தமிழருவி மணியனுக்கு M.P. சீட்டு: இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

Magician

ஈழத் தமிழர்களின் துயரத்தை உருக்கமாக பேசி, திமு.க. தலைவர் கலைஞர் மு. கருணாநிதியை கடுமையாக திட்டினால், ராஜபக்சேவை கூட ஆதரிப்பார்கள் என்பதற்கு சாட்சி, கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழருவி மணியனுக்கு கிடைத்த முக்கியத்துவம்.

தமிழர்களை சிங்கள ராணுவத்தைவிட கொடுமையாக கொன்று குவித்த, கொடுங்கோலன் ராஜிவ்காந்தியின் அமைதிப்படை கொடுமைக்குப் பிறகு, காங்கிரசில் போய் சேர்ந்த இந்தத் தமிழர்,

‘திமுகவின் தமிழர் விரோதப் போக்கு’ என்று கலைஞரின் பழைய பன ஓலைகளை எல்லாம் தேடி எடுத்து விமர்சிக்கிறார்.

தமிழர்களையும், புலிகளையும் நயவஞ்சமாக கொன்ற சோனியாவின் தலைமையில் 2009 ஆம் ஆண்டு நடந்த ஈழப் படுகொலை வரை காங்கிரசில் இருந்துவிட்டு, திடீரென்று ‘என்ன.. காந்தி செத்துட்டாரா..?’ என்கிற பாணியில் காங்கிரசிலிருந்து வெளியில் வந்தவர்தானே இவர்.

வி.பி.சிங் பிரதமர் பதவி ஏற்றவுடன் போட்ட முதல் உத்தரவே, தமிழர்களின் ரத்தம் குடித்த, ராஜிவ்காந்தியின் அடியாட்களான அமைதிப்படையை இலங்கையிலிருந்து திரும்பப் பெற்றதுதான். அதற்குக் காரணமான ‘தமிழர்களைக் கொன்ற அமைதிப்படையை நான் வரவேற்க போகமாட்டேன்’ என்று அறிவித்த அப்போதைய முதல்வர் கருணாநிதியை இப்போதும் ‘தமிழர் துரோகி’ என்று கடுமையாக விமர்சித்தார்.

‘இவ்வளவு தீவிரமாக இருக்கிறாரே! பெரிய போராளிதான்’ என்று வாயப் பொளந்தா, ராஜிவ்காந்தியின் விசுவாசியான தமிழ்த் தேசியத் தலைவர் கருப்பையா மூப்பனாரை சிறந்த தலைவராக சிலாகித்து நம்மை திக்குமுக்காட வைத்தார்.

உண்மையில் இவரின் நோக்கம் ஈழ மக்களின் துயரம் துடைப்பதன்று.

‘காங்கிரசின் கோஷ்டி தகராறில் சண்டையிட்டு, மேலெழுந்து செல்வாக்குப் பெறுவது முடியாத காரியம். பதவி பெறுவதற்கு நம் வேட்டிப் போனால் கூட பரவாயில்லை. அடுத்தவன் வேட்டியையும் கிழிக்க வேண்டும். நமக்கு அதுக்கு தெம்பு போதாது. இனியும் நாம் இங்கிருந்தால், மனநோயாளியைப் போல் தனிமையில்தான் பேசிக் கொண்டிருக்க வேண்டும்’ என்கிற திட்டமே அவரின் தமிழ் உணர்வாய் வடிவம் பெற்றிருக்கிறது.

கண்ணதாசன் காங்கிரசில் போய் சேர்ந்த பிறகு சொன்னாராம்: “திமுகவில் இருந்தபோது, மக்களைப் பார்த்து பேசினேன். இப்போ மைதானத்தை பார்த்து பேசுகிறேன்” என்று.

