ஜெய்ஸ்ரீராம் சொல்லு

சிறை – ரீலிஸ் ஆகும் முன் பார்ப்பதற்குப் படக்குழவின் சார்பாக அழைத்திருந்தனர். நான் பெரும்பாலும் preview பார்ப்பதை தவிர்த்துவிடுவேன். காரணம்,
முடிந்த பின் கத்தி முனையில் கருத்துக் கேட்பார்கள்.
அதுவும் பாராட்டிதான் இருக்க வேண்டும் என்பதால், சம்பிரதாயச் சடங்காகப் பாராட்டுவதில் எனக்குள்ள கூச்சம், பிடிக்கவில்லையென்றால் அந்தச் சூழவில் முகத்திற்கு நேராக சொல்வதில் உள்ள தயக்கம் காரணமாக போவதில்லை. இதற்கும்.

அழைத்தமைக்கு நன்றி. தியேட்டரில் நிச்சயம் பார்க்கிறேன் என்றேன். சூழல் அமையவில்லை. நேற்றுதான் OOT யில் பார்த்தேன்.

தன் தாயை இழிவாகப் பேசிய தன் காதலியின் தந்தையைத் தன்னையறியாமல் கொலை செய்துவிடுகிறான். அதைப் புரிந்து அவன் காதலி 5 ஆண்டுகளாக அவன் சிறையில் இருக்கும்போது காதலிக்கிறாள்.
அவர்களுக்கு நல்ல உள்ளம் கொண்ட, எண்கவுண்டரில் குற்றஉணர்ச்சியே இல்லாமல் ஒரு மனிதனை சுட்டுக் கொல்கிற மனிதாபிமானி போலிஸ் எப்படியெல்லாம் உதவிசெய்கிறார் என்பதுதான் கதை.

இதைச் சுற்றிபின்னப்பட்ட அரசியல் காரணம்தான் இந்தப் படத்தின் கொண்டாட்டத்திற்குக் காரணம்.
மணிரத்தினத்தின் பம்பாய் போல் குண்டு வைக்காமல், அந்தப் பையன் முஸ்லிம். அவள் இந்து என்பது இன்றைய சூழலில் துணிச்சலானது.

முஸ்லிம்கள் சமூகத்தில் எப்படிப் பார்க்கப்படுகிறார்கள் என்று இரண்டு இடத்தில் வருகிற வசனங்கள் மரியாதைக்குரியது. கோர்ட் எளிய மக்களின் வழக்குளை எப்படி அணுகுகிறது என்பதைச் சுட்டிக் காட்டியதும் முக்கியம்.

இந்தக் கதைக்குத் தொடர்பற்றதாக இருந்தாலும், போலிசின் எண்கவுண்டரை தியாகம் நிறைந்த சமூகநீதி நிகழ்வாக்கிதான் படம் துவங்குகிறது. இந்தியளவில் தேசப்பற்றைக் காரணம் காட்டி அதிகம் எண்கவுண்டரில் கொல்லப்பட்டவர்கள் முஸ்லிம்கள்தான்.

இந்தப் படத்தில் அதை நல்லபோலிஸ் நியாயப்படுத்தியதுபோல்தான் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கும் காரணங்கள் சொல்லப்பட்டது.

அதோடு இல்லாமல் கோர்ட்டுக்கு குற்றவாளிகளை அழைத்துப் போகிற போலிஸ், உட்காரும் வசதிகூட இல்லாத பழைய பஸ், மூத்திர சந்து, உணவுக்குக்கூடக் காசில்லாமல் சுகாதரமற்ற உணவு, குளிக்க, உடை மாற்ற, தங்க இடம் குறித்தெல்லாம் கவலையில்லாமல் அவர்கள் கடமையாற்றுவதைப் பார்க்கும்போது நமக்குக் கண்ணீர் வந்திருக்கனும். ஆனால் வரல.

இந்தக் கட்சிகளில் சொல்லவர செய்தி கோர்ட்டுக்கு போகிற குற்றவாளிக்கும் அழைத்துப் போகிற போலிசிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. பாவம்.

இதற்கு முன் விடுதலையிலும் போலிசின் துயரங்கள் இப்படிதான் சொல்லப்பட்டது.

முஸ்லிம்கள் குறித்து மரியாதையான உணர்வை பொதுச் சமூகத்திற்குப் படம் ஏற்படுத்துகிறது. சிறப்பு.
அதைசெய்வதனாலேயே முஸ்லிம்களின் இறைநம்பிக்கையில் தலையிட்டு அவனைத் தாய் மதத்திற்கு அழைப்பதுபோல்,
இந்துக் கோயிலுக்கு அனுப்பி விபூதி அடிக்கிற அதிகாரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது ‘ஜெய்ஸ்ரீராம் சொல்லு‘ என்று நிர்ப்பந்திபதின் அன்பான வடிவம். இந்து – இஸ்லாம் பற்றி அடிப்படை புரிதல்லற்ற அறியாமை.

எளிய உழைக்கும் இந்துக்கள் சர்ச், மசூதிக்குப் போவதற்கு அவர்களின் வழிபாட்டு முறையே காரணம்.
கடவுள்களை உருவமாகவும் வணங்குவார்கள். அரூபமாகவும் அதாவது கல், செங்கல், சாணி உருண்டை, மரம், செடி எனப் பலவகையிலும் வணங்குவதால் அவர்கள் சர்ச்,மசூதிக்கும் சென்று வணங்குவது இயல்பானது.

ஆனால் இஸ்லாமியர்களுக்கு அப்படி இல்லை. அவர்கள் நபிகள் நாயகத்தைக்கூட வணங்க மாட்டார்கள். அல்லாஹ் ஒருவரைத் தவிரக் கடவுள் இல்லை. உருவமில்லை.
இதைப் பொதுசமூகம் புரிந்துகொள்ளாக்கூடாது என்பதினால் இஸ்லாமியர்களை மதவெறியர்கள் என அவதூறும் அதன் வழியே,
‘நீ போறீயே மசூதிக்கு அவன் வரானா கோயிலுக்கு‘ என நெருக்கடியையும் ஏற்படுத்துகிறார்கள்.

ஜாதியை ஒழித்த முஸ்லிம் ஒருபோதும் அவர் விரும்பினாலும் ஜாதியாக இருக்கும் இந்து மதத்திற்குள் வரமுடியாது.
எந்த ஜாதிக்குள் சேர்த்துக் கொள்வார்கள்? அதனால்தான் காதல் வயப்படுகிறவர்கள் இந்துவாக இருந்து இஸ்லாமியராக மாறுகிறார்கள்.

மாறுவதற்கு வாய்ப்பிருந்தும் இந்தப் படத்தில் தன் காதலியை ஒருபோதும் இஸ்லாமிய வழிபாட்டு முறைக்கு அப்துல் ரரூப் அழைக்கவில்லை. அப்படியிருக்கையில் அதை அவளும் செய்திருக்ககூடாது.
அவள் அறியாதவள். ஆனால், திரைக்கதை எழுதியவர்கள் விபரமானவர்கள் அல்லவா?

ஆரம்பத்தில் அந்தப் பெண்தான் அவனைக் காதலிக்கக் கட்டாயப்படுத்துகிறாள். அவன் தவிர்க்கிறான் எனக் காட்டியிருப்பது சங்கி வாழ் சூழலில் இஸ்லாமியர் மீதான அன்பையும் அக்கறையையும் இந்தப் படம் கவனமாக அடையாளப்படுத்துகிறது.

துவக்கத்தில் மிகையான காதல் உணர்வுகளை அவள் வெளிபடுத்துவதை மிதமாக்கியிருந்தால் காதல் காட்சிகள் கூடுதல் அழகு பெற்றிருக்கும்.

5 ஆண்டுகளாகச் சிறைக்கே சென்று பார்த்தவள், சில ஆண்டுகளாக அதுவும் அந்தப் பெரிய விபத்திற்குப் பிறகு அவனைப் பார்க்காமல் இருந்தது ஏன்?
அவ்வளவு அக்கறை உள்ள போலிஸ்,
அவள் இல்லாமல் அவன் துன்பப்படுவான் என்று தெரிந்தும் ஆண்டுக் கணக்கில் ஏன் மறைத்தார்? கிளைமேக்ஸ் சுவாரஸ்யத்திற்காகவா?

இவர்களுக்கு இவ்வளவு உதவிகளையும் செய்பவர் எண்கவுண்டர் போலிஸ்தான்.
மனிதனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவரிடம் இவ்வளவு மனிதாபிமானமா? என நாம் கேட்டால்,

இந்தப்படம், அவர் மனிதாபிமானியாய் இருப்பதினால்தான் எண்கவுண்டர் செய்து ஒரு மனிதனை சுட்டுக் கொன்றார் என்கிறது-வே. மதிமாறன்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading