Tag Archives: ஈழம்

நடிகர்களின் உண்ணாவிரத நாடகமும் கமலின் வசனமும்

trick

இலங்கை அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் பற்றி கமல் எதுவுமே சொல்லவில்லை என்று எழுதியிருந்தாயே? விஜய் டி.வி. நிகழ்ச்சியில் எவ்வளவு தெளிவாக பேசியிருக்கிறார் பார்த்தாயா? இனியாவது அவரை குற்றம் சொல்வதை நிறுத்து.

-ரகு

‘மாணவர் போராட்டத்தைப் பற்றி ஆதரவாக ஏன் கருத்து சொல்லவில்லை’ என்று கமல் ‘ஆதரவாக’ பேசியதைப் பார்த்தேன்.

இந்த தந்திரமான விளக்கத்தைக் கூட குறைந்த பட்சம் நம்மை போன்றவர்கள் கேட்பதற்கு முன்னால் கொடுத்திருக்கலாம்.

‘தந்திரமான‘ என்று நான் சொல்வதற்கு காரணம் அவரின் ‘தெளிவான’ கருத்தே.

மாணவர் போராட்டம் வெறுமனே ஈழத்தமிழர்களுக்காக பரிதாபப் படுகிற போராட்டம் அல்ல; தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவை கொலைக் குற்றவாளியாகவும், ராஜபக்சே மீதும் இலங்கை அரசின் மீதும் இனப் படுகொலை செய்வதவர்கள் என்று அறிவிக்க வேண்டும் என்பதற்கான போராட்டம்தான் அது.

மாணவர்கள் அதற்காகத்தான் மக்களை போராட அழைத்தார்கள். அவர்கள் அழைப்பின் பொருட்டே கோயம்பேடு காய்கறி வியாபாரிகள், தமிழகம் முழுக்க உள்ள கூலித் தொழிலாளர்கள், ஜ.டி கம்பெனி ஊழியர்கள் வரை ராஜபக்சேவிற்கு எதிரான முழக்கங்களோடு களம் இறங்கினார்கள்.

அமீர் தலைமையில் திரைப்பட இயக்குநர்கள் அதை வலியுறுத்திய ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்கள்.

கமல் மாணவர் போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை? அல்லது ஆதரிக்கவில்லை? என்பதல்ல கேள்வி.

தன் படத்தின் திருட்டு விசி.டி க்கு எதிராக தன் ரசிகர்களை உசுப்பி விடும் கமல், ரஜினி போன்ற நடிகர்கள், ராஜபக்சே – இலங்கை அரசின் கொலைவெறிக்கு எதிராக ரசிகர்களிடம்கூட கருத்து சொல்லாதது ஏன்?

இலங்கை அரசுக்கு எதிராக வணிகர்கள் முதல் கமல் சார்ந்த திரைத்துறையினர் வரை போராடினார்கள், உண்ணாவிரதம் இருந்தார்கள். எல்லாவற்றையும் பற்றி கருத்து சொல்கிற கமல், இந்த விசயத்தில் ஏன் அமைதி காக்கிறார்? (‘அவர் இலங்கை தமிழர்களுக்காக மவுனம் விரதம் இருந்தார்’ என்று எந்த ‘ஞாநி’யும் விளக்கம் கொடுக்காமல் இருந்தால் சரி.)

கமல் அந்தப் பேட்டியில் மாணவர்கள் அரசியல்வாதிகளை அம்பலப்படுத்தியதாக சொல்லியிருக்கிறார். அரசியில்வாதிகளையே தூக்கி சாப்பிடுகிற அளவிற்கு அரசியல் செய்கிற கமல் போன்ற நடிகர்களையும் மாணவர்கள் அம்பலப்படுத்தினார்கள் என்பதும் உண்மை.

அந்த ‘தந்திரமான’ Attendance போடும் பேட்டியில் கமல், பாலஸ்தீன போராட்டத்தைப் பற்றி பேசுகிறார். பிரபாகரன் மகன் கொலை செய்யப்பட்டதற்காக வருத்தப்படுகிறார். இதைக் கண்டிப்பதற்கு நாம் தமிழனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை மனிதனாக இருந்தாலே போதும் என்கிறார். ‘அமீர் முயற்சியில் நடந்த உண்ணாவிரத்தில் ஏன் பங்கெடுக்கவில்லை’ என்று கேட்க போகிறார்கள் என்பதற்காக உண்ணாவிரதத்தையே கேள்விக்குட்படுத்துகிறார்,

சிங்களவர்களுக்கு இந்தக் கதி ஏற்பட்டாலும் கண்டிப்பேன் என்கிறார். ஆனால் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டிக்க மறுக்கிறார். பிரபாகரனின் மகனை எவன் கொன்றான்? என்பதை சொல்ல மறுக்கிறார்.

