இன்னொரு கிருஷ்ணய்யர்

542686_316040475184450_1197062580_n
நேற்று தோழர் ஞாநி நடத்திய மெல்லிசை மன்னர் நினைவலைகள் நிகழ்ச்சியில், முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி மரியாதைக்குரிய சந்துரு அவர்கள் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தார்.

அவரைப் பார்த்தவுடன் அருகில் சென்று வணக்கம் தெரிவித்து என் பெயர் சொன்னேன். உங்களைத் தெரியும் என்றார்.
இருந்தாலும் அவர் வந்திருப்பதைக் குறிப்பிட்டுப் பேசினால் அதை அவர் விரும்பமாட்டாரோ என்ற நினைப்பில் அவரைக் குறிப்பிடாமல் விட்டேன். அவர் வருகையைக் குறிப்பிடாமல் பேசியது எனக்கு உறுத்தலாகவே இருந்தது.

மிகச் சிறந்த அறிவாளி, தான் படித்த சட்டத்தைத் தனக்குப் பயன்படுத்திக் கொள்ளாமல் மக்களுக்குப் பயன்படுத்தியவர். டாக்டர் அம்பேத்கர் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அவர் கேட்க நான் பேசியதை மிகப் பெருமையாகவே கருதுகிறேன்.

தூக்குக் கயிறுகளோடு திரிகிற இன்றைய நீதிபதிகளோடு ஒப்பிட்டால், நீதிபதி சந்துரு அவர்களின் பணி எவ்வளவு சிறப்பானது. அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் போயிருந்தால் நமக்கு இன்னொரு கிருஷ்ணய்யர் கிடைத்திருப்பார். யாகூப் மேமன் தூக்கைக் கூட நிறுத்தி வைக்க ஒரு வாய்ப்பை உருவாக்கியிருப்பார்.
அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாகாதது நமக்குத்தான் நட்டம்.

மற்றபடி, மிகச் சிறந்த வாழ்க்கை அவருடையது

‘போக்குவரத்துக் கழகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயரை வைக்க வேண்டும்.’ – நீதிபதி சந்துரு அவர்களுக்கு நன்றி

நாளை..?

நாளை ஒரு மரணம் ‘அடக்கம்’ செய்யப்பட இருக்கிறது. ஒரு மரணம் ‘நிகழ்த்தப்பட’ இருக்கிறது. இரண்டையும் இந்திய அரசுதான் செய்கிறது. இரண்டிலுமே சிறுபான்மை மக்களை மையமிட்டு நடக்கிற அரசியல் குறியீடு இருக்கிறது.

மிஸ் பண்ணாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க

ஒரே ஜனாதிபதி..

ஒரே ஜனாதிபதி..

சங்கராச்சாரி உட்பட எந்த இந்து சாமியார்களிடமும் அடிமையைப்போல் காலடியில் வீழ்ந்து ஆசி வாங்கி மக்களை அவமானப்படுத்தாத, சாமியார்களைச் சந்திக்கவே சந்திக்காத
ஒரே ஜனாதிபதி கே.ஆர். நாராயணன். ஒரே பிரதமர் வி.பி.சிங்.

ஒபாமா: அமெரிக்காவின் அப்துல்கலாம் அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்

மிஸ் பண்ணாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க

நேற்று புதியதலைமுறை தொலைக்காட்சியில் தமுஎகச வை சேர்ந்த பேராசிரியர் அருணன் அப்துல்கலாம் பற்றி, ‘அவரு தலை முடி சிங்கம் பிடரியைப் போல் இருக்கும்’ என்றார்.
ஓ.. அப்துல்கலாமை இப்படிக் கூட ஆதரிக்கலாமோ? நல்ல மெத்தட்.

‘கனவு காணுங்கள்’ மாணவர்களின் எதிர்காலம் குறித்து அக்கறையோடு பேசிய அப்துல் கலாமை மானசீக குருவாக ஏற்று ஒரு மாணவன் அவரைப் போலவே முடி வளர்த்தால்,
அவனை ஆசிரியர்கள் மிக மோசமாகத் திட்டி, ‘மரியாதையா நாளைக்கு ஒழுங்க முடி வெட்டிக்கிட்டு வா’ என்று எச்சரிக்கிறார்கள்.
ஆனால், ஆசிரியர் அதுவும் பேராசிரியர் அருணனோ இப்படிச் சிலாகிக்கிறார்?
*
‘என்னய்யா இது ஒரு பிரச்சினையா..? டி.வியில பேச கூப்பிடறாய்ங்க.. அந்த வாய்ப்பை தவற விடலாமா..? போங்கய்யா.. கூப்பிட்ட உடனே கிளம்பி போய்ப் பேசுங்க..’
-மிஸ் பண்ணாதீங்க .அப்புறம் வருத்தப்படுவீங்க-

இயக்குநர் மணிவண்ணனின் ‘ஆன்மா’ பாரதிராஜா-விகடனை மன்னித்தாலும் துரோகத்தை மன்னிக்காது!

இயக்குநர் K. பாலசந்தர் மரணமும் ‘முற்போக்கு’ ஒப்பாரிகளும்

ஒபாமா: அமெரிக்காவின் அப்துல்கலாம் அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்

அம்மன் vs அம்பாள்

ஆடி மாத ஆட்டம் ஆரம்பித்து விட்டது. அம்மனுக்கு விஷேசமான மாதம். தெருவுக்குத் தெரு திருவிழா தான். இந்தத் தெருக்கோயில் திருவிழாவில் ‘அம்மனுக்கு’ பூசாரிகள் தான் பூஜை செய்வார்கள். பூசாரி என்றாலே ‘சூத்திரர்கள் – பஞ்சமர்கள்’ தான். –

‘அம்பாளுக்கு’த்தான் குருக்கள், அர்ச்சகர்கள் தீவார்த்தனை காட்டுவார்கள்.

‘நம்மக் கோவிலுக்கு முஸ்லீம், கிறித்துவன் வந்து கும்புடுறானா.. நீ மட்டும் ஏன் அவன் கடவுள கும்புடுற? ’ என்று கேட்கிற ‘அம்பாளின்’ ஆட்கள் யாரும் ‘பூசாரிகளின் அம்மனை’ வழிபட வருவதேயில்லை. ஏன்?

‘உன்னைவிட மட்டுமல்ல, உன் கடவுளை விட நாங்கள் உயர்ந்தவர்கள்’
24 at 19:53

நடிகை ஆடியதும், பக்தர்கள் ‘சாமி’ வந்து ஆடுவதும்; சாதனை

சுமைதாங்கியும் பாபநாசமும்

kkfsJOcjebjsi
‘பாபநாசம் கமலின் மாபெரும் வெற்றி’ என்று கொண்டாடுகிறார்கள்; அவரின் ரசிகர்கள் அல்லாத ரசிகர்களும். அது ‘திர்ஷயம்’ திரைக்கதையின் வெற்றி. கன்னடம், தெலுங்கு என்று எல்லா மொழிகளிலும் வெற்றிப் பெற்றிருக்கிறது.

கமல், இந்திய மொழிகளில் வந்த படங்களாக இருந்தால் உரிமை பெற்றுத் தமிழில் தருவார். ஹாலிவுட் படமாக இருந்தால் உரிமை பெறாமலேயே தமிழில் தருவார். அதனால் தான் அவர் உலக நாயகன்.
10 July

‘தாய் மதம் திரும்புதல்’ என்று ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து அமைப்புகள் ‘இந்து மத’ மாற்றத்திற்கு முயற்சித்தும் முடியாததை,
நமது உலகநாயகன் எளிதில் சாதித்து விட்டார்.
திர்ஷயம் ‘ஜார்ஜ்’ – பாபநாசம் ‘சுயம்புலிங்கம்’.
12 July

இந்துவாகப் பிறந்த ஒருவன், தன் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, கிறித்துவ மதத்திற்கு மாறிவிடுவதாகக் காட்டினார்; இந்துவான ஸ்ரீதர். ‘சுமைதாங்கி’ யில்.
கிறிஸ்துவராக இருந்த கதையின் நாயகனை இந்துவாக மாற்றினார்; கடவுள் மறுப்பு கமல். பாபநாசத்தில்.

பாபநாசம்: அசைவம் சைவமாக மாறிய கதை

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

‘வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா..’


‘குத்துப் பாட்டு’ என்று இரைச்சலும், வேகமும் மட்டுமே கொண்டு கேட்பவனைக் குத்து குத்து ன்னு குத்துறப் பாட்டா வருது. இசை வெளியீட்டு விழாவில் ஆரம்பித்துப் படம் வெளியாவதற்குள் அதன் ஆயுள் முடிந்து விடுகிறது.

குத்துப்பாட்டு போன்ற சூழலில் கூட மெல்லிசை மன்னர், சுலோ ரிதத்தல்.. குறைவான வாத்திய கருவிகள் கொண்டு, எவ்வளவு இனிமையான மெல்லிசையைத் தந்திருக்கிறார். 1971 ல் வெளியான பாபு படத்தில், ‘வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா..’ பாடலில்.

மெட்டு ரொம்ப நவீனமா இருக்கு. கோரஸ் என்ன ஸ்டைல்.. மெல்லிசை மன்னரின் நவீனத்திற்கும் ஸ்டைலுக்கும் இணையா சிவாஜி கணேசன் தன்னுடைய மூமெண்டை அழகா சிங்க் பண்றார். (‘பத்மநாப அய்யர்..’ என்கிறபோது பூணூல் செய்கை தவறாகக் காட்டுகிற ஒரு இடத்தைத் தவிர)

இந்தப் பாடலில் முதல் மெல்லிசை மன்னர். இரண்டாவது சிவாஜி. மூன்றாவது நடன இயக்குர்.

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’ கலையின் உன்னதம்

உன்னதம்: இளையராஜா-மகேந்திரன்-ஸ்ரீதேவி-ரஜினி

அந்தப் பாடலில் வரும் இசை நிலைகுலைய செய்கிறது!

‘குவாட்டர்’ அடிச்சிட்டு…

‘டாஸ்மாக்’ – கூலி தொழிலாளர்கள்,தொழிலாளர்கள்,நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த குடி பழக்கமே இல்லாத பெண்களை மிகக் கொடூரமாகப் பாதி்க்கிறது. அவர்கள் அதற்கு எதிராகச் செயலாற்ற கிளம்பியிருக்கிறார்கள்.

ஆகவே, அதிமுக அரசுக்கு எதிராக மது பிரச்சினையை மட்டும் தான் பெரிய அளவில் பயன்படுத்த முடியும் என்பதால், ஒரு குடிகாரனைப்போல் முன்னுக்குப் பின் முரணாக எல்லா அரசியல் கட்சிகளும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

மதவெறி, ஜாதிவெறிக் கொலைகள் குறித்துக் கள்ள மவுனவிரதம் இருந்தவர்கள் கூட மதுவுக்கு எதிராக மூச்சு முட்ட பேசுவது அதனால் தான்.

ஜாதிவெறியல் படுகொலை செய்யப்பட்ட பிணத்தைத் தாண்டி, குடியால் இறந்த பிணத்தின் முன் குத்துக்கால் போட்டு உட்கார்ந்து ஒப்பாரி வைப்பதும் அதுவே தான்.

ஜாதிவெறி, மதவெறி குறித்துக் கருத்துகூடச் சொல்லாமல் கமுக்கமாக இருந்துவிட்டு, மதுவுக்கு ‘மட்டும்’ எதிராகப் பேசுபவர்களை,
‘குவாட்டர்’ அடிச்சிட்டு குடிகாரனைப்போல் அசிங்க அசிங்கமா திட்டுலாமான்னு தோணுது. நீங்க என்ன சொல்றீங்க?
*
(18 தேதி புதியதலைமுறை தொலைக்காட்சியின் ‘ உரக்க சொல்லுங்கள்’ நிகழ்ச்சிக்காக ‘மது விலக்கு சாத்தியமா?’ என்ற விவாதத்தில் கலந்து கொண்டேன். 18 தேதி பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி, 26 காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.)

டாஸ்மாக் தமிழனும் நீதி தவறாத அரசும்

நன்றி:அதிமுக வினருக்கும் இன்னும் சில..

‘குடி‘ குடி யை கெடுக்குமா?

பெண்கள் குடிப்பதை பெரிய சமூக சீர்கேடாக சித்திரிக்கிறார்கள். குடி பிரச்சினையா? இல்லை பெண்கள் குடிப்பதுதான் பிரச்சினையா?

உண்மையில், ஆண்களின் குடி பழக்கத்தால் பெரிய அளவில் பெண்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். அடி, உதை மட்டுமல்ல குடும்பம் நடத்த முடியாத அளவிற்குப் பொருளாதாரப் பிரச்சினை, குழந்தைகள் பட்டினி, தொடர் வறுமை. மதுவினால் ஏற்படுகிற பிரச்சினைகளிலேயே மிகத் துயரமானது பெண்கள் மீது உளவியல், உடல் சார்ந்து நடக்கிற வன்முறைகளே.

இதைப் பேசுவதைத் தவிர்த்து, ‘குடியினால் பண்பாடு கெட்டு விட்டது. ஒழுக்கமில்லாமல் போய் விட்டது’ என்ற கலாச்சாரக் ஊளையிடுவதும்,

‘ஆப்பம் சுடும்போது ஆயா கள்ளு கலந்து சுடுவாங்க. குடிப்பது இயல்பான பழக்கம்’ என்று அதை இன்னொரு கலாச்சார அடையாளமாக வியக்கானம் செய்வதும் என்ன நியாயம்?
2 July at 22:34

மக்கள் திலகமும் மலிவு விலை மதுவும்

எம்.எஸ்.வி மரணம்; விருதுகளுக்கு அவமானம்

msv
தமிழர்களின் கண்ணீர், கவலை, துக்கம் என்று எல்லாச் சோக உணர்வுகளின் போதும் ஆறுதல் அளித்துத் துணை நின்று, பதிலுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அள்ளித் தெளித்த அந்த மாமேதை இன்று மரணித்தார்.

பத்ம ஸ்ரீ உட்பட மத்திய அரசு விருதுகள் கடைசி வரை அவருக்குத் தரப்படாமல், இழிவான, மலிவான அரசியலை நடத்தி அம்பலப்படுத்திக் கொண்டன.

விருதுகளால் மேதைகள் அங்கீகரிக்கப்படுவதில்லை, மேதைகளால் தான் விருதுகள் அங்கீகாரம் பெறுகின்றன. மெல்லிசை மன்னரின் மரணத்தால் அவமானப்பட்டுப்போனது விருதுகள்.
*
13 ஆண்டுகால பத்திரிகையாளன் பணியில் வீணாகப் போன என் நாட்களில்; எனக்குக் கிடைத்த ஒரே அங்கீகாரம். 30-10-2005 அன்று மெல்லிசை மன்னரை நேர்காணல் செய்ததுதான்.
*
மெல்லிசை மன்னர் உங்களின் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடியுமா?
உண்மை அதுதான்.
சிக்கலான நேரங்களில், உங்களின் தனிமை அவரோடு கழிந்து இருக்கும்.

‘மனசே சரியில்லை’ என்று நீங்கள் சோர்ந்த நேரங்களில், “மயக்கமா…. கலக்கமா… மனதிலே குழப்பமா…” என்று உங்களை ஆறுதல் படித்தியிருப்பார்.

“இல்லை, இந்தப் பிரச்சினைக்கு அழுதே தீரவேண்டும்” என்றால், “கண்ணிலே நீர் எதற்கு? காலம் எல்லாம் அழுவதற்கு” என்று உருக்கும் மெட்டோடு உங்களோடு சேர்ந்து அழுதிருப்பார்.

உற்சாகமான நேரங்களில், உங்களை இன்னும் கூடுதல் மகிழ்ச்சியாக்க, “மதன மாளிகையில்… மன்மத லீலைகளாம்…’ என்கிற வித்தியாசமான காம்போஸிஸனோடு இனிமையான மெட்டில் உங்களை மயக்கி இருப்பார்.

ஆம், அந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனோடுதான் இந்தச் சந்திப்பு.
யானை தன்னைவிடப் பலவீனமான பாகனுக்குக் கட்டுப்பட்டு இருப்பதுபோல், இந்த நுட்பமான இசையமைப்பாளர் தன்னிடம் உள்ள அற்புதமான திறமையை நடிகருக்கும், கவிஞருக்கும், இயக்குநருக்குமே காணிக்கையாக்குகிறார்.

‘என் திறமையே அவர்களால் வந்ததுதான்’ என்று உறுதியாக நம்புகிறார்.

‘இசை வார்த்தைகளை விட நுட்பமானது’ என்கிற கருத்தை முற்றிலுமாகத் தள்ளிவிடுகிறார்.
சிறந்த கலைஞனின் மனநிலை, ‘ஒளிவு மறைவின்றி, கள்ளம் கபடமின்றி இருக்கும்’ என்பார்கள். ஆம், அதற்கு ஓர் உதாரணம் போல் இருக்கிறார் மெல்லிசை மன்னர்.
ஒரு கோடை மழைபோல் பாட்டும், பேச்சுமாகக் கொட்டியது அவர் பேட்டி,

* வறுமையான குடும்பத்தில் பிறந்த நீங்க, ஏகலைவன்-துரோணரை தூரமா இருந்து பார்த்து, வில்வித்தைக் கத்துகிட்டா மாதிரி, உங்க சொந்த முயற்சியிலே இசையைக் கத்துக்கிட்டு மிகப் பெரிய இசையமைப்பாளரா உருவானீங்க. இன்றைய உங்களின் நிறைவான வாழ்க்கையில் இருந்து, உங்களின் கடந்த கால வாழ்க்கைக்குப் போயிட்டு உடனே திரும்பி வாங்களேன்…

எனக்கு அப்பா கிடையாது. அம்மாதான். கேரளாவில் கண்ணணூரில் ஜெயிலரா இருந்த என் தாத்தாதான் என்னை வளர்த்தார். எனக்குப் பள்ளிக்கூடம் போறதுக்கு விரும்பம் கிடையாது.

ஏன்ன, ‘புத்தகம் பையிலே, புத்தியோ பாட்டிலே’ அப்படிங்கறா மாதிரி எனக்கு இசையிலேதான் நாட்டம்.
எங்க ஊர்ல நீலகண்ட பாகவதர்ன்னு ஒரு இசை அறிஞர், சின்னப் பசங்களுக்குப் பாட்டு சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருந்தார். அத தூரமா இருந்து நான் கவனிப்பேன்.

இப்படி ஒரு வருடம் போன பிறகு என்னைக் கவனித்த பாகவதர், ‘கூலிக்கு மாரடிக்கிறேன். ஒரு பயலுக்கும் இசை வரல. உனக்குக் காசு வாங்காம சொல்லிக் கொடுக்கிறேன்’ ன்னு, 13 வயசிலேயே என்னை அரங்கேற்றம் பண்ண வச்சார்.

பிறகு ஜெயிலரான எங்க தர்ததாவும் பாகவதரும் நண்பர்களா இருந்ததாலே ஜெயில்ல ஒரு நாடகம் போட பாகவதருக்கு வாய்ப்பு கிடைச்சது.
அந்த நாடகத்துல நான் லோகிதாசனா நடிச்சேன். நாடகம் பார்க்க வந்த உயர் அதிகாரிகள் என் நடிப்பை பாத்திட்டு என்னை நடிகனா வர உற்சாகப்படுத்தினது மட்டுமல்லாம, திருப்பூர்ல இருந்த ஜுபிடர் பிக்சர்ஸல என்னைச் சேர்த்து விட்டாங்க.

ஜுபிடர் பிக்ஸர்ல அப்போ கண்ணமாவை வைச்சு ‘கண்ணகி’ படம் எடுத்துக்கிட்டு இருந்தாங்க. அதலு எனக்குப் பால கோவலன் வேசம்.
எனக்கு ஜோடியா நடிச்ச பொண்ணு என்னை விடப் பெரிய பொண்ணா இருந்தது. அவள படத்துல இருந்து தூக்காம, என்ன தூக்கிட்டாங்க. அதனால அதே கம்பனியிலே ஆபிஸ்பாயா ஆனேன்.
அங்கே எஸ்.வி. வெங்கட்ராமன், டி.ஆர். பாப்பா போன்ற இசையமைப்பாளரெல்லாம் என்னோட இசை அறிவைப் பார்த்துட்டு என்னை அவுங்க கூடச் சேர்த்துக்கிட்டாங்க.

* அப்போ உங்க நடிப்பு ஆசை அதோட நின்னுப் போச்சா?

டி.எஸ். பாலைய்யா அண்ணனோட பழக்கம் கிடைச்சது. அவருக்கு என்னை நடிகனாக்கிப் பாக்கணும்னு ஆசை. அவருகூடச் சேலம் பக்கத்துல ஆத்துர்ல ராமாயணம் நாடகத்தில நடிச்சேன்.
அதுல எனக்கு, சீதை சுயவரத்திலே வில்லு ஒடிக்க வர ராஜாக்கல்ல ஒரு ராஜாவா வேசம். நான் வில்லை ஒடிக்க முடியாம கீழே போட்ட உடனேயே அந்த வில்லு பக்கத்துல இருந்த சுட்ச்சு பாக்ஸ்ல பட்டு உடைஞ்சு போச்சு.

அவ்வளவுதான் ஜனங்க எல்லாம் மேடைக்கு வந்து ‘மரியாதையா இவனுக்குச் சீதையைக் கல்யாணம் பண்ணி வை’ன்னு தகராறு பண்றாங்க. உள்ள போக முடியாது. உள்ள போனா பாலைய்யா அண்ண(ன்) என்னைக் கொன்னே போட்ருவாரு. வெளியே தகறாறு. வேற வழியில்லாம உள்ள போனேன்.

அவ்வளவுதான் பாலைய்யா என்ன பின்னு, பின்னுன்னு பின்னி என் முகத்த தரையில வைச்சு தேய்ச்சாரு. ஆள விட்டா போதும்ன்னு அங்க இருந்து தப்பிச் சேலத்துக்கு வந்தேன்.
அப்போ எங்க தாத்தா சேலம் ஜெயிலுக்கு மாற்றலாகி வந்திருந்தாரு. அவரைப் பார்த்துட்டு, மார்டன் தியேட்டஸ்ல இருந்த கே.வி. மகாதேவன்கிட்ட கோரஸ் பாட வாய்ப்புக்கேட்டுப் போனேன்.
அவரு ‘உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. ஜுபிடர் பிக்சர்ஸ்லேயே போய்ச் சேரு’ ன்னு சொல்லி ரயில் செலவுக்கு இரண்டு ரூபா பணம், புதுவேட்டி, சட்டையும் எடுத்துக் கொடுத்து அனுப்புனாரு. நேரா கோவையில் இருந்த ஜுபிடர்ல போய்ச் சேர்ந்தேன்.

அங்க எஸ்.என். சுப்பையா நாயுடு இசையமைப்பாளரா இருந்தாரு. அவருக்கிட்டே உதவியாளரா சேர்ந்தேன். கூட ஜீ.கே. வெங்கடேஷ் எல்லாம் இருந்தாங்க. சுப்பையா நாயுடு இல்லாதப்ப ஆர்மோனியப் பெட்டி எடுத்து நான் மெட்டு போடுவேன். அத ஒரு நாள் அவரு பாத்துட்டு, ‘என்னடா பண்றே’ ன்னு? அதட்டுனார்.

அதுக்கு ஜீ.கே. வெங்கடேஷ், ‘இவ்வளவு நேரம் உங்களுக்கு வராத மெட்டை அவன் போட்டுட்டான்’ அப்படின்னாரு. அந்த மெட்டை சுப்பையா அண்ணன்கிட்ட வாசிச்சி காம்பிச்சேன்.
அவரு, ‘இதை நீ போடடதா சொல்லாத நான் போட்டதா வாத்திய கோஷ்டி கிட்ட சொல்லு’ ன்னாரு.

அந்தப் பாட்டு சூப்பர் ஹிட்டு. அதுக்கப்புறம் எனக்கு ஒவ்வொரு படத்திலேயும் இரண்டு பாட்டு, ஆனா அது அவர் பேர்ல வரும். எல்லாம் ஹிட்டு. திடீர்ன்னு சுப்பையா நாயுடு உட்பட எங்க எல்லாத்துக்கும் ஜுபிடர்ல கணக்கு முடிச்சு அனுப்பிட்டாங்க.

எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. வாழ்க்கை இருண்டு போச்சு.
ஒருநாள் சுப்பைய நாயுடு திடீர்ன்னு தெய்வம்போல வந்து, என்னை ஜுபிடர் முதலாளிகிட்ட, ‘இதுவரைக்கும் ஹிட்டான பாட்டெல்லாம் இவன் போட்ட மெடடுதான்’ ன்னு சொல்லிட்டாரு. அதுக்குப் பிறகு எனக்கு நல்ல வாழ்க்கை.
1948ல சென்னைக்கு வந்து சுப்பராமன்கிட்ட சேர்ந்தேன். பிறகு இசையமைப்பாளரா உயர்ந்தேன்.

* உங்களைப் பற்றிச் சொல்லியாச்சி. இனி நேரடியா உங்க இசைக்கு வந்துடுறேன்.
ஊட்டி வரை உறவு படத்தில், ‘பூமாலையில் ஒர் மல்லிகை’ நெஞ்சிருக்கும் வரையில் ‘முத்துக்களோ கண்கள்’ இந்தப் பாடல்களின் மெட்டுக்கள் காதலை இனிமையாகச் சொன்னாலும், அதன் உள்ளே ஒரு சோக உணர்வு ஓடிக் கொண்டே இருக்கிறதே? அதை நீங்கள் திட்டமிட்டு செய்தீர்களா?

அதான் மெலடி. காதல்ல, லவ் சாங்ல கச்சா முச்சான்னு கூத்தடிச்சிக்கிட்டு பாடமுடியாது. அப்படி மென்மையாதான் பாட முடியும். அதுல ஒரு சோகம் இருக்கும். அதான் மெலாடியோட இனிமை. சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து… பார்த்த ஞாபகம் இல்லையோ… இந்தப் பாடல்களில் கூட அந்த உணர்வு இருக்கும். சோகத்துக்குள்ளே இனிமை இருக்கும். இனிமை உள்ளார சின்னச் சோகம் இருக்கும். அதுதான் அந்தப் பாட்டின் சோக உணர்வுக்குக் காரணம்.

* ‘பாலிருக்கும்… பழமிருக்கும்… பசியிருக்காது….’ இந்தப் பாடலின் சிறப்பு, பெண் குரல் வார்த்தைகளால் பாடும். ஆண் குரல் பாடல் முழுக்க ‘ஹம்மிங்’ செய்து கொண்டே இருக்கும். இந்த வித்தியாசமான கற்பனையின் பின்னணி என்ன?

அந்த ‘ஹம்மிங்’ என்னுடைய குரல்தான். புதுசா பண்ணணும்னு திட்டமிட்டுப் பண்ணதுதான். ஆண்-பெண் உறவு பற்றி, ஆண் பாடுனா பெண்ணுக்கு வெட்கம் வரும். பெண் பாடுனா ஆணுக்கு வெட்கம் வராது. அதானால ‘ஹம்மிங்’ ல பாடிடுறான்னு வச்சோம். புதுமை, புதுமை, புதுமை-பழமை மாறாதா புதுமை.

* இளம் விதவையின் சோகத்தைப் பாடலின் வார்த்தைகளையும் மீறி உருக்கியிருந்தீர்கள் ‘பாக்கியலட்சுமி’ படத்தில் ‘மாலை பொழுதின் மயக்கத்திலே’ என்ற பாடலில். குறிப்பாக ‘கணவன் என்றால் அவன் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி’ என்ற முடிவின் தொடக்கத்தில், ‘ஷெனாய்’, இசைக்கருவியைப் பயன்படுத்தியிருப்பீர்கள்.
அதுவரை மெட்டு கலக்கமான மனநிலையை உருவாக்கி அழவைத்திடுமோ என்ற நிலையில் இருக்கும்போது, அந்த ‘ஷெனாய்’ ஒலி அழவைத்தே விடுகிறது. நிற்கதியாய் இருக்கிற பெண்ணின் சோகம், ஏக்கம், விரக்தி என்று உணர்வுகளால் தளும்பி இருக்கிறது ‘சந்திர கவுன்ஸ்’ ராகத்தில் அமைந்திருக்கிற அந்தப் பாடல்….

