பாலியல் வன்முறைக்கு தண்டனை தூக்கு! அப்போ..‘மாமா வேலை’க்கு..?

leverகுறைந்த உடையில் ‘நடிக்க’ வைக்கப்பட்ட நடிகைகளின் படங்களை பத்திரிகையில் பெரிதாக பிரசுரித்து, தன்னுடைய ஆண் வாசகர்களுக்கு ‘மாமா வேலை’ பார்க்கும் ‘அந்த’ பத்திரிகைகள்;

‘உடல் அழகை அதிகம் வெளியில் காட்டாமல் உடுத்தும் பெண்களை பார்க்கும் ஆண்களுக்கு விபரீதமான எண்ணங்கள் ஏற்படுவதில்லை.’

என்று பாலியல் கொடுமைகளுக்கு காரணம், பெண்களின் உடைதான் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் போல் கருத்து சொல்கின்றன.

ஆனால், டெல்லியில் ஒரு பெண்ணை கொடூரமாக குதறி எடுத்தவர்கள் பற்றி எழுதும்போது, அதே பத்திரிகைகள் ரொம்ப யோக்கியர்கள் போல்,

பாலியல் வன்புணர்வு செய்தவர்களை, வெறிநாய்கள் என்றும் எல்லோரையும் தாயாகவும், நாட்டையே தாயாக பார்க்கும் நாட்டில் இப்படிப்பட்டவர்களை தூக்கில் போடவேண்டும் என்றும் தீர்ப்பெழுதின.

தாய் நாடு என்று பெண்ணை நாடாக பார்ப்பார்கள், பெண்ணை நதியாக பார்ப்பார்கள், பெண்ணை கடவுளாக பார்ப்பார்கள்; ஆனால் பெண்ணை பெண்ணாக மட்டும் பார்ப்பதில்லை.

பெண்களை வெறும் கவர்ச்சியான சதை தொகுப்பாக பார்த்து, அட்டை படத்தில் பிரசுரித்து, உள் பக்கங்களில் ப்ளோ-அப் போட்டு அதற்கு கீழ் மட்டரகமான புட்நோட் எழுதி தன் வாசக ஆண்களை வன்புணர்ச்சிக்கு ஆசைப்பட வைக்கிற, இவர்கள்தான் பெண்களை தாயாக பார்க்கிறார்களாம்.

இப்படித்தான் தாயை கவர்ச்சியா ப்ளோ-அப் போட்டு விப்பாங்களா?

ஒரு நடிகையின் அது போன்ற படங்களை பார்க்கிற ஆண் வாசகரின் மனதில் என்ன எண்ணம் ஏற்படும்? அந்த நடிகையை பற்றி என்ன நினைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அந்தப் படம் பிரசுரிக்கப்படுகிறது?

பொது இடத்தில் அந்த நடிகையை தற்செயலாகப் பார்த்தால், இவர்களின் ஆண் வாசகர்கள் அந்த நடிகையிடம் எப்படி கண்ணியமாக நடந்து கொள்வார்கள்?

பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறவர்களுக்கு மரண தண்டனை என்றால், அதற்கு தூண்டுகிற அல்லது வன்புணர்ச்சிக்கு ஆசைப்பட வைக்கிற இந்த ‘மாமா’ க்களுக்கு என்ன தண்டனை தருவது?

பெண்களுக்கு எதிரான கருத்துக்கொண்ட, இந்த இரட்டை வேடம் பத்திரிகைகளுக்கு மட்டும் சொந்தமல்ல, இதுவேதான் மத அறிவாளிகளின் யோக்கியதையும்.

மத ஈடுபாடு கொண்டு கடவுள் நம்மை நல்வழிப்படுத்துகிறார், பெண்கள் நம் கண்கள் என்று கதையளக்கிற ஒவ்வொரு ஆணும், அடுத்த வீட்டுப் பெண்களை என்ன கண் கொண்டு பார்க்கிறானோ; அப்படித்தான் அதே பார்வையோடு, அதே எண்ணத்தோடு தான் மற்ற ஆண்களும் தன் வீட்டு பெண்களை பார்ப்பார்கள்; ‘தன்னைபோல்தானே மற்ற ஆண்களும்’ என்ற ‘சுயவிமர்சன’ அடிப்படையில்தான்,

முகம் கூட தெரியாத அளவிற்கு பெண்ணை முழுக்க முடி வைக்கிறான். அதன்பொருட்டேதான் பெண்கள் எப்படி உடை அணியவேண்டும் என்று ஆண் தீர்மானிக்கிறான்.

இப்படியான காரணங்களால்தான் இந்திய இந்து சமூகத்திலும் கணவனை இழந்த பெண்கள் வெள்ளை உடை அணியவேணடும். பூக்கள் சூடக் கூடாது. தன்னை அலங்கரித்துக் கொள்ளக்கூடாது என்று தடைபோட்டான்.

பெண்கள் பூக்கள் சூடியதும் ஆணுக்காக; ‘பூக்கள் சூடக் கூடாது’ என்றதும் ஆணுக்காகவே. (பெண்ணோட தல என்ன செடியா? மரமா?)

காரணம், பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வது, தன் கணவனின் கண்ணுக்கு மட்டும் லட்சணமாக தெரியவேண்டும் அதாவது அவனின் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே.

அதனால்தான் கணவன் இறந்த பிறகு மனைவிக்கு மொட்டையடித்து முக்காடுப்போட்டு அவமானப்படுத்தியதும், கணவன் இறந்த உடன் அவனுடனேயே அவளை தீயில் தள்ளி உடன் கட்டை என்ற பெயரில் உயிருடன் கொளுத்தியதும்.

சில ‘ஞானி’கள் ‘படிக்காதவர்கள் தான் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை நிகழ்த்துகிறார்கள். பாவம் கல்வியறிவு தந்தால் சரியாகிவிடும்’ என்று படித்தவன் யோக்கியன்போல், நியாயம் பேசுகிறார்கள்.

படிப்பறிவற்ற விவசாய கூலிகளாக, கூலித் தொழிலாளர்களாக இருக்கிறவர்களிடம் இப்படி பெண்களை வீட்டுக்குள்ளே பூட்டிவைப்பதும், பெண்ணை ஆணுக்கான நுகர்பொருளாக பார்க்கிற கண்ணோட்டமும் உழைக்கும் மக்கள் வரலாற்றில் எப்போதுமே கிடையாது.

ஆணுக்காக தன்னை அலங்கரித்துக் கொண்டு ‘அத்தான்’ வருகிறரா..?,’ என்று இலக்கிய பெண்களைப்போல் வாசலில் நின்று காத்துக்கிடக்கிற பழக்கமும் அவர்களிடம் கிடையாது. இருவரும் ஒரு சேர வேலைக்கு போகிறவர்கள்தான். பெண்ணை மட்டமாக பார்க்கிற நிலவுடைமையாளர்கள்தான் கூலியை பெண்ணுக்கு ஆணைவிட குறைவாக கொடுக்கிறார்கள்.

மாதவிலக்கை தீட்டாக பார்ப்பதும், அதன் காரணமாகவே பெண்களை இழிவுப்படுத்துகிற பழக்கமும் எளிய மக்களிடம் எப்போதும் இருந்ததில்லை. ஆதிக்க ஜாதிகளிடமும் நில உடமையாளர்களிடமும் உள்ள இழிவான செயல் அது.

எவன் பெண்ணை வெறும் ‘உடல் உறவுக்கான உறுப்பு மட்டுமே’ என்று பயன்படுத்தினானோ, அவனே மாதவிலக்கை தீட்டு, என்று சொல்லி இழிவுப்படுத்தினான். காரணம், அந்த நாட்களில் உறவு கொள்ள முடியாது என்பதினாலேயே.

ஆனால், திட்டமிட்டு பெண்களுக்கு எதிரான வன்கொடுமையைச் செய்தவர்களும், உயிரோடு கொளுத்தியவர்களும் இந்து சமூக அமைப்பில் அதிகம் படித்த, எல்லாவகையிலும் ‘உயர்ந்த’ பார்ப்பன மற்றும் ராஜ புத்திரர்கள். இந்தக் கொடுமைகளை குற்றமாக அல்ல, இதுதான் நீதியாகவும் இருந்தது. இந்தக்கொலையை செய்த இவர்கள்தான் சமூகத்தில் மற்றவர்கள் செய்கிற குற்றங்களுக்கு தண்டனை தருகிற நீதிமான்களாகவும் உயிர்கள் மீது அன்பு செலுத்தவேண்டும் என்று போதிப்பவர்களாகவும் இருந்தார்கள்.

