போலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு’ இது மீனவன் சொல்லு –

‘மீனவன் இல்லை என்றால் மாணவன் இல்லை’
*
மீனவர் பாதுகாப்பு இல்லை என்றால் நேற்று மாணவர் போராட்டம் இல்லை. மாணவர் மீது விழ வேண்டிய அடிகள்தான் மீனவர் மீது விழுந்தது.

‘போலிஸ்காரர்கள் விரட்டும்போது ஓடாத நில்லு’ என்று மாணவர்களுக்குப் போராட்ட முறையைச் சொல்லித் தந்தது, மாணவர் மத்தியில் ஊடுருவிய உளவுத்துறையை அடையாளம் காட்டி. கடல் வழியாகத் தண்ணீரும் உணவும் தந்து காத்திருக்கிறார்கள்.

மீனவப் பெண்கள் மாணவிகளுக்குப் பாதுகாப்பாகத் தொடர்ந்து கடற்கரையில் இருந்திருக்கிறார்கள். மதியம் மூன்றரை மணிக்கு மீனவ தாய்மார்கள், ‘எங்க குழந்தைகள் ஸ்குலிலிருந்து வந்திடுவாங்க. நாங்க போயிட்டு வரோம்’ என்றபோது

மாணவிகள், ‘அக்கா போகாதீங்க அக்கா.. நீங்க போயிட்டா அவுங்க எங்கள அடிப்பாங்க அக்கா..’ என்றதும் கலங்கிய மீனவ வீர மங்கைகள் தங்கள் குழந்தைகளையும் விட்டுவிட்டு மாணவிகளோடு தொடர்ந்து துணையிருந்திருக்கிறார்கள்.

மீனவ குடியிருப்புகளில் போலிஸ் நுழைந்து தங்களைத் தாக்கியபோதுகூட, காலையில் மாணவர் மீது நடந்த தடியடியை, தங்கள் குழந்தைகள் மீது நடந்ததைபோல் பொங்கி பேசினார்கள்.

மயிலையில் ரூதர்புரம் தலித் மக்கள் மீதும் அவர்கள் உடமைகள் மீது நடந்த கொடூர தாக்குதல், மாணவர்களுக்காக எம் மக்கள் சுமந்த சிலுவை.

இப்படித் தியாக உணர்வோடு போராடிய எம் மீனவ, தலித் மக்களைத்தான் நடிகர்களும், பிரமுகர்களும், அரசியல்வாதிகளும் ‘சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து விட்டார்கள்’ என்று ஜாடைமாடையாக சொல்கிறார்கள். இது காவல் துறை நடத்திய வன்முறையை விடக் கொடூரமானது.

மாணவர்களே, உங்களைக் காப்பாற்றிய மக்களை மறந்து விடாதீர்கள்.
உழைக்கும் மக்கள் நீங்கள் உதவி செய்வீர்கள் என்பதற்காகப் போராட வில்லை. அது அவர்களின் இயல்பு.

அந்த இயல்பை எம் மக்களிடம் கற்றுக் கொள்ளுங்கள் அவர்களுக்காகப் போராட வேண்டியதும் உங்களின் இயல்பாக மாற்றிக் கொள்ளுங்கள்.

அதன் துவக்கமாக, எம் மக்களை நேரில் சந்தித்து நன்றி சொல்லுங்கள். அப்போதுதான் உங்கள் போரட்டம் முழு வெற்றிப் பெற்றதாகும்.