அதான் மூடு மியூசிக். அந்த மூடை இசையமைப்பாளர் உணர்வது மாதிரி கதையை விளக்கி சொல்ற இயக்குநரோட திறமையைப் பொறுத்துதான் நல்ல பாட்டு அமையும். கதையை சரியாப் புரிஞ்சுக்கிற இசையமைப்பாளன் அந்தக் கதாபாத்திரமாவே மாறிடுவான். கண்ணுல தண்ணி வந்ததுன்னு சொன்னீங்க இல்ல, கண்ணுல தண்ணி வரணும்னுதான் அங்க ‘ஷெனா’யை வச்சது.

* ‘ஷெனாய்’ மிகச் சிறந்த இசைக்கருவி. அதில் மகிழ்ச்சி, உற்சாகம் போன்ற உணர்வுகளைக் கூடத் தரமுடியும். ஆனால், ‘சோகம் என்றால் ஊது ஷெனாயை’ என்பது போல் அதைத் துக்க உணர்விற்கே நீங்கள் நிறையப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்?

சோகம், துக்கம் என்றில்லை எல்லா உணர்வுகளுக்கும் ஷெனாயை கொண்டு வரலாம். பக்தி, மகிழ்ச்சிக்குக்கூடப் பயன்படுத்தலாம். ‘சரவணப் பொய்கையில் நீராடி’ என்ற பாட்டிற்கும் ‘ஷெனா’ யை பயன்படுத்தியிருக்கிறேன்.

* எளிமையான மெட்டு. அதிகமான வாத்தியக்கருவிகள் இல்லாமல் உருவான ‘சக்கபோடு போடு ராஜா… உ(ன்) காட்டுல மழை பெய்யுது…’ இந்தப் பாட்டுக்கு இணையாக அதனோடே, எகத்தாளமான பேச்சு ( ஆமா, மழைபெய்யுது…நீ வந்து கொடை புடி… ஏன்டாங்…) என்று வித்தியாசமா அமைஞ்சிருந்தது…

ஆமாம், வித்தியாசமாகச் செய்யணும்னுதான் அதைச் செஞ்சோம். டைரக்டர் ஏ.சி. திருலோகச்சந்தர் ரொம்பப் பிரமாதமா கதையை விளக்கிச் சொன்னார்.
மனசாட்சியைப் பார்த்து பாடற மாதிரியான சூழல். அத நாங்க ஒரு டீமா பேசி உருவாக்கினோம்.
அந்தப் பாட்டு சூப்பர் ஹிட்டாச்சி. ஏ.வி.எம்.மின் பாரதவிலாஸ் படத்தில் வர பாட்டு.

* இதைக் கண்டிப்பா உங்ககிட்ட கேட்டே ஆகணும். கவிஞர்கள் உங்க முதுகுல சவாரி செஞ்சி, உங்களைவிட அதிகமான புகழ் சேர்த்துகிட்டாங்களோன்னு தோணுது. கண்ணதாசனையும் சேர்த்தே சொல்றேன்….

இல்லை, தப்பு. பலமுறை கண்ணதாசன் எழுதுன பாட்டுக்கு மெட்டுப் போட்டிருக்கேன். மெட்டும், வார்த்தையும் இணைந்ததுதான் பாடல்.

* சரிதான், அத நான் மறுக்கல, வார்த்தையை உருவிட்டாக்கூட மெட்டு இனிமையோடு இருக்கும். மெட்டை உருவிவிட்டா வார்த்தை சுவாரஸ்ய மற்று இருக்கும்.
ரசிகர்கள் கூட, ‘நல்ல பாட்டு’ என்று சிலாகிக்கிற பாடல்களில் அவர்களுக்குப் பெரும்பாலும் பல்லிவியைத் தாண்டி அடுத்த வரி தெரியாது என்பதே உண்மை. வயலின், வீணை போன்றவற்றில் சினிமா பாடல்களை வாசிப்பது, செல்போனில் ரிங் டோனாக இருப்பது மெட்டின் மீதுள்ள மயக்கமே, ஆக மெட்டுதான் அவர்களை வசப்படுத்தியிருக்கிறது…

இல்லை, இதை நான் ஒத்துக்க முடியாது.
பாட்டுக்குள்ளே மெட்டு இருக்கு. மெட்டுக்குள்ளே பாட்டிருக்கு. மீட்டருக்கு மேட்டரு. மேட்டருக்கு மீட்டரு.

* சரி அதை விடுங்கள், ‘மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ’ என்ற தயக்கம் இல்லாமல், இசையமைப்பாளர் என்கிற ஒரே உணர்வோடு, சுதி சுத்தமாக, பாவத்தோடு, பாடுபவர்களை வரிசைப்படுத்துங்களேன்?

இது சரியான கேள்வி இல்லை. அந்தப் பாட்டுக்குப் பொருத்தமான குரல் எதுவோ அதைதான் பயன்படுத்துவேன். குருவி தலையிலே பனங்காய் வைக்கமாட்டேன்.
‘இந்தப் பாட்டை இவர் பாடுனாதான் சரியா இருக்கும்’னா அவரைப் பாட வைப்பேன்.

நீங்க பாடுறீங்களா சொல்லுங்க, உங்க குரலுக்குப் பொருத்தமான பாட்டை உருவாக்கி அதைப் பிரபலமாக்கி காட்றேன்.

* கண்டசாலாவின் குரல் தனித்த ஆளுமை மிக்கது. அவரின் குரலுக்கு மயங்கிய ஆந்திரமக்கள் ‘தன் உடமைகளைக் கூட அவருக்கு எழுதி வைக்கிற அளவுக்கு இருந்தார்கள்’ என்று சொல்வார்கள். ஆனால் நீங்கள் அவரைச் சுத்தமாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையே?

இசையமைப்பாளர் சுப்பராமன் இசைக்குழுவில் உதவியாளரா இருந்தப்ப, தேவதாஸ் படத்துல வர ‘உலகே மாயம், வாழ்வே மாயம்’ பாடலை நான்தான் போட்டேன். அந்தப் பாட்டைக் கண்டசாலா, ‘உல்கே மாயம், வால்வே மாயம்’ ன்னுதான் பாடியிருப்பாரு.

நானும் அவரோட எவ்வளவோ போராடி பார்த்தேன். என்னால முடியில.அவரு தப்பாப் பாடுனதுக்கு என்னை ஓங்கி அறைஞ்சாரு, அந்தப் பாட்டை எழுதுன உடுமைலை நாராயணக்கவி.

“என்னடா பாடுறாரு அந்த ஆளு” ன்னு கேட்டு அடிச்சாரு.
“அவருக்கு அப்படிதாங்க வருது” ன்னு சொன்னேன்.
“எவனுக்கு ஒழுங்கா வார்த்தை வருதோ அவனைப் பாடவைக்க வேண்டியதுதானேடா” ன்னு திரும்பவும் அடிச்சாரு. அப்போ நான் சின்னப் பையன்.

தெலுங்கு மக்கள், மலையாள மக்கள், இந்திகாரங்க அவுங்க மொழியைத் தப்பா பாடுனா சும்மா விடமாட்டாங்க. நம்ம ஊர்ல, ‘பிரியமான பெண்ணைக் காதலிக்கிறேன்’னு பாடறதுக்கு ‘பெரியம்மா பெண்ணைக் காதலிக்கிறே’ ன்னு பாடிட்டுப் போயிடுறாங்க.

* நீங்கள் லயித்து உருவாக்கிய மெட்டு, தள்ளுபடி செய்யப்பட்டுப் பிறகு வேறு படத்துக்குப் பயன்படுத்திப் பிரபலமாகி இருக்கிறதா?

நான் டியூன் போடும்போது, என் கூட என் உதவியாளர்கள், சங்கர்-கணேஷ், கோவர்த்தனம் எல்லாம் இருப்பாங்க.
அப்படித்தான் ‘உயர்ந்த மனிதன்’ படத்துக்குப் போட்ட ஒரு டியூனை பயன்படுத்தாம, அதை ‘சிவகாமியின் செல்வன்’ படத்துக்குப் பயன்படுத்த முடிவு பண்ணி பாட்டெல்லாம் எழுதி ரெக்காடிங்குக்குத் தயாரானபோது, அந்தப் படத்தோட வசனகர்த்தாவான ஏ.எல். நாராயணன் முன்னாலேயே ரெக்காடிங் தியேட்டருக்கு போயிட்டாரு.

போனவரு அங்கிருந்து எனக்கொரு போன் பண்ணாரு, “விசு, நீங்க போட்ட அந்த டியூனை இங்க சங்கர்-கணேஷ் ரெக்கார்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க” ன்னு ரொம்பப் பதட்டமா பேசுனாரு.
நான், “சரி அத அப்படியே விட்டுறுங்க” ன்னு சொல்லிட்டு, அந்த டியூனை மாத்தி ‘சிவகாமியின் செல்வன்’ படத்துக்கு வேற போட்டேன்.

உயர்ந்த மனிதன் படத்துல என்னோட உதவியாளரா வேலைபார்த்த சங்கர்-கணேஷ் பயன்படுத்திக் கிட்ட என்னோட டியூன் இதுதான்,
‘இனியவளே… என்று பாடிவந்தேன்…’

* எம்.ஜி.ஆர். உடனான உங்கள் இசை அனுபவம்?

அத கேட்டா உங்களுக்குப் பைத்தியம் பிடிச்சுடும்.
“விசு, இந்த டியூன் ரொம்ப நல்லா இருக்கு. ரெக்காட் பண்ணிடு” ன்னு சொல்வார்.
ரெக்காட் பண்ணிட்டு வந்தா, “அந்தப் பாட்டை அப்படியே மாத்திட்டு, வேற டியூன் பேடு” ன்னு சொல்லுவாரு.

நேற்று இன்று நாளை படத்துக்காக ஒரு பாட்டுக்கு 100 டியூன் போட வச்சாரு. அப்போ அது வேதனையா இருந்தது. இப்போ அது சாதனையா இருக்கு. அவருக்கு நல்ல இசை ரசனை உண்டு.

* சந்திரபாபுவோட குரல் தமிழில் வித்தியாசமான, எளிமையான குரல். அந்தக் குரலுக்குப் பொருத்தமா ‘சுலோ ரிதத்தில்’ நிறையப் பாட்டு போட்டு இருக்கீஙக… அவருக்கும் உங்களுக்கும் நல்ல நட்புன்னு…..

அவனை நான் முதல்ல பார்த்தது, 1945 லனு நினைக்கிறேன். அப்போ சென்ட்ரல் ஸ்டூடியோ கோவையில் இருந்தது. அங்க எஸ்.என். சுப்பையா நாயுடுகிட்ட உதவியாளரா இருந்தேன்.
“இவன் ஏதோ பாடுவான்னு சொல்றான், இவன் குரலை கொஞ்சம் டெஸ்ட் பண்ணேன்” னு சொன்னாரு சுப்பையா அண்ணன். பண்ணேன்.

“என்ன நல்லா பாடுனானா?” ன்னு கேட்டாரு.
“இவன் எங்க பாடுனான்? டயலாக்கை அப்படியே பேசுறான்” னு சொன்னேன்.
என்னை மொறைச்சு பாத்துட்டுப் போனான். கொஞ்சம் வருஷம் கழிச்சு அவன் பெரிய நடிகனா ஆயிட்டான். நான் இசையமைப்பாளரா ஆயிட்டேன்.

டி.ஆர். ராமண்ணாவின் ‘குலேபகாவலி’ படத்துக்கு நான்தான் மியூசிக். அதுல சந்திரபாபவுக்கு ஒரு பாட்டு. நான் டியூனை போட்டுட்டு, ‘எப்படி?’ன்னு கேக்குறேன்.
அவன், “இதெல்லாம் ஒரு டியூனா? இதுக்கு ஆட்டமே வராது, பெரிய மெட்டு போட்டுட்டாரு, வேற போட சொல்லுங்கன்னு…” ராமண்ணாக்கிட்ட சொல்றான்.

நான் உடனே என் உதவியாளர்களை அந்த டியூனை இசையோட வாசிக்கச் சொல்லிட்டு, எழுந்து ஆடி காண்பிச்சேன்.
“இதுக்கு மேலே எப்படி ஆடுறதுன்னு சொல்லு”ன்னு கேட்டேன்.
அந்தப் பாட்டு ‘சொக்காப் போட்ட நவாப்பு…’ அதல இருந்து எனக்கும் அவனுக்கும் காதல் பிறந்துடுச்சி. நெருக்கமான நண்பர்களானோம். அவனுக்கு இசையறிவு உண்டு. உணர்வுபூர்வமான கலைஞன்.

* உங்கள் சம்பந்தப்பட்ட ஒரு செய்தி, நீங்கள் இருக்கும் போதே பலரால் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒருத்தரும் இதுவரை உங்களிடம் கேட்டதில்லை. நீங்களும், ‘ஆமாம்-இல்லை’ என்று சொன்னதுமில்லை.
வேறு ஒன்றுமில்லை, பாரதியாரை உங்களுக்கு யார் என்றே தெரியாமல், ‘மெட்டுக்கு வார்த்தை இடிக்கிறது, கூப்பிடு அந்தப் பாடலாசிரியரை’ என்று நீங்கள் சொன்னதாகச் சொல்கிறார்களே, உண்மையா?

பொய். அதுல பாதிதான் உண்மை.
கே.எஸ். கோபால கிருஷ்ணன் என்னை எப்பவும் ‘சிங்கம்’ னுதான் கூப்பிடுவாரு.
ஒருநாள், “சிங்கம், எழுதிகிட்டே பாட்டு பாடுற மாதிரி ஒரு டியூன் போட்டா எப்படி இருக்கும்?” னு கேட்டாரு.
“போடலாமே” ன்னு ஆர்மோனியத்தை எடுத்தேன்.
“சிங்கம் நான் சொல்றதை எழுது சிங்கம்” னு சொன்னாரு.
“சரி, சொல்லுங்க” ன்னு நான் பேப்பர்ல எழுத ஆரம்பிச்சேன்.
அவர் சொன்னாரு, நான் எழுதிகிட்டே வந்தேன்.

‘சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து’ என்ற வரி வந்தப்போ, ‘பாட்டி செத்து’ன்னு இருக்கா மாதிரி இருக்கு கூப்பிடுங்க பாடலாசிரியரை’ ன்னு என்னை மறந்து போய்ச் சொன்னேன்.
தொழில் தீவிரத்துல வந்த வார்த்தை அது. பாரதியாரை தெரியாம சொன்ன வார்த்தையல்ல. அதுக்கு முன்னாடியே அவரோட ‘சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா…’ பாடலைப் போட்டவன் நான்.

* இளையராஜாவின் திருவாசகம் கேட்டீர்களா?

எனக்குத்தான் அதை முதலில் போட்டுக் காட்டினான். அதைக்கேட்டுட்டு, அவன் கையைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு, கையைப் பிடித்துக் கொண்டே, “நீ வயசுல சின்னவனா இருக்கிறதுனால கையைப் பிடிச்சுகிட்டு சொல்றேன். பெரியவனா இருந்தா…’ என்று சொன்னேன். அவன் நெகிழ்ந்து போனான். அதில் அவனின் உழைப்பு சாதாரணமானது அல்ல.

(30-10-2005 தினகரன் இணைப்பிதழ் வசந்தம்)

மெல்லிசை மன்னர் வடை விற்ற தியேட்டர், சந்திரபாபு குடியரசு தலைவர் ராதகிருஷ்ணன் மடியில் உட்கார்ந்தது, மெல்லிசை மன்னரின் தற்கொலை முயற்சி, சிவாஜியின் தர்ம சங்கடம், எம்.ஜி.ஆரின் வருத்தம், சூரிய உதயத்தையே பார்க்காத நடிகரும், சூரிய அஸ்தமனத்தையே பார்க்காத கவிஞரும், சிவாஜி-எம்.ஜி.ஆர் தலைமையில் சோ வின் தொகுப்புரையோடு தன் குருவிற்கு மெல்லிசை மன்னர் நடத்திய பாராட்டு விழா, மூன்றே சுரத்தில் இசையமைத்த பாடல், ஒரு மரண வீட்டில் மெல்லிசை மன்னர் இசையமைத்த சோக பாடல்களோடு இறுதி ஊர்வலம்.. .

இப்படி ‘வசந்தம்’ இதழில் வெளிவராதா சுவாராஸ்யமான பல தகவல்களோடு, ‘மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனோடு சந்திப்பு – பாகம் இரண்டு’ சில நாட்கள் கழித்து….

மெல்லிசை மன்னருக்கு விருது இல்லை; அந்த விருதுகளுக்கு தகுதியுமில்லை

ராஜபார்ட் ரங்கதுரையை மற்ற கழிசடைகளோடு..

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்