நான்தான் அப்பவே சொன்னனே..

தி.மு.க. வா – டி.டி.வி. தினகரனா?’
*
உண்மைதான். பா.ஜ.க. , டி.டி.வி. தினகரனுக்கு எதிராக இருக்கிறது. அந்த எதிர்ப்பு அவர் மதவாத எதிர்ப்பாளர் என்பதினால் அல்ல. பா.ஜ.க. தனக்கான ஆதரவு கோஷ்டியை அ.தி.மு.க.வில் உருவாக்கியதில் உருவான எதிர்ப்பு அது.

சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால், இனி அவரை முன்னுறுத்தி கட்சியையும் ஆட்சியையும் பிடிப்பது ‘கவுரமாக’ இருக்காது என்பதால், பா.ஜ.க. மிக நேரடியாகச் சசிகலாவிற்கு நெருக்கமானவர்களையே அவருக்கு எதிராக உருவாக்கி ஆள் பிடித்தது.
இதனால்தான், பா.ஜ.க. விற்கு எதிராகச் செல்ல வேண்டும் என்ற நோக்கமற்ற டி.டி.வி. தினகரன் இயல்பாகவே எதிர்நிலைக்கு தள்ளப்ட்டார்.

அதனால்தான் 18 எம்.எல்.ஏ. களையும், சந்திரமுகி படத்தில் வடிவேலு ரஜினியிடம் இருந்து தன் மனைவியைப் பாதுகாப்பதுபோல் குறுக்கே கை விரித்து அணைகட்டி, பா.ஜ.க. அரசு நம்மை ஆட்சி அமைக்க அழைக்கும் என்று பேராசையோடு காத்திருந்தார்.

தன்னுடைய ஆதரவாளர்களயெல்லாம் இழந்து நிற்கிற தினகரனை, ராஜ தந்திரம் நிறைந்த பெரிய அரசியல் மேதையைப் போல் சித்தரிப்பதில் ‘திமுக எதிர்ப்பு’ மனோபாவமே அதிகம் வினையாற்றுகிறது.

நெடுஞ்செழியனை போன்ற ‘கலைஞர் எதிர்ப்பு திராவிட இயக்க அறிவாளிகள்’ எப்படி எம்.ஜி.ஆரை, ஜெயலலிதாவை வெறிக் கொண்டு ஆதரித்தார்களோ, அதுபோல் தினகரனை தி.மு.க. விற்கு மாற்றாகத் தூக்கி நிறுத்த முயற்சிக்கிறார்கள்.
ஊடகங்களும் தினகரனுக்குத் தருகிற முக்கியத்துவம் அவருக்கானதல்ல. தி.மு.க. வை புறக்கணிக்கிற முக்கியத்துவம். பா.ஜ.க. ஆதரவு ஊடகங்களும் தி.மு.க. வை விடத் தினகரனுக்கு அதிக முக்கியத்துவம் தருவதின் ரகசியமும் அதுவே.

அதனால்தான், ஊழலுக்காகச் சுப்ரிம் கோர்ட்டால் அக்யுஸ்ட் நம்பர் 1 என்று உறுதி செய்யப்பட்ட ஜெயலலிதாவை ஆதரித்துக் கொண்டே,
‘நிரபராதிகள்’ என்று நிரூபிக்கப்பட்ட பிறகும் தி.மு.க. வை, ஆ. ராசா வை, கனிமொழி யை ‘ஸ்பெக்ட்ரம் ஊழல்’ என்று வெட்கமில்லாமல் விமர்சிக்கிற பார்ப்பன அறிவாளிகளைப் போல்,

அக்யுஸ்ட் நம்பர் 2 என்று தண்டிக்கப்பட்ட சசிகலா தலைமையின் கீழ் ஜாமினில் இருக்கும் தினகரனை ஆதரித்துக் கொண்டே,
ஸ்பெக்ட்ரம் சதியை தகர்த்துக் கம்பீரமாக நிற்கிற ஆ. ராசா வை இன்னும் ஊழல் குற்றசாட்டுடன் வெட்கமில்லாமல் விமர்சிக்கிறார்கள் ‘கலைஞர் எதிர்ப்பு திராவிட இயக்க அறிவாளிகள்’

இது மட்டுமல்லாமல் ஜாதி ரீதியாகத் தினகரனுக்குக் கிடைக்கிற ஆதரவு மிகப் பிரம்மாண்டமானது. அ.தி.மு.க. ஆதரவாளர்கள் மட்டுமல்ல அ.தி.மு.க. எதிர்ப்புப் பிரமுகர்கள், ஊடக வியலாளர்களும்;
காங், பா.ஜ.க. கம்யுனிஸ்ட் ஏன் தி.மு.க. விலும் கூட தினகரனுக்கான ஜாதிய ஆதரவு பொங்கி வழிகிறது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ‘தினகரன் ஜெயிக்க வேண்டும்’ என்று தி.மு.க.வில் உள்ள சிலரே விரும்புகிற அளவிற்கும் வளர்ந்திருக்கிறது.

ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள் உடன்பிறப்புகளே, தினகரனின் வளர்ச்சி, பா.ஜ.க.விற்கு எதிரானதல்ல, தி.மு.க. விற்கு எதிரானது.

23 டிசம்பர் . முடிவுக்கு முதல்நாள் எழுதியது.

‘வீரமணி அவர்களைக் கடுமையாக விமர்சித்திருக்கிறேன்’


பெரியார் இயக்கத் தலைவர்கள் அய்யா ஆனைமுத்து, தோழர் கொளத்தூர் மணி, விடுதலை ராசேந்திரன் சார், அண்ணன் கோவை ராமகிருஷணன் இவர்களை ஒரு வார்த்தைக்கூட நான் இதுவரை பெயர் சொல்லி விமர்சித்ததில்லை.

