என் அன்பிற்கினிய வாரிசு அரசியல்

❣️

‘வாங்க அண்ணே. காலையில தலைவரைப் பாத்துட்டிங்கபோல‘ என வரவேற்றார் அமைச்சர் Udhayanidhi Stalin அவர்கள்.

11 தேதி காலை தலைவரைப் பார்த்துவிட்டுத் திரும்பியபோதே திரு. செந்தில்,

‘அண்ணே இன்னைக்குச் சாய்ந்திரம் தலைவர் வீட்டுக்கு வந்துடுங்க. இளைஞரணிச் செயலாளரைச் சந்தித்து விடலாம்’ என்றார்.

தலைவரைப் பார்க்கபோன போது கொண்டு போன அதே 2 ரூபா பிரிண்ட் அவுட் அழைப்பிதழடன் மட்டுமே சென்றோம்.

மணமக்கள் மாஸ்டர் டிகிரி ஒன்றாகப் படித்திருப்பதைப் படித்தவுடனேயே ‘என்ன லவ் மேரேஜா?’ எனக் கேட்டார்.

அழைப்பிதழைப் படித்து முடிப்பதற்கு முன்பே ‘நான் reception க்கு வந்துடுறேன்’ என்றார்.

cycle Bell குறும்படத்தை நீங்கதான் வெளியிடனும் எனக் கவின் கேட்ட அடுத்த நொடியே, ‘வெளியிட்ருவோம்’ என மகிழ்ச்சியாக சம்மதித்தார்.

தன் பெயர்கூட அழைப்பிதழில் இல்லாதபோதும் தலைவரைப் போலவே மிகுந்த அன்போடும் உற்சாகத்தோடும் சம்மதித்தார்.

வாரிசு அரசியல்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நான் தீவிரமாக ஆதரித்தற்குக் காரணமே, இளைஞரணிச் செயலாளர் பொறுப்பை அவர் ஏற்றபோது;

அவர் மீது மிக மோசமான அவதூறுகளை நடுநிலையாளர்கள் என்ற பெயரில், கட்சிசாராத திமுக எதிர்ப்பாளர்கள் கூலிப்படையைப்போல், திட்டமிட்டுப் பரப்பினர்.

திமுக அல்லாத திராவிட இயக்க சிந்தனையாளன் என்கிற அளவில் அதற்கு எதிராகத் தீவிரமாக வினையற்ற வேண்டியது என் கடமையாயிற்று.

ஒவ்வொருமுறையும் அதே கூலிப்படை அதே வேலையை அவருக்கு எதிராகத் தீவிரமாகச் செய்யும்போது அதற்கு எதிராக நானும் தீவிரமாக வினையாற்றினேன்.

பெரியாரிஸ்ட், திராவிட ஆதரவாளர் என்கிற பெயரில் மோசமாகக் கலைஞர் குறித்து அவதூறுப் பேசியவர்களையும் கண்டித்தேன்.

அவர்களோடு உறவாக இருக்கிற, அவர்களை வேறு காரணங்களுக்காக ஆதரிக்கிற திமுகவினர், திமுக ஆதரவுப் பெரியாரிஸ்ட்டுகளையும் விமர்சித்தேன்.

இதன் காரணமாகத் தோழமையான பெரியவர்களாலும் புறக்கணிப்பட்டேன். என்னைச் சிறப்பு அழைப்பாளராக நிகழ்ச்சி நடத்தியவர்கள்கூட இதன்பிறகு எனக்கு அவர்களின் நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ்கூட அனுப்புவதில்லை.

திமுக எதிர்ப்பு ‘திராவிட’ ஆதரவாளர்களுக்கு தருகிற முக்கியத்துவம், திமுக ஆதரவு பெரியாரிஸ்டான எனக்கு ஆதரவாளர்களே தரவில்லை.

சில நம்மவர்களே, திமுக எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக என்னை இழிவாக திட்டவும் செய்தார்கள்.

‘தன்னை ஆதரிக்கிறார்கள்’ என்பதற்காக, நாம் பிரதானமாக ஆதரிக்கிறவர்களுக்கு எதிராக இருப்பவர்களோடு உறவுவைத்துக் கொள்ளக்கூடாது. அவர்களையும் கண்டிக்க வேண்டும்.

எதிலும் வெளிப்படையாக இயங்க வேண்டும் என்ற நேர்மையை, பெரியாரிடம் கற்றுக் கொண்டேன்.

என்னுடைய திராவிட இயக்கப் பணியைத் தோழமையானவர்களே புறக்கணித்தபோது என் இனிய உதயநிதி அவர்கள் மட்டும்தான் அதைக் கவனித்து எங்கள் வீட்டிற்கே வந்து நன்றி தெரிவித்தார்.

ஒரே களத்தில் இயங்கியபோதும், இன்றுவரை என் மரியாதைக்குரிய அன்பானவர்கள், என்னை அந்தக் காரணத்திற்காகவே புறக்கணித்தபோது,

‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறை’ நிகழ்ச்சி நிரலில் என் பெயரை முதலில் எழுதியவர் அன்பிற்கினிய உதயநிதி அவர்கள்.

அதிகப் பயிற்சிப் பாசறைகளில் பங்கெடுக்க வைத்து லட்சக்கணக்கான இளைஞர்களைச் சந்திக்க வைத்தவர்.

என் திராவிட இயக்க அரசியல் பயணத்தை அடுத்தப் பாய்ச்சலுக்குக் கொண்டு சென்றவர் அவரே.

திராவிட இயக்கப் பணியை நான் செய்தேன்.

‘நான் செய்கிறேன்’ என்று சொல்வதற்காகவோ என் புத்தகங்களைத் தருவதற்கோ, வேறு எதற்காகவும் ஒருபோதும் திமுக தலைவர்களையோ, பிரமுகர்களையோ நான் சந்தித்ததும் இல்லை. முயற்சித்ததும் இல்லை.

ஆகவே, அது அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் நினைத்திருந்தேன்.

தலைவர் தளபதி என் மீது காட்டிய பேரன்பு, திரு. உதயநிதி என் மீது காட்டிய அக்கறை, அவர்கள் என்னை எவ்வளவு நெருக்கமாகக் கவனித்திருக்கிறார்கள் என்பதை உணர்த்தியது.

என் இனிய வாரிசு அரசியல் 💞

Leave a Reply

%d bloggers like this: