padmavat (தி); முஸ்லிம்களின் பெருந்தன்மையும் பார்ப்பனிய சதியும்

அலாவுதின் கில்ஜி யை கொடூர கோமாளிப் பெண் பித்தனாக சித்தரித்திருக்கிறார்கள். சில காட்சிகளில் இஸ்லாமிய அடையாளம் வில்லனுக்கான பின்புலமாகக் காட்டப்பட்டிருக்கிறது.

ஆனால், தன் வீட்டுப் பெண்களைப் புனிதத்தின் பெயரில் உயிரோடு கொளுத்தியும் பிறகு வெள்ளைக்காரனுக்கு நாட்டைக் காட்டிக் கொடுத்து ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டு வெள்ளையனோடு கிரிக்கெட விளையாடிய ராஜபுத்திரர்களைத் தியாகிகளாக, மாவீரர்களாகக் காட்டுகிறார்கள்.

இலங்கை புத்த மன்னனின் மகளான பத்மாவதி, ராஜபுத்திர மருமகளாக வந்தவுடனேயே இந்துமதப் புனிதம், ராமாயணப் பெருமிதம், ராமனை உயர்த்தி, தன் மண்ணின் மன்னன் ராவணனை இழிவாகவும் பேசுவது போன்ற வசனங்கள் திட்டமிடப்பட்டவை. கேலிக்குரியவை.

அதை விட மோசம், மிக திட்டமிட்டு இலங்கை என்று சொல்வதைத் தவிர்த்து, ‘சிங்கள தேசம்’ என்றே மொழி பெயர்த்திருக்கிறார்கள். யாரோ பாரதியின் ஞானப் பேரன் பார்த்த வேலை.
‘உடன் கட்டை’ பெண்களே விரும்பி ஏற்றுக் கொண்டது என்று அந்த ‘சதி’ யை புனிதப்படுத்திகிற மோசடியுடனே படம் முடிகிறது.

ஆனால், இவ்வளவு இந்து பெருமிதமும், இஸ்லாமிய மன்னனை இழிவாகவும் காட்டிய போதும் எதிர்ப்பு தெரிவிப்பதோ இந்து அமைப்புகள். காரணம்? இந்த எதிர்ப்பு ராஜபுத்திரர்கள் மீது பார்ப்பனியம் செய்கிற சவாரி.

அலாவுதின் கில்ஜியுடன் பகை ஏற்படக் காரணம், ‘ராஜபுத்திர மன்னர் – அரசி’யின் உடல் உறவை மறைந்திருந்து பார்க்கிற ஒற்றைப் பார்ப்பன ராஜகுருவின் ஒழுக்கக் கேட்டை தண்டித்ததால் அவர் செய்கிற சதி.
இவ்வளவு இழப்பிற்கும் அவலத்திற்கும் காரணம் அந்தப் பார்ப்பனரே என்று படம் உறுதியாகச் சொல்கிறது.

இன்று பார்ப்பனியம் இஸ்லாமியர்களுக்கு எதிரான கண்ணோட்டோம் கொண்டதாக இருந்தாலும், இந்தியாவில் இஸ்லாமிய மன்னர்கள் ஆண்டபோது எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவர்களிடம் உயர் பதவிகள் வகித்தவர்கள் பார்ப்பனர்கள்தான் என்பதையும் படம் குறிப்பால் உணர்த்துகிறது.

‘பத்மாவதி’ எதிர்ப்புக்கு இன்னொரு முக்கியக் காரணம், படுக்கையறையை ஓட்டையில் பார்த்த ராஜகுருவை, நாடு கடத்தும் படி தன் கணவருக்குப் பரிந்துரைப்பதும், பிறகு அலாவுதின் கில்ஜியுடனான பிரச்சினையின்போது,
முதல் நிபந்தனையாக, கில்ஜியுடன் ஒத்துஊதி சொந்த மக்களுக்கு எதிராகச் சதி செய்யும் அந்தப் பார்ப்பனரின் தலையைத் தனக்குப் பரிசாகத் தரவேண்டும் என்று கேட்டதும், அதை அலாவுதின் உடனடியாக நிறைவேற்றியதும் தான்.

முற்போக்கு பார்ப்பனர்களும் இந்தப் படத்திற்கு எதிரான கண்ணோட்டம் கொள்வார்கள். புறக்கணிப்பார்கள். அல்லது மிக, மிக நேர்த்தியாகச் சிறந்த சினிமா மொழியோடு பிரம்மாண்டாமாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தை ‘தரமற்றது’ என்று சினிமா விமர்சகனை போல் மாறுவேடம் செய்வார்கள்.

நாம் இந்தப் படத்தைப் பரிந்துரைப்பதே அதே காரணங்களுக்காகத்தான். கண்டிப்பா பாருங்க.

நல்லா திட்டு சாமி. நீங்க எங்கள விட உயர்ந்தவ‘ர்’

‘வேசி மகன், உங்க அம்மா வேசி, தலையை வெட்டணும்’ இப்படி எல்லாம் கவிஞர் வைரமுத்துவிற்கு எதிராகப் பண்பாடோடு பேசுபவர்கள் மற்ற எல்லா ஜாதிக்கார்களையும் ரவுடிகளாகப் பொறுக்கிகளாகச் சித்திரிக்கிற பார்ப்பனர்கள். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் பேசுகிறார்கள்.

இப்படிக் கெட்ட வார்த்தைகளோடு ‘இந்து’ என்கிற பெயரில் அதிகமாக அய்யங்கார்களே வெகுண்டெழுகிறார்கள், பதிலுக்கு வைரமுத்து ஜாதிக்காரர்கள் யாரும் அவருக்கு ஆதரவாக வரவில்லை. வரவும் மாட்டார்கள்.

இதையே தாழ்த்தப்பட்டவர்கள் ஒன்றுகூடி ‘இந்து’ என்ற அடையாளத்தோடே இப்படிப் பேசியிருந்தால், இந்நேரம் ஊரையே கொளுத்தி இருப்பார்கள்.
ஏனென்றால் ஜாதி சிஸ்டம் இயங்கும் நிலை அப்படி.

தனக்கு மேல் உள்ள ஜாதிக்காரர்கள் அதிலும் பார்ப்பனர்கள் தன் ஜாதியையோ தன் ஜாதிக்காரரையோ எவ்வளவு இழிவாகப் பேசினாலும் கோபம் வராது.
மாறாக, தனக்குக் கீழ் உள்ள ஜாதிக்காரர்கள் தன் ஜாதிக்காரரிடம் மரியாதையாகவே உரிமை கோரினாலே கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாது.

இதுபோல் 90 வயதான அய்யா ஆறுமுகசாமியை ‘சூத்திரன்’ என்று 500 பேர் கூட இல்லாத தீட்சதப் பார்ப்பனர்கள் சிதம்பரம் கோயிலில் அடித்து வீதியில் வீசியபோது,
‘வீரமிக்க வன்னியக்குல சத்திரியர்’கள் யாரும் ‘என் ஜாதிக்காரர் மீது கை வைத்த உங்கள சும்மா விடாமாட்டோம்’ என்ற பொங்கவில்லை. மாறாகச் சும்மாதான் இருந்தார்கள்.
இவ்வளவுதான் ஜாதி இயங்கும் தன்மை.

தன் ஜாதி பெண்ணைத் தனக்கு மேல் உள்ள ஜாதிக்காரர்கள் திருமணம் முடித்தால் பணிவோடு சம்பந்தம் செய்து கொள்வதும்; தலித் இளைஞன் மணம் முடித்தால் தலையை வெட்டுகிற ஜாதி உளவியல்தான் இதிலும் வினையாற்றுகிறது.

அன்று ஆறுமுகசாமிக்கு ஆதரவாக வந்தது மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய தொண்டர்கள். இன்றும் வைரமுத்துவிற்கு ஆதரவாக இவர்கள்தான் தீவிரமாக இயங்குகிறார்கள்.

பார்ப்பனியத்தை எதிர்க்கிற துணிச்சல் பெரியார் தொண்டர்களுக்குதான் உண்டு. ஜாதிய வீரர்களோ நினைத்துக்கூட பார்ப்பதற்கு நடுங்குவார்கள்.

வீரத்தின் அடையாளமாக மீசை எல்லாம் பெருசா வைச்சுப்பாங்க. ஆனால், மீசை இல்லாத ஜாதிக்காரர்களைப் பார்த்தால் பம்முவார்கள்.
தட்டிஸ் ஜாதி சைக்காலஜி.
18 January

//சொல்லவே இல்ல..//

நேத்துப் புத்தகக் காட்சியில் நான் பேசுன நிகழ்ச்சியில் கலாட்டாவா‘மே’?

