
அர்ஜுமந்த் பானு பேகம் இவர் இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற பெண்மணி. இவரின் பெருமைக்குரிய பெயரை சொன்னால் உலகே அறியும்.
மும்தாஜ் மஹால். அவரின் கல்லறைதான் தாஜ்மஹால்.
பேரரசர் ஷாஜகானுடன் திருமணம் முடிந்தபிறகு ஏற்பட்ட உறவல்ல அது.
திருமணத்திற்கு முன்பே ஷாஜகான், அர்ஜுமந்த் பானு பேகத்தின் உறவினர்தான்.
மும்தாஜ் மஹாலின் அத்தை மெஹர் ஆல்-நேசா, ஷாஜகானின் தந்தை பேரரசர் ஜஹாங்கீரை மணந்தார். அவரை மணந்த பிறகு, அந்த அத்தை நூர் ஜஹான் ஆனார்.
‘பெண்கள் வெளி உலகிற்கே வரக்கூடாது’ என்ற இறுக்கமான காலக்கட்டத்தில இந்த நாட்டையே கட்டி ஆண்ட நூர் ஜஹான்தான் மும்தாஜின் அத்தை.
ஆனால், அத்தையின் மகனால்ல ஷாஜகான். ஷாஜகானின் தாய் பேரரசி ஜகத் கோசைன்.
பிறப்பால் இந்து சமூகத்தைச் சேர்ந்த ராஜபுத்திர வம்சத்தில் பிறந்தவர்.
ராஜா உதய் சிங்கின் மகள். அவரின் மகன்தான் ஷாஜகான். இப்படியும் சொல்லலாம், உதய் சிங்கின் பேரன்தான் ஷாஜகான்.
மும்தாஜ் ஆக அறியப்படுகிற அர்ஜுமந்த் பானு, ஷாஜகானின் இரண்டாவது மனைவி.
ஷாஜகானுக்கு பல மனைவிகள் இருந்தாலும்;
நூர் ஜஹானுக்கு முக்கியத்துவம் கொடுத்த தன் தந்தை ஜஹாங்கீரைப் போல், ஷாஜகானும் மும்தாஜை அதிகாரத்தில் அமர்த்தினார்.
‘அந்தப்புரத்தில், அரண்மனையில் அதற்கும் வெளியையும்கூட;
ஷாஜகானுக்கு மும்தாஜ் மீதிருந்த பிரியத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட மற்ற பெண்கள் மீது ஏற்படவில்லை.
மும்தாஜ் இல்லாமல் ஷாஜகானால் வாழ முடியாது என்கிற நிலையில் அவர் இருந்தார்’
என ஷாஜகானின் அரசவை வரலாற்றாசிரியர் இனாயத் கான் ‘ஷாஜக கான் நாமா’ நூலில் குறிப்பிடுகிறார்.
மும்தாஜ்
13 ல் 7 குழந்தைகள், குழந்தை காலங்களிலேயே மரணத்து விடுகின்றன.
13 குழந்தைகளுக்குப் பிறகும் பெருக்கெடுத்து ஓடியது பெருங்காதல்.
14 ஆவது குழந்தையைப் பிரசவிக்கும்போது பெருக்கெடுத்த ரத்தப்போக்கோடு,
30 மணி நேரப் பிரசவவலியின் வேதனையிலிருந்து விடுதலையை, அந்தத் தாய்க்கு மரணம்தான் தந்தது.
1631 ஜூன் 17 அன்று 14 வது குழந்தையோடு இறந்துபோகிறாள் அந்த மாபெரும் தாய்.
ராஜ உபசாரம், ராஜ வைத்தியம், கடைசிவரை போராடிய பேரரசன் ஷாஜகான் என்ற பெருங்காதலன் இருந்தும்,
பிரசவத்தின் மரணத்தைத் தடுக்க முடியவில்லை.
13 முறை பிள்ளைப் பெற்ற பேர் அனுபவமும் பாதுகாக்கவில்லை.
ஆனால், இன்றோ மிக எளிய குடுப்பத்தில்கூட பிறப்பில் குழந்தைகளின் மரணத்தையும் பெண்களைப் பிரசவ மரணத்திலிருந்தும் முற்றிலுமாக பாதுகாத்திருக்கிறது நவீன மருத்துவம்.
இப்போதும், ‘வீட்டிலிருந்தே பிரசவம் பார்க்கலாம்’ என பெண்களின், குழந்தைகளின் உயிரோடு விளையாடும் ஆண்களை எச்சரிக்கிறது பேரரசி மும்தாஜின் பிரசவ மரணம்.
ஆக்ராவில் பிறந்த மும்தாஜ் புர்ஹான்பூரில் மரணமடைந்தார். அவரின் உடல் புர்ஹான்பூர் தபதி நதிக்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.
6 மாதங்கள் கழித்து அவர் உடல் ஆக்ராவிற்குக் கொண்டு வரப்பட்டு ஜனவரி 8, 1632 அன்று யமுனை நதிக்கரையில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. அதுவும் நீடிக்கவில்லை.
அதன் அருகிலேயே இன்னொரு கல்லறை கட்டி அங்கு மாற்றப்பட்டது. மூன்று முறை அவர் உடல் புதைக்கப்பட்டது.
இறுதியாக புதைக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட அந்தக் கல்லறைக்கு ‘ரவுசா-இ-முனவ்வரா’ என்று பெயர் வைக்கப்பட்டது. அதுதான் உலகம் வியக்கும் தாஜ்மஹால்.
இந்தத் தொகுப்பு, தாஜ்மஹாலின் சிறப்புகளை சொல்வதல்ல; அது கட்டுவதற்குக் காரணமாக இருந்த காதலின் வலியைச் சொல்வது.
அர்ஜுமந்த் பானு பேகம் என்கிற மும்தாஜ் மஹால் மரணப்படுக்கையில் இருக்கும்போது தன் கணவரிடம்,
‘என்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணிடமும் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது எனச் சத்தியம் பெற்றார்’ என குறிப்பிட்டிருக்கிறார் அரசவையின் வரலாற்று ஆசிரியர் இனாயத் கான்.
‘கனவில் பிரம்மாண்டமான அரண்மனையையும் மிக அழகான தோட்டத்தையும் கண்டேன். என் நினைவாக உலகில் எங்குமே இதற்கு இணையில்லை என்பதுபோல் அப்படியொரு ஒரு கல்லறையை நீங்கள் கட்டவேண்டும்’
எனவும் தன் காதல் கணவன் ஷாஜகானிடம் கடைசி ஆசையைச் சொல்லிப் பிரிந்திருக்கிறாள் பெரும் காதல் கொண்ட அந்த உன்னதப் பெண்.
ஆக்ரா கோட்டை அரண்மனையில் தன் அறையிலிருந்து, ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலிருந்து பார்த்தாலும் பிரம்மாண்டமாக தெரியவேண்டும் என திட்டமிட்டுக் கல்லறையைக் கட்டினான் ஷாஜகான்.
அவன் திட்டமிட்டதுபோலவே அவன் வாழ்க்கையின் இறுதி காலங்களில் நடந்தது. ஏழரை ஆண்டுகள் அரண்மணைச் சிறையில் தன் அறையிலிருந்தபடி காதலியின் கல்லறையை பார்த்துக் கொண்டே இறந்துபோனான் ஷாஜகான்.
தாஜ்மஹால் என்பது கட்டிடமல்ல;
தன் கணவன் மீது கொண்ட பெருங்காதலின் காரணமாக,
அவனின் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு, அவனுக்காகவே வாழ்ந்து,
அவனின் 14 வது பிள்ளையை பெற்றெடுக்கும்போதே,
இறந்துபோன பெருந்தாயின் கண்ணீர் காவியம்- வே. மதிமாறன்.
