தளபதியை இழிவாகப் பேசுகிறவர் உடன்பிறந்தவராக இருந்தாலும், உடன்பிறப்புகள்விடாமல் வெளுக்கவேண்டும்

தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் பார்த்திருப்பீர்கள்; அந்தத் திரைப்படத்தைப் பார்க்காதவர்கள் இருக்க முடியாது. அந்தத் திரைப்படத்தில் ஒரு காட்சி
சிக்கல் சண்முகசுந்தரம் திருவிழாவில் நாதசுரம் வாசிக்க வருவார்; திருவிழா என்றாலே வெடி வெடிப்பார்கள்; வெடி வெடிக்காமல் திருவிழாவை நடத்த முடியாது.
சிக்கல் சண்முகசுந்திரத்திற்கு என்ன சிக்கல் என்றால், வெடிவெடித்தால் அவரால் நாதசுரம் வாசிக்க முடியாது; கோபித்துக்கொண்டு போய்விடுவார்; சிக்கல் சண்முகசுந்தரத்திற்கு என்ன சிக்கல் இருக்கிறதோ, அதே சிக்கல் மதிமாறனுக்கும் இருக்கிறது.
நான் பேசுவதை நீங்கள் கேட்கவில்லை என்றால், நான் பேசமாட்டேன்; நான் எதற்காகப் பேசவேண்டும்; நான் பேசவேண்டிய அவசியமேயில்லை.
ஆகவே, நான் பேசவேண்டும் என்றால், நீங்கள் என் பேச்சைக் கேட்க வேண்டும். நான் பேசும்பொழுது, உங்களுக்குள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருப்பதோ அல்லது எழுந்து நடந்து போவதோ அல்லது செல்போனைப் பார்ப்பதையோ தவிர்க்கவேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.
இந்த வேண்டுகோள் மாணவர்களுக்கு மட்டுமல்ல; பெரியவர்களுக்கும், மேடையில் வீற்றிருக்கும் என் அன்புத் தோழர்களுக்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.
மாணவர்கள் மத்தியில் கருத்துகளைச் சொல்வதற்கும், நீங்கள் கேட்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிரமமப்பட்டு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணிக்கு ஓர் வரலாற்றுச் சிறப்பு இருக்கிறது.
இந்தியாவில் எந்த அரசியல் கட்சிக்கும் இல்லாத ஒரு மாபெரும் சிறப்புத் திராவிட முன்னேற்றக் கழக மாணவரணிக்கு மட்டும்தான் உண்டு.
உங்கள் அமைப்பிற்கு இருக்கின்ற வரலாற்றுப் பின்னணி இந்தியாவில் வேறு யாருக்கும் கிடையாது.
1965 ஆம் ஆண்டு, ஜனவரி 25 ஆம் நாள், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, மதுரையில், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மாணவர் அமைப்பு இந்தி எதிர்ப்பு நெருப்பைப் பற்ற வைத்தார்கள்; அந்த நெருப்பு திகுதிகுவென எரிந்தது. அந்த நெருப்பு இந்தியாவிற்கே முன்னுதாரணம்; அதுதான் முதல்.
அப்படிப்பட்ட அமைப்பு இது. அப்பொழுது பற்ற வைத்த நெருப்பு இந்தியா முழுவதும் ஒளியாக தெரிந்து, இன்றைக்குத் தமிழ்நாடுதான் இந்தியாவிற்கே ஜோதியாக – தளபதி என்கிற ஜோதியாக நிற்கிறது பாருங்கள் – அதற்குக் காரணம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவரணிதான். அது சாதாரணமானதல்ல.
இந்தித் திணிப்பைத்தான் எதிர்த்தார்கள்; இந்திக்காரர்களை எதிர்க்கவில்லை
மிகத் தெளிவானவர்கள் நம்முடைய தலைவர்கள்.
தமிழ் மொழியை நாம் இன்னொரு மொழிமீது திணிக்கவில்லை.
தமிழ் மொழிமீது இந்தி மொழியைத் திணித்ததினால், என்னை ஒருத்தன் அடிக்கிறான்; அப்பொழுது அடிக்காதே என்று சொல்வது வன்முறையா?
இந்தி மொழி, தமிழ்மீது திணிக்கப்படுகிறது; இந்தி மொழி, தமிழ்மீது வன்முறை நடக்கிறது. அந்த வன்முறையைத் தடுப்பதுதான் இந்தி எதிர்ப்புப் போராட்டம்.
அது தெளிவாக இருந்தது.
தமிழ் உணர்வை நம் தலைவர்கள் இனவாதமாகக் கட்டமைக்கவில்லை.
இந்தி மொழித் திணிப்பை எதிர்த்தோம். ஆனால், இந்திக்காரர்களை நாம் ஆதரித்தோம்.
1965 ஆம் ஆண்டு மிகத் தீவிரமாக இந்தித் திணிப்பு எதிர்ப்பு இருக்கும்பொழுதுகூட, அதற்குப் பின்னர்த் தமிழ்நாட்டில் இந்தித் திரைப்படங்கள் நன்றாகத்தான் ஓடின. இந்தித் திரைப்படங்களை எதிர்த்து நாம் எந்தப் போராட்டங்களையும் நடத்தவில்லை.
இந்திப் பாடல்கள், தமிழ்நாடு முழுவதும் பாடப்பட்டன. இந்திப் பாடல்கள் கேட்காத ஊரே கிடையாது; அவ்வளவு பேரும் கேட்டார்கள்.
இந்திப் பாடல்களை யாரும் கேட்காதீர்கள்; இந்தித் திரைப்படத்தை யாரும் பார்க்காதீர்கள்; திரையரங்கில் இந்தித் திரைப்படங்களைத் திரையிடக்கூடாது என்று ஒரு நாளும் சொன்னதில்லை. விரும்பியவர்கள் பார்க்கிறார்கள்.
ஆனால், என் மொழிமீது, உன் மொழியைத் திணிக்காதே என்பதுதான் நம் போராட்டம்.
இந்தி பேசுகின்ற உத்தரப்பிரதேசக்காரரையும், பீகார்காரரையும் நாம் எப்படிப் பார்க்கிறோம்?
இந்திக்காரனாகப் பார்க்கவில்லை.
இது மிகவும் முக்கியம் நம் அரசியலில் – நம் தலைவர்கள் கற்றுக் கொடுத்தது.
மொழி உணர்வைக் கற்றுக்கொடுத்த நம்முடைய தலைவர்கள், இன்னொரு புறத்தில் சமூகநீதி அரசியலைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
அந்தச் சமூகநீதி அரசியல் என்ன சொல்லுகிறது தெரியுமா?
இந்தி, ஆதிக்க மொழியாக இருப்பதை நாம் எதிர்க்கிறோம்; ஆனால், உத்தரப்பிரதேச, பீகார்காரர்களை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்றால், இந்திக்காரனாகப் பார்க்கவில்லை; சமூகநீதி அரசியலில், அவர்களை நம்மைப் போல், மிகப் பிற்படுத்தப்பட்டவன், தாழ்த்தப்பட்டவன், முஸ்லிமாகப் பார்ப்பதற்கு நமக்குக் கற்றுக் கொடுத்தது சமூகநீதி அரசியல்.
உ.பி.காரனோ, பீகார்காரனோ இங்கே வந்து பஞ்சம் பிழைக்கிறான் என்றால், சர்மவோ, சாஸ்திரியோ வரவில்லை. ஒரு முஸ்லிமும், பிற்படுத்தப்பட்டவனும், தாழ்த்தப்பட்டவனும் இங்கே பிழைப்பதற்காக வருகிறார்கள்; அவர்களைச் சமூகநீதி அரசியல் கண்ணோட்டத்தோடு நாம் தோழமையாகப் பார்க்கிறோம்.
இதை நம் தலைவர் சொன்னவுடன், அலறுகிறார்கள். நாம் இந்திக்காரர்களுக்கு எதிரானவர்கள் போன்று சித்தரிக்கிறார்கள்.
பிறந்த நாள் விழாவில் தலைவர் சொல்லியிருக்கிறார்; கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திலும் சொல்லியிருக்கிறார்.
பா.ஜ.க. எதிர்ப்பு இந்தியாவில், கூர்மையாக இருக்கிறது; கடந்த முறையும் இருந்தது; இப்பொழுதும் இருக்கிறது.
மாறாக, பா.ஜ.க. எதிர்த்து அன்றைக்கு 100 கட்சிகள் இருந்தன. 100 கட்சிகள், தனித்தனியாகப் பா.ஜ.க.வை எதிர்த்தீர்களேயானால், வெற்றி பெற முடியாது என்று,
கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே தி.மு.க. தலைவர்தான் காங்கிரஸ் கட்சி, பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்னால், ராகுல்காந்திதான் இந்தியாவின் பிரதமர் வேட்பாளர் என்று சொன்னார். ஆனால், யாரும் கேட்கவில்லை; மோடி வெற்றிப் பெற்றுவிட்டார்.
இப்பொழுதும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். தேர்தலுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று, காங்கிரசை தவிர்த்துவிட்டு, தேர்தலை சந்திக்கலாம் என்று நினைத்தால், பா.ஜ.க.வை வீழ்த்த முடியாது என்று தன் பிறந்த நாள் விழா செய்தியாகச் சொன்னவுடன், சங்கிகள் எல்லாம் பயந்துவிட்டார்கள்.
தளபதி சொல்வதைக் கேட்டு, திராவிட மாடல் ஸ்டாலினே பிரதமராகி விடுவாரோ என்று பயந்துவிட்டார்கள்.
வரட்டும்; நம்மாள்தானே வரவேண்டும்.
கடந்த முறை அகில இந்திய கட்சிகளுக்கு நாம் கொடுத்த சீட்டுகளால்தானே நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருக்கிறது. தேசிய கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் நாம் கொடுத்த சீட்தானே!
தலைவர் அதில் தெளிவாக இருந்தார்.
பா.ஜ.க. என்கிற கட்சியைத் தேர்தலில் வீழ்த்தவேண்டுமானால், அதற்கொரு அய்டியாலஜி வேண்டும். அப்பொழுதுதான் வீழ்த்த முடியும். வெறும் தேர்தல் கட்சியால் வீழ்த்த முடியாது.
ஹிட்லர் என்கிற பாசிஸ்ட் உலகத்தையே அச்சுறுத்தினான். மிகப்பெரிய மனிதகுல விரோதியாக இருந்தான். அவனை வீழ்த்த முடியவில்லை. மிகமிக நவீன ஆயுதங்களை வைத்திருந்தான் ஹிட்லர். ஆனால், அவனைப்போலவே, நவீன ஆயுதங்களை வைத்திருந்த பிரான்சால், இங்கிலாந்தால், அமெரிக்காவால் அவனை ஒன்றும் செய்யவில்லை.
யாரால் முடிந்தது தெரியுமா?
எந்த நவீன ஆயுதமும் இல்லாமல், எளிய விவசாயப் பின்னணியைக் கொண்ட, ரஷ்யாவின் ஸ்டாலினால்தான் ஹிட்லரை வீழ்த்த முடிந்தது.
ஏன் தெரியுமா?
அவரிடம் நவீன ஆயுதமாக, கம்யூனிசம் என்கிற மாபெரும் ஆயுதம் இருந்ததால் வீழ்த்தினார்.
ஆகவே, ஒன்றியத்தில் இருக்கின்ற பா.ஜ.க. சங்கி ஆட்சியை, மோடி ஆட்சியை வீழ்த்தவேண்டும் என்றால், காங்கிரசாக இருக்கலாம்; அந்தக் கட்சியாக இருக்கலாம்; இந்தக் கட்சியாக இருக்கலாம்; தேசிய கட்சியாக இருக்கலாம்; செல்வாக்கு இருக்கலாம்; இந்தியா முழுக்க அமைப்புகள் இருக்கலாம்;
ஆனால், சித்தாந்தம் கிடையாது. தமிழ்நாட்டில், நம்முடைய தளபதியிடம், இந்தியா முழுக்கக் கிளைகள் கிடையாது; ஆனால், ரஷ்ய அதிபர் ஸ்டாலின், எப்படிக் கம்யூனிசம் என்கிற ஆயுதத்தை வைத்து, ஹிட்லரை வீழ்த்தினாரோ, அதுபோல, நம்முடைய தளபதி, திராவிட மாடல் என்கிற அரசு கொண்டு வீழ்த்துவார்.
சும்மா சொல்லவில்லை, சாட்சியோடு சொல்கிறேன்.
எனக்கு முன்பு உரையாற்றிய சுகிர்தாராணி அவர்கள், மிக
அருமையாக உரையாற்றினார். திராவிட இயக்க வரலாறு, சுயமரியாதை இயக்கம், பெண்ணியம் சார்ந்து, தலைவரை ஒரு பெண்ணியவாதியாக நிறுத்திப் பேசிய சுகிர்தாராணி அவர்களுக்குப் பலத்த கைதட்டலை கொடுங்கள்.
அதாவது, பேசத் தெரிந்தவர்களால் மட்டும்தான் நம்மை ஈர்க்க முடியும் என்கிற கன்டண்ட் இருக்கிறது அல்லவா – அதுவே நம்மை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு போகாது.
சிறப்பான செய்திகளோடு உள்ளடக்கிப் பேசுவதைக் கேட்பதற்கு நாம் தயாராகிவிட்டோம் என்றால், நம்மை யாராலும் வீழ்த்த முடியாது என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
தி.மு.க. ஆதரவு என்பது,
கலைஞர் மிகச் சிறந்த எழுத்தாளர்;
கலைஞர் மிகச்சிறந்த நிர்வாகி,
கலைஞர் மிகச் சிறந்த வசனகர்த்தா,
தளபதி மிகச் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார்; தளபதியைப் போல் ஒரு தலைவர் இல்லை.
இது அல்ல தி.மு.க. ஆதரவு.
உமையான தி.மு.க. ஆதரவு எது தெரியுமா?
தி.மு.க.வை யார் இழிவாக, மோசமாகப் பேசும்பொழுது, அதற்கு எதிராக, அவர்களைக் கண்டித்துப் பேசுகிறார்கள் பாருங்கள் அதுதான் உண்மையான தி.மு.க. ஆதரவு.
அதுபோன்ற தி.மு.க. ஆதரவைத் தெளிவாகச் செய்பவர் கரு. பழனியப்பன்.
மீடியா பிரபலமாக இருப்பவர்; சினிமா இயக்குநராக இருந்துகொண்டு, தலைவரைத் திட்டுபவர்களுக்குச் சிறப்பான பதிலடி கொடுக்கிறார். அதற்காக ஒரு பலத்த கைதட்டலைக் கொடுங்கள்.
கலைஞரின் மாணவன் – நம்முடைய தளபதியோட தளபதி. திராவிட இயக்க அறிஞர்.
ஸ்பெக்ட்ரம் என்ற ஊழலைக் கண்டுபிடித்து, அதைக் கொண்டு வந்து அவர்மீது ஏவிவிட்டார்கள்.
திரைப்படங்களில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை நடக்கும்பொழுது, தேவர்கள், அம்பை அசுரர்மீது விடுவார்கள்; அப்படி விடுகின்ற அம்பை, பூமாலையாகக் கழுத்தில் மாட்டிக் கொள்வார் அசுரர்.
அதுபோன்று ஸ்பெக்ட்ரம் ஊழலை, தன்மீது விடும்பொழுது, அந்த ஊழலை, மாலையாக மாற்றி, ஸ்பெக்ட்ரம் என்கிற தன்மீது சுமத்தப்பட்ட இழிவை, தனக்கான அடையாளமாக மாற்றிக் கொண்ட ஸ்பெக்ட்ரம் ராசா அவர்களுக்கு ஒரு பலத்த கைதட்டலைக் கொடுங்கள்.
நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்; நாம் அடுத்தக் கட்டத்திற்குப் போகவேண்டும் என்றால், எவ்வளவு நெருக்கடி வந்தாலும், தனி நபருக்காகச் சொல்லவில்லை. அரசியல் கண்ணோட்டம் வேண்டும்; பெரியாரிய – அம்பேத்கரிய கலைஞர் கண்ணோட்டமெல்லாம் இருந்ததினால்தான், அதை அடித்து நொறுக்கி வெளியே வந்தார். அரசியல் தெளிவு – அந்த அறிவுதான் தன்னையும் காப்பாற்றி, கட்சியையும் காப்பாற்றித் தூக்கி நிறுத்தினார்.
இன்னொரு சிறப்பு, நன்றியை நான் சொல்லவேண்டும்.
தி.மு.க. எதிர்ப்பாளர்கள் –
அ.தி.மு.க.காரர்கள் தி.மு.க. எதிர்ப்பாளர்கள் கிடையாது. அது ஒரு கோமாளிக் கூட்டம். காலில் விழுந்தோமா, காசைப் பார்த்தோமோ அவ்வளவுதான். அவர்கள் நமக்கு எப்பொழுதுமே எதிரி கிடையாது.
சரி, யார் தீவிரமாக, தி.மு.க.விற்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்று பார்த்தோமேயானால்,
நம்மைப் போன்றே இருப்பார்கள்;
நம்மைப் போன்றே மொழி உணர்வைப் பேசுகிறவர்கள்,
நம்மைப் போன்றே சமூகநீதிப்பற்றிப் பேசுகிறவர்கள்
நம்மைப் போன்றே சிறுபான்மையினர் நலம்பற்றிப் பேசுகிறவர்கள்
நம்மைப் போன்றே தலித் மக்கள் அரசியல் பேசுவது என்று,
நம்மைப் போலவே இருந்துகொண்டு, கலைஞர் குறித்து, தி.மு.க. குறித்துப் பேசுகிற மோசடி இருக்கிறதே, அவர்கள் பேசுகிற மோசடிதான் மிக மோசமானது.
மக்களைப் போலக் கயவர் என்று சொல்வதுபோன்று, நாம் பேசுகிற அரசியலையே பேசிவிட்டு, கடைசியில் கருணாநிதி மோசமானவர்; குடும்ப அரசியலைப் பண்ணிவிட்டார்; ஸ்டாலின் மோசமானவர்; குடும்ப அரசியல் பண்ணிட்டார் என்று,
குடும்பத்திற்குள் தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சி – சூத்திரன், அது, இது என்று மிக மோசமாகப் பேசுவது அண்ணா தி.மு.க.காரர்கள் அல்ல –
யார் பேசுவது? நம்மைப் போன்ற சமூகநீதி அரசியல் பேசுகிறவர்கள்; அம்பேத்கரியம் பேசுகிறவர்கள்; பெரியாரியம் பேசுகிறவர்கள்; திராவிடம் பேசுகிறவர்கள்தான் இழிவாகப் பேசுகிறார்கள்.
அவர்களுக்குப் பதில் சொல்வதுதான் மிக முக்கியமானது. அவர்களுக்கு, அவர்கள் மொழியில் சமரசம் இல்லாமல் நான் பதில் சொன்னேன்; அப்படிப் பதில் சொன்னது மட்டுமல்ல, அவர்களோடு வேறொரு காரணத்திற்காகத் தொடர்பாக இருக்கின்ற நம்மாட்களையும் நான் விமர்சனம் செய்து பேசினேன்.
அப்படி விமர்சனம் செய்து பேசியதால், நான்காண்டுகளாக நாடு கடத்தப்பட்டேன்; திராவிட இயக்க மேடைகளில் என்னைக் கூப்பிடுவதில்லை.
மாறாக, தமிழ்நாடு முழுக்கத் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை நடத்தி, அதில் என்ன பேச வைத்து, நூறாண்டு திராவிட அரசியலை, நூறு நாட்களில் கொண்டு சேர்த்த மாண்புமிகு என் இனிய உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு சிறப்பு நன்றியைத் தெரிவித்தாகவேண்டும்.
அவர் இல்லையென்றால், நான் இந்த மேடைக்கு வந்திருக்கின்ற வாய்ப்பு வந்திருக்காது. அவரால்தான் நான் இங்கே வந்திருக்கின்றேன்.
வரலாறு படித்த மாணவர்கள் நிறையப் பேர் இங்கே இருப்பீர்கள். 1919 ஆம் ஆண்டு இந்திய அரசியலில் மிக முக்கியமான ஆண்டாகும்.
பிரிட்டிஷ் அரசு இருக்கான்ல்ல வெள்ளக்காரன். அவனைப் புரிந்து கொள்வதற்குச் சரியான ஆண்டு 1919 ஆம் ஆண்டுதான்.
அந்த 1919 ஆண்டில் இரண்டு விஷயம் நடந்தது.
ஒரு விஷயம், வெள்ளைக்காரன் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் என்ற ஒன்றைக் கொண்டு வருகிறார்கள்.
வெள்ளைக்காரர்களுக்கு இரண்டு முகம் உண்டு.
நீங்கள் ஜாதி, சமூகத்தோடு அணுகினால், வெள்ளைக்காரன் நமக்குத் தொடர்பில் இருப்பான். நமக்குப் பள்ளிக்கூடம் கொடுத்தவன்; பெண் கல்வி கொடுத்தவன்; உடன்கட்டையை ஒழித்தவன். ஒரு முகம் நல்ல முகம், புரட்சிகர முகம் அது.
இன்னொரு முகம் – அவனிடம் ஒரு முதலாளியாக அணுகினால், மிகக் கொடூரமான முகம் அவனிடம் இருக்கும்.
எந்த மக்களுக்குக் கல்வி கொடுத்தானோ, எந்த மக்களுக்கு இராணுவத்தில் வேலை கொடுத்தானோ, தேயிலைத் தோட்டத்தில் மிருகங்களைவிடக் கொடூரமாகப் பலி வாங்கியது யாரை என்றால், அந்தத் தலித் மக்களைத்தான்.
அதுபோலப் போரில் முன்களத்தில் யாரை பலியிட்டார்கள் என்றால், தலித் மக்களைத்தான்.
வெள்ளைக்காரர்களுக்கு இரண்டு முகம் இருந்தது. அந்த இரண்டு முகத்தையும் அம்பலப்படுத்திய ஆண்டுதான் 1919 ஆம் ஆண்டு.
மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் என்ற ஒன்றைக் கொண்டு வருகிறார்கள்.
அந்த மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம்தான் – நான் இன்றைக்கு மேடையில் நின்று பேசுகிறேன் பாருங்கள், நூற்றாண்டு திராவிட அரசியல் – இந்தியர்கள் உள்ளாட்சித் தேர்தலில், சட்டசபையில் அவர்களே அவர்கள் ஓட்டுப் போட்டு ஆண்டுக் கொள்ளலாம் என்று கொண்டு வந்தார்கள்.