அதுபோல், தொடர்ந்து காங்கிரசில் இருந்தால், அவரின் தமிழ்ப் பேச்சுக்கு எந்த மரியாதையும் இருக்காது. குமரி அனந்தன் போல் வசந்த் டிவியில் மட்டும்தான் பேசிக்கிட்டு இருந்திருக்கணும். (அதனால்தான் தமிழிசை சவுந்தரராஜன் பா.ஜ.கவுக்குப் போயிட்டாங்களோ)

ராஜிவ்காந்தியின் தமிழர் விரோதப் போக்கிற்கு பிறகு ஒரு தமிழ் உணர்வாளர் காங்கிரசில் போய் சேர்கிறார் என்றால் ‘தன்முனைப்பை’த் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

2009 ஆம் ஆண்டு நடந்த ஈழத் தமிழர்களின் படுகொலைகள், காங்கிரசை விட்டொழிப்பதற்கு அவருக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம். படுகொலை மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் அவர் தலைவராகவே உருவாகி இருக்க முடியாது. காங்கிரசிலிருந்து வெளியே வருவதற்கான காரணம், நல்லா எடுப்பா எழுச்சியாக அமைந்தது.

காங்கிரசை விட்டு வெளிய வந்து முழுமூச்சா, திமுக வை எதிர்த்தாரு. இதுதான் இவுருடைய காங்கிரஸ் எதிர்ப்பு.

ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜிவ்காந்தியின் புனிதத் தலைமையை ஒத்துக் கொண்டு, சோனியா தலைமையையும் ஏற்றுக் கொண்டு காங்கிரசில் சேர்ந்த இந்த இன உணர்வாளர், பச்சையாக ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்தார். அதையே செய்த இவர், இப்போது மோடியை ஆதரிப்பதில் ஒன்றும் அதிசயம் இல்லை.

அவரின் மோடி ஆதரவு திடீரென்று இப்போது தேர்தலை ஒட்டி வந்த ஒன்றல்ல; காங்கிரசிலிருந்து வந்தப் பிறகு கடந்த நான்காண்டுகளில் பா.ஜ.க தத்துவப் பின்னணியில்தான் செயல்பட்டுக் கொண்டு இருந்தார்.

தினமணியோடு சேர்ந்து கொண்டு, பெரியாரையும் சேர்த்து திராவிட இயக்கத்தையும் பொளந்து கட்டுன இவர், குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்து தமிழர்களின் கல்வியில் மண் அள்ளிப்போட்ட, தமிழகத்தில் ஊழல் ஆட்சியின் துவக்கமான ராஜாஜி ஆட்சியை புகழ்ந்து பேசினார். பால்தாக்ரேவை பரிந்துரைத்தார்.

வேதத்தை புகழ்ந்தார். ஜாதி ஒழிப்புக்கு அம்பேத்கர்-பெரியார் வழி சரிபட்டு வராது. வேத வழியே சிறந்தது என்று வேத விற்பன்னர் போல் எழுதி இடம் பிடித்தார். அவர்களிடம்.

தி.மு.க.வின் சந்தர்ப்பவாதத்தை எதிர்த்த இவர், திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக, ஜெயேந்திரனை கொலை வழக்கிலிருந்து காப்பாற்றிய தி.மு.க. ஆட்சியை ஒரே ஒரு வார்த்தையால் கூட கண்டிக்கவில்லை.

அது மட்டுமல்ல தலித் இயக்கங்களை, தலித் தலைவர்களை விமர்சிக்கும்போது மட்டும், டாக்டர் அம்பேத்கரை மேற்கோள் காட்டுகிற ஒரு ஜாதி இந்துவின் புத்தியும் இருந்தது. அதுவும் டாக்டர் அம்பேத்கரை தவறாக.

அன்றைக்கு தமிழருவி மணியன் ஜுனியர் விகடனில் எழுதியப் புரட்சிகரக் கட்டுரைகளை எடுத்து தங்கள் பத்திரிகைகளிலும் இணையப் பக்கங்களிலும் மறு பிரசுரம் செய்து கொள்ளாமலும்,

இவரை இணைத்துக் கொண்டு, ஈழத் தமிழர் ஆதரவு அல்லது இலங்கை அரசு எதிர்ப்புக் கூட்டங்களை நடத்தாமல் இவரின் பச்சையான சந்தர்ப்பவாதத்தை அன்றைக்கே சரியாக அடையாளம் கண்டு, ‘சொம்படுத்து உள்ளே வைச்சிருந்தா…’ இன்றைக்கு மோடிக்கு ஆதரவான கூட்டணியின் முதல் குரல் ஒலிக்காமலே இருந்திருக்கும். அல்லது கேட்காமல் இருந்திருக்கும்.

இப்போதுகூட அவர் ம.தி.மு.க வையோ வைகோ வையோ தீவிரமாக ஆதரிக்கவில்லை. அவர் பா.ஜ.க வையும் மோடியையும்தான் தீவிரமாக ஆதரிக்கிறார். பா.ஜ.க விற்கு ஆதரவாக ம.தி.மு.க வை கொண்டு சேர்க்கும் வேலையைதான் அவர் பார்க்கிறார்.

பா.ஜ.க விடமும் மோடியிடமும் செல்வாக்கு பெறுவதற்கு, வைகோ விடம் தனக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்துகிறார். வைகோ வை முதல்வராக்குவதாக ஆசைக்காட்டி. மோடி யை  பிரதமராக்குவதற்கு ஆளே இல்லா அந்தக் கட்சிக்கு ஆள் சேர்ப்பது.

வைகோ வை முதல்வராக்குவதல்ல நோக்கம், ‘மணியன்’ மத்திய அமைச்சர் ஆவதே திட்டம். காங்கிரசுக்கு போய் முடியாததை, மோடியால் முயற்சிப்பது.

அதனால்தான் வைகோ வை முதல்வராக்க உறுதி எடுத்தவர், புத்திசாலித்தனமாக ம.தி.மு.க விலும் சேராமல் தேர்தல் நெருக்கத்தில் தனிக் கட்சியாகியிருக்கிறார்.

பா.ஜ.க வில் சேராததற்குக் காரணம், ஏற்கனவே தேசியக் கட்சி காங்கிரசில்  ஏற்பட்ட அனுபவமே அவரை ஊஷாராக்கியிருக்கிறது.

‘அம்மையப்பன் தான் உலகம். உலகம் தான் அம்மையப்பன்’ என்று நோவாமல் ஞானப் பழம் வாங்கித் தின்ற  பிள்ளையார் பிளான்.

தமிழருவி மணியன் கட்சிக்கு ஒரு எம்.பி. சீட் நிச்சயம். மத்தியமைச்சராவது இலட்சியம்.

ஆட்கள் பலமில்லாவிடினும் மோடி ஆதரவு பத்திரிகைகளின் பலமான ஆதரவு இருக்கிறது அவருக்கு.

**

ஒருவர் அவரின் நெஞ்சைக் கிழித்து, உள்ளே இருப்பது ‘சீதா ராமன்’ தான் என்று நிரூபித்தப் பிறகுதான். ‘அய்யோ அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ் அனுமார்’ என்று நாம் அலற வேண்டியிருக்கிறது. அதற்கு முன்னால் தன் வாலால் இலங்கையை கொளுத்தியபோது, அந்த வாலை ஒட்ட நறுக்காமல், ‘இது ஒரு தமிழ்க்கனல்’ என்று நாமே அதற்கு விளக்கமும் கொடுத்து குளிர்காய்ந்து விட்டோம்.

தமிழருவி மணியன் தன்னை முற்றிலுமாக அம்பலப்படுத்திக் கொண்ட பிறகுதான் வேறு வழியில்லாமல் கண்டிக்க வேண்டிய கட்டாயத்திற்குப் பலரும் ஆளாகிறார்கள்.

அன்றே தோழமையானவர்களிடம் நான் இதை பேசியபோது, ‘தோழர் நீங்க எல்லாரையும் கொறை சொல்லிக்கிட்டே இருக்கீங்க.. நீங்க பெரிய தீர்க்கதரிசியா… அப்படி எல்லாம் முற்றிலுமா ஒருத்தரை புறக்கணிக்க முடியாது’ என்று என்னை புறக்கணித்தார்கள்.

ஆனாலும் இப்போது பலராலும் கடுமையாகக் கண்டிக்கப்படுகிற தமிழருவி மணியன், நினைத்துக் கொண்டிருப்பார்:

“நாளை பா.ஜ.க – ம.தி.மு.க கூட்டணி அல்லது அ.தி.மு.க – பா.ஜ.க – ம.தி.மு.க கூட்டணி அமைந்து விட்டால் எல்லாம் சரியாகி விடும். எல்லோரும் சரியாகி விடுவார்கள்.

‘பா.ஜ.க நிற்கிற இடத்தில் பா.ஜ.க வை திர்ப்பது. அ.தி.மு.க நிற்கிற இடத்தில் அ.தி.மு.க வை தரிப்பது, ம.தி.மு.க நிற்கிற இடத்தில் ம.தி.மு.க வை தரிப்பது’ என்ற நிலைபாடோடு என்னுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்யாமலா போவார்கள். அப்பொழுது பேசிக் கொள்கிறேன்” என்று.

தொடர்புடையவை:

பாரதிராஜாவை எதிர்த்த வைகோ ஏன்…? அல்லது ஒண்ணுமே புரியல.. உலகத்துல..

இந்து மதத்திற்கு காந்தி முகமூடி; காந்திக்கு தேசப்பிதா முகமூடி

இளவரசன் மரணம்: சோக ரசம் சொட்டும் காதல் கதையா?

இந்திய ராஜபக்சே! வருங்கால பிரதமரா தமிழினக் காவலரா?

பெரியாரை அவதூறுகளிலிருந்து காப்பாற்ற.. பணத்துக்கு என்ன பண்றது?

21 thoughts on “தமிழருவி மணியனுக்கு M.P. சீட்டு: இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

  1. பல்லி கத்திருச்சு, காந்தி சாகல, மூச்சு விட மறந்திட்டாரு……..

  2. பதவி சுகம் தேடி அலையும் அற்ப செயல் .. பேசாமல் அம்மாவிடம் அடைக்கலம் ஆகி இருந்தால் தானாக பதவி வந்திருக்கும்.. பின் பார்பன கூட்டம் மனம் நோகாத படி நடந்து தமிழர் வாழ்வை கேள்விக்குரியதாக செய்யலாம். இவரெல்லாம் எதற்கு தமிழ் தமிழ் என்று பேச வேண்டும் ….இவரிடம் பழ. கருப்பையா தோற்று போய்விடுவார்…ஜால்ராவில்.

  3. அவர் தான் எனது இயக்கமோ அல்லது நானோ தேர்தலை போட்டி இட மாட்டோம் என்று சொல்லி விட்டாரே உங்களுக்கு கட்டுரை எழுத செய்தி இல்லை என்றால் வேறு எந்த எந்த ஈன பிறவி பற்றி எழுதலாமே .ஏன் அந்த தூய்மையான மனிதரை பற்றி எழுதுகிறாய்..

  4. இளவரசன் படுகொலையை சாக்கிட்டு இந்த் மணி ஜுவியில் எழுதிய அவதூறுக்கு திருமா எதிர்வினை ஆற்றிய பின் தலித் விஷயங்களில் அடக்கி வாசித்தார் மற்றவர்கள் குறிப்பாக திக திமுக தக்க பதிலடி கொடுத்திருந்தால் அடங்கியிருப்பார் அதவிடக்கொடுமை ஈழஆதரவு என்ற பேரில் காசியாணந்தன் பழநெடுமாறன் போன்றோர் இந்த கேடுகெட்ட சந்தர்ப்பவாதியுடன் சேர்ந்தடித்த கூத்து அருவருப்பானது.இங்கொன்று அவசியம் இலங்கை வடக்கு கிழக்கு தேர்தல் இந்திய விவகாரங்களடிப்படையில் நடைபெறவில்லை போல இந்திய தேர்தலில் இலங்கை நிலவரம் பிரதானமாயிருக்க முடியாது இந்திய பன்மைத்துவம் பேணப்படவேண்டும் என்பதே

  5. //ஒருவர் அவரின் நெஞ்சைக் கிழித்து, உள்ளே இருப்பது ‘சீதா ராமன்’ தான் என்று நிரூபித்தப் பிறகுதான். ‘அய்யோ அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ் அனுமார்’ என்று நாம் அலற வேண்டியிருக்கிறது. அதற்கு முன்னால் தன் வாலால் இலங்கையை கொளுத்தியபோது, ‘இது ஒரு தமிழ்க்கனல்’ என்று நாமே அதற்கு விளக்கமும் கொடுத்து குளிர்காய்ந்து விட்டோம்.//
    உண்மைதான்.

  6. //ஒருவர் அவரின் நெஞ்சைக் கிழித்து, உள்ளே இருப்பது ‘சீதா ராமன்’ தான் என்று நிரூபித்தப் பிறகுதான். ‘அய்யோ அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ் அனுமார்’ என்று நாம் அலற வேண்டியிருக்கிறது. அதற்கு முன்னால் தன் வாலால் இலங்கையை கொளுத்தியபோது, ‘இது ஒரு தமிழ்க்கனல்’ என்று நாமே அதற்கு விளக்கமும் கொடுத்து குளிர்காய்ந்து விட்டோம்.//
    இது நிச்சயம் நடக்கும்.

  7. ராமசந்திரா, ராமதாசும் இப்படித் தானே சொன்னாரு. அன்புமணி ராஜ்யசபா எம்பி ஆகலையா, கொல்லை வழியா மத்திய அமைச்சரும் ஆகலையா!

  8. மணியன் மோடியைத் தலையில் தூக்கி வைத்து கூத்தாடுவதற்குக் காரணம் சுயநலமே! எப்படியாவது நக்கிப்பிழைத்து நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சீட் வாங்கி வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று துடிக்கிறார். மணியன் போன்ற சுயநல அரசியல் வியாதிகள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. இதை வரும் தேர்தல் அவருக்கு உணர்த்தும்.

  9. தமிழருவி மணியன் ராசீவ்காந்தி அனுப்பிய இந்திய அமைதிப் படை தமிழர்களுக்கு செய்த அட்டூழியத்திற்கு பிறகு காங்கிரசில் சேர்ந்ததும், இந்து மதத்தை தீவிரமாக ஆதரித்த காந்தியை ஆதரிப்பதும், இந்துமதத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்றும் இந்து மத இதிகாச புராணங்களை நியாயப்படுத்துவதும் மோடியை சோனியாவுக்கு மாற்றாக முன்னிறுத்தி கூட்டணி அமைக்க முயச்சிப்பது தமிழினத்த்திற்கு செய்யும் துரோகமே.. ஆனால் ஈழத்தமிழர் படுகொலையில் கருணாநிதி மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் நியாமானதாகத்தான் இருக்கிறதே..!

  10. ஈழத் தமிழர்களின் துயரத்தை உருக்கமாக பேசி, திமு.க. தலைவர் கலைஞர் மு. கருணாநிதியை கடுமையாக திட்டினால்…. இந்த முதல் வரியிலேயே நீங்கள் கருணாநிதியின் அடிவருடி என்பது புரிகிறது. பிறகு ஏன் தமிழருவி மணியன் போன்ற தரம் மிக்க மனிதர்களைப்பற்றிப் பேசுகுறீர்கள்?. தயவு செய்து நடுநிலையலர்களைக் குழப்ப வேண்டாம்… இது என் போன்ற உண்மையான தமிழ் ஈழ ஆதரவானவர்களின் ஆதங்கம்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading