‘பிரியாணி வாங்கி தின்னுட்டு எழுதுறான் மதிமாறன்’

14088572_1509217399104416_3008724539601236637_n
பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களுடன் சேலம் சிக்கந்தர் அவர்களின் இல்ல திருமணத்தில்தான் டாக்டர் ஷாநவாஸ் குர்ஷித் அவர்களையும் திரு. முகமது ஷெரிப் (தாடிகாரர்) அவர்களையும் சந்தித்தேன்.

திருமணத்தன்று சேலம் பேருந்து நிலையத்திலிந்து அண்ணன் சிக்கந்தர் என்னை வண்டியில் அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, வழியில் நிறுத்தி ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அவரிடம் ‘இவர்தான் மதிமாறன்’ என்றவுடன் அவர் துள்ளிக்குதித்துக் காணாமல் போன சகோதரனை கண்டுபிடித்த உற்சாகத்தோடு என்னைக் கட்டித் தழுவி கொண்டார். அவர்தான் அன்பு அண்ணன் முகமுது ஷெரிப். (பன்னாட்டு பள்ளி – ரியாத்)

‘கெடச்சிட்டான் காணாமல் போன நம்ம தம்பி கெடச்சிட்டான்’ என்பது போல் செங்கல்பட்டிலிருக்கும் அவர் வீட்டுக்கு போன் செய்து என்னைச் சந்தித்ததை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டு, அவர்களுடன் என்னையும் பேச வைத்தார்.

அவர் மட்டுமல்ல அவர் மூத்த சகோதரர் உட்பட்ட குடும்பமே என் மீது பேரன்பு கொண்டிருந்ததைத் அவர்களுடன் உரையாடியபோது உணரமுடிந்தது. இணையத்தில் என் பேச்சை அவ்வளவு ஈடுபாட்டோடு அண்ணன் ஷெரிப்பும் குடும்பமும் கேட்டிருக்கிறார்கள்.

அவரைப்போலவே டாக்டர் ஷாநவாஸ் குர்ஷித். (நோவா ஹெல்த் டிரி்ங் கன்சல்டன்ட் – ரியாத்.) சிறந்த மருத்துவர் மட்டுமல்ல, பிரமுகரும்கூட.

திருமணத்தில் என்னைப் பார்த்தவுடன், என்னுடைய பல பேச்சுகளைக் குறிப்பிட்டு மிகத் துல்லியமாக என் பேச்சின் சாரம், என்ன உணர்வோடு என் பேச்சை தயாரித்தேனோ அதை அப்படியே சொன்னார்.

நுட்பமான அரசியல் கண்ணோட்டம் கொண்டவர். அதற்கிணையான பேரன்பும் என் மீது கொண்டவர்.
இதெல்லாம் முதல் முறை பார்க்கும்போதே நடந்தது.

டாக்டர் ஷாநவாஸ் குர்ஷித் அவர்களை பிரமுகர்கள் தங்கள் வீட்டுக்கு அழைத்தபோதும் நேரம் இல்லாததால் போக முடியாதவர், என் வீட்டுக்கு வந்து நீண்ட நேரம் இருந்தது எனக்குப் பெரிய வாழ்த்து.

எனது அண்ணன் முகமது ஷெரிப் அவர்களையும், டாக்டர் ஷாநவாஸ் அவர்களையும் நான்தான் முதல் முறை பார்க்கிறேனே தவிர, என் பேச்சு அவர்களில் ஒருவனாகவே என்னை நீண்ட நாட்களுக்கு முன்பே உறவாக்கியிருக்கிறது.

‘மீண்டும் சவுதிக்குச் செல்வதற்கு முன் என்னைப் பார்த்துவிட வேண்டும்’ என்று நேற்று இருவரும் என் வீட்டுக்கு வந்திருந்தனர். தங்கள் பேரன்பை கொட்டி, கொட்டி நீண்ட நேரம் பேசி என்னையும் என் குடும்பத்தாரையும் மகிழ்ச்சியடைய வைத்தனர்.

வழக்கம்போல் ‘நன்றி’ என்ற ஒரு வார்த்தையால் அன்பை ஈடு செய்ய முடியுமா?