விரைவில்; ஆதிக்கங்களுக்கு எதிரான ‘அபசகுனம்’

mathi

 ‘ஆச்சாரம்’ என்பது சுபசகுனம்.

சுபசகுனத்தின் குறியீடுகள் எல்லாமே ஆதிக்கத்தை, ஆதிக்க ஜாதிகளின் நலனை குறிப்பவை மட்டுமல்ல; பெண்களை, எளிய உழைக்கும் மக்களின் பண்பாட்டை கேலி செய்கிறது. அவமானப்படுத்துகிறது.

‘அபசகுனம்’ இதன் குறியிடுகளே அதற்கு சாட்சி.

சகுனங்களால் கட்டமைக்கப்பட்ட சமூக அமைப்பில், பொது வெளியில் இயல்பான கலந்துரையாடலை ஒருவரால் ஒரு போதும் நடத்திவிட முடியாது. பேச்சு சுதந்திரத்தைக் கூட, சகுனங்களே தன் காட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

ஒரு விசயத்தை செய்வதற்கு முன் அதன் சாத்தியம், சாத்தியமின்மை இரண்டையும் பேசிதான் முடிவு செய்ய வேண்டும். அதுதான் அறிவுடைமை. ஆனால், இங்கு சாத்தியமின்மையை பற்றி பேசுவதோ அபசகுனம். அப்படி எத்தனையோ சிறப்பான விசயங்கள் முன் கூட்டி பேசி முடிவெடுக்காததால், அற்ப காரணங்களாலேயே முடிவுக்கு வந்து விடுகிறது. அதாங்க வௌங்காம போது. அதற்கு முழு பொறுப்பும் சுபசகுனத்தையே சேரும்.

‘வாய வைக்காதீங்க’ ‘அபசகுனமா பேசாதீங்க’ ‘வாய வைச்சிக்கிட்டு சும்மா இருங்க’ ‘வாய கழுவுங்க’ ‘போன காரியம் உருப்பட்டா மாதிரிதான்’ இது போன்ற வாக்கியங்கள் பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான வெள்ளைக்காரனின் சட்டத்தை விட கொடுமையானது.

‘சகுனம்’ இதை தீவிரமாக கடைப்பிடிப்பவர்கள், நம்புகிறவர்களை மட்டுமல்ல; அதற்கு எதிரான கண்ணோட்டம் கொண்டவர்களையும் அதை பொருட்படுத்தாதவர்களையும் கூட கட்டுப்படுத்துகிறது; கட்டுப்படுத்துகிறார்கள் சுபசகுன வாதிகள்.

‘என்ன இது அற்பத்தனமா இருக்கு..’ என்று கேட்டால், உடனே அறிவியல், உளவியல் விளக்கம் கொடுத்து நியாயப்படுத்துகிற ‘விஞ்ஞானிகளும்’ இருக்கிறார்கள்.

அதாவது அதுக்குப் பேரு பாசிட்டிவ் எனர்ஜியாம்.

‘நல்ல’ காரியத்திற்கு போகும்போது.. பொணம் எதிர வந்தா, பாசிட்டிவ் எனர்ஜி. பொம்பள குறுக்க வந்தா நெகட்டிவ் எனர்ஜியா?

பிணத்திற்கு தருகிற மரியாதையை பெண்களுக்குத் தருவதில்லை. விதவை, வாழவெட்டி, மலடி என்று அவமானப்படுத்துகிறது உங்கள் பாசிட்டிவ் எனர்ஜி.

நல்லயிருக்கு சகுனங்களின் அறிவியல், உளவியல்.

**

பண்பாட்டு ரீதியான அவமானம், ஒடுக்குமுறை; இவையே நமது பாரம்பரியமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.

பாரம்பரியத்திற்கு பின்னால், பாரம்பரியம் போலவே நீண்ட அரசியலும் இருக்கிறது. அது,

சகுனம் X அபசகுனம்

பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு, நிமிர்ந்தால் நடத்தைக் கேடு, மறுத்தால் மானக்கேடு, ஊருக்கு வெளியே சேரி, நீச மொழி, மாத விலக்கு தீட்டு, கோயில் கருவறை தீட்டாகி விடும், மாட்டுக்கறி, பன்றி இறைச்சி இப்படியாக இன்னும் பல தீட்டுகளாலேயே எளியவர்களை ‘அபசகுனமாக’ அடையாளப்படுத்துகிற பண்பாடே நமது பாராம்பரியம்.

இப்படி ‘சகுனமாக’முதலாளித்துவ வடிவிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆதிக்கத்திற்கு எதிராக, சகல துறைகளிலும் ‘கலகம்’ செய்யும் நோக்கத்தோடு நாங்கள் ‘அபசகுனம்’ என்ற பெயரில் அணிவகுத்திருக்கிறோம்.

‘நாங்கள்’ என்றால்.. மா. பாலசந்தர், தமிழ்டெனி, ம. குமணன், ந. வெங்கட்ராமன், வே. மதிமாறன்.

அபசகுனம்
சகுனங்களுக்கு எதிரான கலகம்
 *
வெளியீட்டகம்.
*

எங்களின் இந்த வெளியீட்டகத்தின் முதன்மையான பணி, ஆச்சாரங்களுக்குக் கேடு விளைவிப்பது.

பழையது என்று கழித்தாலும், புதியதாக திரும்பி வருகிற இன்றைய நவீன கலை இலக்கியவாதிகள், அரசியல் ஆய்வாளர்கள், ‘முற்போக்காளர்கள்’ வரை பரவியிருக்கிற ஜாதி, மத கண்ணோட்டத்தை, அவதூறுகளை அம்பலப்படுத்துவது.

அதற்காக, ‘அபசகுனம்’ பெயரிலேயே கலை, இலக்கிய இதழ், புத்தகங்கள், குறும்படங்கள் (Short Films) ஆவணப்படங்கள் (Documentaries) என்று அணிவகுக்க இருக்கிறோம்.

புத்தகங்களிலிருந்தே துவங்குகிறோம். பிறகே குறும்படங்கள், ஆவணப்படங்கள்.

பயணம் செய்வதும் அதைத் தொகுத்து, பயணக் கட்டுரைகள் கொண்டு வருவதும் வழக்கம். நாங்களும் ஒரு குழுவாக பயணம் செய்து அதை கட்டுரைகளாக மட்டுமில்லாமல் ஆவணப்படங்களாகவும் கொண்டு வர இருக்கிறோம்.

அதன் முதல் பணியாக வருகிற 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம், 2645 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கங்கையை, ஹரித்துவாருக்கு மேல் எவ்வளவு தூரம் போக முடியுமோ அங்கிருந்து; ஹரித்துவார், ஃபருக்காபாத், கான்பூர், அலகாபாத், காசி, முன்கீர், பகல்பூர் போன்ற நகரங்கள் வழியாக மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தர வனத்தை செழிப்பாகி கடலில் கலக்கும் இடம் வரை பயணிக்க இருக்கிறோம்.

கங்கை நதி உருவாக்கி இருக்கிற செழிப்பு, அழிவு, அரசியல், புனிதமாக்கப்பட்டதின் பின்னணி, புனிதமானதினாலேயே அது எவ்வாறு அசுத்தப்படுத்தப்படுகிறது, நதிக்கரையை ஒட்டிய காடுகள், காட்டுயிர்கள், எளிய மக்களின் வாழ்க்கை என்று கங்கையோடு ஒரு நீண்ட பயணம் செய்ய இருக்கிறோம். அந்தப் பயணத்தின் கூடுதல் சிறப்பாக ‘புத்த கயா’ வும்.

அபசகுனம் வெளியீட்டகம் நீண்ட காலத் திட்டத்தோடு, நிறைய வேலை திட்டங்களோடு பணியாற்ற இருக்கிறது.

**

கருத்து வேறுபாடுகள் இல்லாமல் மனிதர்கள் இருக்க முடியாது.

மாமியார்-மருமகள், காதலன்-காதலி, கணவன்–மனைவி, அண்ணன்–தம்பி, நண்பர்களுக்குள் இப்படி ‘கருத்தே’ இல்லாமல், கருத்து வேறுபாடுகள் உருவாகும்போது, கொள்கை சார்ந்த நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வராமலா இருக்கும்?

எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் முற்றி, நாங்கள் பிரியாமல் இருந்தால், நீண்ட தூரம் பயணிப்போம்.

இல்லையேல்..

ஊத்தி மூடிட்டு போக வேண்டியதுதான்.

‘நல்லா வௌங்கும் உங்க வெளியீட்டகம்..’ என்று நினைக்கிறீர்களா?

‘அதான் அபசகுனமாச்சே…’ அப்படியும் நினைக்காதீங்க..

இதுதான் யதார்த்தம்.

தோழமையுடன்,
‘அபசகுனம்’
வெளியீட்டகம்
abasagunam@gmail.com