இப்படி தன் குடும்பத்துப் பெண்களையே அவமானப்படுத்தி, கொலை செய்ததற்கு காரணம், கணவன் இறந்த பிறகு வேறு ஆண் அவளுடன் உறவு கொண்டுவிடுவான் என்கிற பயமே. அதிலும் குறிப்பாக வேறு ஜாதிக்காரன் உறவு கொண்டுவிடக்கூடாது; என்பதினாலேயே கங்கை ஆற்றில் முழ்கடித்தும் பல பெண்களை கொன்றிருக்கிறார்கள்.

அப்படி வேறு ஜாதி ஆண் உறவு கொண்டால், அவனுக்கும் மரணதண்டனை என்பது மனு வகுத்த சட்டம்.

அதனால்தான் அந்த மனோபாவம் கொண்ட இந்து அமைப்புகள், சாமியார்கள், பத்திரிகை ஆண்கள் இவர்கள் எல்லோரும் வன்புணர்ச்சியில் ஈடுபடுகிற ஆண்களுக்கு, முதலில் மரண தண்டனை என்று எகிறியதும் பிறகு பெண்களையே குற்றவாளிகளாக மாற்றுகிற மோசடி பேர்வழிகளாகவும் மாறுகிறார்கள்.

பெண்களை உயிரோடு கொளுத்திய இந்த யோக்கியர்கள்தான் சொல்கிறார்கள், ‘இந்தியா பெண்களை தாயாக போற்றுகிற தேசமாம். மேற்கு நாடுகளின் தாக்கத்தால்தான் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கிறதாம்.’

இந்தியாவில் வெள்ளைக்கார ஆட்சி இருந்தபோது வில்லியம் பென்டிக்தான், தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், இறந்த கணவனோடு, உடன் கட்டை ஏற்றும் பழக்கத்தை தடை செய்தார். அதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னார், 1510 ம் ஆண்டு போர்த்துக்கீசியர் ஆண்ட இந்திய பகுதிகளில் அல் புகர்க் என்பவர், சதி என்ற பெயரில் இறந்த கணவனோடு உயிர் உள்ள மனைவியை கொளுத்துகிற கொடுமையை முற்றிலுமாக ஒழித்தார்.

இந்திய சமூக அமைப்பு வெள்ளைக்காரர்கள் ஆட்சிக்குப் பிறகு முதலாளித்துவ மாற்றங்களுக்கு உள்ளானபோது; இந்து, ஜாதி அபிமானங்களும் மாற்றங்களுக்கு உள்ளானது. பெண்கள், தலித் மக்கள் இவர்களின் வாழ்க்கையில், அதுவரை இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தது.

உடன் கட்டை ஏறுதல் தடை, பால்ய விவாக நிறுத்தம், பெண் கல்வி, மிக பிற்படுத்தப்பட்ட, தலித் மக்கள் கல்வி, இந்து சமூகத்தில் இழிவான வேலைக்களுக்கு மட்டுமே தலித் மக்கள் என்ற நிலையை மாற்றி. வெள்ளைக்கார்களுக்கு சமையல்காரர்களாக, (மாட்டுக்கறி சமைப்பதற்கும்) ராணுவத்தில் தலித் மக்களுக்கான வேலை போன்றவைகள் போர்த்துக்கிசியர்கள், பிரிட்டிஷ்காரர்கள் மூலமே இந்து சமூகத்திற்குள் அறிமுகம் ஆகியது.

இந்த நன்மைகளோடே, பெண்களுக்கு எதிரான நவீன சீர்கேட்டையும் ஏகாதிபத்தியங்கள் மூலமாக முதலாளித்துவும் அரங்கேற்றியது.

தலித் மக்களுக்கு கல்வியை கொடுத்த ஜரோப்பிய நாடுகள்; இன்னொருபுறத்தில், அதே தலித் மக்களை கொத்தடிமைகளாக உயிருக்கு உலை வைக்கிற பணிகளில் அவர்களை மட்டுமே ஈடுபடுத்தியது.

குறிப்பாக, இந்தியாவில் காடுகளை அழித்து, மலைவாசஸ்தலங்களை உருவாக்கி, தேயிலையை பயிர் செய்வதற்கு ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களையே பலியாக்கினார்கள் வெள்ளைக்காரர்கள்.

காட்டுயிர்களுக்கு பலியானது. பட்டினியால் செத்தது. காடுகளில் சாலைகள் அமைப்பதற்கு வழியிருக்கிறதா என்பதை கண்டறிய, தாழ்த்தப்பட்ட மக்களையே முன் அனுப்பி, பள்ளத்தாக்குகளில் பலியாக்கியது, ரயிலுக்காக இருப்புப் பாதை அமைப்பதிலும் இதுபோன்ற துயரங்கள் அதிக அளவில் தாழ்த்தப்பட்ட மக்கள் மேலேயே நிகழ்த்தப்பட்டது. இந்திய சிற்றரசர்கள் உடன் போரிடும்போது, போரில் தலித் மக்களை முன் அனுப்பி பலி வாங்கியது, நவீன கழிவறை முறையை கொண்டுவந்து, மலம் அள்ளும் தொழிலுக்கு தாழ்த்தப்பட்ட மக்களை மட்டுமே கட்டயாப்படுத்தியது;

இத்தனைக்கும் தன்னை எதிர்த்து போரிட்ட மன்னர்களையும் அவர்களின் மந்திரிகளையும் போர்வீரர்களையும் தூக்கிலிட்ட வெள்ளை அரசு, தண்டனையாகக் கூட அவர்களை மலம் அள்ளும் பணிகளில் கட்டாயப்படுத்தாமல், தாழ்த்தப்பட்ட மக்களையே ஈடுபடுத்தியது.

அதுபோலவே, பெண்ணை மதத்தின் பேரில் முழுக்க மூடி வைத்த நிலப்பிரபுத்துவ சிந்தனையிலும் மாற்றம் ஏற்பட்டது.

தன் குடும்பத்து பெண்கள் அல்லாத மற்ற பெண்களை, ‘அழகு’ ‘ரசனை’ என்ற பெயரில் சதை பண்டமாக பார்க்கிற, ரசிக்கிற பொது மனோபாவமும் உருவாகியது.

அதன் காரணமாகத்தான் சினிமாவில் கவர்ச்சி காட்சி, பத்திரிகையில் கவர்ச்சி படம், அழகி போட்டி என்று பெண்களின் உடை உரித்து பொது இடங்களில் ஆண்கள் ‘சிட்டுக்குருவி லேகியமாக’ சாப்பிடுகிறார்கள்.

ஆண்களின் இந்த எண்ணத்தையே தனக்கான வர்த்தகமாக மாற்றிக் கொண்டது முதலாளித்துவம். ‘பெண்கள் என்பவர்கள் அழகானவர்கள். அந்த அழகு ஆண்கள் ரசிப்பதற்காகத்தான்’ என்ற மனோபாவமே பெண்மைக்கான அடையாளமாக மாறியது.

பெண்களுக்கான உலகப் புகழ்பெற்ற ஒப்பனை சாதனங்கள் (Cosmetic Devices) இந்தியாவில் பெரும் சந்தையை பிடித்தன. அந்த பொருட்களை இந்திய பெண்களிடம் விற்பதற்காகவே, உலக அழகி போட்டிகளில் இந்திய பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

கருப்பர்கள் நிறைந்த இந்திய நாட்டிற்குள்ளேயே கருப்பு நிறத்தை இழிவான குறியீடாக மாற்றி ‘சீக்கிரத்தில் சிகப்பழகு’ என்று விளம்பரப்படுத்தி, அப்பாவி இந்தியப் பெண்களின் முகத்தில் ‘மை’ பூசி காசு பார்க்கிறது முதலாளித்துவம்..

ஆப்பரிக்க கண்டத்தில் இருக்கிற எதவது ஒரு கருப்பர் நாட்டிற்குள் சென்று, ‘சீக்கிரத்தில் சிகப்பழகு’ என்று சொன்னால், செருப்பாலேயே அடிப்பார்கள் அங்கிருக்கிற மக்கள். ‘நான் ஏண்டா சிவப்பா அசிங்கமா உன்னய மாதிரி ஆகனும்’ என்று.

ஐஸ்வர்யா ராய், சுஸ்மிதா சென், லாரா தத்தா இப்படி பல இந்தியப் பெண்கள் உலக அழகிகளாக தேர்தேடுக்கப்பட்டதின் மூலம், இந்தியப் பெண்களிடம் Cosmetics மீதான மோகத்தை ஏற்படுத்தியது முதலாளித்துவம்.

பெப்சி குளிர்பானத்தின் ‘அழகி’ ஐஸ்வர்யா ராய், கொக்கோ கோலா குளிர்பானத்தின் ‘அழகி’ சுஸ்மிதா சென் இவர்கள் இருவரும் உலக அழகிகளாக தேர்தெடுக்கப்பட்ட பின்தான் இந்தியாவில் பெண்களுக்கான பூயுட்டி பார்லர் முறை அறிமுகமானது. அல்லது பிரபலமானது.

தொடர்ந்து இந்தியவிற்குள்ளும் பல அழகி போட்டிகளை Cosmetics கம்பெனிகள் நடத்தின. இன்று இந்திய முழுக்க பரம்பொருளை போல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது பூயுட்டி பார்லர்கள்.

பெண்களுக்கான Cosmetics விற்பனையில் உலகில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது ஏழை பெண்களை கொண்ட இந்திய நாடு. ‘பெண்கள்’ என்ற வார்தையையே இன்னும் கொஞ்ச நாட்களில் ‘அழகிகள்’ என்ற மாற்றிவிடுவார்கள் Cosmetics கம்பெனிகள்.

நிலப்பிரபுத்துவமும் பெண்களை சதையாக பார்த்தது, முதலாளித்துவமும் அதையே தான் செய்தது. ஆனாலும் இரண்டிற்கும் அடிப்படையில் வித்தியாசம் இருந்தது.

நிலப்பிரபுத்துவம் (மதம்) பெண்களை ‘சதை பொருளாக’ பார்த்து மூடி வைத்தது. முதலாளித்துவம் (வர்த்தகம்) பெண்களை ‘சதை பண்டாக’ திறந்து விற்கிறது.

இதன் கூறுகளை இன்றைய விளம்பரங்களில் பார்க்கலாம்.

இந்திய பொருட்கள் அல்லது இந்திய சார்பு கொண்ட விளம்பர படங்களை பார்த்தால் அவை,

‘ஒரு பெண் தன் கணவன் அவன் குடும்பத்தார் நலனில் அக்கறை கொண்டவளாக காட்டுவதும், தன் கணவனின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்கிற அடக்கமான அல்லது அலுவலகத்தலிருந்து வருகிற கணவன் தன் மனைவியின் பொலிவை பார்த்து அவளை கட்டியணைப்பதுபோல் காட்டுவதுமாக இருக்கும். சில விளம்பரங்களில் அழகான பெண்ணை ஆண்கள் வாயைப் பிளந்து கொண்டு பார்ப்பதும், மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வருவதும், இன்னும் மாமியார் – மருமகள் உறவு குறித்த விளம்பரங்கள்.

இவைகளை சோப்பு, ஷாம்பு, எண்ணெய், டீ தூள், காபி விளம்பரங்களில் அதிகம் பார்க்கலாம்.

இதுவே மல்டி நேஷன் கம்பெனி பொருட்களாக அமெரிக்க பாணி விளம்பரமாக இருந்தால், குறிப்பாக பற்பசை, perfume இன்னும் சில விளம்பரங்களில், ஒரு ஆணின் வாய் மற்றும் உடல் வாசனையை நுகர்ந்த அடுத்த நொடியே, பெண்கள் உடல் உறவுக்கு தயாராகி, உடனே அவனுடன் செல்வதுபோல் காட்டுவார்கள்.

இன்றைய இந்திய சமூக அமைப்பு நிலப்பிரபுவத்துவம், முதலாளித்துவம், ஏகாதிப்பதியம் என்கிற கலவையோடுதான் இருக்கிறது.

குறிப்பாக ஜாதி உணர்வோடு இருப்பதிலும், பெண்களுக்கு எதிரான கண்ணோட்டத்திலும், தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்களிலும் நிலப்பிரபுத்துவ சிந்தனை முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த விஷயங்களை ஆதரிப்பவர்களிடமும் எதிர்ப்பவர்களிடமும் நிலப்பிரபுத்துவ கண்ணோட்டமும் முதலாளித்துவ பார்வையும் சம பங்கு வகிக்கின்றன.

முதலாளித்துவ ஜனநாயகம் இப்படித்தான் நிலப்பிரபுத்துவ குற்றங்களை கடுமையாக கண்டிக்கும். நேர்மை, நியாயம். நீதி எல்லாம் பேசும்.

அதே சமயம் தன் வர்த்தக லாபத்திற்காக அதைவிட இழிவான செயல்களை அது செய்து கொண்டே இருக்கும். ‘முதலாளித்துவம் லாபம் என்றால் தனக்கான சவக்குழியைக்கூட அது தோண்டிக் கொள்ளும்’ என்று காரல் மார்க்ஸ் சொன்னது போல், அது எதையும் செய்யும்.

ஆனால், இன்று பெண்களுக்கு எதிரான, தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டிப்பவர்களிடம், நியாயம் பேசுபவர்களிடம் முதலாளித்துவ ஜனநாயகம்தான் ஓங்கி இருக்கிறது.

அதனால்தான் அவர்கள் ஒரே விசயத்தில் இரண்டு நிலை எடுக்கிறார்கள். முதலாளித்துவ ஜனநாயகத்தில் நீதி கிடைக்காது. தற்காலிக தீர்வு வேண்டுமானால் கிடைக்கும்.

பெண்கள் மீதான வன்கொடுமைகள் நிகழாமல், ஆண்-பெண் ஏற்றத் தாழ்வற்று, சமமான வாழக்கை; லெனின், ஸ்டாலின் தலைமையிலான சோசலிச அரசில் இருந்தது. இதை எடுத்து சொல்வதற்கு எந்த முதலாளித்துவ அறிவாளிகளுக்கும் வாய் வர மறுக்கிறது.

அதற்கு மாறாக, ‘பெண்களுக்கு எதிரான இது போன்ற குற்றங்களுக்கு.. அமெரிக்காவில் இதற்கு.. பிரான்ஸில் இதற்கு…’ என்று முதலாளித்துவ, ஏகாதிபத்திய நாடுகளின் சட்டங்களையே பரிந்துரைக்கிறார்கள்.

பெண்ணின் மீதான சதைப் பசியின் காரணமாக, இந்தியாவில் நடப்பதைவிட இழிவான குற்றங்கள் ஏகாதிபத்திய நாடுகளில் நடக்கிறது. பெண்ணின் மீதான சதைவெறி, பெண்ணை வெட்டி வேகவைத்து சாப்பிடுவதுவரை வெறி கொண்டு அலைகிறது.

உண்மையில் இந்தியப் பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கபட்ட மக்களுக்குமான சரியான இறுதியான நீதி, ‘சூ.. மந்திர காளி..’ என்று பல மாற்றங்களை செய்கிற ‘மார்க்ஸ்’ என்ற மந்திரவாதியிடம்தான் இருக்கிறது.

அதை மக்கள் விரும்புகிறார்களா இல்லையா? என்பதைவிட, ‘கம்யுனிஸ்டுகள்’ அதை விரும்புகிறார்களா என்பதே தான் பிரச்சினையின் அடிப்படையாக இருக்கிறது. .

தலித் மக்கள் மீதான வன்முறை, பெண்கள் மீதான தாக்குதல் இவைகளின் மேல் கருத்து சொல்கிற கம்யுனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள்கூட, தேர்தல் அரசியல் கூட்டுக்கு பாதகம் இல்லமாலும், பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களுக்கு வலிக்காமல் அவைகளுக்குத் தோதான வகையிலும் பேசுகிறார்கள். தலித் மக்களுக்கு, பெண்களுக்கு எதிராக இருக்கிற இந்து பார்ப்பனியத்தை விமர்சிக்க மறுக்கிறார்கள்.

பெண்களுக்கு எதிரான சாமியார்களை, ஆதினங்களை சரியாக விமர்சிக்க, தண்டிக்க துணிகிற கம்யுனிஸ்டுகள், மாதர் சங்கங்கள்; அதே வேலையை ‘சங்கராச்சாரி’ செய்தால், அது அவர்களுக்குத் தெரியுமா என்பதுகூட தெரியாததுபோல் தான் நடந்து கொள்கிறார்கள்.

நிலப்பிரபுத்துவ கூறுகளும், முதலாளித்துவ ஜனநாயகமும் மட்டும்தான் கம்யுனிஸ்ட் கட்சிகளிடமே இருக்கிறதென்றால் மற்றவர்களின் நிலை..?

கல்யாணத்திற்கு விடியோ கவரேஜ் வைப்பதுபோல், தலித் மக்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கும்போது ஊடகங்கள் வைக்கிற விடியோ கவரேஜ்க்கு ஏற்றார் போல் கருத்து சொல்வதில் அதிக கவனம் பல முற்போக்காளர்களிடம் குவிந்து கிடக்கிறது.

“நம்மளோட இந்த டீ. வி நிகழ்ச்சிக்கு, ‘அவரை’ கூப்பிடலாம். அவரு நம்முளுக்கு ஏத்தா மாதிரி பிரச்சினை இல்லாமல் சிறப்பா பேசிக் கொடுப்பாரு” என்று நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக உணருகிற பேச்சாளராகத்தான் நிறைய நிலைய வித்துவான்கள் இருக்கிறார்கள்.

**

இந்து பார்ப்பன தலித் விரோத ஜாதி ஜாதி வெறியை; டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் அரசியல் முறையில் சமரசமற்று அம்பலப்படுத்துவதும்; பெண்கள், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கபட்ட மக்களின் விடுதலையை, காரல் மார்க்சின் வழியில் நிறைவேற்றுவதும்தான் இதற்கான தீர்வு.

‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ என்றார் பிடல் காஸ்ட்ரோ.

பெண்களை, ஒடுக்கபட்ட மக்களை வரலாறு அல்ல, மார்க்சியமே விடுதலை செய்யும். ஏனென்றால் ஆதிக்க வரலாறை அடியோடு புரட்டி போடும் சக்தி மார்க்சியம் என்ற நெம்பு கோலிடம்  மட்டமே உண்டு.

தொடர்புடையவை:

பத்திரிகைகளின் பாலியல் வன்முறையும் தூக்கு தண்டனையும்

பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்

சானிடரி நாப்கின்; நமது கருத்தும், அதிமுக அரசின் திட்டமும்

பாலியல் தொழிலா? விபச்சாரமா?

கடலை மன்னர்களின் உருவ வழிபாடு

பொண்டாட்டிய நம்பறவனுக்கு பேர்தான் புருசன்..

பெண்களுக்கான இடஒதுக்கீடு: தெய்வக் குத்தம்

செல்போனில் பெண்கள்….

சமையல்; ஆண்களும் பெண்களும்

பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது!

ஜொள்ளு காழ்ப்புணர்ச்சி-தகுதி திறமை

19 thoughts on “பாலியல் வன்முறைக்கு தண்டனை தூக்கு! அப்போ..‘மாமா வேலை’க்கு..?

  1. உடகங்காள் முகதிரை கிழிதது மடும் இன்றி பெண் அடிமைதநம் சாதிய கொடுமை மதஇழிவு பற்றியும் அற்ப்புதமாக சொன்னிர்கள் மார்க்சியம்தன் திர்வு உண்மைதன் கமியூனிஸ்ட் என்று சொன்னிற்கள் இல்லைய அவர்களை போலீ கமியூனிஸ்ட் என்று திருத்தி சொல்லுங்கள் தோழரெ

  2. பெண்களை, ஒடுக்கபட்ட மக்களை வரலாறு அல்ல, மார்க்சியமே விடுதலை செய்யும். ஏனென்றால் ஆதிக்க வரலாற்றை அடியோடு புரட்டி போடும் சக்தி மார்க்சியம் என்ற நெம்பு கோலிடம் மட்டமே உண்டு.

  3. மிக எளிய, வலுவான, ஆழமான, செரிவான பதிவு. மகளிர் விடுதலை நோக்கிய பயணத்தில் இன்னும் ஓர் அடி முன்னேற்றத்தை ஏற்படுத்தும் இக்கட்டுரையைப்பகிர்வோம். வாழ்த்துக்கள் தோழர். வெல்க மார்க்சியம்! ஓங்குக சமூக சமத்துவம்!

  4. இலாபம் வரும் என்றால் தனக்கு சவக்குழியைக் கூட தானே தோண்டிக் கொள்ளும்- முதலாளித்துவம்- மார்க்ஸ். பயன்படுத்தவேண்டிய வரிகள் அடிக்கடி. நன்றி. வணக்கம்.

  5. சிறப்பான கட்டுரை . ஓரளவிற்கு genetics இதற்கு காரணமாக இருக்கலாம்.

Leave a Reply

%d