துரோகிகளுக்காகவும் பாடுபட்ட தலைவர்

‘நீ தனி. உனக்கு எதிரா உலகமே ஒரு அணி; சரின்னு பட்டதைக் கல்லால் அடிச்சாலும் கலங்காமல் சொல்லு’

என்ற கொள்கை உறுதியை எனக்குக் கற்றுத் தந்த
என் ஆசான், என் தலைவன், என் தோழன், என் நண்பனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
*
ஆதரவாளர்களை விடவும் எதிரிகளால், துரோகிகளால் அதிகம் நினைவுப்படுத்தப்படுகிற தலைவர் பெரியார் ஒருவரே.
அதிகம் துரோகிகளுக்காவும் பாடுபட்ட தலைவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
*
‘தவறு என்றால், பெரியாரிஸ்டாக இருந்தாலும் விடாதே’
கற்றுத்தந்த பெரியாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
*
பெரியாரை ஏன் புறக்கணிக்கிறார்கள்? அவதூறு செய்கிறார்கள்? காரணம் சிம்பிள். அவரு அவுங்க ஜாதியில்லை.

16, 17, 18 September 2016

‘கையில காசு வாயில தோசை’

காவிரி பிரச்சினைதான் என்றில்லை, முல்லை பெரியாறிலும் கூடக் காங்கிரஸ், பாஜக, சிபிஎம் போன்ற தேசிய கட்சிகள் தமிழகத்திற்கு ஆதரவாகச் சட்டப்படிகூட நடந்து கொள்ளாது என்பது மட்டுமல்ல சட்ட விரோதமாகவும் நடந்து கொள்ளும்.

காரணம் கன்னட, மலையாள மக்கள் மீதான பாசம் அல்ல. தேசிய கட்சிகள் இரண்டு மாநிலங்களிலும் ஆளும் கட்சி அல்லது எதிர்கட்சி என்ற பெரிய சக்தியாக இருப்பதால்,
நதி நீர் பிரச்சினையைத் தூண்டி அதன் மூலமாக ஆட்சியைப் பிடிப்பது, ஆட்சியைக் கவிழ்ப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

மாறாகத் தமிழகத்திற்கு ஆதரவாக நடந்து கொள்வது தேசிய கட்சிகளுக்கு எந்தப் பயனும் தராது. அது அவர்களுக்கு ஓட்டாக மாறாது என்பது மட்டுமல்ல, கர்நாடக, கேரளவில் செல்வாக்கு முற்றிலும் இழந்து விடும் என்பதினாலும்.

அதனால்தான் கன்னடன் Vs தமிழன், மலையாளி Vs தமிழன் என்கிற இனவாத அரசியலை அதற்கு எதிரான கண்ணோட்டம் கொண்ட தேசிய கட்சிகள் திட்டமிட்டுச் செய்கின்றன. இதுதான் தேர்தல் ஜனநாயகம்.

தமிழர்களின் மாநிலங்களான புதுச்சேரிக்கும் தமிழகத்திற்கும் எதாவது எல்லை பிரச்சினை உண்டாக்கப்பட்டால், காங்கிரஸ் நிச்சயம் புதுச்சேரி பக்கம் தான் நிற்கும். காரணம் வெளிப்படையானது. அது அங்கு ஆளுங்கட்சி.

இதை இன்னும் எளிமையாகப் புரிந்து கொள்ள உதாரணம் சொல்கிறேன்,
‘நாமெல்லாம் தமிழன்’ ஒற்றுமையை வலியுறுத்துகிற தமிழ் தேசியவாதிகள், தலித் தமிழர்கள் மீது பிற்படுத்தப்பட்ட தமிழர்கள் தாக்குதல் நடத்தும்போது, தலைமறைவாகிவிடுவார்கள்.

ஜாதிய வன்முறையைக் கண்டிக்காமல் இருப்பதில் அவர்களின் ஜாதி உணர்வு மட்டுமல்ல,

அதைப் பெயரளவில் கண்டித்தால்கூடத் தன் கட்சியில் இருக்கிற அந்த ஜாதியை சேர்ந்தவர்கள் அல்லது அதிக அளவிலான பிற்படுத்தப்பட்டவர்கள் கோபித்துக் கொள்வார்கள், பதிலுக்கு தலித் இளைஞர்களும் நம் கட்சியில் சேர மாட்டார்கள் என்கிற காரணம் பிரதானமாக இருப்பதுபோலவே,

‘நாமெல்லாம் இந்தியர்’ என்று தேசிய ஒருமைப்பாடு பேசுகிற கட்சிகள், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான நடக்கிற இனவாத தாக்குதலின்போதும் கள்ள மவுனம் காப்பதும் அதுபோலவேதான்.

