12 நாளா?

4 நாட்களாகத் தொடர்ந்து வேலை, போனில் பேசிய தோழர்களிடமும் விரிவாக பேச முடியாதளவிற்கு.

ஏன்?

நாளையிலிருந்து 12 நாட்கள் தொடர்ந்து வெளியூர்.

12 நாளா?

ஆமாம். திருச்சி திலிப்பிடம் (Thilip Kumarr) போன மாதம் ஒரு நாள் ‘நான் குற்றலாமே போனதில்லை’ என்றேன். உடனே அவர் 29 தேதி இரவு ரயிலுக்கு டிக்கெட் போட்டு அனுப்பி விட்டார்.
கொல்லிமலைக்குப் போனோமே அதே குரூப்.

திலிப், கனிவண்ணன், ஆண்டிராஜ், சந்திரன், பஞ்சலிங்கம் இவர்களுடன் ஏழுமலையும் இன்னும் 3 நண்பர்களும். நான் போகும் அதே வண்டியில் இன்று இரவு 2 மணிக்குத் திருச்சியில் ஏறிக்கொள்வார்கள்.

நாளையும் நாளை மறுநாளும் குற்றாலமும் சுற்று வட்டாரமும். கொல்லிமலையோ, குற்றாலமோ எதுவாக இருந்தால் என்ன? தோழர்கள் துணையிருந்தால் எல்லா ஊருமே கொண்டாட்டம்தான். மீட்டிங்கெல்லாம் இல்லாமல் இப்படிப் பயணமாகி ரொம்ப நாளாயிற்று.

2 தேதி காலை கோவை. என் மீது பேரன்பு கொண்ட சிவகுமார் யு.எஸ். ல இருந்து வந்திருக்கான். அவனோடு இருபதற்கும் என் அன்புற்குரிய மற்ற தோழர்களைச் சந்திப்பதற்கான பயணம் மட்டுமே.

ஆனால், பிறகு முடிவானது, 2 தேதி மாலை உடுமலைபேட்டையில் கருத்தரங்கம். 6 ஆம் தேதியே திரும்புவதாக இருந்தேன். பிறகு 9 – 10 தேதிகளில் சத்தியமங்கலத்தில் பெரியாரியல் கருத்தரங்கம்.

எல்லாத்தையும் முடிச்சிட்டு ஒரேடியா 12 தேதிதான் திரும்புறதா இருக்கேன். விபத்து நடந்து எனக்கு எதுவும் ஏற்படாமல் இருந்தால் கண்டிப்பாக 11 தேதி வரைக்கும் இருப்பேன்.

என்ன மலையா ஏறப்போற? விபத்து நடக்க.

ஆமாம். மலையும் ஏறுவேன். சொல்லியிருக்காங்க மலை ஏறலாம்ன்னு.

யாரு?

புல்லட்டிலேயே நாக்பூர் வரை சென்று வந்த அஞ்சாநெஞ்சன் பாலசந்தர்,(Bala Chander) உலகம் சுற்றும் வாலிபன் வெங்கட்,(Venkat Raman) நடிகர் முரளி மாதிரி என்றும் மாணவனாக இருக்கிற பல விதங்களில் நிழற்படங்கள் எடுத்து கலக்குற டென்னிஸ். (தமிழ் டெனி) பத்தாததுக்குக் காட்டுக்குப் போய்ப் படம் எடுக்குற குமணனும் (Kumanan Maruthamuthu ) இருக்காபோல. கண்டிப்பா காட்டுக்கு போவோம்.

சொல்ல முடியாது. காந்திபுரம், பூ மார்க்கெட், சாய்பாபா காலனியை சுத்தி காண்பிச்சிட்டு, ‘இந்தப் பகுதி எல்லாம் ஒரு காலத்தில காடாதான் இருந்ததது தோழர்’ என்று சொன்னாலும் சொல்வார்கள்.
‘பாத்துவாங்க இங்கதான் ஒரு காலத்துல புலி நடந்ததுன்னு’ கோயம்புத்தூர் பஸ் ஸ்டாண்டிலேயே டச்சிங்கோடு சொல்ற ஆட்கள்தான்.

மாப்பிளை ஆகபோகிற கார்த்தி (Karthik AP) என்னுடன் உடுமலைபேட்டை வருவதற்கு மிகுந்த ஆர்வமாக இருக்கிறார். என்னுடைய பேச்சை கேட்பதற்காக என்று அவர் சொல்கிறார். ஆனால் உண்மை அதுவல்ல. பொண்ணு அந்த ஊர்.

ஆக, ஒரு வாரம் கோவை, கோவையைச் சுற்றிய பகுதிகளில் தான் நட மாட்டம். நான் சென்னைக்குப் பிறகு அதிக நாட்கள் தங்கியது கோவைதான். காரணம், அந்த ஊரல்ல. என் இனிய நண்பர்கள்.

ஆக, நாளை குற்றாலத்தில் குளிக்கலாம் என்று ஆர்வமாகக் கிளம்பினால், ‘அதிகத் தண்ணீர் வருவதின் காரணமாக அருவியில் குளிப்பதற்குத் தடை’ என்று செய்தி சொல்கிறது.

என்னதான் நாம விரும்பினாலும் நமக்கு மேல ஒருத்தன் இருக்கான். அவன் என்ன செய்கிறானே அதுதான் நடக்கிறது. மனிதர்கள் நாம என்ன செய்ய முடியும்?

அட மழையைச் சொன்னேங்க.