அதன்பிறகுதான் நீதிக்கட்சி ஆட்சிக்கு வருகிறது.
அதே ஆண்டில் இன்னொன்றைக் கொண்டு வந்தார்கள் வெள்ளைக்காரர்கள்.
அது என்னவென்றால், ரவுலட் சட்டம்.
அந்த ரவுலட் சட்டம் என்பது மிகக் கொடூரமான சட்டமாகும்.
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; உதாரணத்திற்கு, நான் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, நீங்கள் கவனிக்கவில்லை என்றால், உங்களைப் பிடித்து ஜெயிலில் போட்டுவிடலாம்.
அவ்வளவு கொடூரமான ரவுலட் சட்டத்தை அந்த ஆண்டுதான் கொண்டு வந்தார்கள்.
அந்த ரவுலட் சட்டத்தைக் கண்டித்து ஜாலியன் வாலாபாக்கில் மக்கள் கூடுகிறார்கள். கருணையோடு தலித் மக்களுக்கு உதவி செய்தவன்; கருணையோடு பெண்களுக்கு உதவி செய்த வெள்ளைக்காரனின் இன்னொரு முகம் கொடூரமான முகமாகும். அவனுடைய அதிகாரத்திற்கு எதிராக இருந்தால், யாரை வேண்டுமானாலும், கொடூரமாகக் கொலை செய்யவான் என்பதற்கு, பெண்களையும், குழந்தைகளையும் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்தான்.
அப்படித்தான் பிரிட்டிஷ் அரசாங்கம் இருந்தது.
அன்றைக்கு நீதிக்கட்சிக்கு ஆதரவாக இருந்த நாம், ரவுலட் சட்டத்தை எதிர்க்கவில்லை.
இவர்கள் ரவுலட் சட்டத்தை ஆதரித்தார்கள் என்று இன்று வரைக்கும் நமமக்கு (நீதிக்கட்சிக்கு) எதிராக வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அன்றைக்கு அப்படிச் சொன்ன அவர்களுடைய வாரிசுகள், அதற்குப் பிறகு என்ன பண்ணார்கள்? 1975 சுதந்திர இந்தியா – எமர்ஜென்சி.
எமர்ஜென்சி ரவுலட் சட்டத்தைவிட மோசமானது.
ரவுலட் சட்டம் என்னுடைய பேச்சை கேட்கவில்லை என்றால், ஜெயிலில் தள்ளிவிடுவேன் என்றது.
எமர்ஜென்சி என்னுடைய பேச்சைக் கேட்டு கைதட்டவில்லை என்றால், ஜெயிலில் தள்ளிவிடுவேன் என்றது.
யாரை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். மிக மோசமான எமர்ஜென்சி வந்தபொழுது, தமிழ்நாட்டில் தலைவர் கலைஞரின் ஆட்சி.
முதலமைச்சர் கலைஞரிடம் எமர்ஜென்சி கேட்கிறது, நீங்கள் உருவாக்கிய மாநில சுயாட்சி வேண்டுமா? சுயமரியாதை வேண்டுமா? அல்லது எமர்ஜென்சியை ஆதரிக்கிறாயா? என்று.
உடனே கலைஞர் சொல்கிறார், மாநில சுயாட்சி, மாநில சுயமரியாதை என்பதை உருவாக்கியதே நாங்கள்தான்; எங்களுடைய தலைவர்தான். நான் மாநில சுயாட்சியைப் பலி கொடுத்துவிட்டு, மாநில உரிமையைப் பலி கொடுத்துவிட்டு, எமர்ஜென்சியை ஆதரிக்கவேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது.
எனக்குத் துண்டுதான் ஆட்சி என்று சொல்லி, எமர்ஜென்சிக்கு எதிராகப் பேசி, தன் ஆட்சியை இழந்தவர் கலைஞர்.
நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்; கலைஞர் அவர்கள், எமர்ஜென்சியை ‘நான் ஆதரிக்கிறேன்’ என்றுகூடச் சொல்லியிருக்க வேண்டியதில்லை; ‘எமர்ஜென்சியை நான் எதிர்க்கல’ என்று சொல்லியிருந்தால், அன்றைக்கு அவருடைய ஆட்சி கவிழ்ந்திருக்காது.
அவருடைய ஆட்சி கவிழ்ந்திருக்காது என்பது மட்டுமல்ல, எம்.ஜி.ஆர். என்கிற நபர் அதன் பிறகு உருவாகியிருக்க மாட்டார்; ஜெயலலிதா வந்திருக்கமாட்டாங்க; இன்றைக்கு மீசை வைச்ச ஆம்பள சார், எடப்பாடி சார் தவழ்ந்து போறாரே, அவர்கூட வந்திருக்க மாட்டார்.
அன்றைக்கு எமர்ஜென்சியை மட்டும் கலைஞர் ஆதரித்திருந்தால், என்னாவாகியிருக்கும் என்றால், தி.மு.க. தொடர்ந்து ஆட்சியில் நீடித்திருந்திருக்கும். எம்.ஜி.ஆர். என்கிற சேப்டர் அன்றைக்கே முடிந்திருக்கும்.
ஆனால், என் ஆட்சியைவிட, கொள்கைதான் முக்கியம் என்று சொன்னாரே அன்றைக்குக் கலைஞர், அதுதான் மிகவும் முக்கியமானது.
வெறும் ஆட்சி போனால் பரவாயில்லை. இந்தியாவிலேயே எமர்ஜென்சியின் மூலமாகக் கொடூரமான ஒடுக்குமுறையைச் சந்தித்தது தி.மு.க தான்.
அதுதான் கலைஞருடைய சுயமரியாதை; அந்த வழிதான் தளபதி.
தளபதி ஸ்டைல் என்ன தெரியுமா? இந்தச் சுயமரியாதையில்,
தளபதி எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார்; அன்றைய காலகட்டத்தில், எடப்பாடி அரசு ஊழல் செய்தது என்று சொல்லி, ஆளுநரிடம் மனு கொடுக்கிறார்.
அப்படி மனு கொடுத்த பிறகு, ஆளுநர் மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுகிறார்; அதற்குப் பிறகு ஆளுநர், எடப்பாடி ரோலை அவர் செய்கிறார்.
அ.தி.மு.க. அரசு ஊழல் செய்தது என்று குற்றம் சாட்டிய தலைவர் தளபதி, இது என்னடா அநியாயமாக இருக்கிறது; எடப்பாடி அரசு ஓர் அடிமை அரசுதான்; ஊழல் அரசுதான். ஆனால், ஒரு ஆளுநர் வந்து முதலமைச்சர் ரோலை செய்யக்கூடாது என்று சொல்லி, எடப்பாடி அரசுக்கு ஆதரவாக, ஆளுநருக்கு எதிராக முற்றுகைப் போராட்டத்தை நடத்தினார்.
அன்றைக்கு இருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் என்ன சொன்னார் தெரியுமா?
இந்த ஸ்டாலின் கதையை நான் எட்டு நாளில் முடிப்பேன் என்று சொன்னார்.
அதன் பிறகு சட்டசபைக்குத் தேர்தல் வந்தது; நாமும் வெற்றி பெற்றுவிட்டோம்.
சட்டசபையில் ஆளுநர் உரையாற்றுகிறார். எட்டு நாளில் ஸ்டாலின் கதையை முடிப்பேன் என்று சொன்ன ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இந்தியாவிலேயே மிகச் சிறந்த ஆட்சி, தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடைய ஆட்சிதான் என்று சொல்ல வைத்தாரே, அதுதான் தளபதியினுடைய ஸ்டைல்.
அதேபோன்று, கல்வி சார்ந்த விஷயங்களில், மாணவர்கள் ரொம்பக் கவனிக்கனும். காலை உணவுத் திட்டம். ரொம்பச் சாதாரணமா நாம கடந்துபோறோம். இது வரலாற்றில் மிக முக்கியமான திட்டமாகும். இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தில் எங்கும் இல்லாத திட்டம்.
மதிய உணவு திட்டம் மகத்தான திட்டம். அதையும் தாண்டி காலை உணவுத் திட்டம் என்பது மிகவும் சிறப்பான திட்டமாகும்.
நம்முடைய உணவு முறையில், காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என்று மூன்று வேளை உணவு முறை.
காலையில் சாப்பிட்டம்ன்னா, நான்கு மணிநேரத்தில் மதிய உணவு சாப்பிட்டிருவோம். மதிய உணவு சாப்பிட்ட, அய்ந்து மணிநேரத்தில் இரவு உணவு சாப்பிட்டிருவோம்.
இரவு 9 மணிக்குச் சாப்பிவிட்டு, மறுநாள் காலையில் 9 மணிக்கு டிபன் சாப்பிட்டாலே, 12 மணிநேர இடைவெளி மிகவும் அதிகமாகும்.
ஆகவே, காலை உணவு சாப்பிடாமல் இருக்கக் கூடாது. அப்படிச் சாப்பிடாமல் இருந்தால், உடல் சோர்வு, மூளை சோர்வு பெரியவர்களாகிய நமக்கே ஏற்படும். அப்படியானால், குழந்தைகளின் நிலையை எண்ணிப் பாருங்கள்.
கிராமப் பகுதிகளில் பார்த்திருக்கிறேன், பல அரசு பள்ளிகளில் பேசியிருக்கிறேன்; கிழிந்து போன சட்டையுடன், காலணி இல்லாமல் வருவார்கள். காலை சாப்பாடே இல்லாமல், சோர்ந்து போய் வருவார்கள். மதிய உணவுதான் அவர்களுக்குப் பள்ளிக்கூடத்தில் கிடைக்கும். காலை உணவு அவர்களுடைய குடும்பத்தில் கிடையவே கிடையாது.
காலை உணவு குழந்தைகளுக்கு மிகவும் முக்கியம் என்று உணர்ந்து, காலை உணவுத் திட்டம் கொடுத்த கருணைக் கடலாக இருப்பவர் தளபதி. இது இன்றைக்கு உங்களுக்குச் சாதாரணமாகத் தெரியலாம்; இன்னும் 5 ஆண்டுகளில், ஆரோக்கியமான குழந்தைகள், கல்வி மற்றும் பல விஷயங்களைத் தாண்டி சிந்திப்பார்கள்.
அதேபோன்று நான் முதல்வன் திட்டம்.
இட ஒதுக்கீடு, கல்வி சார்ந்து பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்துவிட்டோம்.
அடுத்து ஒன்று இருக்கிறது;
தலைமுறை தலைமுறையாக வளர்ந்த குடும்பம்; பரம்பரை பரம்பரைப் படித்தவர்கள் தங்களுடைய குழந்தைகளுக்குப் பள்ளிப் படிப்பையும் கொடுத்து, பரத நாட்டியம், பாடல், பயிற்சி வகுப்பு போன்றவற்றை அளிப்பார்கள்.
ஆனால், அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகள், வீட்டு வேலைகளைத்தான் பார்க்க முடியும். பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வதற்குப் பணம் கிடையாது; தலைவர் தளபதி அவர்கள், நான் முதல்வன் திட்டத்தின்மூலமாக, பள்ளி மாணவர்களின் தனித்தன்மையை வெளிக் கொணருவதற்கு உதவிகரமான திட்டமாக இருக்கிறது நான் முதல்வன் திட்டம்.
இன்றைக்கு இது சாதாரணமாகத் தெரியலாம்; இன்னும் 5 ஆண்டுகளில், உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களில், தமிழ்நாட்டு மாணவர்கள் முதன்மையான இடத்திற்குப் போவதற்கு இந்த நான் முதல்வன் திட்டம் மிக முக்கியமாக இருக்கும்.
தி.மு.க. எதிர்ப்பு, அதாவது சமரசமில்லாமல் நாம் தி.மு.க. வை ஆதரிக்கிறோம் என்றால், தி.மு.க.வை எதிர்க்கின்ற எல்லோரையும் நாம் எதிரியாகப் பார்க்கனும். அதிலும் குறிப்பாகத் தலைவர் கலைஞர் குறித்து, தளபதி குறித்து இழிவாகப் பேசுகிறவர் யாராக இருந்தாலும், கறாராக நாம் பதிலடி கொடுக்கனும்.
ஆனால், நமக்குள்ள நெருக்கடியாக நான் என்ன கருதுகிறேன் என்றால், ஏன் எதிரிகள் செல்வாக்கு உள்ளவர்களாக மாறுகிறார்கள் என்றால், எனக்குத் தெரிந்த பலர், தி.மு.க.வை மிக இழிவாகப் பேசுகிறவர்கள் தன் ஜாதிக்காரராக இருந்தால், அமைதியாக இருந்துவிடுவது; தி.மு.க.வை இழிவாகப் பேசுகிறவர் அடுத்த ஜாதிக்காரராக இருந்தால், கடுமையாகக் கண்டிக்கின்ற போக்கு நிறையப் பேரிடம் இருக்கிறது.
கலைஞரைக் குறித்து, தளபதியைக் குறித்து இழிவாகப் பேசுகிறவர் யாராக இருந்தாலும், பாரதிதாசன் சொன்னதுபோல, தமிழைப் பழித்தவனை, தாய்த் தடுத்தாலும் விடேன் என்று சொன்னதுபோன்று,
தலைவர் கலைஞரை, தளபதியை இழிவாகப் பேசுகிறவர் உடன்பிறந்தவராக இருந்தாலும், உடன்பிறப்புகள் அவர்களை விடாமல் வெளுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வாய்ப்புக்கு நன்றி!
வணக்கம்! (மார்ச் 11 தி.மு.க மாணவர் அணி நடத்திய தலைவர் தளபதி பிறந்தநாள் நிகழ்ச்சியில் நான் பேசியது)