இனி அவள் என்ன கதிக்கு ஆவாள்?

இன்று நிறைய நேரம் இருந்தது. அதனால் காலைக் காட்சி வீட்லயே சாப்ளினின் ‘LIME LIGHT’ பார்த்தேன். ‘24 frames per sec’ என்ற இயல்பான சினிமா பாணிக்கு சாப்ளின் மாறிய பின் வந்த படம். அவரின் 65 வயதில்.

எப்போதும் சாப்ளின் படங்களில் பேரன்பு பொங்கி வழியும். உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் அள்ளிக் கொடுக்கும். இந்தப் படமும் அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை.
ஆனால், இதுவரை அவரின் எந்தப் படமும் தராத, மீள முடியாத சோகத்தை இந்தப் படம் தந்துவிட்டது.
31 March at 17:55 ·

இளம் பெண் தெரசா (Terry). சிறந்த நடனக் கலைஞர். தன் வாழ்க்கையின் துயரங்களைத் தாங்காமல் தற்கொலைக்கு முயற்சி செய்து, படுத்த படுக்கையாக இருந்தபோது பக்கத்து அறையிலிருந்த 65 வயதான Calvero (சாப்ளின்) அவளைக் காப்பாற்றி, தன் பேரன்பால் மிகச் சிறந்த நடனக் கலைஞராக மீட்டு விடுகிறார்.

Calvero வின் பேரன்பால் திக்குமுக்காடிய தெரசா. Calvero வை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொண்டால், உங்களைதான் செய்து கொள்வேன் என்று தன் கண்ணீரில் காதல் சொல்கிறாள்.

வயது வித்தியாசம் பொருந்தாது என்று பக்குமாகவும் கோபமாகவும் சொல்லியும் கேட்காததால், Calvero தலைமறைவாகி விடுகிறார்.
Calvero வும் ஒரு கலைஞன் தான். மேடைகளி்ல் கோமாளி வேடம் போடுகிறவர். அதைவிட அதிகமாகக் குடிக்கிறவர். தன் கலைக்கு வரவேற்பு குறைந்து விட்டதால் துயரம் அவருக்கும்.

ஒரு Bar ல் பாட்டுப் பாடி பிழைத்துக் கொண்டிருக்கும் Calvero தேடிக் கண்டுபிடித்து, மீண்டும் தன் காதலை உறுதி செய்கிறாள் தெரசா. புகழின் உச்சியில் இருக்கும் அவள், தன் குழுவிலே Calvero வின் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரை மீண்டும் மேடை ஏற்றுகிறாள்.

‘Calvero… Calvero… Calvero…’ என்று அவள் ஒவ்வொரு முறையும் துடிக்கிற துடிப்பில், ‘இந்த உலகம் அன்பால் மட்டுமே இயங்குகிறது. மனிதர்கள் மகத்தானவர்கள்’ என்று அறிவித்துக் கொண்டே இருக்கிறது.

Calvero மேடை நிகழ்ச்சியின் போது காயம் பட்டுவிடுகிறார். அதோடு அவருக்கு ஹார்ட் அட்டாக்கும். தெரசா துடிப்பும், பதட்டமுமாய்த் துவண்டு போகிறாள். ஆனால், அடுத்து அவள் நிகழ்ச்சி. ஆடித்தான் ஆக வேண்டும்.

தெரசா ஆடிக் கொண்டிருக்கும்போது, Calvero (சாப்ளின்) அவள் ஆடுவதைப் பார்த்துக் கொண்டே இறந்து விடுகிறார். அது அறியாமல் ஆடிக் கொண்டிருக்கிறாள் தெரசா. படம் முடிகிறது.
*
Calvero வின் மரணத்தை என்னாலேயே தாங்க முடியவில்லையே? எப்படித் தாங்கப் போகிறாள் தெரசா? Calvero வைத் தவிர அவளுக்கு யாரால் ஆறுதல் சொல்ல முடியும்? இனி அவள் என்ன கதிக்கு ஆவாள்?

மதியத்திலிருந்து தெரசா வை நினைத்து என் மனம் படபடத்துக் கொண்டே இருக்கிறது.
31 March at 22:41