நம்மீது அதிக மரியாதை வைத்திருக்கிறார்

யதார்த்த உணர்வைக் கூடுதலாகக் காட்டும் என்பதால் படம் முழுக்க மிட் ஷாட்தான்.
பெயர்ப் போடும்போது வேளாங்கண்ணிக் கோயிலைச் சுற்றி உள்ள மக்களுக்கான குளோசப். மம்முட்டி தூங்கித் தெளியும் போது அவருக்குக் குளோசப்.
மற்றபடி கேமரா அருகில் இருப்பவர்களுக்குத் தானாக அமைகிற குளோசப்.
லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் படங்களில் உள்ள நேர்த்தியும் வேகமும் இதில் குறைவுதான். படம் தமிழ் சூழலில் இருந்தது காரணமாக இருக்கலாம்.
தமிழ் பாத்திரங்கள் பேசும் வசனமும் பாவனைகளும் சூழலும் லிஜோ படத்தில் வருவதுபோல் நேர்த்தியாக இல்லை. இங்கு இருப்பவர்களின் ஆலோசனை காரணமாகவா?
இந்திய சினிமாவின் முகமான லிஜோ, தமிழர்களை அதிகம் நேசிக்கிறார். நம்மீது அதிக மரியாதை வைத்திருக்கிறார் என்பதைப் படம் முழுக்கச் சொல்கிறார்.
டச் ஸ்கிரீன் செல்போன் காலத்தில் கதை நடப்பதாக இருந்தாலும் 60 வதுகளின் தமிழ்ப் பாடல்களைப் படம் முழுக்கப் பயன்படுத்தியிருப்பது அவரின் இசை ரசனையின் உன்னதத்தை உணர்த்துகிறது.
ரத்தக்கண்ணீர் நடிகவேள் பேசும் வசனங்களின் பின்புலத்தில் அதிக நேரம் காட்சி நகர்வது லிஜோ மீதான பிரியத்தைக் கூட்டுகிறது.
காணாமல் போனவன் பாத்திரமாக மாறி, காணாமல் போகிறார் மம்முட்டி. அவரின் பாத்திரமும் அதுதான். படத்தின் கதையும் அதுதான்.
மம்முட்டிக்கு தெளிந்து அவர் குடும்பத்துடன் வேனில் ஊரைவிட்டுப் போகும்போது அந்த நாய் வண்டியின் பின்னாலேயே ஒடிக்கொண்டிருக்கும்போதே படம் முடிவது கொஞ்சம் நெகிழ்ச்சியாதான் இருக்கு.