முடியுமா? முடியும். என்னது?

அப்பனைக் கொன்று அவரின் அரசு வேலையில் சேர விரும்புகிற மகனைப் போல், போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இருக்கும்போது, அவர்களுக்கு மாற்றாக வேலைக்குப் போகிறார்கள் இளைஞர்கள்.

‘ஏன் வேலை இல்லை?’ என்பதை உணராமல், வேலையற்றவர்களாக வைத்திருக்கிற அரசுக்கு எதிராகப் போராடுவதை விட்டு, உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய அரசுக்கு அடியாளாகப் போவது என்ன நியாயம்?

ஒவ்வொரு ஆண்டும் அரசு, போக்குவரத்துத் தொழிலாளர்களை இப்படித்தான் நடத்துகிறது. இந்தப் போராட்டமும் இந்தக் கோரிக்கையோடு முடிந்து மீண்டும் அதே கோரிக்கை அடுத்த ஆண்டு ஆரம்பமாகும்.

மாத சம்பளம் போல் இந்தப் பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வை தொழிற்சங்கங்கள் காண வேண்டும்.
தொழிலாளர் உரிமைப் போராட்டத்தைத் தொழிலாளர்களுக்கும் மக்களுமான பிரச்சினையாக மாற்றுகிற அரசின் சதியை அம்பலப்படுத்துவதுபோல்;

போக்குவரத்துத் தொழிலாளர்களிடம் சங்கம் வைத்திருக்கிற சி.ஐ.டி.யு., தொ.மு.ச. போன்ற சங்கங்கள் மற்ற தொழில் நிறுவனங்களில் இருக்கிற தொழிலாளர்களையும் இவர்களுக்கு ஆதரவாகப் போராட வைக்க வேண்டும்.

எந்த நிறுவனத்தின் தொழிலாளர்கள் போராட்டத்தின் போதும் இதுபோன்ற கட்டமைப்பை தொழிற்சங்கங்கள் உருவாக்கினால் தொழிலாளர் ஒற்றுமையும் தொழிலாளிக்குரிய குணாம்சங்களையும் உண்டாக்க முடியும்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுனர்களுக்கான சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் ஒருநாள் வேலை நிறத்தத்தையாவது அறிவித்திருக்க வேண்டும்.

அதுபோக மக்களின் அத்தியாவசிய துறை போக்குவரத்து என்பதால், கூலி வேலை செய்கிற மக்களுக்கும் அரசு பள்ளிக்கு போகிற குழந்தைகளுக்கும் பாதிப்பு வராத வகையில் தங்கள் போராட்டங்களை வடிவமைப்பது மக்களைத் தங்கள் போராட்டங்களோடு இணைப்பதாக முடியும்.

போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் வசதியானவர்களையும் உயர்நடுத்தர வர்க்கத்தினரையும் பாதிக்காது என்பதினால்தான் அரசு இவ்வளவு அலட்சியம் காட்டுகிறது.

அதனால், போக்குவரத்துத் தொழிலாளர்களை விடவும் பொருளாதாரத்தில் மிகப் பின் தங்கிய மக்களுக்காக, ‘பஸ் ஓடும். ஆனால், மக்களிடம் நாங்கள் கட்டணம் பெற மாட்டோம்’ என்று போராட்ட முறையை மாற்ற வேண்டும்.
அரசு அதை ஒடுக்க முயற்சி செய்தால், ‘நாங்கள் உங்களுக்குச் சேவை செய்யத் தயாராக இருக்கிறோம். அரசுதான் அதைத் தடுக்கிறது’ என்று மக்களிடம் அம்பலப்படுத்தலாம்.
பிரச்சினையை அரசு விரைவில் தீர்க்க முன்வரும்.

இதுபோன்ற வர்க்க உணர்வோடு தொழிலாளர் போராட்டங்களைக் கட்டமைத்தால் அது தொழிலாளர் ஒற்றுமையை ஏற்படுத்துவதோடு அதன் இன்னொரு முகம் அதைவிடச் சிறப்பான முற்போக்கு முகமாக ஒளி வீசும். அது ஜாதியை தகர்க்கிற தொழிலாளியின் அழகிய முகம்.

One thought on “முடியுமா? முடியும். என்னது?

  1. நீங்கள் சொல்வது போல் மக்களிடமிருந்து தொழிலாளர்கள் கட்டணம் வாங்கவில்லை என்றால், தொழிலாளர்கள் கட்டண பணாத்தை கையாடல் செய்துவிட்டார்கள் என்று கூறி எளிதாக திசை திருப்ப வாய்ப்பு உள்ளது அல்லவா? ஏனெனில் ஜெ வின் வாரிசுகள், பார்ப்பனிய ஆர்.எஸ்.எஸ் ந் பிடியில் இருப்பவர்கள் இப்படி கூற கொஞ்சமும் யோசிக்கமாட்டார்கள் என்று கருதுகிறேன். ஆனால் மற்ற சங்கங்களை(ஆட்டோ) வேலை நிறுத்தம் செய்யச் சொல்வது சரிதான். ஆனால் சிஐடியுவிடமிருந்து நாம் இதை எதிர்பார்க்க முடியாது. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் இதை செய்யக்கூடும்

Leave a Reply

%d bloggers like this: