‘ஜல்லிக்கட்டு தடை’ வரவேற்போம்; யானைகளை பாதுகாப்போம்!

73

‘ஜல்லிக்கட்டு தடை’ முதன்மையாக வரவேற்பதற்குக் காரணம், இதில் ஜாதிய பின்னணி. பிறகு மனிதர்கள் மீது குடல் சரிந்து விழும் அளவிற்கு கொடூர தாக்குதலும் மூன்றாவதாக ஈவு இரக்கமில்லாமல் மாடுகள் துன்புறுத்தலும்.

ஆனால், பார்ப்பன அறிவாளிகள் ஜல்லிக்கட்டை எதிர்ப்பதற்குக் காரணம் ‘மாடுகள்’ துன்புறுத்தப்படுகிறது என்கிற அவர்களின் வழக்கமான ‘மனிதாபிமானம்’ மட்டுமே.

சரிதான். மாடுகள் இதில் துன்புறத்தப்படுகிறது. அதை நியாயப்படுத்த ‘பண்பாடு’ என்று காரணம் சொல்லப்படுகிறது. புளுகிராஸை விட உயர்ந்த ‘விலங்காபிமானம்’ கொண்டவர்கள் மாடுகளை ஜல்லிக்கட்டிலிருந்து பாதுகாத்தார்கள். அதனால் மனிதர்களும் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். மகிழ்ச்சி.

இதே பண்பாட்டு ரீதியாக அதிக துன்புறுத்தலுக்கு உள்ளாவது இந்தியாவில் யானைகள். கோயில் யானைகள்.
துன்புறுத்தலில் முதன்மையானது, அவை அதன் இயல்புக்கு மாறாக காடுகளிலிருந்து மனிதர்கள் கூட்டமாக வசிக்கும் பகுதிக்கு கொண்டு வந்தது தனிமை படுத்தியது. பிறகு கோயிலில் கால்களில் சங்கிலியிட்டும் ‘பய’பக்தியோடும் துன்புறுத்தல் நடக்கிறது.

நெரிசல் மிகுந்த கோயில் தெருக்களில் நடக்க முடியாமல் தவிக்கும் யானை யை பக்தி என்கிற பெயரில் கும்பலமாக மனிதர்கள் சூழ்ந்து கொண்டு ஈவ்டீசிங் செய்வதைப் போன்று, யானையை ஊர்வலமாக அழைத்துச் செல்வதும், தெருக்களில் பிச்சை எடுக்க வைப்பதும், 1 ரூபாயக்கு ஆசிர்வாதம் வாங்குவதும் பேரவலம்.

வான வேடிக்கைகள் வெடிகள் என்று கோயில் விழாக்களின் போது பேரோசையால் யானைகள் படும் துன்பத்திற்கு அளவே இல்லை. காட்டிலிருந்து வழித் தவறி ஊருக்குள் புகுந்த யானையை வேட்டு வைத்து விரட்டுவது வாடிக்கை.காரணம், அந்த சத்தம் யானையை அச்சம் கொள்ள செய்யும் என்பதினாலேயே.

ஆனால், கோயில்களில் சங்கிலியால் கட்டப்பட்டும், மனிதர்களால் சூழப்பட்டும் அதிக சத்தத்துடன் வேட்டு வைத்து பக்தர்களின் மகிழ்ச்சிக்காகவும் புண்ணியத்திற்காகவும் யானைகள் துன்புறுத்தப்படுகிறது.

அங்குசத்தால் குத்தப்பட்டு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதால், பல நேரங்களில் ஜல்லிக்கட்டில் நடக்கும் கொலைகளைவிட கொடூரமான முறையில் யானைகளால் பாகன்கள் சின்னா பின்னமாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள்.
அதனாலும் கடுப்பான யானை பொதுமக்களை விரட்டி விரட்டி கொன்றிருக்கிறது. அவ்வளவு ஏன்?

தமிழ் நாட்டின் மகாகவி என்று சொல்லப்படுகிற பாரதியார்கூட திருவல்லிக்கேணி யானையால் தூக்கி வீசப்பட்டதால் தான் இறந்தார் என்ற செய்தியும் உண்டு.

ஆகையால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததைப்போல் கோயில் யானைகள் அல்லது அவர்கள் உச்சரிப்பிலேயே சொல்வதானால் கோ‘வி’ல் யானைகள் பக்தர்களால் சித்தரவதைக்கு உள்ளாக்கப்படுவதையும் தடை செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டை எதிர்த்து அதை ஒரு முடிவுக்கு கொண்டு வந்த ப்ளுகிராஸை சேர்ந்தவர்கள் அல்லது பார்ப்பன அறிவாளிகள் இதற்கும் ஒரு முடிவை கொண்டு வரவேண்டும்.
நாமும் அவர்களுக்கு நம்மால் ஆனா எல்லா உதவிகளையும் செய்யவெண்டும்.

*

மே8, 2014  facebook ல் எழுதியது.

ஜல்லிக்கட்டை ஏன் எதிர்க்கிறார்கள்?

மாடுகளிலும் சூத்திர மாடு, பார்ப்பன மாடு உண்டு

அவன்-இவன்; பாலாவின் ஜல்லிக்கட்டு

10 thoughts on “‘ஜல்லிக்கட்டு தடை’ வரவேற்போம்; யானைகளை பாதுகாப்போம்!

  1. வணக்கம் ,
    எந்த ஒரு பிராணியையும் அதன் இயற்கைத்தன்மையிலிருந்து பிரித்து ,மற்றும்
    மனிதன் தனது மகிழ்ச்சி மற்றும் பிற கரணங்களூக்காக அதன் வாழ்விடத்திலிருந்து
    கடத்துவது கொடுஞ்செயல் / கொடுங்குற்றமும் ஆகும்..
    கோவில் / தர்காக்களில் உள்ள யானைகளின் பரிதாபங்களை நினத்தால் நமது நெஞ்சம் வெடிதுவிடும்போல் உள்ளது.
    யானைகளை அதன் இனத்திடமிருந்தும், சூழலிலிருந்தும் பிரித்து ,நகர்புறங்களில் வளர்ப்ப்பது என்பது , ஒரு மனிதனை தனியாக , அவன் விருப்பத்திகுமாறாக , கட்டாயதின் பேரில் அடர்ந்த காட்டினுள் தனியே விட்டு , ஆயுள்தண்டனை கொடுப்பதைவிட மோசமானது.
    இதற்கு ஒரு முடிவுகட்ட சரியான தருணம் இது. “மனித மிருகங்களிடம் ” இருந்து
    அப்பாவி மிருகங்களை காத்திட உறுதியுடன் செயல்படவேண்டும். / செயல்படுவோம்.
    கே.எம்.அபுபக்கர்.
    கல்லிடைக்குறிச்சி 627416

  2. யானைக் காப்பு பற்றிய உங்கள் கருத்துரை மிகச் சரியானது, வரவேற்கின்றோம், ஆனால் புளுகிராசுக்கு இவையெல்லாம் கண்ணக்கத்தெரியா.

  3. k.kunathogaiyan அவர்களுக்கு வணக்கம் .
    இந்த ப்ளு க்ராஸ் காரர்களுக்கு இம்மாதிரியான பிரச்சினைகள் அவ்வளவாக பெரியது இல்லை. மேலும் யானை,புலி ,சிங்கம்,கரடி போன்றவைகள் வனத்துறையின் ஷெட்யூல் -7 ல் உள்ள இனங்கள் , மற்றும் இது பற்றி சமுக ஆர்வலர்களாலேயே பிரச்சனைகள் அலசப்படுகின்றன.மேலும் தற்போதைய நிலையில் ஆடு , மாடு , நாய் , மற்றும் வளர்ப்பு பிராணிகள்/பறவைகளின் வதைகள் பற்றியே அவர்களால் முழுமையாக செயல்பட கடினமான சூழ்நிலை உள்ளன.
    சமூக ஆர்வலர்கள்,சுற்றுச்சூலல் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து செயல்படவேண்டிய
    கட்டாய தருணம் இது
    கே.எம்.அபுபக்கர்
    கல்லிடைக்குறிச்சி 627416
    நாள் :: 10.05.2014

  4. வளர்ப்புப் பிராணிகளையே நம்மால் துன்புறுத்தாமல் வளர்க்க முடியாத போது,
    யானை போன்ற மிருகங்களை செல்லமாக வளர்க்க முடியாது. உடனடியாக அவைகளை
    கோயில்களிலிருந்து விடுவிக்க வேண்டியது முக்கியம்.

  5. “மகா கவி என சொல்லப்படுகின்ற பாரதி” என்ற உங்கள் கூற்று உங்களின் ஒரு சாதி சார்பினை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. அப்படியானால் தாங்கள் பாரதியை மாகவியாக ஏற்றுக்கொள்ளவில்லயா? அவர் பார்ப்பன குலத்தில் பிறந்த ஒரே காரத்திற்காக தாங்கள் இப்படிப்பட்ட வார்த்தைப் பிரயோகத்தைக் கையாண்டுள்ளீர் என்பது தெளிவாக விளங்குகிறது. சாதி எதிர்ப்பு என்ற பெயரில் ஒரு சாதியை மட்டுமே ஆதரிக்கும் இயல்பு உங்கள் அனைத்துப் பதிவுகளையும் பார்க்கும்போது வெளிப்படுகிறது. சாதி எதிர்ப்பு என்பது சமூகத்தில் பிறப்பால் வரும் ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதே… அறிவால் வரும் புகழைக் கூட ஒரு சிலர் சாதியக் கண்ணோட்டத்துடன் அணுகுவது வருந்தத்தக்கது.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading