Rush: ஒளி ஒலியின் உன்னதம்

rushசெப்டம்பர் மாத நடுவில் அநேகமாக இந்தப் படம் வெளியான ஒரு வாரத்திற்குள் சென்னை எஸ்கேப் திரையரங்கத்தில் பார்த்தேன்.

வித்தியாசனமான களம். சர்வதேச அளவில் கார் பந்தயம் நடைபெறும் ஓடுகளமே களம். டபுள் ஹீரோ சப்ஜெக்ட்.

கார் பந்தயம் துவங்க சில விநாடிகளே உள்ள நேரத்தில் வெவ்வேறு கோணங்களில் காட்டுகிற அந்தக் காட்சிகளுக்கே இந்தப் படத்தை பலமுறை பார்க்கலாம். கடைசியாக ஜப்பானில் மழை நேரத்தில் நடக்கும் போட்டியில் பந்தயம் துவங்க இருப்பதற்கு சில விநாடிகளுக்கு முன், சில விநாடிகளே காட்டப் படுகிற வெவ்வேறு ஷாட்டுகள் ஆயிரம் அழகுகளை அள்ளித் தெளிக்கிறது.

கார் பந்தயம் துவங்கும் போது கார்கள் எழுப்புகிற இரைச்சல், இந்தக் காட்சிகளோடு இணையும் போது திரையரங்கம் முழுக்க பேரொலியாய் சுழல்ன்றடிக்கிறது.

1976 ஆம் ஆண்டு நடக்கும் கதை. நிக்கி லோடா, ஜேம்ஸ் அன்ட் என்ற இரண்டு ஓட்டுநர்களுக்கிடையே ஏற்படும் போட்டியை மையமிட்டு திரைக்கதை செய்யப்பட்டிருக்கிறது. உண்மையில் நடந்த சம்பவத்தை வைத்து செய்யப்பட்டதும் கூட.

முதல் இடத்துக்கு மாறி மாறி வரும் இரண்டு கார் பந்தய ஓட்டுனர்களின் வாழ்க்கையை அவர்களின் காதல், திருமணம் அதனூடாக அவர்களின் போட்டியை சொல்லுகிற நேர்த்தியான திரைக்கதையை; பிரம்மாண்டமான, எளிமையான ஷாட்டுகளோடு சொல்லப்பட்டதே Rush.

நிக்கி லோடா, இவரின் வேகத்தில் ஒரு விவேகம். எதையும்
பரபரப்பின்றி அனுகுபவர். ஆனால் உறுதியாக. தன் காதல் உட்பட அவரின் அணுகுமுறை அப்படித்தான். நகைச்சுவை உணர்வு மிக்கவர்.

ஜேம்ஸ் அன்ட், அவருக்கு நேர் எதிர். பரபரப்பும் படபடப்பும் நிறைந்தவர். கார் ஓட்டுவதில் மட்டுமல்ல, காதலியை மணப்பதிலும் பிரிவிதிலும் கூட. பல பெண்களுடன் உறவு கொள்வதிலும். கோபக்காரர்.

நிக்கி லோடா வாக Daniel Bruhl ஜேம்ஸ் அன்ட்டாக Chris Hemsworth.

பார்வையாளர்களை கோமாளிகளாக நினைத்து கிராபிக்ஸில் படம்மெடுக்கிற சமீப ஹாலிவுட் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படத்தை தந்ததற்காகவே இயக்குநர் Ron Howard யை பாராட்டலாம்.

பொதுவாக இன்றைய படங்களில், காதல் காட்சிகளில் கூட அடுத்தடுத்த டி.வி. சேனல்களை மாற்றி மாற்றி பார்ப்பது போன்ற ‘கட், கட், கட்’ என்று கண்களுக்கு சோர்வைத் தருகிற எடிட்டிங் பாணியிலிருந்து விலகி, வேகமான கார் பந்தயத்தைக் கூட நேர்த்தியான முறையில், நிதானமாக தொகுத்திருக்கிற படத்தொகுப்பை எவ்வளவு வேண்டுமானலும் பாராட்டலாம்.

ஒரு எடிட்டருக்கு அதிக வேலை தராத இயக்குரே மிக சிறந்த இயக்குநர். அந்த வகையில் இயக்குநர் Ron Howard யை மீண்டும் பாராட்டலாம்.

ஒரு நடிகரை அடையாளம் தெரியாமல் வேறு ஆள்போல் மாற்றி விடுவதுதான் சிறந்த மேக்கப் என்கிற கமல் பாணி மேக்கப் தமிழ் சினிமாவிலிருக்கிறது. இதற்கு ஹாலிவுட்டிலிருந்து மேக்கப்மேன் வேற. வேறு ஆளாக தெரிய வேண்டுமென்றால் எதற்கு மேக்கப்? வேறு ஆளையே நடிக்க வைக்க வேண்டியதுதானே?

கார் பந்தயத்தில் ஏற்பட்ட தீ யினால் கடுமையாக பாதிக்கப் பட்ட Daniel Bruhl வின் முகத்தில் ஏற்படுகிற மாற்றம் அவ்வளவு உண்மையாக இருக்கிறது.

பார்வையாளனை காட்சிகளுக்குள் வசப்படுத்தி திரைக்கதைக்குள் பயணிக்க வைக்கிற ஒளிப்பதிவு, அதற்கு உணர்வுபூர்வமாக ஒத்துழைக்கிற இசை; Rush ஒரு முழுமையான சினிமா.

சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல தமிழ் சினிமா இயக்குநர்களும் குறிப்பாக பிரபல இயக்குநர்கள் பார்க்க வேண்டிய படம். ஒரு சினிமாவை எப்படி எடுப்பது என்பதை கற்றுக் கொள்ள.

தமிழ் சினிமாவின் நவீன இயக்குநர்களிடம் நாம் ‘கருத்து’ எதையும் எதிர்பார்க்கவில்லை. அவுங்க கருத்து எவ்வளவு பேராபத்து நிறைந்ததாக இருக்கிறது என்பதை அவர்கள் படங்களில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

‘கருத்து சொல்வதல்ல எங்கள் வேலை. சினிமா ஒரு கலை. தரமான சினிமாக்களாக எடுப்பதுதான் எங்கள் நோக்கம்’ என்று சொல்லிவிட்டு, தாங்கள் சொல்வதையே செய்யாத இயக்குநர்கள், இந்தப் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

‘கருத்து சொல்றேன்’ என்கிற பெயரில் எளிய மக்களுக்கு எதிராக படம் எடுப்பதற்கு பதில், கலையம்சம் நிரம்பிய Rush போன்ற வெகுஜன சினிமாக்களை எடுத்தலே போதும்.

‘அது மாதிரி சினிமா என்னங்க…? அதையே எடுத்திட்ட போது’ என்று இதை காப்பியடிச்சி எத்தனை படம் கார் ரேஸ், பைக் ரேஸ் என்று வரப்போகிறதோ?

Rush க்கு நேரப் போகிறது சோதனை. தமிழ் ரசகிர்களுக்கு கிடைக்கப் போகிறது வேதனை.

**

Facebook ல் 13.10.2013 அன்று எழுதியது.

தொடர்புடையவை:

World War Z; ஹாலிவுட்டின் உன்னதமும் சீரழிவும் அமெரிக்க மூடத்தனமும்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ – காமெடி கலகம்

இன்றைய ஹாலிவுட் படங்களில் இருந்து தமிழ்படங்கள் வரை ரஷ்ய பட இயக்குநர் அய்சன்ஸ்டினோட வடிவங்களை காப்பியடிச்சுதான் எடுக்குறாங்க. பொட்டம்கின் படத்துல ஒரு காட்சி…

9 thoughts on “Rush: ஒளி ஒலியின் உன்னதம்

Leave a Reply

%d