‘என்ன தரவேண்டும்?’ அவருக்குத் தெரிந்திருக்கிறது நன்றி குடும்ப அரசியலுக்கு

நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலும் தோழர்கள் என்னிடம் 3 மாதத்திற்கு முன்பே தேதி வாங்கிவிடுவார்கள். அவரோ அமைச்சர், திமுகவின் இளைஞரணி செயலாளர். அவர் தேதி ஓர் ஆண்டுக்கு முன்பே முடிவாகியிருக்கும்.

11 தேதியே அவருக்குத் தெரியும். 26 தேதி வேறு நிகழ்ச்சி இருப்பது. ஆனாலும் நாங்கள் வருத்தப்படக்கூடாது என்பதால் ‘நிச்சயம் வருகிறேன்’ என்றார்.

ஒரு வாரத்திற்கு முன் நாங்கள் தந்த அழைப்பிதழ் அவருக்கு நெருக்கடி. ஆனால் கட்டாயமில்லை. அவர் கட்டாயமாக்கிக் கொண்டார். நானாக இருந்தால் நிச்சயம் வந்திருக்க மாட்டேன்.

அவரைக் கொண்டாடி நடக்கிற நிகழ்ச்சியல்ல இது. இன்னும் நெருக்கிச் சொன்னால், அவருக்கான முக்கியத்துவம் இல்லாத நிகழ்ச்சி.

22 தேதி மாலை வந்தார். Cycle Bell குறும்படத்தை வெளியிட்டார். பார்த்தார்.

அவரின் சைக்கிள் – தந்தை தளபதியின் கனிவான கண்டிப்பு – அவர் தொகுதி மாணவர்களுடன் சைக்கிளுக்கும் அவருக்கும் உள்ள நட்பு – என நினைவுகளை அழகாக பகிர்ந்து கொண்டார்.

மணமக்கள் அவர் முன் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். வந்தவர்கள் எல்லோரும் முண்டியடித்து அவருடன் படம் எடுத்தார்கள். அவரிடம் சின்ன முகச் சுளிப்புக்கூட இல்லை. ஒரு மணிநேரம் இருந்தார்.

நான்தான் கேட்டேன், ‘மணமக்களோடுதான் உங்கள் வீட்டுக்குவந்தேன். அப்பவே வாழ்த்தி அனுப்பியிருக்கலாமே. ஏன் இவ்வளவு சிரமம்’ என்று.

‘பரவாயில்லண்ணே..’ புன்னகையோடு கடந்தார். தன் பேரனை வியந்துப் பார்க்கிற பாட்டியின் பெருமிதத்தோடு சொல்லனும் என்றால் ‘அப்படியே அவுங்க அப்பா மாதிரி’

அதைவிடச் சிறப்பு என் வீட்டுக்கு, ‘என்ன வாங்கி வரவேண்டும்?’ என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது. இரண்டு பெரியார் சிலைகளுடன் வந்தார்.

இன்னும் கூடுதல் சிறப்பு, டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் குறித்து வியந்து பேசியது. அதை வெளியிடுவதில் நாங்கள் எடுத்த முயற்சி, சிரமம் குறித்துச் சொன்னேன். அக்கறையுடன் கேட்டார்; எங்கள் குடும்ப அமைச்சர் Udhayanidhi Stalin

எனக்கு இதைவிடச் சிறப்பு வேறு என்ன வேண்டும்? அவரின் எளிய வருகைக்கும் அளவான ஆனால், அன்பான வார்த்தைகளுக்கும் பதிலாக நான் என்ன தரமுடியும்?

பெரும் காதலுடன் என் குடும்பத்தின் சார்பாக நன்றி சொல்கிறேன், எங்கள் குடும்ப அரசியலுக்கு💖

Leave a Reply

%d bloggers like this: