ஹாலிவுட் இயக்குநர்களுக்கு கற்றுத் தருக்கிறார்
முதல்முறை ஒரே நாளில் தொடர்ந்து 3 சினிமா பார்த்தேன். சென்னை சர்வதேச திரைப்பட விழாவில்.
முதலில் விக்டோரியா (2013) என்ற நார்வே படம். ரொம்ப பழைய கதை. உன்னதமான பெண்ணாக வருகிற நாயகி விக்டோரியா மேல் ஈர்ப்பு இல்லை. அதனால் காதலின் ஏக்கத்தில் அவள் இறந்து விடுகிற போதும் சோகம் இல்லை.
காதலன் பெரிய நாவலாசிரியனாக உருவானதற்கு பதில் அவன் குதிரை, படகு ஓட்டியாகவே இருந்திருக்கலாம். இன்னும் யதார்த்தமா அழகியலோடு இருந்திருக்கும்.
நார்வே லொக்கேஷன், அவர்கள் மொழியை உச்சரிக்கும் விதம், மக்களின் குறிப்பாகப் பணக்காரர்களின் பழக்கம் இவற்றை ஓரளவுக்குத் தெரிந்த கொள்ள முடிந்தது.
1959 ல் வெளியான போலந்து நாட்டுப் படம் night train. படத்தின் கதை என்னன்னு டைரக்டருக்கே தெரியல. எனக்கெப்படி தெரியும்?
ஆனால், 59 ல் போலந்தில் Ttrain இருந்ததுபோல் நம்ம ஊரில் 2016ல் கூட இல்லை என்கிற ஏக்கம் படம் முழுக்க இருந்தது.
படத்தில் close up கள் உன்னதம். ரயிலில் திடீர்ன்னு நாம் எதிர்பார்க்காத நேரத்தில் குறுக்கே வருபவரோடு மோதிக் கொள்ளும்போது அவர்கள் முகம் மிக அருகில் தெரியுமே அதுபோலும் பல ஷாட்டுகள்.
ரயில் பயணம் செய்கிற வழி கருப்பு-வெள்ளையில் அழகோ அழகு.
ஆனால், இந்த இரண்டு அய்ரோப்பிய படத்தைதூக்கி சாப்பிட்டிருச்சி, பஞ்சத்துல இருக்கிற எகிப்து படம் Clash.
2013 ஆம் ஆண்டு எகிப்தில் நடந்த சம்பவங்களைப் படமாக்கியிருக்கிறது. மிலிட்ரி வண்டி நம்ம ஊரில் நாய் பிடிப்பதற்கு வருமே அதுபோல் ஒரு வண்டி. கேமரா அதற்குள் இருந்துதான் முழுப் படத்தையும் காட்டி முடிக்கிறது.
வண்டிக்குள் கைதாகி உள்ளே வீசப் படுகிற இருவரில் ஆரம்பித்து இருபதுபேர் வரை நிரம்புகிறது வண்டி. அவர்களுக்குள் சண்டை. அன்பு. பேரன்பு என்று விரிகிறது. அதே வண்டிக்குள்ளிருந்தே வெளியில் நடக்கிற கலவரங்களையும் காட்டுகிறது.
காட்சிகளை ஒவ்வொரு ஷாட்டாக கோர்த்த விதம், பாத்திரங்களை உருவாக்கியது, அவர்களின் நடிப்பு இது எல்லாமே நான் இதுவரை பார்த்திராத கோணம்.
ஹாலிவுட் சாயல் இல்லாத அதையும் தாண்டிய பிரம்மாண்டம்.
இயக்குர் மொகமத் தியோப் ஹாலிவுட் இயக்குநர்களுக்கு நிறையக் கற்றுத் தந்திருக்கிறார்.
அமெரிக்கச் சார்பு இல்லாமல் எகிப்து மக்களின் சார்பான படமாக இருந்திருந்தால் இதை கொண்டாடலாம்.
இப்போது படம் எடுத்துக் கொண்டு இருப்பவர்கள், முயற்சிப்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.
ஜனவரி 5. 2017