‘தேவையா உனக்கு இந்த அவமானம்?’

IMG_20150808_142923
சிங்கப்பூரில் அன்பிற்கினிய தோழர்களுக்குப் பிறகு எனக்கு அதிகம் பிடித்தது சீன உணவும் சீன பெண்களும் தான். (இளங்கோவன் பாணியில் விளக்கம் கொடுத்து விடாதீர்கள்)
‘சீன பெண்கள் அழகாக இருக்கிறார்கள்’ என்ற அர்த்ததில் மட்டுமல்ல. பொதுவாகப் பெண்கள் எல்லோருமே அழகானவர்கள் தான். ஆனால், சிங்ப்பூரில் சீன பெண்கள் நேர்த்தியாக இருக்கிறார்கள்.

அழகாக இருக்கிற எல்லோரும் நேர்த்தியாக இருப்பதில்லை. நேர்த்தியாக இருக்கிற எல்லோரும் நிச்சயம் அழகாகத் தெரிவார்கள்.

நடுத்தர வர்க்கத்திலிருந்து அதற்கு மேல் எல்லா வர்க்க நிலையிலும் உள்ள தமிழ் பெண்கள் அல்லது இந்திய பெண்கள் தங்களை அழகானவராகக் காட்டிக் கொள்வதற்கு அல்லது அழகை இன்னும் கூடுதலாகக் காட்டுவதற்கு அதிகம் மெனக் கெடுகிறவர்களாகவே தெரிகிறார்கள்.

பாரம்பரிய முறையில் உடை உடுத்துகிற பெண்கள் மட்டுமல்ல; நவீன முறையில் உடை உடுத்துகிற பெண்களும், நவீன சிந்தனை கொண்ட பெண்களும் காதுல, கழுத்துல, காலுல, மூக்குல;

தங்கம், வெள்ளி, மரத்தால் செய்யப்பட்ட பொருட்கள், மணி மாலைகள், பிளாஸ்டிக், பீங்கான் பொருட்களை அணிந்து கொண்டு இவற்றுடன் நீண்ட தலைமுடியை சீவி சிங்காரித்து, தலையைச் செடியாகப் பாவித்துப் பூ க்கள் சூடிக் கொண்டு.. இன்னும் வித விதமான பொருட்கள் கலர் கலரான உடைகள் என்பதாக ‘கச்சா முச்சா’ என்று தெரிகிறார்கள்.

அதுவும் கல்யாண வீடுகளில் நமது பெண்களைக் கண்கொண்டு பார்க்க முடியாது.
அழகான தோற்றத்திற்கான மெனக்கெடல்கள் மட்டுமல்ல; கவுரத்தை பாதுகாக்க, தங்களின் பொருளாதார அந்தஸ்தை அறிவிக்க அவர்கள் படுகிற பாடு.. பாவம். கோமாளிகளைப் போலவே தோற்றமளிக்கிறார்கள்.
அதுவும் மணப்பெண்ணின் தோற்றம் பரிதாபத்திற்குரியது.

மார்வாடி பெண்களோ இந்த ‘கச்சா முச்சா’ உடையலங்காரத்தில் மகத்தானவர்கள். முழுக்க இவர்களின் அலங்காரம் ‘தனது ஸ்டேட்டஸ்’ சார்ந்தது. படித்த தமிழகப் பெண்களிடம் ‘கச்சா முச்சா’ பாணி தாக்கத்தை மார்வடி பெண்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால், சீன பெண்கள் சிறுமிகளிலிருந்து வயதான பெண்கள் வரை தொடையை இறுக பற்றி நன்றாக மேல் உயர்ந்த சிறிய கால் டவுசரை தான் அணிகிறார்கள். மேலே ஒரு டி. சர்ட். தலை முடியோ ஆண்களை விடக் கொஞசம் அதிகம் கொண்ட கிராப். ஆஹா.. எவ்வளவு அழகு..

இதைப் பார்த்துக் கொண்டாட தலைவர் பெரியார் இல்லையே என்ற ஏக்கம் அந்தப் பெண்களைப் பார்க்கும்போதெல்லாம் ஏற்படத்தான் செய்தது.
‘பெண்கள் உடுத்துகிற உடை தான் ஆண்கள் வன்முறை செய்வதற்கு காரணமாக அமைகிறது’ என்று எவனாவது அங்கு சொன்னால்.. சொன்னவன் மேல் தான் வன்முறை நடக்கும்.

எளிமையான உடையில் அந்தப் பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்பது அவர்களைக் குறைத்து மதிப்பிடுவது. நேர்த்தியாக, கம்பீரமாக இருக்கிறார்கள்.

அலைபாயும் கண்கள் அவர்களிடம் இல்லை. குறிப்பாக, தான் பார்ப்பதை யாராவது கவனிக்கிறார்கள் என்று தெரிந்தால் சட் டென்று பார்வையை மாற்றிக் கொள்வது, வேறோங்கோ பார்ப்பது போல் துப்பறியும் பாணியில் இன்னொரு இடத்தில் கவனத்தைக் குவித்துப் பார்ப்பது – இப்படியான பொய் பார்வைகள் அந்தப் பெண்களிடம் தென்படவில்லை.

பெண்களிடம் இது போன்ற பொய் பார்வைகளை அந்தச் சமூகத்தில் உள்ள ஆணாதிக்கப் பண்பாட்டு சூழலே ஏற்படுத்துகிறது. மிக அதிகமாக நடுத்தர வர்க்க பெண்களிடம் இவை குவிந்து கிடக்கிறது.
உடை அதில் முக்கியப் பங்காற்றகிறது. எளிமையாக உடை உடுத்துகிற பெண்களுக்கும் பந்தாவாக உடை உடுத்துகிற பெண்களுக்கும் பார்வையில் நிறைய வித்தியாசம் இருப்பதாகவே உணர்கிறேன்.

எளிமையான உடை என்றால் சீனப் பெண்கள் அணிவது போன்ற உடையை மட்டும் சொல்லவில்லை. நமது ஊரில் விவசாயக் கூலிகள், கடும் உடல் உழைப்போடு கூலி வேலை செய்கிற பெண்கள், திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது அவர்கள் நடந்து கொள்கிற விதத்தில் ஆண்களை ஒரு பொருட்டாக மதித்து அதற்கேற்றபோல் அவர்கள் நடந்து கொள்வதேயில்லை.

‘வழியில நிக்கிற கொஞ்சம் தள்ளி நில்லு’ என்று ஆணை அதட்டுகிற தொணியில் தான் அவர்கள் வளைய வருவார்கள்.
அவர்கள் உடுத்துகிற உடையில் நேர்த்திக் குறைவாக இருக்கலாம். ஆனால் அவர்கள் உடல் மொழியில் கம்பீரமும் நேர்த்தியும் கண்டிப்பாக இருக்கும்.

பொருளாதாரத்தில் உயரந்த மற்றும் மிடில் கிளாஸ் பெண்களிடம் உடை விஷயத்தில் தங்கள் விருப்பம், உடுத்துவதில் உள்ள வசதியை விட அடுத்தவர் பார்வைக்கு நாம் எப்படித் தெரிகிறோம் என்பதே முக்கியப் பங்காற்றுகிறது. அந்த உடை அணிந்து கொள்வதற்குச் சிரமத்தை தந்தாலும் அந்தச் சுமையைச் சுமக்கவே விரும்புகிறார்கள். அழகாக தெரிவதற்காக தன்னை துன்புறுத்திக் கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்.

இந்த அலைபாயும் பார்வைக்கு அதுவே முக்கியக் காரணமாகவும் அமைகிறது. இதில் படித்த, படிக்காத பெண்கள் என்ற வித்தியாசம் இல்லை.

ஆனால், சிங்கப்பூரில் சீன ஆண்கள் உட்பட எல்லா ஆண்களை விடவும் நடுத்தர வர்க்கத்து சீன பெண்கள்; நேர் கொண்ட பார்வை நிமிர்ந்த நடை என்று கம்பீரமாக இருக்கிறார்கள். பெரியார் கண்ட புதுமை பெண்களாக.

*

சிங்கப்பூரில் இருந்த நான்கு நாட்களும் சீன உணவை விரும்பி சாப்பிட்டேன். முதல் முறையாகப் பன்றி இறைச்சியையும் அங்குதான் ருசி பார்த்தேன். சீன பெண்களின் நேர்த்தியான உருவத்திற்கும் சீன உணவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

என்னைப் போல் குறைவாக உண்பவர்களுக்குச் சீன உணவு சிறப்பானது. அவர்கள் உணவில் சக்கையாக, வீணாக உண்கிற உணவு அநேகமாக இல்லை. அதிகக் கொழுப்புள்ள உணவும் இல்லை.
அவர்களின் எல்லா உணவுகளிலும் பன்றி இறைச்சிக்கு முக்கியத்துவம்.
ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி்யை அவர்கள் ஏறக்குறைய விட்டொழித்தவர்களாகவே தெரிகிறார்கள். பன்றி பிறகு மீன், கோழி.

சீனர்களின் ஆரோக்கியமான உடல் அமைப்புக்கு பன்றி இறைச்சி முக்கியக் காரணம். ஆடு, மாடு இறைச்சிகளில் கெட்ட கொழுப்பின் அளவு 60 சதவீதத்திற்கும் மேல். பன்றி இறைச்சியில் அப்படியே தலைகீழ். அதில் நல்ல கொழுப்பு 60 சதவீததத்திற்கு மேல். சீனர்களின் உடல் வனப்பின் பிண்ணனி இதுதான். இன்று அமெரிக்க, அய்ரோப்பிய வெள்ளைக்காரர்களும் முழுவதுமாகப் பன்றி இறைச்சிக்கு மாறியதின் காரணம் இதுவாகத்தான் இருக்கும்.

சிங்கப்பூரில் இந்திய உணவுகளைக் குறிப்பாகத் தென்னிந்திய அல்லது தமிழக உணவுகளை அதுவும் சைவ உணவுகளைச் சாப்பிடுவது சுய தண்டனை. கூடுதல் விலையோடு சுவையற்ற உணவைதான் நீங்கள் சாப்பிட வேண்டும். நம்மாளுங்கதான் நடத்துறாங்க.

ஆனால், சீன உணவுகள் குறைந்த விலையில் தரமானதாகக் கிடைக்கிறது. மிகச் சாதரணமான எந்தச் சின்ன உணவகத்திலும் நம்பி சாப்பிடலாம். அவ்வளவு சுத்தம். நேர்த்தி. சுவை.
சீன உணவில் நம்ம ஊர் டச்சஸ் வேணும் என்றால், கொஞ்சம்போல் சோறுடன் உள்ள சீன உணவை தேர்தெடுப்பது புத்திசாலித்தனம். ஆனால் பன்றி கறியை தவற விடாதீர்கள்.

அப்படித்தான் அங்கு போன மறுநாள் காலையில் சீன உணவை சாப்பிடுவதற்கு விஜயபாஸ்கர், ஜெகனுடன் சின்ன உணவு விடுதிக்கு சென்றேன்.
சிங்கப்பூரில் மிக மிகப் பெரும்பான்மை சீனர்கள். அடுத்து மலாய்காரர்கள். பிறகு தமிழர்கள். ஆனாலும் ஆங்கிலம் தான் பொது மொழி. சிங்கப்பூரில் இனவாத பிரச்சினை தலையெடுக்காமல் இருப்பதில் முக்கியப் பங்கு சீன மொழியைப் பொது மொழியாக்காமல் இருப்பதால் தான்.

சிங்கப்பூருக்கு முன்பே, இந்தியாவில், தமிழகத்தில் 1938 லிருந்து பெரியார் இயக்கம் ‘இந்தி எதிர்ப்பும் ஆங்கிலப் பரிந்துரையும்’ இதன் காரணமாகதான் சொல்லிக் கொண்டிருக்கிறது. சிங்கப்பூரின் சிறப்பை பேசுகிற யாரும் இதைக் குறிப்பிடுவது இல்லை.

சரி. அந்த உணவகத்திலிருந்த சீனரிடம் பேசவதற்குப் பிரிய பட்டு நானே ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தேன். நான் ஆங்கிலத்தில் பேசினால் ‘எனக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது’ என்பதை ஆங்கிலமே தெரியாதவர்கள்கூடத் தெளிவா தெரிஞ்சிப்பாங்க.

நான் சீனரிடம் ஆங்கிலத்தில் பேச, அவரோ சிரித்துக் கொண்டே என்னிடம் தமிழில் பேசினார்.
‘தேவையா உனக்கு இந்த அவமானம்?’
*
25 August.

படத்தொகுப்புகள்

https://goo.gl/photos/Z6ddgR9mHwEh5WWP8

https://goo.gl/photos/EkktopjGegqND1P99

https://goo.gl/photos/7gbCmbypcA6BmKJY8

https://goo.gl/photos/F5LWvoVdRg4JxFeB9

https://goo.gl/photos/BNjGSRUNvL1Do13Y8

https://goo.gl/photos/Wo8VAWPB9o6EzABh8

சிங்கப்பூரின் சிறப்பே அருமைத் தோழர்கள் தான்