தமிழக எழுத்தாளர் வே. மதிமாறனுக்கு “பெரியார் பெருந்தொண்டர்” விருது வழங்கப்பட்டது

13151479_1196164153727275_1323572717181175338_n
மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம் தமிழக எழுத்தாளர் வே. மதிமாறனுக்கு “பெரியார் பெருந்தொண்டர்” எனும் விருது வழங்கி சிறப்புச்செய்தது.

26.4.2016 இல் மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம் ஏற்பாட்டில், கோலாலும்பூர் சோமா அரங்கில் நடைபெற்ற “பெரியாரியல்” கருத்தரங்கில், எழுத்தாளர் “பெரியார் பெருந்தொண்டர்” வே. மதிமாறன் அவர்களின் 1 1/2 மணிநேர சொற்பொழிவு, கூட்டத்திற்கு வந்து கலந்துகொண்ட அனைவரையும் சிந்திக்கத் தூண்டியது.

நிகழ்வில், அம்பேத்கர் மற்றும் பெரியார் கருத்துக்களை கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் மட்டுமின்றி – சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தனது கூர்மையான சிந்தனையின் மூலம் பகுத்தறிவுச் சிந்தனைகளை பரப்பி வருபவர். “நான் யாருக்கும் அடிமை இல்லை, எனக்கு யாரும் அடிமை இல்லை”, எனவும் இதுபோன்ற சிந்தனைகளைத் தூண்டும் 13 நூல்களை எழுதியுள்ளார்.

சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பகுத்தறிவு என தொடர்ந்து முற்போக்குத்தளத்தில் இயங்கி வருகிறார்.
கடந்த பத்தாண்டுகளாக சமுகவலைத்தளங்களிலும் இடையறாத பகுத்தறிவு, சாதி ஒழிப்பு கருத்துகளின் மூலம் தமிழர் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து உழைத்துவருபவர்.

எங்கும் தனது தீர்க்கமான தர்க்கத்தை முன்வைத்து செயல்பட்டு வரும் தோழர் மானமிகு வே.மதிமாறன் அவர்களைப் பாராட்டி, மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம் “பெரியார் பெருந்தொண்டர்” எனும் கழகத்தின் உயரிய விருதை எழுத்தாளர் வே. மதிமாறன் அவர்களுக்கு கழகத்தின் தேசியத் தலைவர் மானமிகு நாக.பஞ்சு அவர்களின் முன்னிலையில், ஆலோசகரும், கொள்கைப் பரப்புக்குழு தலைவருமான “கொள்கைச்சுடர்” இரெ.சு.முத்தையா அவர்கள் வழங்கினார்.

இவ்விருது முதன் முதலாக தமிழகத்தைச் சேர்ந்த இயக்கப் பணியாளரும், பெரியாரியல் நல்லுரையாளருமான ஒருவருக்கு வழங்குவதில் மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம் பெருமைக் கொள்கிறது.

அந்நிகழ்வில், மானமிகு வே.மதிமாறன் அவர்களின் துணைவியர் சுசிலா, சிங்கப்பூர் தோழர். விஜய பாஸ்கர், அவர்தம் துணைவியர் வழக்கறிஞர் காயத்திரி, சிங்கப்பூர் அம்பேத்கர் இயக்கப் பொறுப்பாளர் திரு. இராஜாராம், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத் தலைவர் முனைவர் பெரு. அ. தமிழ்மணி, பொதுச்செயலாளர் மானமிகு. த.சி. அழகன்,
காவல்த்துறை அதிகாரி ஏ.எஸ்.பி. மு.மதியழகன்,

மலேசிய மாதிக கோலாலும்பூர் வளாகத் தொடர்புக்குழுத் தலைவர் “பெரியார் பெருந்தொண்டர்” பெ.மு. அன்பு இதயன், மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தேசியத் தலைவர் தமிழறிஞர் இரா.திருமாவளவன், “பெரியார் பெருந்தொண்டர்” இரா.பெரியசாமி, மானமிகு. “நாத்திகன்” காந்தன், தோழர் நக்கீரன், கழக தேசியப் பொருளாளர் மானமிகு தமிழ் முல்லை மற்றும் இயக்கத் தோழர்களும் உடனிருந்தனர்.

(2.5.2016 மலேசிய “தமிழ் மலர்” நாளேட்டில் வெளியிடப்பட்டச் செய்தி)