‘கையில காசு வாயில தோசை’

காவிரி பிரச்சினைதான் என்றில்லை, முல்லை பெரியாறிலும் கூடக் காங்கிரஸ், பாஜக, சிபிஎம் போன்ற தேசிய கட்சிகள் தமிழகத்திற்கு ஆதரவாகச் சட்டப்படிகூட நடந்து கொள்ளாது என்பது மட்டுமல்ல சட்ட விரோதமாகவும் நடந்து கொள்ளும்.

காரணம் கன்னட, மலையாள மக்கள் மீதான பாசம் அல்ல. தேசிய கட்சிகள் இரண்டு மாநிலங்களிலும் ஆளும் கட்சி அல்லது எதிர்கட்சி என்ற பெரிய சக்தியாக இருப்பதால்,
நதி நீர் பிரச்சினையைத் தூண்டி அதன் மூலமாக ஆட்சியைப் பிடிப்பது, ஆட்சியைக் கவிழ்ப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

மாறாகத் தமிழகத்திற்கு ஆதரவாக நடந்து கொள்வது தேசிய கட்சிகளுக்கு எந்தப் பயனும் தராது. அது அவர்களுக்கு ஓட்டாக மாறாது என்பது மட்டுமல்ல, கர்நாடக, கேரளவில் செல்வாக்கு முற்றிலும் இழந்து விடும் என்பதினாலும்.

அதனால்தான் கன்னடன் Vs தமிழன், மலையாளி Vs தமிழன் என்கிற இனவாத அரசியலை அதற்கு எதிரான கண்ணோட்டம் கொண்ட தேசிய கட்சிகள் திட்டமிட்டுச் செய்கின்றன. இதுதான் தேர்தல் ஜனநாயகம்.

தமிழர்களின் மாநிலங்களான புதுச்சேரிக்கும் தமிழகத்திற்கும் எதாவது எல்லை பிரச்சினை உண்டாக்கப்பட்டால், காங்கிரஸ் நிச்சயம் புதுச்சேரி பக்கம் தான் நிற்கும். காரணம் வெளிப்படையானது. அது அங்கு ஆளுங்கட்சி.

இதை இன்னும் எளிமையாகப் புரிந்து கொள்ள உதாரணம் சொல்கிறேன்,
‘நாமெல்லாம் தமிழன்’ ஒற்றுமையை வலியுறுத்துகிற தமிழ் தேசியவாதிகள், தலித் தமிழர்கள் மீது பிற்படுத்தப்பட்ட தமிழர்கள் தாக்குதல் நடத்தும்போது, தலைமறைவாகிவிடுவார்கள்.

ஜாதிய வன்முறையைக் கண்டிக்காமல் இருப்பதில் அவர்களின் ஜாதி உணர்வு மட்டுமல்ல,

அதைப் பெயரளவில் கண்டித்தால்கூடத் தன் கட்சியில் இருக்கிற அந்த ஜாதியை சேர்ந்தவர்கள் அல்லது அதிக அளவிலான பிற்படுத்தப்பட்டவர்கள் கோபித்துக் கொள்வார்கள், பதிலுக்கு தலித் இளைஞர்களும் நம் கட்சியில் சேர மாட்டார்கள் என்கிற காரணம் பிரதானமாக இருப்பதுபோலவே,

‘நாமெல்லாம் இந்தியர்’ என்று தேசிய ஒருமைப்பாடு பேசுகிற கட்சிகள், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான நடக்கிற இனவாத தாக்குதலின்போதும் கள்ள மவுனம் காப்பதும் அதுபோலவேதான்.