கன்னடர் மீது தாக்குதல்; தமிழன விரோத தாக்குதலே

நீங்க அடிச்ச கன்னடக்காரர், ‘தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டிப்பவராகவும், தமிழகத்துக்கு தண்ணீர் விட வேண்டும்’ என்ற கண்ணோட்டம் கொண்டவராகவும் இருக்கலாம்.
12 September

கன்னடர் மீது தாக்குதல்; தமிழன விரோத தாக்குதலே
*
‘தமிழர்கள் மீது நடத்தப்படுகிற தாக்குதல்களை நிறுத்துவதற்கு இங்கு வருகிற கன்னடர்களைத் தாக்கினால் நிறுத்தலாம்’ என்று தமிழகக் கன்னடர்கள் மீதும் அவர்கள் சொத்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தினார்கள்.

அதன் பிறகு இரண்டு நாளில் தமிழர்கள் மீதான வன்முறை பலமடங்கு கூடியிருக்கிறது. பெங்களுரில் இருந்து கர்நாடகம் முழுவதும் பரவியிருக்கிறது.

இந்தத் தாக்குதல், தமிழன விரோதம் கொண்ட கன்னட இனிவெறியர்களின் ஈனச் செயலை நியாயப்படுத்தி அதைத் தீவரமாக்கிக் கொள்வதற்குக் காரணமாகியிருக்கிறது.

தமிழக கன்னடர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலும், தமிழன விரோத தாக்குதல்தான்.
13 September

தமிழர்கள் மீதான வன்முறை; மோடியின் மவுனம் – மவுனம் சம்மதம்.
*
‘தமிழகத்திலும், கர்நாடகத்திலும் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் கண்டிக்க கூடியது’ என்று பாஜக பிரமுகர்கள் பேசுகிறார்கள்.

கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடக்கும் தொடர் வன்முறையை, தமிழகத்தில் கன்னடர்கள் மீது நடந்த மூன்று, நான்கு சம்பவங்களோடு தொடர்புபடுத்தி இணையாக பேசுவது மோசடியானது. தமிழர்கள் மீது நடக்கும் தாக்குதலை நியாயப்படுத்துவது.

தமிழர்கள் மீது வன்முறை நடத்தி, தூண்டிவிட்டு சித்தராமையா ஆட்சியை அகற்ற பாஜகவின் பின்னணி சதியையே இந்த வார்த்தைகள் அடையாளம் காட்டுகிறது.
மோடியின் மவுனம் அதை உறுதி செய்கிறது.
13 September

முல்லைப் பெரியாறு, காவிரி: ஜாதி தமிழன் பிரச்சினையா? (எழுத்தாளர் சுஜாதா பாதுகாப்பாகத்தான் இருந்தார்)

சாட்டைச் சொடுக்கிய மாரியப்பன்

625-0-560-350-160-300-053-800-668-160-90
அந்த நேரம் நெருக்கடியிலிருந்து தப்பிக்க ‘நதி நீர் திட்டத்துக்கு ஒரு கோடி கொடுப்பேன். கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் கொடுப்பேன். என் பொண்ணு கல்யாணத்திற்கு ரசிகர்களுக்குப் பிரியாணி போடுவேன்’ என்று திரைக்குவெளியேயும் ‘தர்மதொறை’ மாதிரி வசனம் பேசி விட்டு பச்ச தண்ணிக்கூடக் கொடுக்காமல்,

அடுத்தப் படத்தின் வெளியீட்டின் போதும் ஈவு இரக்கமே இல்லாமல் கூலி வேலை செய்கிற தன் ரசிகர்களை கொள்ளையடித்துக் கோடிகளைக் குவிக்கிற நடிகர்களையும் அம்பலப்படுத்துவது போல்

தங்கம் வென்ற மாரியப்பன் தனக்குக் கிடைத்த பரிசுத்தொகையிலிருந்து ரூ.30 லட்சத்தை அவர் படித்த பெரியவடகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் வளர்ச்சிக்கு அளிப்பேன் என்று அறிவித்துள்ளார்.

அவர் தங்கம் வாங்கிய சாதனையையே பின்னுக்குத் தள்ளிவிட்டது அவரின் சமுக உணர்வு.

தாழ்த்தப்பட்ட, பின் தங்கிய மாணவர்களின் கல்வியைத் தகர்க்கும், அரசு பள்ளிகளை இடித்துத் தள்ளும் திட்டம்போல் ‘புதிய கல்விக் கொள்கை’ என்று பெயரில் வருகிற பா.ஜக. அரசின் கொடூர திட்டத்திற்கு எதிராக,

தன்னையறியாமல் மாரியப்பன் சொடுக்கி இருக்கிற சாட்டை இந்த ரூ. 30 லட்சம். நன்றி மாரியப்பன்.

இப்போது அம்பேத்கர் இருந்தால் அசிங்க அசிங்கமா கேட்டிருப்பார்

இயல்பாகவே தலித் மக்களின் வாழ்க்கை முற்போக்கானது. இந்து – ஜாதி – பார்ப்பன பண்பாட்டு எதிர்ப்பு தலித் மக்களின் வாழ்வியல்.
எந்த நிகழ்ச்சிக்கும் பார்ப்பனர்களை அழைக்க மாட்டார்கள்.

ஆனால், பார்ப்பனப் பண்பாட்டுக்கும் பார்ப்பன அடிமையாகவும் இருப்பதோடு, தனக்கென்று தனிப் பண்பாடற்றவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களும் பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதிக்காரர்களும். இவர்கள் பார்ப்பன புரோகிதம் பார்ப்பன ஆலோசனை இல்லாமல் பல்லுகூட விளக்க மாட்டார்கள். (நல்ல நேரம் குறிப்பது)

இவர்கள் நடத்துகிற தலித் மக்கள் மீதான வன்முறையே பார்ப்பனியத்தைப் பாதுகாப்பதற்காகத்தான்.
‘ஜாதியை கீழிருந்து தகர்க்க முயற்சிக்கும்போதெல்லாம் அதைப் பாதுக்காக்கிற காவல்துறையாகத் தீண்டப்படாத மக்கள் மீது வன்முறை நிகழ்த்துகிறவர்களாக இருக்கிறார்கள் சூத்திரர்கள்’ என்பார் டாக்டர் அம்பேத்கர்.

அதனால்தான் பெரியார் பார்ப்பன எதிர்ப்பை தலித் மக்களிடம் பேசாமல் பிற்படுத்தப்பட்டவர்களிடமே பேசினார்.

ஆனால், இன்று தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பல அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள், வசதியானவர்கள், தலித் அரசியல் பேசுகிற அறிவாளிகள், பணக்காரர்கள்;

பிற்படுத்தப்பட்டவர்களைப்போல் பார்ப்பன அடிமையாக வாழ ஆசைப்பட்டு இந்து பார்ப்பன சடங்குகள் வைத்துத் திருமணம், கிரகப் பிரவேசத்தில் ‘கணபதி ஹோமம்’ நடத்துகிறார்கள்.

இந்நேரம் அம்பேத்கர் உயிரோடு இருந்தால் அசிங்க அசிங்கமா கேட்டிருப்பார்.

ஒன்றரை ஆண்டு கழித்து ‘நேர்பட பேசு’ வில்.


நான் கலந்து கொண்ட நான்காவது நிகழ்ச்சி இது. நன்றி செம்மல்.

‘முதல் ஆசிரியன்’

அந்தக் காலம் பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதிகள், பார்ப்பனப் பெண்கள் உட்பட இன்னும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களே கல்வியறிவு பெறதா காலம்.

அப்படியானால் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். அதுவும் தலித் பெண்களின் நிலை விவரிக்க முடியாத துயரம்.

ஆகக் கல்வியை எங்கிருந்து துவங்க வேண்டும் என்று தெளிவாக உணர்ந்து, தலித் ஆண்களிடம் மட்டுமல்ல, தலித் பெண்களுக்குக் கல்வியைத் தன் மனைவி சாவித்திரியோடு இணைந்து;
தன் ஜாதி, உறவினர் உட்பட ஊரே எதிர்த்து நின்ற போதிலும்;

பார்ப்பப் பெண்கள் படிக்கத் துவங்கும் முன்பே தலித் பெண்களுக்குக் கல்வி தந்த ஜோதிபாய் புலே வின் பிறந்த நாள் மட்டும்தான் ‘ஆசிரியர் தினம்’ கொண்டாட தகுதியான நாள்.

5 -9 – 2016

கொலக்கார ஆண்களா.. என்னதான்டா செய்யச் சொல்றீங்க பெண்களை?

காதலித்தால் ‘அப்பன் ஆம்பள’ வெட்டுறான். காதலிக்காவிடில் ‘ரவுடி ஆம்பள’ வெட்டுறான்.
அட கொலக்கார ஆண்களா.. என்னதான்டா செய்யச் சொல்றீங்க பெண்களை?
1 September

‘பெண்களுக்கு எதிரான ஈவ்டீசிங் போன்ற லீலைகளே கடவுளுக்கான அழகு. அதுதான் பெண்களை மயக்கும் வழி’ என்ற புராண, இதிகாச வழியாகச் சொல்லப்பட்ட ஆணாதிக்கக் கலை, இலக்கியங்களின் தொடர்ச்சியாகதான்;

கண்ணனின், முருகனின் வாரிசுகளாக எம்.ஜீ.ஆர், சிவாஜி – ரஜினி, கமல், – விஜய் , அஜித் – தனுஷ், சிம்பு என்று ஈவ்டீசிங் செய்து நாயகிகளை ‘மயக்கி’ கடவுள்களைப் போல் இளைஞர்களுக்கு வழி காட்டுகிறார்கள்.
2 September

‘மரியாதையா என்னை லவ் பண்ணு.. இல்ல தலையில கல்லைப் போட்டுக் கொன்னுடுவேன்.’ என்று மிரட்டிய ‘சேது’ பாலாவை விட,
காதலிக்க மறுத்தபோதும், பெண்ணின் நினைவுகளில் தாடி வளர்த்து அவளுக்காகத் தன் உயிரை தியாகம் செய்த ‘ஒரு தலை ராகம்’ டி. ராஜேந்தர் ஆயிரம் மடங்கு முற்போக்கானவர்.⁠⁠⁠⁠
2 September

‘என்ன மச்சான் உன் ஆளு ஏமாத்திட்டு போயிட்டாளா.. தேவதாஸ் மாதிரி ஆயிட்டே?’

இதுபோன்ற உரையாடல்களை இன்றைய இளைஞர்கள் மத்தியில் கேட்க முடிவதில்லை.

1953 ல் வெளியான ‘தேவதாஸ்’ திரைப்படம், தாத்தா, அப்பா, பேரன் என்று மூன்று தலைமுறை காதலன்களிடம் செல்வாக்குச் செலுத்தியது.

‘சூழல் காரணமாக வேறொருவரை திருமணம் செய்து கொண்ட,
தன் காதலியை நினைத்து நினைத்துத் தன்னை வருத்திக் கொள்கிறவன் தான் உண்மையான காதலன்’ என்கிற உணர்வை ஒவ்வொரு ஆணிடமும் அது ஏற்படுத்தியிருந்தது.

காதலியின் உன்னதத்தை உணர்த்திய சரத் சந்திர சாட்டர்ஜியின் கதை.
சுப்பராமனிடம் உதவியாளராக இருந்த எனது அருமை மெல்லிசை மன்னர் இசையமைத்த முதல் பாடல் ‘உலகே மாயம்.. வாழ்வே மாயம்’. உடுமலை நாராயணக்கவி எழுதியது.

காதல் தோல்வியடைந்த காதலன்களின் ஓரே தோழன் அந்தப் பாடல். ‘இன்னா மச்சான் உலகே மாயம்.. வாழ்வே மாயமா..?’ காதல் தோல்வியின் குறியீடு.

காதலியை மதிக்க, அவள் நெருக்கடியை புரிந்துகொள்ள கற்றுத் தந்த ‘தேவதாஸ்’ படத்தைப் பிரபல நடிகரை வைத்து திரும்ப எடுத்து ரீலிஸ் பண்ணுங்கய்யா.
2 September

‘பிரியாணி வாங்கி தின்னுட்டு எழுதுறான் மதிமாறன்’

14088572_1509217399104416_3008724539601236637_n
பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களுடன் சேலம் சிக்கந்தர் அவர்களின் இல்ல திருமணத்தில்தான் டாக்டர் ஷாநவாஸ் குர்ஷித் அவர்களையும் திரு. முகமது ஷெரிப் (தாடிகாரர்) அவர்களையும் சந்தித்தேன்.

திருமணத்தன்று சேலம் பேருந்து நிலையத்திலிந்து அண்ணன் சிக்கந்தர் என்னை வண்டியில் அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, வழியில் நிறுத்தி ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அவரிடம் ‘இவர்தான் மதிமாறன்’ என்றவுடன் அவர் துள்ளிக்குதித்துக் காணாமல் போன சகோதரனை கண்டுபிடித்த உற்சாகத்தோடு என்னைக் கட்டித் தழுவி கொண்டார். அவர்தான் அன்பு அண்ணன் முகமுது ஷெரிப். (பன்னாட்டு பள்ளி – ரியாத்)

‘கெடச்சிட்டான் காணாமல் போன நம்ம தம்பி கெடச்சிட்டான்’ என்பது போல் செங்கல்பட்டிலிருக்கும் அவர் வீட்டுக்கு போன் செய்து என்னைச் சந்தித்ததை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டு, அவர்களுடன் என்னையும் பேச வைத்தார்.

அவர் மட்டுமல்ல அவர் மூத்த சகோதரர் உட்பட்ட குடும்பமே என் மீது பேரன்பு கொண்டிருந்ததைத் அவர்களுடன் உரையாடியபோது உணரமுடிந்தது. இணையத்தில் என் பேச்சை அவ்வளவு ஈடுபாட்டோடு அண்ணன் ஷெரிப்பும் குடும்பமும் கேட்டிருக்கிறார்கள்.

அவரைப்போலவே டாக்டர் ஷாநவாஸ் குர்ஷித். (நோவா ஹெல்த் டிரி்ங் கன்சல்டன்ட் – ரியாத்.) சிறந்த மருத்துவர் மட்டுமல்ல, பிரமுகரும்கூட.

திருமணத்தில் என்னைப் பார்த்தவுடன், என்னுடைய பல பேச்சுகளைக் குறிப்பிட்டு மிகத் துல்லியமாக என் பேச்சின் சாரம், என்ன உணர்வோடு என் பேச்சை தயாரித்தேனோ அதை அப்படியே சொன்னார்.

நுட்பமான அரசியல் கண்ணோட்டம் கொண்டவர். அதற்கிணையான பேரன்பும் என் மீது கொண்டவர்.
இதெல்லாம் முதல் முறை பார்க்கும்போதே நடந்தது.

டாக்டர் ஷாநவாஸ் குர்ஷித் அவர்களை பிரமுகர்கள் தங்கள் வீட்டுக்கு அழைத்தபோதும் நேரம் இல்லாததால் போக முடியாதவர், என் வீட்டுக்கு வந்து நீண்ட நேரம் இருந்தது எனக்குப் பெரிய வாழ்த்து.

எனது அண்ணன் முகமது ஷெரிப் அவர்களையும், டாக்டர் ஷாநவாஸ் அவர்களையும் நான்தான் முதல் முறை பார்க்கிறேனே தவிர, என் பேச்சு அவர்களில் ஒருவனாகவே என்னை நீண்ட நாட்களுக்கு முன்பே உறவாக்கியிருக்கிறது.

‘மீண்டும் சவுதிக்குச் செல்வதற்கு முன் என்னைப் பார்த்துவிட வேண்டும்’ என்று நேற்று இருவரும் என் வீட்டுக்கு வந்திருந்தனர். தங்கள் பேரன்பை கொட்டி, கொட்டி நீண்ட நேரம் பேசி என்னையும் என் குடும்பத்தாரையும் மகிழ்ச்சியடைய வைத்தனர்.

வழக்கம்போல் ‘நன்றி’ என்ற ஒரு வார்த்தையால் அன்பை ஈடு செய்ய முடியுமா?