மணிரத்தினத்தின் ‘கடல்’; கிறிஸ்த்துவ உயர்வும் மீனவர் இழிவும் : ஜெயமோகனுக்கு நன்றி!

sukasini

பாரபட்சம் இல்லாமல், யாராக இருந்தாலும் நெற்றிக்கண்ணை திறந்து விமர்சிக்கிற, இந்தியாவின் ‘சிறந்த’ சினிமா விமர்சகரும், நடிகையுமான சுஹாசினி; இந்தியாவின் ‘மிக சிறந்த’ ஒரே இயக்குநரும் தனது கணவருமான மணிரத்தினத்துடன்

*

கடல் திரைப்படம் கிருத்துவ மதத்தை மோசமாக காட்டியது அதைப்பற்றி உங்கள் கருத்து?

கே. மணிகண்டன், திருநெல்வேலி.

கடல் கிறிஸ்த்துவ மதத்தை உயர்வாகத்தான் காட்டியது. குறிப்பாக கிறிஸ்த்துவ பாதிரியார்களை தியாகிகளாகவும் கிறிஸ்த்துவ நிறுவனங்கள்; ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்பவையாகவும், ஒழுக்கக் கேடான நபர் பாதிரியாராக ஆக முடியாது, பாதிரியாக உள்ளவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வந்தாலும் அவர்களை உடனே அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிடுவார்கள் என்ற புனித பிம்பங்களோடுதான் ‘கடல்’ கிறிஸ்த்துவ நிறுவனங்களை கவுரப்படுத்தியிருந்தது.

இந்து கண்ணோட்டம் கொண்டவர்கள் எப்போதும் கிறிஸ்த்துவ மதத்திற்கு எதிராக, கிறிஸ்த்துவ நிறுவனங்களுக்கு எதிராக கருத்து சொல்ல மாட்டார்கள்.

மாறாக கிறிஸ்த்துவர்களைத்தான் இழிவாக சித்தரிப்பார்கள். சினிமாவில் கூட, கபரே நடனம் ஆடுகிற பெண்ணை, ஆண்களை மயக்குகிற ஒழுக்கக்கேடான பெண்ணை;  கொலை, கொள்ளை செய்கிற ஆண்களை கிறிஸ்த்துவர்களாகத்தான் காட்டியிருக்கிறார்கள்.

காரணம், கிறிஸ்த்துவ மதத்தின் மேல் உள்ள வெறுப்பினால் அல்ல; மிக அதிக அளவில்  கிறிஸ்த்துவர்களாக இருக்கிற தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள் மற்றும் மீனவர்கள் மீது இருக்கிற ஆதிக்க ஜாதி இந்துவின் காழ்ப்புணர்ச்சியே.

சின்ன மாமனார் இஸ்லாமிர்களுக்கு எதிராக விஸ்வரூபமாக நின்றார்; மருமகன் கிறிஸ்த்துவ மீனவர்களுக்கு எதிராக சுனாமி அலையாக அட்டகாசம் செய்திருக்கிறார்.

மீனவர்களின் துயரம் குறித்து ஒரு வார்த்தை பேச முடியாத கடல், தலையில் சுமையோடு வேகமாக நடந்துபோகும் மீனவப் பெண்களின் பின்பக்கத்தை ரசணையோடு காட்டியிருக்கிறது, சுந்தர ராமசாமியின் கண்களால்;

23 ஆண்டுகளுக்கு முன் நான் படித்த ‘ஒரு புளியமரத்தின் கதை’ என்ற கதையில், சுந்தர ராமசாமி, ‘மீனவ பெண்கள் தங்கள் பின்பக்கம் குலுங்க கூடையை…’ என்றோ அல்லது ‘குண்டிகள் குலுங்க’ என்றோ எழுதியிருப்பார், (நினைவிலிருந்து எழுதுகிறேன்) அந்த வரி இந்தப் படத்தில் காட்சியாக்கப்பட்டிருக்கிறது. எதிர்ப்பை நினைவில் கொண்டு புத்திசாலித்தனமாக ஒரு பெண்ணின் பார்வையில்.

உழைக்கச் சலிக்காத, உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்ட மீனவர்களை இழிவானவர்களாகவும், ஒழுக்கக் கேடானவர்களாகவும், பசியால் இருக்கும் ஒரு குழந்தைக்குக்கூட சோறு போடாமல் விரட்டியடிக்கிற மனிதாபிமானம் என்றால் என்னதென்றே அறியாத பொறுக்கிகளாகவும் சித்தரித்தது கடல்.

அதுவும் கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து போர்குணத்தோடு போராடி வருகிற இந்த சூழலில், மீனவர்களுக்கு எதிராக அவர்களை ஏமாற்றுக்காரர்கள், முன்கோபி, முரடர்கள், முட்டாள்களாக சித்தரித்து மற்ற தமிழர்களின் கண்ணோட்டத்தில் அவர்களை பற்றிய மோசமான மதிப்பீட்டை உருவாக்க முயற்சித்தது கடல்.

அணுஉலைக்கு எதிராக போராடுகிற தோழர் உதயகுமார் ‘நான் யாரிடமும் பணம் வாங்க வில்லை. இந்த மாதா மீது சத்தியம்’ என்று சொன்னபோது, குழந்தையைப்போல் உதயகுமாரை கட்டி பிடித்து பதறி அழத; அன்பும் பாசமும் நிறைந்த அந்த மீனவப் பெண்களைத்தான் மனிதாபிமானம் அற்ற இழிவானவர்களாக சித்தரித்தது கடல்.

’16 வயதுகூட நிரம்பாத பெண்ணை முத்தக்காட்சியில் நடிக்க வைக்கலாமா..?’ என்று முதலாளித்துவ நியாயத்தோடு மட்டும் கேள்வி கேட்ட அறிவாளிகளும்,  ‘படம் ரொம்ப அறுவை..’ என்று சுவாரஸ்யத்தின் அடிப்படையில் மட்டும் கருத்துச் சொன்ன தமிழ் உணர்வாளர்களும்

கத்தோலிக்க தமிழ் மீனவர்கள் பிரச்சினை வழியாக மட்டுமே ஒட்டுமொத்தமான தமிழர் பிரச்சினையையும் பார்க்க முயற்சித்து, பெரியாரை திராவிட இயக்கத்தை விமர்சிப்வர்களும்கூட; கடல் படத்தின் கத்தோலிக்க தமிழ் மீனவர் எதிர்ப்பை கண்டிக்கவில்லை.

நல்லவேளை சரியா வெட்ட தெரியாதவன் வெட்னதால தப்பிச்சேன்..’ என்று வடிவேலு ஒரு படத்தில் சொல்வதுபோல்,

கிறிஸ்த்துவ மீனவர்களுக்கு எதிராக வந்த கடல், தனது மோசமான, சுவாரஸ்யமற்ற திரைக்கதையால் மற்ற தமிழர்களிடம் மீனவர்களை பற்றிய இழிவான மதிப்பீட்டை உருவாக்குவதற்கு முன் தோல்லியடைந்தது பெரும் மகிழ்ச்சிக்குரியது.

அந்த வேலையை சிறப்பாக செய்த கடல் திரைக்கதை ஆசிரியருக்கு நன்றி சொல்ல வேண்டியது நம் கடமை.

இருந்தாலும், படத்தை அதிக விலை கொடுத்து வாங்கிய வினியோகிஸ்தர்கள் மட்டுமல்ல, பொண்டாட்டி தாலிய அடகு வைத்து, போலிசுக்கு பயந்து, தன் வாழ்க்கையையே பணயம் வைத்து திருட்டு விசிடியில் கடல் படத்தை கொண்டுவந்தவங்க கூட நடுத்தெருவுல நிக்கிறாங்களாம்; அதுதான் வருத்தமா இருக்கு.

*

தங்கம் மார்ச் 2013 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

*

‘கிறிஸ்த்துவர்கள் மீதான தாக்குதல்’ என்ற பெயரில் தலித் மக்கள் தாக்கப்படுகிறார்கள்

‘குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ விஸ்வரூபம் விமர்சனம்

‘நீர்ப்பறவை’ : மீனவர் வழக்கா? தேவர் வழக்கா?

மரணதண்டனை கைதிகளை சிறையில் சந்தியுங்கள் : அற்புதம்மாள்

17-02-2013 அன்று ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ சார்பில்  சென்னை வண்டலூரில் உள்ள தலைநகர் தமிழ்ச் சங்கத்தில் ஆனந்த பட்வர்த்தன் இயக்கிய ‘ஜெய் பீம் தோழர்’ என்ற ஆவணப்பட திரையீடு, என்னுடைய சிறப்புரையோடு நடந்தது.

பெரியார் மீதான அவதூறுகளுக்கு பதிலும், டாக்டர் அம்பேத்கர்-பெரியாரின்  இன்றைய தேவைக் குறித்தும் நான் விரிவாக பேசினேன்.

1 மணியும் 30 நிமிடங்களும் நான் பேசியதை முழுமையாக  பேரறிவாளினின் தாயார் அற்புதம்மாள் அவர்கள் கேட்டார்கள். அது எனக்கு பெரும் மகிழ்ச்சிக்குரியது.

நான் பேசி முடித்த பிறகு அதிகாலை நவினும் நானும் அம்மாவிடம் பேசியதின் பதிவே இந்த ஒளிக் காட்சி.

தொடர்புடையவை:

மூன்று பேருக்கு தூக்கு; இதுதான் காந்தி தேசத்தின் அகிம்சை

அன்னா அசாரேவிற்கு வாழ்த்து தமிழனுக்கு தூக்கு; இது தாண்டா இளைய தளபதி விஜய் ஸ்டைல்

மட்டமான அறிவாளி அல்லது கை தேர்ந்த சந்தர்ப்பவாதி

fraud

காரல் மார்க்சை, டாக்டர் அம்பேத்கரை குறித்து பொய்யும், மிக அதிகமாக பெரியாரை திராவிட இயக்கத்தை இழிவாக, அவதூறாகவும்; இடதுசாரி இலக்கியங்களை கேலி செய்கிற, அழகியல் குறித்து அதிகம் வலியுறுத்துகிற ஒருவன்;

மிக மட்டமான தமிழ் சினிமாக்களைப் பற்றி எந்த கருத்தும் சொல்லாமல் இருந்தால், அவன் சினிமாவுக்கு வசனம் எழுதுறவனா இருப்பான்.. அதுப்போல்…

*

தோழர்களே, கை தேர்ந்த இழிவான ஓர் சந்தர்ப்பவாதியை சுட்டிக்காட்டுவதற்கு உதாரணமாக மேலே குறிப்பிட்டிருக்கிற என் எடுத்துக்காட்டை நீங்கள் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

குழந்தையை கொன்ற வேங்கட ராஜபக்ச ஜலபதி!

prabakaran

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகன், சிறுவன் பாலசந்திரனை இலங்கை ராணுவத்தினர் கொடூரமாகக் கொன்றுள்ளனர். சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள படம் தெளிவாக சாட்சி சொல்கிறது.

பாலசந்திரனுக்கு உண்பதற்கு பிஸ்கட்டும், குளிருக்கும் உடையும் தந்த பிறகு கொன்றிருக்கிறார்கள்.

குழந்தையை ராணுவம் பிடித்து வைத்து, அவனுடன் உரையாடி அவன் ‘பசியும் குளிருமாக இருக்கிறேன்’ என்று சொன்ன பிறகு, அதற்கு உடையும், உணவும் தந்துவிட்டு, ‘முக்கியமானவரின்’ உத்தரவுக்காக காத்திருந்திருந்திருக்கிறார்கள்.

உத்தரவு வந்தவுடன் கொன்றிருக்கிறார்கள்.

அந்த உத்தரவை ராஜபக்சேவைத் தவிர வேறு யார் தந்திருக்க முடியும்?

‘தமிழர்களுக்கு எதிராக எவ்வளவு கொடூரம் செய்தாலும் திருப்பதி வேங்கடாஜலபதி (இந்தியா) துணையாக இருக்கும் வரை என்னை யார் என்ன செய்ய முடியும்?’ என்ற திமிரோடு இருக்கும் தேவந்திர ராஜபக்சேவின் கொலைவெறிக்கு திருமாலே (இந்தியா) காரணம்.

சர்வேதச குற்றவாளிகளாக அறிவிக்கப்படவேண்டியது ராஜபக்சே அரசு மட்டுமல்ல; சோனியா அரசும்தான்.

தொடர்புடையவை:

அப்சல் குருவுக்கு தூக்கு; காங்கிரசின் விஸ்வரூபம்!

மூன்று தமிழர்களை தூக்கிலிட துடிக்கும் ‘தினகரன்’

ராஜபக்சேவை தடுத்து திருப்பிய லண்டன் வாழ் தழிர்கள்.. ஆனால் நம்மால்..?

கொலைகாரனே கூக்குரலிடுகிறான்-சிங்கள ராஜபக்சேவின் தமிழ் உணர்வு

விஜய் டீ.வி. நீயா நானாவின் இடஒதுக்கீடு..

you

பெரியார், டாக்டர் அம்பேத்கர் கருத்துகளை தொடர்ந்து இணையங்களில் சிறப்பாக எழுதி வருகிற, டாக்டர் அம்பேத்கர்-பெரியார் பற்றி அவதூறு செய்பவர்களோடு வலுவாக தர்க்கம் செய்து, அவர்களை அம்பலப்படுத்துகிற, தோழர். பிரபா அழகர் தன்னுடைய facebook ல் நேற்று விஜய் டீ.வியில் ஒளிபரப்பான ‘நீயா நானா’ நிகழ்ச்சி பற்றி எழுதியதை ஆதரித்து நான் எழுதியது.

*

பல வருட நீயா நானா வரலாற்றில் எனக்கு தெரிஞ்சு இன்னைக்குதான் இடஒதுக்கீடு குறித்து பேசப்படுகிறது (அதுவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மொக்கையான வாத பிரதிவாதங்கள்), பின்ன எப்படி இடஒதுக்கீட்டை பற்றி சரியான புரிதல் இன்றைய இளைஞர்களுக்கு இல்லைன்னு அந்த நிகழ்ச்சியை நடத்துபவரால் குற்றம்சாட்டமுடிகிறது ..

பிரபா அழகர்

ஆமாம்.

விளக்கம் கொடுக்கிறவர்களிடமே அதற்கான தெளிவான விடை இல்லாதபோது…

மாணவர்கள் தங்கள் கல்வியைத் தவிர, மற்ற பொது விசயங்கள் எல்லாவற்றையும் ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்து கொள்கிறார்கள். ஊடகங்கள் உண்மையைத்தான் சொல்லும் என்கிற புரிதலோடு இருக்கிறா்கள்.

ஒட்டுமொத்த ஊடகங்களும் இடஒதுக்கீடு எதிர்ப்பு, தாழ்த்தப்பட்டவர்கள் மீதான காழ்ப்புணர்ச்சி, இஸ்லாமிய வெறுப்பு என்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கருத்துகளோடு வடித்தோடு இயங்கும்போது, அவைகள் மூலமாக பொது விசயத்தை புரிந்து கொள்கிற இந்த இளைஞர்கள்; ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக கருத்து சொன்னால்தான் அது ஆச்சர்யம்.

டிசம்பர் 24 (பெரியார் நினைவுநாள்) அன்று நீயா நானாவில் மாணவர்களுடன் எழுத்தளார்கள், பத்திரிகையாளர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடக்க இருப்பதாகவும் அதில் நானும் கலந்து கொள்ள வேண்டும் என்று டிசம்பர் 20ஆம் தேதி விஜய் டி.வியிலிருந்து ஒரு பெண் தோழர் பேசினார். (பெயர் நினைவில்லை)

‘எத்தனைபேர் கலந்து கொள்கிறார்கள் என்றேன்’ ’15 க்கு 15’ என்றார்.
‘30 பேர்கள் கருத்து சொல்கிற இடத்தில் நான் ஒரு நிமிடமோ இரண்டு நிமிடமோ கருத்து சொல்வதில் அந்தப் பிரச்சினையை சரியாக சொல்லிவிட முடியாது.
அதனால் கூடுதல் நேரங்கள் பேச வாய்ப்பிருக்கிற நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்’ என்று அழைத்தைமைக்காக அவருக்கு நன்றி சொல்லி கலந்துகொள்ளமுடியாததற்காக வருத்தம் தெரிவித்தேன்.

நானும் நேற்று ‘நீயா நானா’ பார்த்தேன். விளக்கம் சொன்னவர்கள் அந்த இளைஞர்களின் அறியாமையை அகற்ற, எளிதில் புரிந்துகொள்வது மாதிரி பேசியிருக்கலாம்…

குறிப்பாக இடஒதுக்கீடு பற்றியான எதிர்கருத்துகளுக்கு,

‘இந்தியாவில் இடஒதுக்கீடு 2000 ஆண்டுகளாக இருக்கிறது, அரசின் அனைத்து சலுகைகளும் பார்ப்பனர்களுக்கு பிறகு சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் என்று மனு என்பவர் சட்டம் செய்து வைத்தார்..
அதற்கு மாற்றாக இந்த நூற்றாண்டில் நீதிக்கட்சிகாரர்கள், பெரியார், டாக்டர் அம்பேத்கர் இவர்கள் கொண்டுவந்த, வலியுறுத்திய இடஒதுக்கிடு அதை தலைகீழாக திருப்பிப் போட்டதுதான்.

பார்ப்பனர்கள் இருந்த இடத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள், பிறகு பிற்படுத்தப்பட்ட மக்கள் கடைசியாக பார்ப்பனர்கள்…
இந்த இடஒதுக்கீடுக்கு 60 ஆண்டுகள்தான் ஆகிறது…
2000 ஆண்டுகள் ஆதிக்கத்தை 60 ஆண்டுகளில் எப்படி ஒழிக்க முடியும்?’ என்றும்..

மிக பிற்படுத்தப்பட்ட மாணவன் தாழ்த்தப்பட்டவர்களின் இடஒதுக்கீடு குறித்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்,
சமூக நீதி அரசியல், இடஒதுக்கீடு ஆதரவு  என்று அரசியல் செய்கிற ராமதாஸ் போன்றவர்களே அப்படி இருக்கும்போது இந்த மாணவன் கண்ணோட்டம் ஆச்சரியமில்லை…

‘மிக பிற்படுத்தப்பட்டவர்கள்’ என்ற சலுகையை அனுபவிக்கிற உங்கள் ஒதுக்கீட்டை, பிற்படுத்தப்பட்டவர்களும் பார்ப்பனர்களும் குற்றமாக சொல்கிறார்கள்….’ என்று கேட்டாவது அவருக்கு புரிய வைக்க முயற்சித்திருக்கலாம்…

என்னால் கடைசிவரை பார்க்க ‘முடியவில்லை’, அதற்குப் பிறகு விளக்கினார்களா தெரிவில்லை.

தொடர்புடையவை:

இடஒதுக்கீடு நாட்டை கெடுத்துவிட்டது

நாட்டாம.. தீர்ப்ப மாத்தி சொல்லு… விஜய் டீ.வி. நெல்லை கண்ணனை கண்டித்து…

2ஆயிரம் ஆண்டுகளாக பல்லக்கு சுமந்தவர்கள்

அப்சல் குருவுக்கு தூக்கு; காங்கிரசின் விஸ்வரூபம்!

hang

அப்சல் குரு தூக்கிலிடப் பட்டிருக்கிறார்.

காங்கிரஸ், பி.ஜெ.பி இரண்டு கட்சிகளுக்கும்; பெயர்களும் தலைவர்களும்தான் வேறு, வேறு. எஜமான் ஒருவர்தான்.

காங்கிரசின் இந்த நடவடிக்கை, இந்து மனநிலையின் வெளிபாடு மட்டுமல்ல; அதுதான் அமெரிக்க விசுவாசமும் கூட.

இது காங்கிரசின் விஸ்வரூபம்.

கமலின் அமெரிக்க பாசமும், இஸ்லாமியர் மீதான வெறுப்பும் கலந்த, விஸ்வரூபம் போன்றவைகளுக்கு ‘கருத்து சுதந்திரம்’ என்ற பெயரில் ‘அறிவாளிகளே’ ஆதரவு தெரிவித்தால், இஸ்லாமிய நாடுகளின் மனித உரிமை மீறல்களை, மதத் தீவிரவாதத்தை கமல்ஹாசனுக்கு ஆதரவாக மடை மாற்றினால்,
அப்சல் குருவை தூக்கில் போடாமல்..?

அமெரிக்க கம்பெனியான ‘யூனியன் கார்பைடு’ மூலம், விஷவாயு கசிவால் போபாலில் 15, ஆயிரம் ஏழை இந்தியர்களை கொன்று விட்டு, அமெரிக்காவில் பதுங்கி இருக்கும் ஆண்டர்சனையா தூக்கில் போட முடியும்?

விஸ்வரூபத்தை ஆதரித்த அதே ஆட்கள் அப்சல் குரு தூக்கையும் ஆதரிக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் அதே அமெரிக்க, இந்து நியாயங்கள் குவிந்து கிடக்கின்றன.

அவர்களிடம் நாம் என்ன கேட்க முடியும்?

சவுதி அரேபியாவின் கொடூரமான தண்டனைக்கு பலியான அப்பாவி இலங்கை பெண்ணின் வீடியோவை பார்த்து கை நடுங்க;  ‘விஸ்வரூப எதிர்ப்பு இந்திய முஸ்லிம்களுக்கு’ அறிவுரை சொன்ன இந்து அறிவாளிகள்,

அப்சல்குருவின் மரண தண்டனை வீடியோவை பார்த்தால் அதேப்போல் கை நடுங்க கருத்துச் சொல்வார்களா?

காட்சியாக பார்க்கும்போது எந்த மரணமும் கொடூரம்தான்.

கொடூரம் என்பது தலையை தனியாக வெட்டுவது மட்டுமல்ல; கயிறால் கழுத்தை இறுக்கி கொல்வதும்தான்.

சவுதிஅரேபிய அரசின் மனிதாபிமானமற்ற அந்தக் கொலைக்கும், ‘ஜனநாயக’ நாடான இந்திய அரசின் இந்தக் கொலைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

அவரவர்களின் ஜாதி, மத, வர்க்க அரசியல் கண்ணோட்டத்தைத் தவிர.

எது மனிதாபிமானம்?

அதுவும் இவைகளின் அடிப்படையிலேயே பரிசிலிக்கப்படுகிறது.

மரணத்திற்கு கண்ணீரா? கை தட்டலா? அதையும் அவரவர்களின் அரசியலே முடிவு செய்கிறது.

தொடர்புடையவை:

மூன்று தமிழர்களை தூக்கிலிட துடிக்கும் ‘தினகரன்’

விஸ்வரூப தந்திரம்

விஸ்வரூபம்; தமிழக அரசின் தடையை ஆதரிப்போம்!

இது விஸ்வரூபம் விமர்சனம் கிடையாது…

‘குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ விஸ்வரூபம் விமர்சனம்

kamal

இன்றைக்கு நாளிதழ்களில் வெளியாகி இருக்கிற இந்த உதை யாருக்கான பதிலோ?
*

விஸ்வரூபம் ஒரு வழியா படத்தை பார்த்து தொலைச்சேன். ஆமாம், அத இப்படித்தான் சொல்லவேண்டியிருக்கு..

இந்த எரிச்சல் படத்தின் உள்ளடக்கத்தை சார்ந்து மட்டுமல்ல, வடிவதினாலும்தான்.

உள்ளடக்கம் கோபம் கொள்ள வைக்கிறது. வடிவம் எரிச்சலும் அலுப்பும் ஊட்டுகிறது. அப்படி ஒரு சுவாரஸ்யமற்ற திரைக்கதை.

மதிமாறன் என்கிற நான், நண்பர் அதிகாலை நவின், அவரின் தம்பி வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் மூவரும் 5-02-2013 அன்று ஆந்திர மாநிலம் சத்தியவேடுக்கு சென்று விஸ்வரூபத்தை பார்த்தோம்.

‘இஸ்லாமிய அமைப்புகள் நீக்க சொன்ன காட்சிகளை பார்த்தால், கமலின் யோக்கியதையை கூடுதலாக தெரிந்து கொள்ளலாம்’ என்பதற்காகவே அந்த நீண்ட பயணம்.

நீக்கச் சொன்ன காட்சிகளை தாண்டியும் ‘துடிப்போடு’ இருக்கிறது விஸ்வரூபம்.

இந்தப் படத்தின் பல காட்சிகளையும் வெட்டி எடுத்துவிட்டு, ஒரு அய்ந்து நிமிட நேர குறும்படமாக சுருக்கினாலும், அதற்குள்ளும் இஸ்லாமிய காழ்ப்புணர்ச்சியும் அமெரிக்க விசுவாசமுமே ‘துடிப்போடு’ நிறைந்து வழியும்.

‘இந்தியனாக இரு, இந்திய பொருட்களை வாங்கு..’ என்று தேசபக்தியோடு நமக்கு அருளுரை செய்த பலர் அமெரிக்காவிற்கு சென்று குடியேறியதைப்போல்; தனது முந்தைய படங்களில் ‘இந்தியனாக’ இருந்து இந்திய தேசபக்தியை ஊட்டிய கமல்; இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அல்ல, ஒவ்வொரு ஷாட்டிலும் ‘அமெரிக்கனாக இரு, அமெரிக்காவை நேசி’ என்று தன்னை அமெரிக்க அடிமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.

படத்தில் கமல் பயன்படுத்துகிற கார்கள் கூட அமெரிக்க தயாரிப்புகள் மட்டுமே.

விஸ்வரூபம் முதல் விளம்பரம் வந்தபோது, 6-6-2012 அன்று ‘‘கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; அமெரிக்க சார்பு இஸ்லாமிய எதிர்ப்பு படம்தான்? என்று எழுதியிருந்தேன்.

என் எழுத்தை பொய்யாக்கவில்லை கமல். எவையெல்லாம், யாரெல்லாம் அமெரிக்காவிற்கு, அமெரிக்கர்களுக்கு பிடிக்கதோ அவைகளெல்லாம், அவர்களெல்லாம் படத்தில் வில்லன்கள். வில்லத்தனமான குறியீடுகள்.

ஆப்கான் நாட்டு இஸ்லாமிர்களை மட்டுமல்ல; பாகிஸ்தான், இந்தியா, நைஜீரியா என்று பல நாட்டு முஸ்லீம்களை ‘அல்கொய்தா’ தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்று காட்டுகிறார்.

கமலே ‘காஷ்மீர் முஸ்லிம்’ என்று சொல்லிதான் ஆப்கானியர்களுக்குள் ஊடுறுவுகிறார். ‘காஷ்மீர் முஸ்லிம்’ என்று சொன்னவுடன், ஆப்கான் இஸ்லாமியர்கள் அவரை கொண்டாடுகிறா்கள்.

அமெரிக்கர்களுக்கு இஸ்லாமியர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சிபோலவே ஆப்பரிக்க கருப்பர்களின் மீதும் உண்டு. அதற்காகவே படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நைஜிரியாவைச் சேர்ந்த, கருப்பின முஸ்லிமே தீவிரவாதி.

‘பாபர் மசூதி இடிப்பு, குஜராத்தில் இஸ்லாமியர்கள் மேல் கொலைவெறி தாக்குதல், விஸ்வரூபத்தில் இஸ்லாமியர் எதிர்ப்பு’ என்று இதுபோன்ற சம்பவங்கள் தீவிரமாக நடக்கும்போது, ஒரு பகுத்தறிவாளைனைப்போல் ‘இஸ்லாத்தில் பெண்ணடிமைத்தனம், சவுதி அரேபியாவில் மனித உரிமை மீறல்’ என்று தொடர்ந்து நீட்டி முழங்குகிற அல்லது அதுபோன்ற கட்டுரைகளை மட்டும் ‘Like’ செய்கிற இந்து அறிவாளிகளைப்போல்,

இஸ்லாமிய நாடுகள்; பெண்கள் உட்பட தனி மனிதர்களுக்கு மிக மோசமான, கொடுமையான தண்டனைகளை தருவதை, கடுமையாக கண்டிக்கிற அமெரிக்கா;

இன்னொருபுறத்தில் ஒரு நாட்டின் மீது ஈவு இரக்கம் இல்லாமல் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்களை விமானத்திலிருந்து குண்டு வீசி கொல்வதை எப்படி நியாப்படுத்துகிறதோ;

அதுபோல், இந்தப் படத்திலும் இஸ்லாமியர்கள் செய்கிற கொலைகளை, கொடுமையாகவும் பார்வையாளர்களுக்கு ‘ச்சீ..இவனுங்க எல்லாம் மனுசனா..?’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது.

ஆனால், இதற்கு நேர் மாறாக, அமெரிக்க சார்பாக கமல்ஹாசனும், வெள்ளைக்காரர்களும் ஆப்கானியர்களை, இஸ்லாமியர்களை செய்கிற கொலைகள் நியாயமாகவும், ‘இவர்களை கொலை செய்வதுதான் தர்மம்’ என்கிற எண்ணத்தையும ஏற்படுத்துகிறது.

சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வேறு ஒருவருடன் உறவில் ஈடுபடும் பெண்ணை; அவளின் கணவர், கத்தியால் குத்தும்போது, சிறுவனாக இருக்கிற கமல், ‘குத்துங்க எஜமான்.. குத்துங்க.. இந்த பொம்பளைங்களே இப்படித்தான்..’ என்பாரே அதுப்போல்;

அமெரிக்கர், அமெரிக்க காவல்துறை, கமல் இவர்கள் சகட்டுமேனிக்கு இஸ்லாமியர்களை கொலை செய்யும்போது, பார்வையாளர்களுக்கு, ‘குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

கமல்ஹாசன் ‘பாய்’ கூட வெள்ளைக்காரப் பெண் மருத்துவர் கொலை செய்யப்படும்போது, அமெரிக்கர்கள் கொலை செய்யப்படும்போது துக்கம் தாங்காமல் குமுறுகிறார்.

இதே உணர்வுதான் பார்வையாளர்களுக்கும் ஏற்படுகிறது.

தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் என்பவர் ‘விஸ்வரூபம் பிராமணர்களுக்கு எதிராக இருக்கிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை அவர் கமல் ஆலோசனையின் பெயரில் செய்தாரோ என்று சந்தேகிக்கும் படியாக இருக்கிறது படத்தில வரும் காட்சி.

பார்ப்பன பெண், அமெரிக்கர்களை விட பெரிய அறிவாளியாக இருக்கிறார். ஒரு நகரத்தையே அழிக்க இருக்கிற ‘வெடிகுண்டை’ அமெரிக்காகாரன் செய்வதறியாது முழித்துக்கொண்டிருக்கும்போது, அவர்தான் தன் அறிவால் தடுத்து நிறுத்துகிறார்.

**

இஸ்லாமிய வெறுப்பும் அமெரிக்க விசுவாசமாகவும் படம் நகர்கிறது. ‘நகர்கிறது’ என்கிற இந்த வார்த்தையை நேரடியாக புரிந்து கொள்ளுங்கள். திரைக்கதை அமைப்பு அப்படி மந்தமாக இருக்கிறது. அதுவும் பிற்பகுதி… ‘பப்புள்காமில் செய்த பிலிம்ரோல்…’

ஒரு படத்தை பலமுறை பார்க்கிற சினிமா விரும்பியாக இருக்கிற கமல் ரசிகர்களுக்கே இந்தப் படம் நிச்சயம் பிடிக்காது; காரணம் ‘இஸ்லாமிய எதிர்ப்பு’ என்பதற்காக அல்ல; நான் சொன்ன அந்த ‘நகர்கிறது’ பிரச்சினைதான். படத் துவக்கதில் ‘ஆரவாரத்தோடு படம் பார்த்த ரசிகர்கள், கொஞ்சம் கொஞ்சமாக தொய்வடைந்து, போக போக.. கமல் வசனத்தைவிட, ரசிகர்கள் பேசுகிற வசனமே அதிகம் தியேட்டரில் எதிரொலித்தது.

இடைவேளையின் போது, என்னிடம் பேசிய ஒரு ரசிகர், ‘தலைவரு தப்பான வேசத்துல நடிக்கிறாரு.. காதல் மன்னன்.. இன்னும் ஒரு கிஸ்கூட அடிக்கல..’ என்று ஆதங்கப்பட்டார்.

நண்பர் நவினுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த கமல் ரசிகர்கள்,  படத்துவக்கதில் படம் பார்ப்பதற்கு இடைஞ்சலாக யாராவது கதவைத் திறந்து வெளியில் போனாலோ உள்ளே வந்தாலோ அசிங்கமான வார்த்தைகளால் திட்டினார்கள்.

அவர்களே பாதி படத்திற்குமேல், மற்றவர்கள் படம் பார்பப்பதற்கு இடையூறாக கத்திக் கொண்டே இருந்தார்கள். ஒருவர் நவினிடம் ‘அண்ணே நாங்க போறோம்.. ஒன்னும் புரியல..’ என்றார்.
நவின் ‘இருங்க படம் முழுக்க பாருங்க.. புரியும்’ என்றார். நவின் பேச்சை கேட்காமல் 30 நிமிடத்திற்கு முன்பே கிளிம்பி விட்டனர் கமல் ரசிகர்கள்.

ஆனாலும் இஸ்லாமிய எதிர்ப்பு மனோபாவம் கொண்டவர்கள், படம் முடிந்த பிறகு, ‘படம் சூப்பர், என்னங்க தமிழ்நாட்ல மட்டும்தான் முஸ்லீம் இருக்காங்களா?’ என்று ஆவேசமாக பேசினார்கள். இந்தப் படத்திற்கு பிறகு இஸ்லாமிய எதிர்ப்புக் கண்ணோட்டம் கொண்டவர்கள் நிறையபேர் கமல் ரசிகர்களாக மாறியிருக்கிறார்கள் என்பதையும் அங்கு பார்க்க முடிந்தது.

(தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களால் மட்டுமே திரையரங்கு நிரம்பி வழிந்தது)

ஆக, விஸ்வரூபம் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடுவதற்கு வாய்பில்லை. அதற்கான காரணத்தை கமல் தரப்பினர் இஸ்லாமியர்கள் மீதே போடலாம்.. ‘படத்தில் முக்கியமான காட்சிகளை எல்லாம் கட் பண்ணதாலே..’ என்று.

ஆனால், அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தப் படம் வசூல் செய்வதாக சொல்கிறார்கள்.

காரணம், அமெரிக்க சார்பு கொண்ட கமலின் மனநிலையும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் மனநிலையும ஒன்றாக சங்கமிப்பதுதான்.

அமெரிக்க இந்தியர்கள் இந்தியாவில் தாங்கள் படித்த படிப்பின் தொடர்ச்சியாக அதற்கான ஆய்வு செய்வதற்கோ, அதை குறித்த தேடுதலுக்கோ போகவில்லை.

தங்களின் கல்விக்கு இந்தியாவைிட அதிகம் சம்பளம் கிடைக்கிறது, அதை ஒட்டிய சொகுசான வாழ்க்கை..’ என்று காரணத்திற்காகவே சென்றிருக்கிறார்கள்.

அது அமெரிக்காவில் அவர்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே அமைகிறது வாழ்க்கை. அதை பொருளாதார ரீதியாக இன்னும்  தரம் உயர்த்துவதற்கும் சில நேரங்களில் தக்கவைத்துக் கொள்வதற்குமான வாழ்க்கையாக அமைகிறது. ‘இந்த வாழ்க்கை அமெரிக்காகாரனால்தான்’ என்ற அந்த நன்றி அவர்களிடம் நிறைந்திருக்கிறது.

அதனால்தான் அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்தியாவிற்கு வந்தால், அமெரிக்க அரசின் பொது ஒழுங்கு, சாலைகள் பராமரிப்பு, சாலை விதிகள், ஒழுங்கு இவைகளை இந்தியாவோடு ஒப்பிட்டு அமெரிக்க புகழை பேசி பேசி வியக்கிறார்கள். (அறுக்கிறார்கள்)

மாறாக சர்வதேசிய அரசியலில், மூன்றாம் உலக நாடுகளிடமும், அரபு நாடுகளிடமும் எவ்வளவு இழிவாக மூன்றாம் தர பொறுக்கியைப் போல் அமெரிக்கா நடந்து கொள்கிறது, என்பதை அவர்கள் உணர்வதே இல்லை.

அதற்கு நேர் எதிராக அமெரிக்கவிற்கு எதிரான ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தீவிரவாத இயக்கங்களின் மேல் கடும் வெறுப்பு கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.

‘இவனுங்களாலதான் அமெரிக்காவுல நிம்மதியே போச்சு..’ என்று கோபப்படுகிறார்கள். இந்த மனநிலை உள்ளவர்கள் விஸ்வரூபத்தை பார்த்தால், ‘இல்லாததை ஒன்னும் காட்ல.. இருக்கிறதைதான் காட்டியிருக்கார் கமல்’ என்று கருத்து சுதந்திரவாதிகளாக, கருத்து சொல்கிறவர்களாக அவர்களின் அமெரிக்க வாழ்க்கை முறை உருவாக்கியிருக்கிறது.

இது அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் மட்டுமல்ல; இந்தியாவிலேயே அமெரிக்க வாழ்க்கையை வாழ்கிற, ‘இந்திய வாழ் அமெரிக்கர்களிடம்’ அதாவது ‘இன்னும் நமக்கு அமெரிக்க போவதற்கு வாய்பில்லையே..’ என்று KFC சிக்கனும் கோக்கும், பிட்ஸாவும் கோக்கும், தோசையும் கோக்கும், தயிர் சாதமும் கோக்குமாக வாழ்கிற இந்திய உயர் நடுத்தர வர்க்கத்திற்கும் இந்தப் படம் நிறைய பிடிக்கும்.

**

படம் வெளியாவதற்கு முன் ‘கருத்து சுதந்திரத்தை’ தீவிரமாக வலியுறுத்தியவர்கள், இந்தப் படம் பற்றி விரிவாக எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.

அவர்கள் எழுதுவது போதுமானதாக இல்லை என்றால் நான் இந்தப் படத்தை பற்றி மீண்டும் எழுத வாய்ப்பிருக்கிறது..

இந்தியாவில் விஸ்வரூபம் 2  விரைவில்.. வருகிறதோ இல்லையோ என்னுடைய இன்னொரு விமர்சனம் வரும்.

பிப்ரவரி 7 – 2013

தொடர்புடையவை:

விஸ்வரூப தந்திரம்

விஸ்வரூபம்; தமிழக அரசின் தடையை ஆதரிப்போம்!

இது விஸ்வரூபம் விமர்சனம் கிடையாது…

விஸ்வரூபம் நான் சொன்னபடிதான் இருக்கிறதா? பார்த்துச் சொல்லுங்கள்

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்?

இது விஸ்வரூபம் விமர்சனம் கிடையாது…

Cart

இரண்டு நாட்களுக்கு முன்பிருந்து.. இன்றுவரை  facebook ல்எழுதியது

*

இந்திய சினிமாவில் இதுவரை இந்து, கிறித்துவ இயக்குநர்கள், நாயகர்கள்; இந்திய முஸ்லிம்களிடமிருந்து, இந்தியாவை ‘பாதுகாத்தார்கள்’. தேசபக்தர்களாக விரைத்து நின்றார்கள்.

இம்முறை ஆப்கானிஸ்தான் ‘முஸ்லிம்’ தீவிரவாதிகளிடமிருந்து அமெரிக்காவை பாதுகாத்திருக்கிறார் ஒரு இந்து பார்ப்பனர், சுன்னத் செய்து கொண்டு.

இந்தியர், சர்வதேச ‘இஸ்லாமிய’த் தீவிரவாதிகளிடமிருந்து அமெரிக்காவை பாதுகாப்பதற்காக புறப்பட்டதின் அவசியம் என்ன?

அப்படி அமெரிக்காவை பாதுக்காத்து படம் எடுத்தவர், அதை இந்திய மொழிகளில் எடுக்க வேண்டி மர்மம் என்ன?

ஆங்கிலத்தில் எடுத்து, ஹாலிவுட்டையே கலக்கிருக்க வேண்டிய உலக நாயகன்…

-பிப்ரவரி 3ஆம் தேதி எழுதியது

**

ஆப்கானிஸ்தான் ‘இஸ்லாமிய’ தீவிரவாதிகள், தன்நாட்டில் இருந்து பல ஆயிரம் மைல்கள் தூரம் இருக்கும் அமெரிக்கா மீது மட்டும் கொலைவெறியோடு இருப்பது ஏன்?

தன் நாட்டுக்கு அருகில் இருக்கிற இந்தியா மீதோ, சீனா மீதோ, ஆப்பிரிக்க நாடுகள் மீதோ இல்லாத கோபம்…
இன்னும் சரியாக சொல்ல வேணடும் என்றால் ஆப்கானிஸ்தானிற்குள் ராணுவத்தை நிறுத்தி வைத்திருந்த ரஷ்யா மீதுகூட இல்லாத கோபம்..

அமெரிக்கா மீது வரக் காரணம் என்ன?
விஸ்வரூப பார்ப்பன ‘பாய்’ விடை சொல்கிறாரா..?
பார்த்தவர்கள் சொல்லுங்களேன்..

-பிப்ரவரி 3ஆம் தேதி எழுதியது

**

பொதுவாக பெரும்பாலான ஜாதி உணர்வு கொண்ட ஆச்சாரத்தை தீவிரமாக கடைப்பிடிக்கிற பார்பனர்களிலிருந்து, ‘அதுபோன்ற ஜாதி உணர்வெல்லாம் எனக்கு கிடையாது.’ என்று அரசியலில் தீவிரமாக புழங்குகிற பார்ப்பனர்கள் இன்னும் கருத்து சுதந்திர பார்ப்பனர்கள் வரை,

அரபு நாடுகள் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் மீதும் காழ்ப்புணர்ச்சியும்..
அமெரிக்கா மற்றும் அயோரப்பிய நாடுகள் மீது காதலுமாக இருக்கிறார்கள்…

அதுபோன்ற கண்ணோட்டம் உலக நாயகனிடமும் இருக்கிறது…

-பிப்ரவரி 4ஆம் தேதி எழுதியது

**

இரண்டு நாட்களுக்கு முன்…

///வீடு இருக்கா? இல்ல கடன் கொடுத்தவன் கைப்பற்றி விட்டானா?
‘இன்னைக்கே கூட அது நடக்கலாம்….’ என்று சொல்லி நாலு நாளாச்சி…
பாவம் எங்க தங்கியிருக்காரோ, என்ன சாப்பிடுறாரோ..?
பயணம் பஸ்சா? ரயிலா? இல்ல நடந்தா..?
ச்சே.. எப்படியெல்லாம் வாழ்ந்த ஒரு மனுசன்..? நினைக்கவே…

எப்படி இருந்த அவரு இப்படி ஆயிட்டாரு.?///

என்று நான் எழுதியதை பல நண்பர்கள் நான் கமல் பற்றிதான் எழுதினேன் என்று புரிந்து கொண்டார்கள்.

உண்மையில் எங்கள் நண்பர் ஒருவர் தனது வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால்… தலைமறைவாகிவிட்டார். அவர் பற்றிதான் எழுதினேன்.

கமல் பற்றிய கவலை எனக்கில்லை.. ஏன் என்றால்….

‘கை வண்டி இழுத்தாவது கமலுக்கு கஞ்சி ஊத்த பல ‘ஞாநி’ கள் இருக்கும்போது நான் எதுக்குங்க அவரை பத்தி…?

-பிப்ரவரி 4ஆம் தேதி எழுதியது

தொடர்புடையவை:

விஸ்வரூப தந்திரம்

விஸ்வரூபம்; தமிழக அரசின் தடையை ஆதரிப்போம்!

விஸ்வரூபம் நான் சொன்னபடிதான் இருக்கிறதா? பார்த்துச் சொல்லுங்கள்