ்வொருவருக்கும் தனி தனியான காட்சிகளை, உணர்வுகளை, அனுபவங்களை உருவாக்கும். அந்த உணர்வுகள் எல்லையற்று விரியும்.

ஆனால், பாலுமகேந்திரா ‘How to name it?’ இசையின் உணர்வை, காட்சியை ‘இப்படித்தான்’ என்று நிர்ணயித்துவிட்டார். அதன் காரணத்தினாலேயே அந்தப் படத்தை நான் திரும்ப பார்க்கவே இல்லை.

அதன் பிறகு எஸ்.வி. சேகர் போன்ற கொடுமைக்காரர்கள், ‘How to name it?’ ஆல்பத்தை தங்கள் நாடகத்திற்கெல்லாம் பயன்படுத்தி அதைப் பாடாய் படுத்தி துன்புறுத்தினார்கள்.

பாலுமகேந்திராவின் ‘வீடு’- இளையராஜாவின் ‘How to name it?’ இசை உன்னதத்தின் மீது நடத்திய தாக்குதலாகவே எனக்குப் படுகிறது.

இருந்தாலும் ‘பெரியார் சுயமரியாதை ஊடக துறை’ யின் இந்த முயற்சி பாராட்டுக்குரியதுதான்.

ஏனென்றால், பெரியா் இயக்கத்திடம் கலை இலக்கியம் குறித்து குறிப்பாக சினிமா பற்றிய கறாரான விமர்சன கண்ணோட்டம் அநேகமாக இல்லை என்றேகூடே சொல்லலாம்.

அந்த வகையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் அதை உருவாக்கும். அதனால் இதை நடத்துகிற தோழர்களுக்கு வாழ்த்துகளை சொல்வோம்.

தொடர்புடையவை:

பாரதி + ஜீவா = ஜெயகாந்தன்

ஜெயகாந்தனுக்குப் பொருத்தமான விருது ‘பத்ம பூஷன்’ மட்டுமல்ல ‘விபிஷணன்’ விருதும்தான்

16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்

பெரியார் திரைப்படமும் இளையராஜாவும்

பார்ப்பன எதிர்ப்பா?இளையராஜா மீதான வெறுப்பா?

இளையராஜா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

டி.எம்.சவுந்தரராஜனுக்கு பாடத் தெரியாது: இளையராஜா அப்படியா சொன்னார்?

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

இயக்குநர் மகேந்திரனின் கதாநாயகிகள் மற்றும் அவர் படங்களை திரும்ப எடுத்த மணிரத்தினம், வசந்த்

6 thoughts on “‘வீடு’; இளையராஜா-ஜெயகாந்தன் – ‘பெரியார் என்கிற பேய்’

  1. வெகு நாளாகி விட்டது .இம்மாதிரியான வெளிப் படையான – எண்ணத்தை எழுத்தாக்கிய கட்டுரையை படித்து .அற்புதம் .

  2. //பாலுமகேந்திராவின் ‘வீடு’- இளையராஜாவின் ‘How to name it?’ இசை உன்னதத்தின் மீது நடத்திய தாக்குதலாகவே எனக்குப் படுகிறது//

    இதெல்லாம் ஓவர் நண்பரே!. வீடு படத்திற்கு மணியாக ‘How to name it?’ விளங்கியது, படத்தின் தாக்கத்தை அதிகரித்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். வசனம் இல்லாத காட்சிகளில் ராஜாவின் இசை பேசியது. வீடு படத்தை தமிழ்சினிமாவின் உன்னத படைப்புகளில் ஒன்றாக வர உதவியது எனலாம். ராஜாவுக்கும் பாலுமகேந்திராவும் ‘How to name it?’ – ஐ பயன்படுத்தியது மிக ‘அழகான’ முடிவு.

Leave a Reply

%d bloggers like this: