இயக்குநர் மணிவண்ணனின் ‘ஆன்மா’ பாரதிராஜா-விகடனை மன்னித்தாலும் துரோகத்தை மன்னிக்காது!

manivannanமிக மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட சமயங்களிலெல்லாம் அதை வெற்றி கொண்டு மீண்டு வந்த இயக்குநர் மணிவண்ணன், திடீரென்று மரணமடைந்தது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. அவர் குடும்பத்தாருக்கும் அவரோடு நெருக்கமாக பழகியவர்களுக்கும் அதிர்ச்சி கூடுதலாகவே இருக்கும்.

2012 ஆம் ஆண்டு பிப்பரவரி 14 ஆம் தேதி காதலர் தின நிகழ்ச்சிக்காக பெரியார் திராவிடர் கழகம் கோவையில் நடத்திய விழாவில் நானும் அவரும் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருந்தோம். ஆனால், அவரால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. அவரை சந்திக்கும் வாய்ப்பு அதற்குப் பிறகும் அமையாமல் போனது.

பிரபலமான ஒருவர் இறந்துவிட்டால் அவரை தியாகியாக்கும் மனோபாவம் தமிழர்களிடம் நிரம்பி இருக்கிறது. பல நேரங்களில் இது அரசியலையே தீர்மானிக்கிறது. இறந்தவருக்காக வருத்தப்படுவது வேறு… ஆனால், புனிதமாக்குற தன்மை என்ன முறை அது?

ராஜிவ் காந்தி மரணத்திற்குப் பிறகு நடந்த பொதுத் தேர்தலில் இதைத் தமிழர்கள் பிரதிபலித்தார்கள். ராஜிவ் கொலைக்கு திமுகதான் காரணம் என்ற பிரச்சாரத்தின் பின்னணியில் திமுக தோற்றது. அதிமுக -காங்கிரஸ் கூட்டணி பெரிய வெற்றி பெற்றது.

அப்போது திமுகவின் பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் ஒரு கூட்டத்தில் திமுக தொண்டர்களிடம் இப்படி பேசினார்:

“நம்ம இனி ஜெயிக்க முடியாது. நம்ம ஜெயிக்கனும்ன்னா என்னய கொல்லுங்கடா.. கொன்னுட்டு பழியை வாழப்பாடி ராமமூர்த்தி மேல போடுங்கடா.. அப்பதான் நாம ஜெயிக்க முடியும்…” என்றார்.

மணிவண்ணனின் ஆதரவாளர்களில் சிலர், அவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்காதவர்களை துரோகியாக சித்திரிக்கிறார்கள். ‘மணிவண்ணன் திரைப்பட பிரபலம் என்பதைக்காட்டிலும் அவரின் மார்க்சிய, பெரியாரிய, தமிழ்த் தேசிய அரசியல்தான் அவரை எங்களுக்கு அடையாளம் காட்டியது அதனால்தான் அவரை நாங்கள் கொண்டாடுகிறோம்’ என்கிறார்கள்.

ஆனால், உண்மை அதுவல்ல. ஒரு சினிமா பிரபலம் பகுத்தறிவு, தமிழ்த் தேசியம் பேசுகிறார் என்பது இவர்கள் அவருடன் பழகுவதற்கு ஒரு வாய்ப்பாக இருந்தது. பழகிக் கொண்டார்கள் அவ்வளவே.

ஏனென்றால் மணிவண்ணனைவிட தீவிரமாக பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் இன்னும் தமிழ்த் தேசியக் கருத்துகளை எழுதுகிற, பேசுகிற பலரை இவர்கள் மதிப்பதே இல்லை என்பதற்கு காரணம் அவர்கள் பிரபலமானவர்களாக இல்லை என்பதே. அந்தக் கொள்கைகளுக்காகவே தான் வாழ்க்கையை அர்பணித்துக்கொண்ட பல முதியத் தோழர்கள் மறைந்தபோது, அதை ஒரு பொருட்டாகவே இவர்கள் கருதவில்லை.

குறிப்பாக, நாத்திகம் பத்திரிகையை தொடர்ந்து நடத்திய நாத்திகம் ராமசாமி மறைந்த போதும், பெரியாரின் கொள்கைகளுக்காக போர்குணத்தோடு இயங்கிய நாகை பாஷா தனது 80 வயதை தாண்டி இறந்தபோதும், அன்பிற்கினிய மகஇக தோழர் சீனிவாசன் மறைந்த போதும், சமீபத்தில் தமிழ்த் தேசிய கருத்துகளுக்காவே தொடர்ந்து இயங்கிய பெரியவர் பரம்பை அறிவன் மரணத்தின் போதும் இன்று மணிவண்ணன் மரணத்திற்காக சமூகத்தையே குற்றம் சொல்லுகிற யாரும் அவர்களை பொருட்டாகவே கருதவில்லை; மணிவண்ணன் மரணத்திற்கும் இரங்கல் தெரிவித்த பெரியார் இயக்கங்களைத் தவிர.

அது மட்டுமல்ல, மணிவண்ணனின் மரணத்திற்கு ஆனந்த விகடனில் வந்த பாரதிராஜாவின் பதில் ஒரு காரணம் என்றும் சிலர் சொல்கிறார்கள். (அதுபோன்ற ஒரு மோசமான கருத்தை ஒரு திமுக பிரமுகர் சொல்லியிருந்தால் இந்நேரம் என்ன ரணகளம் செஞ்சிருப்பாங்க?)

பத்திரிகையாளர் ஞாநி, கவிஞர் தமழ் நதி, தமிழன் வேலு, தலித் இயக்கதைச் சேர்ந்த சிலத் தோழர்களும், மணிவண்ணின் பேச்சால் ஈர்க்கப்பட்டு அவரிடம் பழக்கமில்லாத சில தமிழ்த் தேசிய தோழர்களும்தான் பாரதிராஜவின் அந்த மோசமான பதிலை கண்டித்திருக்கிறார்கள். ஆனால் இவர்களில்கூட யாரும் ஆனந்த விகடனை கண்டிக்கவில்லை. பாரதிராஜாவின் அந்த மோசமான பதிலை வெளியிட்ட ஆனந்த விகடனும்தான் குற்றவாளி.

‘காஞ்சி மாமுனிவர் ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் பெண்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் இழிவாக பேசியிருக்கிறார்கள்’ என்று பவ்யமாக, மரியாதையாக குறிப்பட்டால்கூட பிரசுரிக்க தயாராக இல்லாத விகடன், இப்படி மணிவண்ணனை தனிபட்ட முறையில் ‘பிச்சைக்காரன்’ என்று குறிப்பிட்ட பாரதிராஜாவின் பதிலை மட்டும் வெளியிடுவானேன்?

இயக்குநர் மணிவண்ணனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதவர்களை, துரோகிகளாக சித்தரிக்கிறவர்கள், மணிவண்ணனை மிக மோசமாக எழுதிய பாரதிராஜா-ஆனந்த விகடனை கண்டிக்க மறுக்கிறார்களே ஏன்?

காரணம், ஆனந்த விகடனை பகைக்க முடியாது. அது சினிமாகாரனாக ஆவதற்கும் பிரபலமாவதற்குமான ஒரு ரூட்; அதேபோல் பாரதிராஜா மணிவண்ணனைவிட பிரபலமானவர், அதைவிட மணிவண்ணனை தனிப்பட்ட முறையில் நன்கு அறிந்த இவர்களுக்கு பாரதிராஜாவும் தெரிந்தவர்தான். மணிவண்ணன் அப்பா என்றால், பாரதிராஜா இவர்களுக்கு பெரியப்பா.

அதனால் இவர்கள் எந்த நேரத்திலும் பெரியப்பா பாரதிராஜாவோடு கை கோர்த்து, தமிழ்த் தேசிய கருத்துகளை வளர்தெடுக்க வாய்ப்பிருக்கிறது. மணிவண்ணனின் மறைவினால் ஏற்பட்ட சோகத்திலும், கோபத்திலும் கூட பாரதிராஜாவை ஒரே ஒரு வார்த்தைச் சொல்லி கண்டிக்க மறுப்பதின் மர்மம் இதுதான்.

‘பந்தல்ல பாவக்கா.. போகயில பாத்துக்கலாம்..’ என்று சாவு வீட்டில் ஒப்பாரி வைத்த பெண்கள் ‘பாவக்காய்’ மேல் குறியாக இருந்ததாக சொல்லப்படுகிற ஒரு நாட்டுப்புறக்கதையைப் போலவே,
மணிவண்ணன் உடலுக்கு மரியாதை செய்ய வந்த முக்கியப் புள்ளிகளிடம் ‘பழகி’ கொண்டே ஒப்பாரி வைத்த இவர்கள், அவரை மரணப்படுக்கையில் தள்ளிய பாரதிராஜா – ஆனந்த விகடன் குறித்து அமைதி காப்பதும் ‘பாவக்காய்’ பாணிதான்.

தீவிரமான புலி ஆதரவாளரான மணிவண்ணன் ‘இந்தியாவின் தேசிய விலங்கு புலி. புலியை ஆதரிக்க வேண்டியது நம் கடமை’ என்று பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். அதை சில புலிகள் இப்படி புரிந்து கொண்டன, அவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து ‘முக்குலத்துப் புலி மணிவணணன்’ என்று போஸ்டர் அடித்து சென்னையில் ஒட்டியிருந்தார்கள்.

மணிவண்ணன் தன்னுடைய திரைப்படத்தில் தன் ஜாதி பெருமை பேசியதில்லை. தன் ஜாதி அடையாளத்தைகூட காட்டியதில்லை. ஆனாலும் ஒரு முற்போக்காளனாக தன் ஜாதியின் தலித் விரோத மனோபாவத்தை அவர் மேடைகளில் கண்டிக்கவில்லை. அப்படி கண்டித்திருந்தால் ‘முக்குலத்துத் துரோகி’ என்று போஸ்டர் போட்டிருப்பார்கள். அது அவருக்கு கவுரத்தை, மரியாதையை தந்திருக்கும்.

இருந்தாலும் இந்த முக்குலத்துப் புலிகளுக்கு நாம் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறோம், மணிவண்ணனை இழிவாக பேசி அவர் மரணத்திற்கு காரணமானவராக சொல்லப்படுகிற பாரதிராஜாவும் ஒரு முக்குலத்து கிழட்டுப் புலிதான்.

முக்குலத்துப் புலி, நாடார் புலி, நாயுடு புலி, பிள்ளை மார் புலி, வன்னியப் புலி, கோனார் புலி, முதலி புலி, கவுண்ட புலி, செட்டிப் புலி இப்படியாக ஜாதி புலிகளாக இருந்து கொண்டு விடுதலைப் புலிகளை ஆதரிப்பதற்கு தடை ஒனறும் இல்லை என்பது மட்டுமல்ல, தீவிர தமிழ்த் தேசியவாதியகவும் அடையாளப்படுத்திக் கொள்ளலாம் என்பதால்தான் இந்த ஜாதிப் புலிகள், பெரியார்-அம்பேத்கர் கொள்கை வழி இயங்குகிற ஜாதி எதிர்ப்பாளர்களைப் பார்த்து உறுமுகின்றன.

**

மரணமே மனித இயக்கத்தின் முற்றுப்புள்ளி. ஆனாலும் ஆன்மீகவாதிகள் மரணத்திற்குப் பின்னான வாழ்க்கையை நிறைய நம்புகிறார்கள். அதன் பொருட்டே நிகழ்காலத்தில் நிறைய கருத்துச் சொல்கிறார்கள். எல்லா மதங்களும் அதனால் மட்டுமே பிரபலமாக இருக்கிறது.

மனிதன் மரணமடைகிறான். மதங்கள் அங்கே உயிர் பெறுகிறது. அதன் தொடர்ச்சியாக இறந்தவரின் ‘ஆன்மா’ விழித்துக்கொள்கிறது.

அந்தவகையில் பகுத்தறிவாளர் மணிவண்ணனின் உடல் எரியூட்டப்பட்டபோது ‘கோவிந்தா.. கோவிந்தா..’ என்று கோஷம் எழுப்பினார்களாம் சிலர்,
ஆக, மணிவண்ணனின் ‘ஆன்மா’ தன்னை மிக இழிவுப்படுத்திய, பாரதிராஜா-ஆனந்த விகடன் இருவரை மன்னித்தாலும், இவர்கள் இருவரையும் கண்டிக்க மறுக்கிற, இவர்களோடு கை கோர்க்க துடிக்கிற ‘இன உணர்வாளர்’களின் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்காது.

மணிவண்ணனின் அமைதிப்படை – 2: அதேதான் இதுவும் என்றால் So Sad! – தலித் விரோதமும் திராவிட இயக்க எதிர்ப்பும்

நவீன சிந்தைனை மரபின் மூத்த அறிவாளி திருவாரூர் தங்கராசு மரணம்

15 thoughts on “இயக்குநர் மணிவண்ணனின் ‘ஆன்மா’ பாரதிராஜா-விகடனை மன்னித்தாலும் துரோகத்தை மன்னிக்காது!

  1. ஆனந்த விகடனை ஏற்கனவே பலமுறை கண்டித்திருக்கிறேன். இந்த விஷயத்தில் ஆனந்த விகடனின் செயல்பாடும் கண்டிக்கத்தக்கதே …

  2. Barathi raja appadi enna sollivittar, “ungalai sameba kaalamaaga mani vannan thaaki pesukirare, yen” endra kelvikku avar pathil solli erukirar. Athil enna thappu. pathilukku pathil avvalave. oru samooga poorali endru sollakoodiyavar ethuku pathil solla vendiyathuthane athai vitu vitu barathi raja meethu kutram solvathu muttal thanamaanathu. yen, kalaignar ye eduthu kolvom, avar meedu veesapadatha vimarsanangala, intha vayathilum, avarai epadi ellam keezh tharamaga nam net ulaga nanbargal eluthukirargal, pesugirargal enbathu theriyatha.

  3. Today only i saw posters in coimbatore like ‘mookulathoor puli’. I discussed about this posters with my friends. This is nice article

  4. தீவிரமான புலி ஆதரவாளரான மணிவண்ணன் ‘இந்தியாவின் தேசிய விலங்கு புலி. புலியை ஆதரிக்க வேண்டியது நம் கடமை’ என்று பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். அதை சில புலிகள் இப்படி புரிந்து கொண்டன, அவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து ‘முக்குலத்துப் புலி மணிவணணன்’ என்று போஸ்டர் அடித்து சென்னையில் ஒட்டியிருந்தார்கள

    இருந்தாலும் இந்த முக்குலத்துப் புலிகளுக்கு நாம் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறோம், மணிவண்ணனை இழிவாக பேசி அவர் மரணத்திற்கு காரணமானவராக சொல்லப்படுகிற பாரதிராஜாவும் ஒரு முக்குலத்து கிழட்டுப் புலிதான்.

  5. மணிவண்ணனை இழிவாக பேசி அவர் மரணத்திற்கு காரணமானவராக சொல்லப்படுகிற பாரதிராஜாவும் ஒரு முக்குலத்து கிழட்டுப் புலிதான்.

Leave a Reply

%d bloggers like this: