..சாட்சியாக இருக்கிறது பெரியார் குடும்பம்

IMG-20151209-WA0002
பெரியார் பெரும்தொண்டர்கள் அய்யா அண்ணாதுரை (தொப்பி அணிந்திருப்பவர்) – அய்யா ஏ.வி. தங்கவேல் அவர்களுடன்.
93 வயதாகிறது அய்யா தங்கவேல் அவர்களுக்கு. ஆத்தூரில் பெரியார் இயக்கத்தை வளர்த்ததில் முக்கியமானவர். 4 தலைமுறை பெரியார் குடும்பத்தின் தலைவர். தன் பேரன் தமிழ் பிரபாகரனின் திருமணத்திற்கு வாழத்துரை வழங்க என்னையும் அழைத்திருந்தார்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்து சிறப்பான சொற்பொழிவை வழங்கினார். நான் சிறப்பழைப்பாளராகக் கலந்து கொண்டேன்.

‘அய்யா வணக்கம். நான் மதிமாறன்’ என்று அறிமுகம் செய்த கொண்ட உடன் பொங்கும் உற்சாகத்தோடு என் கைகளைப் பற்றிக் கொண்டு, ‘நான் உங்க பேச்சை விரும்பி கேட்பேன். (பேரன் உதவியுடன் T.v – Youtube) ரொம்பச் சிறப்பா பண்றீங்க..’ என்று கொண்டாடினார். அய்யா பற்றிப் பல நினைவுகளை உற்சாகத்தோடு பகிர்ந்து கொண்டார்.

இரவு பொதுக்கூட்டத்தில் என் பேச்சை கேட்பதற்காக வந்திருந்து, இரவு 10 மணிவரை இருந்து முழுமையாகக் கேட்டு, வாழ்த்தினார். பெரியார் கருத்துக்களை அடுத்தடுத்த தலைமுறை கொண்டுபோவதைக் கண்டு அய்யாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

பெரியார் நடத்திய குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டம் பற்றி நான் பேசியதை குறிப்பிட்டு, ‘ அந்தப் போராட்டத்தை அய்யா இங்குதான் அறிவித்தார்.’ என்றார். அய்யா அண்ணாதுரை அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதை பெருமையோடு பகிர்ந்து கொண்டார்.

பெரியார் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்கிற எனக்கு இதை விட வேறு என்ன பெரியா அங்கீகாரம் வேண்டும்?
‘என்ன செய்து கிழித்தார் பெரியார்?’ கேட்பவர்களுக்கு..
ஆத்தூரில் சாட்சியாக இருக்கிறது ஏ.வி. தங்கவேல் அவர்களின் 4 தலைமுறை குடும்பம்.
24 December at 19:00

‘இந்தியா முழுமைக்கும் பெரியாரின் சிந்தனைகள் தேவை’

logo1
விடியல்: தமிழகத்தில் இந்து அமைப்புகளின் ஆதிக்கம் வளராமல் இருந்ததற்கு பெரியாரின் கருத்துகள் முக்கிய பங்காற்றின என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில் “பெரியார் கருத்துகளின் தாக்கம் தமிழகத்தில் குறைந்து வருகிறது, இனி பெரியார் பிறந்த பூமி என்றெல்லாம் கூறிக் கொண்டிருக்க முடியாது” என்று இந்து அமைப்புகளின் தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதன் எதார்த்தம் என்ன?

மதிமாறன்: பெரியாரின் காலம் முடிந்துவிட்டது என்று இவர்கள் சொல்வதே பெரியார் இன்றும் உள்ளார் என்பதற்கான சாட்சிதான். அவரின் காலம் முடிந்துவிட்டது என்றால் எதற்காக இன்னும் அவரை குறித்து இவர்கள் பேச வேண்டும்? இந்து அமைப்புகளை அவர் இன்றும் உறுத்திக் கொண்டிருக்கிறார்.
அவர்கள் கட்டமைக்க முடியாத அளவிற்று நெருக்கடிகளை கொடுத்து கொண்டிருக்கிறார் என்பதனால்தான் பெரியாரின் காலம் முடிந்துவிட்டது என்று இவர்கள் தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறார்கள். பெரியாரின் கருத்துகள் இன்னும் வலுவோடு இருக்கின்றன என்பதற்கு இவர்களே சாட்சியாக இருக்கிறார்கள்.

விடியல்: பெரியாரை ஒரு கடவுள் மறுப்பாளர் என்று சித்தரிக்கும் வேலைகளும் நடக்கின்றன. கடவுள் மறுப்பாளர் என்ற ஒரு வரையறைக்குள் பெரியாரை சுருக்க வேண்டியதன் அவசியம் என்ன?

மதிமாறன்: பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளர்தான். ஆனால், சõதி அமைப்பின் காரணமாக அவர் கடவுளை மறுத்தார். முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கூட கடவுள் இருக்கிறது. பெரியாரின் கடவுள் எதிர்ப்பு முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பாதிப்பாக இல்லாதபோது ஏன் இந்துக்களுக்கு மட்டும் அது பிரச்சனையாக இருக்கிறது? பெரியார் சாதி கட்டமைப்பை எதிர்த்ததால்தான் இவர்கள் மட்டும் பெரியாரை எதிர்க்கிறார்கள்.

பெரியார் என்பவர் உருவாவதற்கு கடவுள் மறுப்பு பிரதான காரணம் கிடையாது. இதனை பெரியாரின் காங்கிரசுக்கு முன் இருந்த வாழ்க்கையிலும் காங்கிரசில் இருந்த காலத்திலும் அதனை விட்டும் வெளியேறிய காலத்திலும் நாம் காணலாம். ஆதிக்க சாதி எதிர்ப்பு குணாம்சம் அவரிடம் இயல்பாகவே இருந்தது.

ராஜாஜி, சத்தியமூர்த்தி போன்றவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக பெரியார் காங்கிரசை விட்டு வெளியே வரவில்லை. ஆனால், அவர்கள் சாதி உணர்வோடு இருக்கிறார்கள், சாதி வெறியோடு இருக்கிறார்கள், பார்ப்பனர் அல்லாதவர்களின் கல்வி, வேலைவாய்ப்புகளை தடை செய்கிறார்கள் என்று கூறியே வெளியே வந்தார்.

இந்து சமூக அமைப்பில் சாதி கட்டமைப்பின் அடிப்படையிலேயே கடவுள் நம்பிக்கை இருப்பதால் அதனை எதிர்க்கிறார். அவருடைய போராட்டங்களில் முதன்மையானது சாதி எதிர்ப்பு போராட்டங்களே. இந்திய சமூக அமைப்பில் சாதியை ஒழிக்க வேண்டும் என்பதுதான் அவரின் அடிப்படை நோக்கம்.

விடியல்: தமிழகத்தில் பெரியாருக்கு எதிரான கீழ்த்தரமான விமர்சனங்கள் சமீப நாட்களில் அதிகரித்துள்ளன. ஆனால், பெரியாரை பின்பற்றுகிறோம் என்று கூறுபவர்களிடமிருந்து இதற்கான எதிர்ப்புகள் பெரிய அளவில் வெளிப்படுத்தப்படவில்லை. இவர்கள் பெரியாரின் கொள்கைகளை முன்னெடுத்து செல்வார்களா என்ற சந்தேகம் எழுகிறதே?

மதிமாறன்: என்னை பொறுத்தவரை திராவிடர் கழகம், திராவிட விடுதலை கழகம் போன்ற இயக்கங்களை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்புகளை தெரிவித்துதான் வருகிறார்கள். ஆனால், அரசியல் கட்சிகள் இதனை செய்யவில்லை என்று வேண்டுமானால் கூறலாம். இதுவரை அவர்கள் பெரியாரின் கொள்கைகளை கொண்டு செல்லவில்லை என்பதுதான் உண்மை. அப்படியிருக்க இப்போது அதனை செய்வார்கள் என்பதை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

ஓரளவு பெரியார் கருத்துகளுடன் உள்ள நபர் என்று கலைஞர் கருணாநிதியை மட்டும்தான் கூற முடியும். ஆனால், தி.மு.க.வின் நிலைபாடாக இது மாறவில்லை. கலைஞருடன் அது தேங்கி நிற்பதாகவே நான் உணர்கிறேன். கலைஞர் கொண்டுள்ள பெரியாரின் கருத்துகளுக்கு அவர் கட்சியிலேயே பெரிய அளவில் ஆதரவு இல்லாதுதான் அவர் அமைதியாக இருப்பதற்கான காரணமாக இருக்க முடியும்.

சுதந்திரமான கருத்துகளை சொல்ல முற்படும்போது இதுவே அவருக்கு தடையாக அமைகிறது என்று எனக்கு தோன்றுகிறது. கலைஞரை தாண்டி இந்த கருத்துகள் செல்லாதது ஒரு அரசியல் தேக்க நிலையை காட்டுகிறது.

பெரியாரை குறித்து மட்டுமல்ல, அண்ணாவை குறித்து கூட இன்றைய தி.மு.க.வினர் முறையாக அறியவில்லை. அவர்களின் வாழும் தலைவரான கருணாநிதி குறித்த புரிந்துணர்வு இல்லாததே இந்த நெருக்கடிக்கு காரணம். அவர்கள் பெரியாருக்கு அருகில் வரவில்லை என்பதில் நமக்கு வருத்தம் இல்லை. ஆனால், அவர்கள் கலைஞர் அருகிலேயே வரவில்லையே என்பதுதான் வருத்தமாக உள்ளது.

ஆனால், திராவிடர் கழகம் போன்ற பெரியார் இயக்கங்கள் தங்கள் பணிகளில் தீவிரமாகவே உள்ளனர். கொளத்தூர் மணி போன்றவர்கள் பெரியார் மற்றும் அம்பேத்கரை இணைத்துக் கொண்டு செல்வதை நான் ஆரோக்கியமானதாகவே பார்க்கிறேன்.

விடியல்: வளரும் தலைமுறையிடம் பெரியாரின் கொள்கைகளை கொண்டு செல்வதற்கான வேகம் எந்தளவிற்கு உள்ளது?

மதிமாறன்: தனி நபர்களின் முயற்சி இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த முயற்சிகள் இன்று பெரிய வட்டத்தை அடைந்துள்ளன. அமைப்புகளும் இந்த வேலையை செய்து வருகின்றன. ஆளும் வர்க்கத்தினர் இந்த வேலையை செய்வார்கள் என்பதை நாம் எதிர்பார்க்க முடியாது. தமிழகத்தில் உள்ள முற்போக்காளர்களின் அடிப்படை மற்றும் முழுமையான தகுதி அவர்கள் தங்களை பெரியார் இயக்கவாதியாக மாற்றிக் கொள்வதுதான். இதுதான் அடுத்த கட்டத்திற்கு நம்மை கொண்டு செல்லும்.

இன்றைய சூழலில் பெரியார் குறித்த புரிதல் சிறுபான்மை மக்களிடம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும். மதம் சார்ந்து தங்களை முன்னிலை படுத்துவதும் மதம் சார்ந்து தொடர்புகளை ஏற்படுத்துவதும் அரசியல் ரீதியாக எந்த பலனையும் அவர்களுக்கு பெற்றுக் கொடுக்காது. சமீப ஆண்டுகளில் முஸ்லிம்களின் மத்தியில் ஏராளமான அமைப்புகள் தோன்றியுள்ளன. ஆனால், இதே காலக்கட்டத்தில்தான் முஸ்லிம்களுக்கு எதிரõன வன்முறைகளும் அதிகரித்துள்ளன.

இஸ்லாமிய அமைப்புகள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதை இந்து அமைப்புகள் பார்க்கிறார்கள். அதன் அடிப்படையில் தங்கள் அரசியல் காய்களை நகர்த்துகிறார்கள். ஜனநாயக மற்றும் இந்து தீவிரவாதத்தை எதிர்ப்பவர்களுடன் இஸ்லாமியர்கள் கைகோர்க்க வேண்டும். இதன் மூலம்தான் இந்து தீவிரவாதத்தை எதிர்கொள்ள முடியும்.

இன்றைய சூழலில் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் பெரியார் தேவைப்படுகிறார். அவரின் கொள்கைகளை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.
பேட்டி: ரியாஸ்
(‘விடியல் வெள்ளி’ செப்டம்பர் 2015 இதழில் வெளியான பேட்டி)

‘விழிப்புணர்வு’ காமராஜ்

dscf46985.
2006 ஆம் ஆண்டு அறிமுகம் ‘பூ உலகின் நண்பர்கள்’ நெடுஞ்செழியன் நினைவுக் கூட்டத்தில் என்னை முதல் முறையாகச் சந்தித்தான்.

பிறகு கேள்வி – பதில் பகுதி என்னைத் தன் இதழில் எழுத வைத்து, வே. மதிமாறன் பதில்கள் என்று அது புத்தகமாக வந்தபோது அதன் விமர்சனக் கூட்டத்தைத் தோழர் டார்வின் தாசனோடு இணைந்து சிறப்பாக நடத்தியவன்.

அதன் பிறகு 3 ஆண்டுகள் 2009 வரை என்னோடு தான் எப்போதும் இருப்பான். சென்னையிலும் நான் வெளியூருக்குச் செல்லும்போது என்னுடனே வருவான். என் குடும்பத்தாருக்கும் நல்ல பழக்கமானவன்.

சில பிரச்சினைகளில் நான் உரிமையோடு பல நேரங்களில் கோபமாக, கடுமையாகப் பேசினாலும், பதிலுக்குக் கோபமாக ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டான். ‘அட விடுங்கங்க..’ என்று சாதாரணமாகக் கடந்துபோவான்.

நண்பன், தோழன் என்ற நிலையிலிருந்து சகோதரனாக மாறியவன். 2009 ஆண்டில் காமராஜ்க்குத் தமிழ் தேசிய நிலையில் ஈடுபாடு அல்லது என் அரசியல் நிலையில் மாறுபாடு ஏற்பட்டது.

என்னைச் சந்திப்பதை தவிர்த்தான். அரிதான சந்திப்பாக மாறியது. கடைசியாக 8 மாதங்களுக்கு முன்பு பார்த்தது. அதன் பிறகு தொலைபேசியில் கூடப் பேசவில்லை.

இத்தனை நாள் என்னிடம் தொடர்பற்று இருந்தவன், இன்றோ முற்றிலுமாகத் தொடர்பை துண்டித்து விட்டான்.
அவன் மரணச் செய்தி கேட்டபோதும், மருத்துவமனை மார்ச்சுவரிக்கு சென்றபோதும் கூட எனக்குக் கண்ணீர் வரவில்லை. காமராஜ் பற்றிய நினைவுகளே வேதனை தருகிகிறது.

அவனைப் பற்றிய நினைவுகள் அலைஅலையாக மனதில் மோதுகிறது. அது பெரும் மனவேதனைக்குள் என்னைத் தள்ளி துன்புறத்தாமல் இருக்க வேண்டும். முடிந்த வரை அவன் நினைவுகளைத் தவிர்க்க விரும்புகிறேன். பார்ப்போம்.
25 December at 16:54

/பீப் சாங்/ எழுதிய சினிமா உலகிலிருந்து..

‘ஆடி பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது
அதில் ஆணும் பெண்ணும் சேரா விட்டால் அழகிருக்காது’

/பீப் சாங்/ எழுதிய சினிமா உலகிலிருந்துதான் இப்படி ஒரு பாட்டு. எளிய மக்களின் உழைப்பை வர்க்கக் கண்ணோட்டத்தோடு சொல்லும்போதே இயல்பாக அதில் பெண்ணியம் பிரதானமாகி விடுகிறது.

கவிதைக்கு – பாடலுக்கு அரசியல் கண்ணோட்டம் இருந்துவிட்டால் அது உன்னதக் கலை வடிவமாக உயர்ந்துவிடுகிறது. எங்க வீட்டு மகாலட்சுமி படத்திற்காக, பெரியாரின் தாக்கம் கொண்ட உடுமலை நாராயணக்கவி எழுதியது.

என்ன நடக்குது? என்னமோ நடக்குது

‘சாக்கடையள்ளுபவர்கள் இழிவானவர்கள்,’ எவ்வளவு திமீர்?
சென்னையையே சாக்கடையாக்கி ‘உயர்’வானவர்களையும் குப்புறத் தள்ளியது மழை.

சாக்கடையைப் பார்த்தாலே மூக்கை பொத்தி முகம் சுளிக்கிற நான்; மழைநீரை மடைமாற்றி வீடுகளுக்குள் அனுப்பிய சாக்கடை அடைப்பை இறங்கி சுத்தம் செய்தேன்.

பகுதி பொறுப்பாளர்களோடு இணைந்து தேங்கிய நீரை வெளியேற்ற நகராட்சியோடு சண்டையிட்டேன். வேண்டிக் கேட்டுக் கொண்டேன். ஒருவழியாக ரோட்டையே சின்னாபின்னப்படுத்தி, கால்வாய் வெட்டியாகிவிட்டது.

6-12-2015 இரவு 12.30 மணிவரை சாக்கடை சகதிகளிலேயே சுற்றித் திரிந்தேன். இப்போது சாக்கடை நாறுவதில்லை எனக்கு. காரணம் அதனுள் என் உழைப்பிருக்கிறது.
7 December at 19:51

நான்கு நாட்களாக சென்னை வானொலி நிலையம் ‘வீட்டருகே மழை நீரை தேங்க விடாதீர்கள். மழை நீரில் கால் வைக்காதீர்கள்’ என்று தொடர்ந்து ஒலிபரப்பிக் கொண்டே இருந்தது.
எவ்வளவு நக்கல்?
9 December at 19:51

‘அரசு சரியான முறையில் செயல்படவில்லை’ என்கிற எந்த அரசியல் கட்சிகளும் அரசை எதிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராடவில்லை. பாதிக்கப்பட்ட மக்களே அமைச்சர்கள் அதிகாரிகளை எதிர்த்து போராடிய போதும் அதில் கலந்து கொள்ளவும் இல்லை.

மக்களை கையேந்த வைத்து, பாதிக்கபட்ட இடத்திலேயே விட்டுச் செல்வதில்தான் அரசும் அரசை குறைசொல்லுகிற திமுக – 3 வது அணி உட்பட எல்லாக் கட்சிகளும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

‘அதிமுக அரசு சரியாக செயல்படவில்லை’ என்று எல்லா எதிர்க்கட்சிகளும் அறிக்கை விட்ட பிறகும் அதிமுக சேர்மன்கள், கவுன்சிலர்களுக்கு எதிராக போராடாமல்,
அவர்களுடன் இணைந்து எல்லாக் கட்சி கவுன்சிலர்களும் ஒற்றுமையாக பாதுகாக்கிறார்கள்.

யாரை பாதுகாக்கிறார்கள்? என்ன நடக்குது? என்னமோ நடக்குது.
9 December

தங்கள் பகுதிகளில் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற மக்களே அரசுக்கு எதிராகப் போராடிதான் பெற்றிருக்கிறார்கள். அந்தப் போராட்டங்களில் எதிர்க்கட்சிகள் பார்வையாளர்களாகக்கூட கலந்துகொள்ளவில்லை.
9 December