லெக்கின்ஸ்; பரவாயில்லையே..

பெண்கள் உடை உடுத்துவதில் இரண்டு முறைதான் பின் பற்றப்படுகிறது. ஒன்று முழுக்க மூடிய நிலப்பிரபுத்துவ பாணி. இன்னொன்று ‘கவர்ச்சி’யாகக் காட்ட வேண்டும் என்ற முதலாளித்துவ பாணி.
இரண்டுமே பெண்ணை ஆணுக்கான உடலாகத்தான் அங்கீகரிக்கிறதே தவிர. பெண்ணின் உணர்வை, உரிமையை ஒருபோதும் அனுமதிப்பதில்லை.

இந்த இரண்டு முறையில்தான் படித்த, படிக்காத வர்க்க வேறுபாடுகள் உள்ள எல்லாப் பெண்களும் உடை உடுத்துகிறார்கள்.
நிலப்பிரபுத்துவ பாணியோடு முதலாளித்துவ பாணியைக் கலந்து உடுத்த முயற்சிக்கும்போதுதான் ஒவ்வொரு முறையும் ஒட்டுமொத்த ‘மத’ ஆண் ‘பண்ணையார்’கள் கலாச்சார வேடமிட்டு பாய்கிறார்கள்.

முதலாளித்துப் பண்ணையார் பத்திரிகைகள் அதையே படமாக போட்டு கவர்ச்சியாகவும் கண்டிக்கும் பாணியிலும் ஆண்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து, விற்பனையை ஏற்றும் ஈனத்தனமான ‘சர்க்குலேஷன்’ வேலையை செய்கிறார்கள்.

தனக்கு வசதியான உடையை வீதியில் அல்ல, நான்கு சுவர்களுக்குள் உடுத்துவதற்குக்கூடப் பெண்களுக்கு அனுமதி கிடையாது. சிறுமிகளுக்குக் கூட கிடையாது.

பரவாயில்லையே, தினத்தந்தி போன்ற நிலப்பிரபுத்துவக் கூறுகள் அதிகம் கொண்ட பத்திரிகையில் இன்று, பெண்கள் லெக்கின்ஸ் அணிவதற்கு ஆதரவு தெரிவித்தும், அதை எதிர்ப்பவர்களைக் கண்டித்தும் தலையங்கம் எழுதியிருக்கிறார்கள்.

‘தேவையா உனக்கு இந்த அவமானம்?’