கொலைகாரன் முஸ்லிமாகவோ தலித்தாகவோ இருந்துவிடக் கூடாது. இருந்து விட்டால்..

கொலை, திருட்டு போன்ற கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுவர்கள் ஜாதி இந்துக்களாக ஆதிக்க ஜாதியை சேர்ந்தவர்களாக இருந்தால், அதை யாரும் அவர்களின் ஜாதியோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதில்லை. அவர் என்ன ஜாதி என்பதை கூட வெளியில் சொல்வதில்லை.

மாறாக அவர் தலித்தாக இருந்துவிட்டால், அடுத்த நொடியே அவர் ஜாதி அடையாளப்படுத்தப்பட்டுவிடும். தனி கிரிமினலை தாண்டி பிரச்சினையை அப்பாவியான ஒட்டு மொத்த தலித் மக்களையும் கிரிமினல்களாகச் சித்திரிகிற முறைக்கு மாற்றி விடுவார்கள்.

அண்ணாமலை பல்கலைகழகத்தில் நாவரசு என்ற மாணவனைக் கொலை செய்த நபர், தலித் என்று வலிந்து அடையாளப்படுத்தியது அப்போது தினமணி.
இதுபோன்ற ஜாதி அடையாளங்களை வேறு எந்த ஜாதி கிரிமனல்களுக்கும் அது சொன்னதில்லை. தலித்தல்லாத ஜாதி உணர்வுதான் ஊடகங்களின் பொது விதி.

காவல் நிலையத்தில் கூடக் கிரிமினல் ஜாதி இந்துவாக இருந்தால், நாலு அடி அடிக்கிற போலிஸ், அதே நபர் தலித்தாக இருந்துவிட்டால் எட்டு அடி அடிக்கும்.
நாலு அடி கிரிமினல் நடவடிக்கைக்கு. நாலு அடி தலித் என்பதற்காக.

இதுபோலவே தான் இஸ்லாமியர்களும் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். கிரிமினல் முஸ்லிமாக இருந்தால் உடனே ஒட்டுமொத்த முஸ்லிகளையும் கிரிமினல்களாக அடையாளப்படுத்தி,
பிறகு அவர்கள் தேசத்துரோகிகளாகி சர்வதேச தீவிரவாதிகளாகவும் மாறிவிடுகிறார்கள்.

சுவாதியை கொடூரமாகக் கொலை செய்தவன் முஸ்லிமாகவோ, தலித்தாகவோ தற்செயலாகக்கூட இருந்து விடக் கூடாது என்ற பதட்டம் எனக்கு இருக்கிறது.
இருந்து விட்டால்,

ஏற்கனவே தலித் விரோத, இஸ்லாமிய எதிர்ப்புத் தலைவிரித்தாடுகிற சமூகத்தில், இந்தக் கொலை ஒரு கிரிமினல் நடவடிக்கையிலிருந்து, பெருவாரியான மக்களுக்கு எதிரான மோசமான அரசியல் நிலைக்கு மாற்றப்பட்டுவிடும்.
மாற்றுவதற்குத் தயாராக இருக்கிறார்கள் ஜாதி வெறியர்களும், மத வெறியர்களும்.

ஒரு வேளை அப்படி இருந்து விட்டால், நாம் கவனமாகக் கையாள வேண்டும். தலித், இஸ்லாமியர்களைக் கிரிமினல்களுக்கு ஆதரவாக மடை மாற்றும் வேலையைச் செய்வார்கள் ஜாதி, மத வெறியர்கள்.

அந்தச் சதிக்குப் பலியாகாமல் எக்காரணம் கொண்டும் கிரிமினல்களுக்கு ஆதரவாக ஒரு வார்த்தையைக் கூடப் பயன்படுத்தாமல்,
மத, ஜாதி வெறியர்களை அம்பலப்படுத்த வேண்டும்.

எச்சரிக்கை.

தூக்குல போடறதுல என்ன தப்பு?