‘ராஜபக்சே’ என்கிற வார்ததை வர மறுக்கிறது உலக நாயகன் வாயிலிருந்து.

‘இலங்கை அதிபர்’ ‘ராஜபக்சே’ ‘இனப் படுகொலை’ போர் குற்றவாளி’ போன்ற வார்தைகளை அவர் உச்சரிக்காமல் இருப்பதில் மிக ‘தெளிவாக’ இருந்தார்.

கோயம்பேடு மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளர்களிடமிருந்த அரசியல் நேர்மையில் ஒரு சதவீதம்கூட ஞானப்பழம் சாப்பிட்ட உலக நாயகனிடமில்லை.

**

நாளை (2-02-2013) நடைபெற இருக்கும் நடிகர்களின் உண்ணாவிரத்தில் ஹாலிவுட்டிற்கே சவால் விடும் நடிப்புத் திறமையை தமிழக மக்கள் கண்டு களிக்கலாம்.

நடிகர்கள், மக்கள் மத்தியில் பொதுமேடையில் நடிப்பதற்கு ‘ஆஸ்கர் அவார்டு’ கொடுத்தால், இந்நேரம் தமிழ் சினிமா நடிப்பிற்காக ஆயிரம் ஆஸ்கர் அவார்டு வாங்கியிருக்கும்.

பஞ்ச் டயலாக் பேசியவர்கள், எப்படி பம்முறாங்க..

குட்டிகள் கதையும் புட்டிகள் கதையும் பேசி மகிழ்கிறவர்கள்; மேடையில் எப்படி குட்டிக் கதை சொல்லி பல்டி அடிக்கிறார்கள் என்பதை எல்லாம் கண்டு கை தட்டி மகிழலாம்.

**

நாங்க சூட்டிங் போறது மட்டும் இல்ல லேட்டு

தமிழனுக்காக போராடுனா நீ குடுப்பியா துட்டு

ரொம்ப பேசுனா income tax ல வைப்பாண்டா வேட்டு

**

ராஜபக்சேவை திட்டுனா ரிலீஸ் ஆகாதுடா எங்க படம் இலங்கையில…

அட்டென்டென்ஸ் போட்டா போதும் தமிழன் அடிப்பாண்டா விசிலு தியேட்டரில..

தொடர்புடையவை:

மாணவர் போராட்டம்: காணாமல் போன கமல், நாட் ரீச்சபுள் ரஜினி

இலங்கை ராஜபக்சேவுக்கு ‘எதிராக’ சர்வதேச ராஜபக்சே !

மாணவர் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு..?

மாணவர் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு..?

Student Struggle

படம்: தமிழ் டெனி

ஈழத்தமிழர்கள் துயர்துடைக்கும் அக்கறையில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் தொடர்ந்து அர்பணிப்போடு நடந்து வருகிறது.

மாணவர்கள் போராட்டத்தை நீர்த்து போக வைக்க, ஒடுக்க, அதை தன் கட்சியின் கணக்காக காட்ட பல சதிகளை அரசுகளும் அரசியல் கட்சிகளும் செய்ய முயற்சிக்கின்றன.

இந்தச் சூழலில், தனி தனியாக போராடும் மாணவர்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்த வேண்டியது கட்டாயமும் அவசரமும்கூட.

இதை மாவட்ட வாரியாக ஒருங்கிணைத்து, அதை மாநிலம் முழுக்க வழிநடத்தும் ஒரு தலைமை குழுவை உருவாக்கலாம். அந்த தலைமையை மாணர்வகளிடமிருந்தே உருவாக்க வேண்டும்.

மாணவர்களை ஒருங்கிணைக்க அவர்களை பின்னணியிலிருந்து வழிநடத்த, தேர்ந்த ஒரு குழு அவசியம்.

அதற்கான தகுதி, எப்போதும் ஈழத்தமிழர்களுக்காக துணிந்து அர்பணிப்போடு போராடும் வழக்கறிஞர்களுக்கே இருக்கிறது.

தழிழகத்தை பொறுத்தவரை அரசியல் கட்சிகள் சாராத தன்னெழுச்சியான தலைகீழ் மாற்றத்தை உருவாக்கும் போராட்டங்கள் நடந்தால், அது வழக்கறிஞர்களின் தலைமையில் மாணவர்களின் துணையோடுதான் நடைபெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

முத்துக்குமார் தியாகத்தை ஒட்டி நடந்த தமிழகத்தின் ஈழத்தமிழர் ஆதரவு போரட்டங்கள் அதை நிரூபித்தன.

திமுக, அதிமுக சார்பு பெற்ற பல சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளாலும்,

ஈழ ஆதரவு போராட்டங்களை இந்திய அரசுக்கு எதிரான போராட்டமாக நடத்துவதைவிட, திமுக எதிர்ப்பு போராட்டமாக மட்டும் மடை மாற்றி விடுகிற, தமிழினவாத குழுக்களாலும் அந்தப் போராட்டங்கள் சிதறிடிக்கப்பட்டது.

அப்போதாவது திமுக ஆளுங்கட்சி, ஒருவகையில் அந்த மடைமாற்றம் பொருத்தமாக இருந்தது. ஆனால், இப்போதும் அதுவேதான் நடக்கிறது.

அன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சுப்பிரமணிய சுவாமிக்கு தக்கப் பாடம் கற்பித்தார்கள்; அதன் விளைவாக திமுக அரசால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

அதன் பிறகு வழக்கறிஞர்களிடம் ஏற்பட்ட தொய்வு, ஒட்டுமொத்தமாகவே தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போர்குணம் கொண்ட போராட்டங்களில் பின்னடைவு ஏற்பட்டது.

வழக்கறிஞர்களுக்குள் வழி நடத்தி செல்லக்கூடிய தலைமை குழு இல்லாததும் அதற்குக் காரணம்.

அதே போன்ற துயரம் இன்றைய மாணவர் போராட்டத்தையும் சுற்றி வளைக்கிறது.

இந்த நேரத்தில் வழக்கறிஞர்கள்  மாவட்ட வாரியாக தங்களுக்குள் சிறப்பான ஒரு குழுவை உருவாக்கி, மாணவர்கள் போராட்டதை வழி நடத்த வேண்டியது அவசியம்.

காவல் துறை, கல்லூரி நிர்வாகம் இவைகளின் மிரட்டல்களிலிருந்து மாணவர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பை தரவும், இந்தப் போராட்டத்தால் அவர்களின் கல்வி பாதிக்காமல் பாதுகாக்க வேண்டியதும் அவசியம்.

இது போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் பெற்றோர்கள் கவலைகள் மூலமாக, மாணவர்களுக்கு ஏற்படுகிற உளவியல் நெருக்கடியிலிருந்தும் விடுவிக்கும்.

இது நடந்தால், இந்தப் போராட்டம் அடுத்தக் கட்டத்திற்கு நகரும். இல்லையேல் ஒரு சில நாட்களில் உண்ணாவிரதத்தோடே இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும்.

ராஜபக்சேவை தண்டிக்க, அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பது எதிர்ப்பது என்பதையும் தாண்டி, ஈழத்தமிழர்கள் பிரச்சினையை மாணவர்கள் போராட்டம் பெருவாரியான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்கிறது,

சந்தர்ப்பவாதிகளை அம்பலப்படுத்துகிறது,

ஜாதி, மதங்களைத் தாண்டி மக்கள் பிரச்சினைக்கு போராட அழைக்கிறது என்பதினாலும் மாணவர்கள் போராட்டத்தை நாம் ஆதரிக்க வேண்டியது அவசியம்.

தொடர்புடையவை:

‘அழுகிய முட்டையே அதிகபயன் தரும்’ அல்லது ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்.. இவன் ரொம்ப… நல்லவன்’

வழக்கறிஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் – தமிழகத்தில் ராமராஜ்ஜியம்தான் நடக்கிறது

பா.ஜ.க. அலுவலகம் மீதான தாக்குதலும் சுப்பிரமணிய சுவாமி மீதான தாக்குதலும்

முத்துக்குமாரிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது, தீக்குளிப்பை அல்ல; ‘தீ’ யை

தமிழர்களின் எழுச்சி ஊர்வலத்திலிருந்து நேரடி பேட்டி