முடியுமா? முடியும். என்னது?

அப்பனைக் கொன்று அவரின் அரசு வேலையில் சேர விரும்புகிற மகனைப் போல், போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இருக்கும்போது, அவர்களுக்கு மாற்றாக வேலைக்குப் போகிறார்கள் இளைஞர்கள்.

‘ஏன் வேலை இல்லை?’ என்பதை உணராமல், வேலையற்றவர்களாக வைத்திருக்கிற அரசுக்கு எதிராகப் போராடுவதை விட்டு, உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய அரசுக்கு அடியாளாகப் போவது என்ன நியாயம்?

ஒவ்வொரு ஆண்டும் அரசு, போக்குவரத்துத் தொழிலாளர்களை இப்படித்தான் நடத்துகிறது. இந்தப் போராட்டமும் இந்தக் கோரிக்கையோடு முடிந்து மீண்டும் அதே கோரிக்கை அடுத்த ஆண்டு ஆரம்பமாகும்.

மாத சம்பளம் போல் இந்தப் பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வை தொழிற்சங்கங்கள் காண வேண்டும்.
தொழிலாளர் உரிமைப் போராட்டத்தைத் தொழிலாளர்களுக்கும் மக்களுமான பிரச்சினையாக மாற்றுகிற அரசின் சதியை அம்பலப்படுத்துவதுபோல்;

போக்குவரத்துத் தொழிலாளர்களிடம் சங்கம் வைத்திருக்கிற சி.ஐ.டி.யு., தொ.மு.ச. போன்ற சங்கங்கள் மற்ற தொழில் நிறுவனங்களில் இருக்கிற தொழிலாளர்களையும் இவர்களுக்கு ஆதரவாகப் போராட வைக்க வேண்டும்.

எந்த நிறுவனத்தின் தொழிலாளர்கள் போராட்டத்தின் போதும் இதுபோன்ற கட்டமைப்பை தொழிற்சங்கங்கள் உருவாக்கினால் தொழிலாளர் ஒற்றுமையும் தொழிலாளிக்குரிய குணாம்சங்களையும் உண்டாக்க முடியும்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுனர்களுக்கான சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் ஒருநாள் வேலை நிறத்தத்தையாவது அறிவித்திருக்க வேண்டும்.

அதுபோக மக்களின் அத்தியாவசிய துறை போக்குவரத்து என்பதால், கூலி வேலை செய்கிற மக்களுக்கும் அரசு பள்ளிக்கு போகிற குழந்தைகளுக்கும் பாதிப்பு வராத வகையில் தங்கள் போராட்டங்களை வடிவமைப்பது மக்களைத் தங்கள் போராட்டங்களோடு இணைப்பதாக முடியும்.

போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் வசதியானவர்களையும் உயர்நடுத்தர வர்க்கத்தினரையும் பாதிக்காது என்பதினால்தான் அரசு இவ்வளவு அலட்சியம் காட்டுகிறது.

அதனால், போக்குவரத்துத் தொழிலாளர்களை விடவும் பொருளாதாரத்தில் மிகப் பின் தங்கிய மக்களுக்காக, ‘பஸ் ஓடும். ஆனால், மக்களிடம் நாங்கள் கட்டணம் பெற மாட்டோம்’ என்று போராட்ட முறையை மாற்ற வேண்டும்.
அரசு அதை ஒடுக்க முயற்சி செய்தால், ‘நாங்கள் உங்களுக்குச் சேவை செய்யத் தயாராக இருக்கிறோம். அரசுதான் அதைத் தடுக்கிறது’ என்று மக்களிடம் அம்பலப்படுத்தலாம்.
பிரச்சினையை அரசு விரைவில் தீர்க்க முன்வரும்.

இதுபோன்ற வர்க்க உணர்வோடு தொழிலாளர் போராட்டங்களைக் கட்டமைத்தால் அது தொழிலாளர் ஒற்றுமையை ஏற்படுத்துவதோடு அதன் இன்னொரு முகம் அதைவிடச் சிறப்பான முற்போக்கு முகமாக ஒளி வீசும். அது ஜாதியை தகர்க்கிற தொழிலாளியின் அழகிய முகம்.