ஆனால், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களைப் பலமுறை விமர்சித்திருக்கிறேன். அதுவும் தோழர் கொளத்தூர் மணி, அண்ணன் கோவை ராமகிருஷ்ணன் இவர்களுக்கு ஆதரவு நிலையிலிருந்து ஆசிரியரை கடுமையாக விமர்சித்திருக்கிறேன்.

என்னைப் பற்றிச் சிலர், ‘உங்களை மதிமாறன் இப்படிப் பேசினார்’ என்று அவதூறாகக் கிசு, கிசு சொன்னாலே, தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்களே நம்பி விடுகிற சூழலில்;
என்னுடைய நேரடி விமர்சனங்களைகூட எதிர்நிலையில் பார்க்காமல், என் பெரியார் பணியை அங்கீகரித்து என்னைப் பெரியார் திடலில் பேச வைத்தார் ஆசிரியர்.
என்னுடைய பேச்சு பெரியார் வலைக்காட்சியில் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பானது.

இன்னும் சிறப்பாக எனக்கு ‘பெரியார் விருது’ கொடுத்தார். அதை விடக் கூடுதலாக என் பெரியாரியல் பணிக்கு மகுடம் வைத்ததுபோல் பெரியார் திடலில் அவருடன் நான் மட்டும் சிறப்புரை என்று கவுரவித்தார். அவர் தலைமையில் நடந்த திராவிடர் கழகத் திருமணங்களில் என்னை மட்டும் சிறப்பழைப்பாளராக அழைத்துச் சிறப்புச் செய்தார்.

விடுதலையில் என்னுடைய பேச்சை முக்கியத்துவம் கொடுத்து, பல முறை பல பக்கங்கள் வெளியிட்டார்.
என்னை விடச் சிறந்த பேச்சாளர்களும், மூத்த தலைவர்களும் திராவிடர் கழகத்தில் இருந்தபோதும் திராவிடர் கழகம் அல்லாத எனக்கு ஆசிரியர் தந்த முக்கியத்துவம் என் பெரியாரியல் பணியைப் பாய்ச்சலோடு செய்வதற்குப் பெரும் உந்துதல் தந்தது.

அதுமட்டுமல்ல, ஆசிரியர் பேசும்போது நான் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தால், ‘சிந்தனையாளர்மதிமாறன்’ என்று என் பெயர் குறிப்பிடுவார். வேறு விழாக்களில் நிகழ்ச்சி முடிந்து அவர் செல்லும் போது நான் வழியல் நின்று வணக்கம் சொன்னால், சட்டென்று நின்று வாய் திறந்த முழு மகிழ்ச்சியான சிரிப்போடு (இந்தப் படத்தில் உள்ளது போல்) நலன் விசாரித்துச் செல்வார்.

‘எனக்குக் கிடைத்த முக்கியத்துவம்’ என்பதால் மட்டும் நான் அவரைக் கொண்டாடவில்லை. அவர் பேச்சையும் எழுத்தையும் கேட்க்கும்போதும் படிக்கும்போதும் ‘எப்போதும் நான் பெரியாரியல் மாணவன்தான்’ என்பதை உணர வைக்கும்.
ஆம், அவர் ஆசிரியர்தான்.

‘பெரியாரிஸ்ட் யாரோடு தோழமையாக இருப்பது, யாரை எதிரியாகப் பார்ப்பது, யாரை முற்றிலும் தவிர்ப்பது’ என்கிற முறையை எப்போதும் அவர் சிறப்பாகச் செய்வார்.

தன்னை விமர்சிப்பவராக அல்லது தேர்தல் கட்சியில் பக்திமானக பெரியார் கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவராக இருந்தாலும் பெரியாரை மதிப்பவராக இருந்தால் அவர்களைத் திடலுக்கு அழைப்பதும் தோழமை வட்டத்திற்குள் வைப்பதும்;

இந்து மதவாதம், தலித் விரோத ஜாதி கட்சிகளை முற்றிலும் எதிர்நிலையில் வைப்பதும்;

தமிழ்தேசியம், தலித் அரசியல் என்று தீவிரமாக இயங்கினாலும் அவர்கள் திராவிட இயக்க எதிர்ப்பாளர்களாக, பெரியாரை துரோகியாக, விரோதியாக அவதூறு செய்கிறவர்களாக இருந்தால்;

அவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் பெரியார் திடலிலும், கட்சியின் எந்த நிகழ்ச்சிகளிலும் முற்றிலுமாக அவர்களை முற்றிலுமாக புறக்கணிப்பதில் தீவிர பெரியாரிஸ்ட்டின் கோபம் வெளிப்படும்.

ஒரு அம்பேத்கரிஸ்ட்டாக ஆசிரியரை நினைத்து நான் எப்போதும் பெருமைபடுவது, அருண்ஷோரி அண்ணல் அம்பேத்கரை மிக மோசமாக அவதூறு செய்தபோது, பல முற்போக்காளர்கள் அமைதி காத்தார்கள். பெரியாரை இழிவாக விமர்சித்த தலித் அறிஞர்கள்கூட அருண்ஷோரியின் அவதூறுக்கு மவுனத்தைதான் பதிலாகத் தந்தார்கள்.

மிகச் சிறந்த அம்பேத்கரிய பார்வையோடு அருண்ஷோரியின் அவதூறுகளை அம்பலப்படுத்திய அம்பேத்கரிய அறிஞர் ஆசிரியர் வீரமணி அவர்கள்தான்.

அவரின் பிறந்தநாள் வாழத்துகளாக, பெரியாரின் ஆயுளைத் தாண்டி அவர் நீடுழி வாழவேண்டும் என்பது என்னுடைய விருப்பம் மட்டுமல்ல.
2 December