குழந்தையைத் தூங்கவிடாமல் செய்யும் தாலாட்டு. ஏன்?
மூடத் தனத்தின் முடைநாற்றம்
வீசுகின்ற
காடு மணக்கவரும் கற்பூரப்
வேண்டாத சாதி இருட்டு
வெளுப்பதற்குத்
தூண்டா விளக்காய்த் துலங்கும்
பெருமாட்டி!
புண்ணில் சரம்விடுக்கும் பொய்மதத்தின்
கூட்டத்தைக்
கண்ணில் கனல்சிந்திக் கட்டழிக்க
வந்தவளே!
தெய்விகத்தை நம்பும் திருந்தாத
பெண் குலத்தை
உய்விக்க வந்த உவப்பே
பகுத்தறிவே!
எல்லாம் கடவுள் செயல் என்று
துடை நடுங்கும்
பொல்லாங்கு தீர்த்துப் புதுமைசெய
வந்தவளே!
வாயில் இட்டுத் தொப்பை வளர்க்கும்
சதிக்கிடங்கைக்
கோயில் என்று காசுதரும் கொள்கை
தவிர்ப்பவளே!
சாணிக்குப் பொட்டிட்டுச்சாமி என்பார்
செய்கைக்கு
நாணி உறங்கு; நகைத்து நீ
கண்ணுறங்கு
*
குழந்தையை எப்படி வளர்ப்பது? அதுவும் பெண்குழந்தையை எப்படி வளர்ப்பது என்று சொல்கிறது இந்தத் தாலாட்டு.
படித்தவர்கள் மத்தியிலும் பெண் குழந்தைப் பெற்றுக்கொள்வதையே விரும்பாத கள்ளிப்பால் காலகட்டத்தில்,
ஜாதி சமூகத்தை மாற்றும் வல்லமை பெண்களிடம்தான் உண்டு என்று உறுதியாக நம்பி,
போர் பிரகடனத்தோடு குழந்தையைத் தூங்கவிடாமல் செய்யும் புரட்சிகரத் தாலாட்டு.
அதனால்தான் அவர் புரட்சிக்கவிஞர்.