பன்ஞ் டயலாக்’ சவடால்களே எம் மீனவ மக்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்

மனசாட்சி இல்லாமல் மாணவர்களைக் கொச்சைப்படுத்தி ‘இது அரசு ஆதரவுடன் நடக்கும் போராட்டம்’ என்று தொடர்ந்து அவதூறு செய்தவர்களை அம்பலப்படுத்திய தடியடி இது.
*
‘போராட்டம் முடிவுக்கு வந்தது’ என்ற பாணியிலும் கொடூரமாக தடியடி நடத்திய போலிசை ‘காவல் துறை வேண்டுகோள்’ என்று மென்மையாக சித்திரிததும் எல்லாத் தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கும்போது,

NEWS 7 TAMIL மட்டும், அந்த அவதூறுகளை மறுத்து மாணவர்களைப் போல் தொடர்ந்து களத்தில் போராடிக் கொண்டிருக்கிது. நன்றி NEWS 7 TAMIL .
*
பன்ஞ் டயலாக்’ சவடால்களே எம் மீனவ மக்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்
*
ஜல்லிக்கட்டை ஆதரிக்கிற கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் மாணவர் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை கண்டித்து,
சாலை மறியல், ஆர்பாட்டம் என்று உடனடியாக இன்று காலையே வீதியில் இறங்கினால், இந்தப் போராட்டம் அடுத்தக் கட்டத்தைத் தாண்டி செல்லும்.

மாறாக, ‘தங்களை மாணவர்கள் அனுமதிக்கவில்லை’ என்று காழ்ப்புணர்ச்சியோடு அமைதிகாப்பார்களேயானால் அம்பலமாகப்போவது இவர்களே.

அரசியல்வாதிகளே கற்றக் கொள்ளுங்கள் அரசியலை, எம் மீனவ மக்களிடம்.

மாணவர் கண்களுக்கு சுண்ணாம்பு

சென்ற ஆண்டு சன் செய்திகள் விவாதத்தில் ராதா ராஜனிடம் கோயில் யானைகள் துன்புறுத்தப் படுவதைப் பற்றி கேட்டேன். அவர் திட்டமிட்டு பதில் சொல்லாமலே கடந்து விட்டார்.
20 ஜனவரி

மாணவர்களை விமர்சிப்பதற்கு ‘ஜனநாயக’ உரிமை கேட்கிறவர்கள்; சு. சுவாமி தமிழர்களை ‘பொறுக்கி’ என்றதை கண்டிக்காமல் ‘கமுக்கமா’ இருப்பதை எப்படி புரிந்த கொள்வது?
20 ஜனவரி

மாணவர் கண்களுக்கு சுண்ணாம்பு

தேசிய, திராவிடக் கட்சிகளிடம் ஜாதி ஒழிப்பு, பெண்ணியம் உட்பட முற்போக்கான அரசியலை எதிர்பார்க்காமல் இன்னும் இவற்றிற்கு எதிராக இருக்கும் அவற்றை;
அவ்வளவு ஏன், கம்யுனிஸ்டுகளிடமே கூட இதையெல்லாம் முதன்மைப்படுத்தாமல், தேர்தல் நிலைபாட்டிற்காக அவர்களைத் தீவிரமாக ஆதரித்தவர்கள், பரிந்துரைத்தவர்கள்;

மூன்று நாட்களுக்கு முன் போரட்டத்தின் மூலமாகவே அரசியல் களத்திற்கு வந்திருக்கும் மாணவர்களிடம், புரட்சிகர அரசியலையே எதிர்பார்ப்பது என்னங்க நியாயம்?

அடபாவிகளா.. என்னடா இது அநியாயம்?

சேவல் சண்டைக்காகச் சேவல் வளக்கிறவன் கோழி சாப்பிட மாட்டானா? இல்ல சேவலதான் திங்க மாட்டானா? கோயிலுக்கு நேந்து விட்ட ஆட்ட பலியிட்டுச் சாமியாடா தின்னுது?
அதென்ன மாடு புடிக்கிறதுக்கு மட்டும் மாட்டிக்கறி சாப்பிடக் கூடாது?

கறிச் சாப்பிடாதவனால், மாட்டைப் புடிக்க முடியாது. மாட்டு மூத்திரத்தைதான் புடிக்க முடியும். கறி சாப்பிட்டாதான் ஜல்லிக்கட்டு காளையைப் அடக்க முடியும். மாட்டுக்கறி சாப்பிடறவனாலதான் இன்னும் நல்லா மாடு புடிக்க முடியும்.

பயம். நம்ம மாட்டை மாட்டுக்கறி சாப்பிடறவன் புடிச்சிறபோறான்னு.

ஜல்லிக்கட்டுக்குத் தடை வாங்கியவர்கள் சைவம் சாப்பிடுகிறவர்கள். ஆனால், பல மூட பிரமுகர்கள் கம்பு சுத்துறது மாட்டுக்கறி சாப்பிடறவன்கிட்ட. இந்த அநியாயத்தை மாடே ஒத்துக்காது.
19 ஜனவரி

‘ஜல்லிக்கட்டு’ எனக்குப் பிடிக்கல. ஆனால், மாணவர் போராட்டம் பிடிச்சிருக்கு. ஏகாதிபத்திய – பார்ப்பனிய கூட்டான Peta வுக்கும் குறிப்பாக மோடி க்கு எதிரான முழக்கங்களோடு தமிழ்நாடு தழுவிய பெரிய முதல் போராட்டம் இது; அதுவும் மாணவர் நடத்துவது.

மோடி அரசு ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்ல, கல்வி உட்பட ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் எதிரகாலத்திற்கே எதிரானது என்கிற புரிதலாக இது மாறினால் மகிழ்ச்சி.

ஒரு வேளை மோடி ‘ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுத்துவிட்டால் அது பாஜகவிற்கு ஆதரவாக மாறிவிடக்கூடாது என்கிற அச்சமும் இருக்கிறது.

ஆனாலும், மாணவர் போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன்.
ஜல்லிக்கட்டை ஆதரிக்கிற சிலர், மாணவர் போராட்டத்தை எதிரக்கும் போது, ஜல்லிக்கட்டை எதிர்க்கிற நான் ஏன் மாணவர் போராட்டத்தை ஆதரிக்கக் கூடாது?
20 ஜனவரி

தேச விரோத Peta + தேச பக்தி = கள்ளக்கூட்டு

சுப்பிரமணிய சுவாமியை கொண்டு வந்து போராடும் மாணவர் மத்தியில் ஒப்படைத்து விடுங்கள். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுப்பதை விடவும் அது முக்கியமானது.
சிறப்பான முறையில் மாணவர்களே ஜல்லிக்கட்டை நடத்தி முடிப்பார்கள். பேராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர எளிய வழி.
18 தேதி.

‘பொறுக்கி என்று தமிழர்களை திட்டிய சு.சுவாமி மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சு. சுவாமி பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்ற முழக்கமும் முதன்மையாக இருக்க வேண்டும்.
18 தேதி.

தேச விரோதமும் தேச பக்தியும் – கள்ளக்கூட்டு
*
‘Peta தேச விரோத அமைப்பு’ என்று மு.க. ஸ்டாலின் சொன்னதற்கு, ‘விலங்குகள் மீது கருணை காட்டுவதுதான் தேசபக்தி’ என்று விலங்காபிமானத்தோடு ‘சைவ உணவு’ பிட்டா அமைப்பாளர்களிடமிருந்து பதில் வந்திருக்கிறது. நல்லது.

காலில் சங்கிலியிட்டு, அங்குசத்தால் குத்தி, காதருகே வெடி வெடித்து, கும்பலாக சூழ்ந்து பக்தியினால் இம்சித்து அதிகத் துன்புறுத்தலுக்கு உள்ளாகுவது கோயில் யானைகள்.

‘யானைகளை கோயிலில் பயன்படுத்தக் கூடாது’ என்று தடை அல்ல கோரிக்கைக் கூட ஏன் வரவில்லை?
பார்ப்பனியமும் ஏகாதிபத்தியமும் எப்போதுமே கள்ளக்கூட்டு. சாட்சி Peta.

நெகிழ்ச்சி

whatsapp-image-2017-01-16-at-5-24-12-pm

whatsapp-image-2017-01-16-at-5-24-50-pm
மாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் இன்னும் பல்வேறு மக்கள் பணிகளில் ஈடுபடுகிறவர்களுக்காக,
‘நம் வாழ்வு – கல்விச் சுரங்கம்’ இதழ்கள் சார்பாக – நேற்று சென்னை சாந்தோம் தியான ஆசிரம்த்தில் நடந்த பயிற்சி வகுப்பில்,
‘சமூகக் கட்டமைப்பும் ஊடகங்களின் பங்களிப்பும்’ என்ற தலைப்பில் பேசினேன். (இறையியல் – கல்வி பணியில் ஈடுபடுகிற பெண்களுக்காக மட்டும்)

என் பேச்சை கொண்டாடி வரவேற்றார்கள். என் மீதான அன்பை வெளிபடுத்தும் வகையில் விற்பனைக்கு வைத்திருந்த என்னுடைய டிவிடி கள் அனைத்தையும் போட்டி போட்டு வாங்கினார்கள். சிறப்பான நிகழ்ச்சி. நெகிழ்ச்சி.

பயிற்சி வகுப்பை மிகச் சிறப்பாக வடிவமைத்து நடத்திய ‘நம் வாழ்வு – கல்விச் சுரங்கம்’ இதழ்களின் ஆசிரியர் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு. தஞ்சை டோமி அவர்களுக்கு நன்றி.

எப்படியாவது பாத்துடுங்க

fid16086
All of a Sudden ஜெர்மன் படம். அய்ரோப்பாவின் நவீன சினிமாக்கள் பெரும்பாலும் பாத்ரூம் – பெட்ரூம் – டைனிங் டேபிள் – ரெஸ்டாரண்ட் – அலுவலகம் இதோடு முடிந்துவிடும். இந்தப் படமும் அப்படிதான். குடிப்பது, சாப்பிடுவது, முத்தமிட்டுக் கொள்வது, குளிப்பது, உறவு கொள்வது இவற்றுடன் பேசிக் கொண்டிருப்பதாக இருந்தது.

ஆனால் மாலை பார்த்த ஒரு அய்ரோப்பிய படம், கலங்கடித்தது. SON OF SAUL ஹங்கேரி படம். யூதர்கள் மீது நாஜிகளின் கொடூரங்களைப் பல படங்கள் காட்டியிருக்கின்றன. ஸ்பில்பெர்க்கின் Schindler’s List அதற்காகவே ஆஸ்கர் விருது பெற்றது. ஆனால் SON OF SAUL ஏற்படுத்துகிற அதிர்வும் அழுத்தமும் Schindler’s List டை எங்கோ பின்னுக்குத் தள்ளி விட்டது.

இந்த ஆண்டுச் சிறந்த வெளிநாட்டு மொழி படத்திற்கான ஆஸ்கர் விருது பெற்றிருக்கிறது SON OF SAUL.
படத்தைப் பார்ப்பதற்கே தைரியம் வேண்டும். ஆடு தொட்டியில் ஆடுகளை வெட்டி இழுத்துச் செல்வதுபோல் தினமும் நூற்றுக்கணக்கான யூதர்களைக் கொல்கிற யூத தொட்டி அந்தக் களம். அதில் துப்புறவு பணி செய்கிற ஒருவர், உயிருடன் இருக்கிற ஒரு யூத சிறுவனைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார், அதான் கதை.

துப்புரவு பணி என்றால் குப்பைகளை அள்ளுகிற வேலையல்ல. மனித உடல்களை அள்ளுகிற, ரத்தக்கறையைத் துடைக்கிற வேலை. யூதனான சால், ஹங்கேரியனாகப் புழங்குகிறார். அவர் ஹங்கேரியனாகவே இருந்திருந்தாலும்.. ஏன் ஜெர்மானியனாக இருந்திருந்தாலும் அந்தச் சிறுவனுக்காக அதே அன்பையும் துடிப்பையும் செலுத்தியிருப்பார்.

அவரிடம் இருப்பது இனவாத அன்பல்ல. பேரன்பு பொங்கும் மனிதாபிமானம். அதனால் தான் தன் மகனாக இல்லாதபோதும் அந்தச் சிறுவனை காப்பாற்றுவதற்கு ‘தன் மகன்’ என்று பொய் சொல்கிறார். இந்தப் பொய்தான் படத்திற்கான பெயர் காரணமும் SON OF SAUL.

காட்சிகளின் நேர்த்தியை சாதரணமாகச் சொல்லிவிட முடியாது. எல்லா ஷாட்டுகளுமே lengthy shots. அதோடு நீண்ட காட்சிகள். ஒவ்வொரு காட்சியும் ஒரே ஷாட்டிலேயே முடிகிறது.
அநேகமாக 20 காட்சிகள் இருக்கும் என்று நினைக்கிறேன்.
சோலுடனே கேமரா எல்லா காட்சிகளிலும் அல்ல, எல்லா ஷாட்டுகளிலும் பயணிக்கிறது.

1.45 நிமிடத்தில் நம்மை உலுக்கி எடுக்கிறார் இயக்குர் László Nemes.
படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு சிறப்பு, படம் 35 எம்.எம். clouse up ல் அது தருகிற உணர்வை ஒரு போதும் scoop – 70 எம். எம் ஆல் தரவே முடியாது.

எப்படியாவது பாத்துடுங்க.
ஜனவரி 7

ராஜாஜியின் பேரன் மோடி

15895401_10155787456384625_7988077334456671007_n;
காந்தியின் மகன்தான் ராஜாஜியோட மருமகன்; அது உறவு. ஆனால், மோடிதான் ராஜாஜியின் பேரன்; இது அரசியல்.

ஈரானில் விசு படம்

ஒரு பெண் சுய இன்பத்தில் ஈடுபடுகிறாள். பள்ளிக்கூடத்திற்குப் போகிறாள். பிறகு கூட படிக்கிற இன்னொரு பெண்ணுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட ஆரம்பிக்கிறாள். (அப்படியே காட்சியாக)

15 வயது நிரம்பிய குழந்தைகளைப் பாலியல் உறுப்புகளாக படமாக்கியதை பார்த்து அதிர்ச்சியாகி, அவமானப்பட்டு படம் ஆரம்பித்த 15 நிமிடத்தில் தலைகுனிந்து அரங்கத்தை விட்டு வெளியேறினேன்.

Take Me For A Ride ஸ்பானிஷ் படத்தில்தான் இந்தக் கொடுமை. நான் பாக்கப் போனது Beteween valleys என்கிற பிரேசில் படம். ‘அந்த டிவிடியை வாங்க மறந்துட்டோம்” என்று அவர்கள் போட்டது இந்தப் படம்.

* Drought & Lie ஈரானில் கூட விசு மாதிரி நாடக பாணியில் குடும்பக் கதை படம் எடுக்குறாங்க. உயர் நடுத்தர வர்க்க கதை.

இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்குச் சுதந்திரமில்லை என்று சொல்வது இங்கு வழக்கமானது. பெண் சுதந்திரம் கொடிகட்டி பறக்கிற இந்த நாட்டில், டீக் கடையில் தனியாக நடுத்தர வர்க்கத்துப் பெண் டீ வாங்கிக் குடிப்பதையே பார்ப்பது அரிது.

ஆனால் ஈரானியன் படத்தில் கணவனை மட்டுமே உலகமாகக் கருதுகிற பெண், கணவனோடும் அவன் நண்பர்களுடனும் மது அருந்துவதும் சிகிரெட் பிடிப்பதும் ஆண்களின் பழக்கம் போல இதுவும் ஒன்று அவ்வளவுதான், என்பதாகவே காட்டியிருக்கிறார்கள்.

அது ஒண்ணுதான் விசு படத்திலிருந்து இந்த ஈரான் படத்தை வேறு படித்திக் காட்டியிருக்கிறது.

பிறகு junction 48 இஸ்ரேல் படமும் போஸ்னியன் – பிரென்ஞ் மொழி கலந்த Death in Sarajevo படமும் பார்த்தேன். இரண்டை பற்றி அவ்வளவுதான் சொல்ல முடியும்.
8. ஜனவரி. 2017

குற்றம் நடந்தது என்ன?

Born 1987 – ஈரானின் டி.வி நாடகத்தைச் சினிமான்னு ஏமாந்து வாங்கிட்டு வந்துட்டாங்க போல. முடியல.

Cloudy Sundy – கிரீஸ் படம். நாஜிகள் கிரீசை கைப்பற்றிக் கொண்ட பிறகு அங்கேயும், யூதர்களுக்கு எதிராகச் செய்த கொடுமைகளைக் காட்சிப்படித்தியிருக்கிறது படம்.

இந்த ரணகளத்திலேயும் ஒரு கிளு கிளுப்பு இருந்தாதானே நமக்குப் படம் பாக்க முடியும். ஆமாம். பல முத்தக் காட்சிகளோடு யூத பெண்ணை, கிறித்துவ ஆண் காதலிக்கிறான்.
இது இங்கே தியேட்டர் ஆப்ரேட்டருக்கு பிடிக்கல போல. ஒளிபரப்பு ஸ்டக்கானதால் படத்தை முக்காவாசியோடு நிறத்த வேண்டியதா போச்சு.

இன்னைக்கு Ma Rosa பிலிப்பைன்சு படம் தான் ஆறுதல்.ரோசாவும் அவர் கணவரும் தங்களின் பெட்டிக் கடையில் போதை பொருள் விற்கிறார்கள். அவர்களைப் போலிஸ் கைது செய்து கொண்டுபோகிறது. பிறகு அவர்களின் இரண்டு மகன்களும் மகளும் பணத்தைத் திரட்டி காவல் துறைக்கு லஞ்சம் கொடுத்து வெளியில் கொண்டு வருகிறார்கள்.

பிலிப்பைன்சு முழுவதும் வறுமைதான் நிரம்பி வழிகிறது. சாராயமல்ல, போதை பவுடர் விற்கிற அவர்களிடமே காவல் துறைக்குக் கையூட்டுத் தருவதற்கு 40 ஆயிரம் ரூபாய் இல்லாமல் அல்லாடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அதன் யோக்கியதையை.

சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறை. அவர்களுடனான ஆண்களின் விபச்சாரம் பிலிப்பைன்சின் சாபக்கேடு. எளிய மக்களின் வாழ்க்கையைப் பரிகாரமே இல்லாமல் சபித்துச் சீரழித்ததுப் புதிய பொருளாதாரக் கொள்கைதான்.

தன் பெற்றோரை வெளியில் கொண்டு வர அவர்களின் கடைசி மகன் ஒரு ஆணோடு விபச்சாரத்தில் ஈடுபடுகிறான். அதை மிக விரிவாகக் காட்சிப்படித்திருப்பது, விபச்சாரத்தை விட மோசமானது.

பிலிப்பைன்ஸ் மக்களின் அவலமான வாழ்க்கை, கடை வீதிகள், டீ கொண்டு வருகிற பையன் போலிஸ் ஸ்டேசனில் வேலை செய்கிறவனாகவும வருகிறான் என்றால் பிலிப்பைன்ஸ் போலிஸ் யோக்கியதை எப்படி இருக்கும்? படம் முழுக்க கெட்ட வார்த்தைகள் நிரம்பி வழிகறது.

கேரக்டர்கள் பேசுகிற விதம் வசனம் மாதிரியே தெரியல.
காட்சிபடுத்திய முறை சம்பவங்களை நேரடியாக ஒளிபரப்புவதுபோலவே இருந்தது. காட்சிகளில் shake இருப்பதால் கண்ணுக்கு சில நேரம் சங்கடமாகதான் இருந்தது. ( ‘ குற்றம் நடந்தது என்ன?’ பாணியல் .)

ஒரு குடும்பம் தன் குழந்தைகளோடு இரவு வீதியில் தங்களின் தள்ளுவண்டி கடையை மூடி விட்டு நிம்மதியாகப் போவதை,
போதை பொருள் விற்பனையில் கைதாதி வெளியில் வந்த ரோசம்மா பார்த்துக் கலங்குவதாக முடித்தது சிறப்பு.
6 ஜனவரி 2017.