Tag Archives: சி

மணிவண்ணனின் அமைதிப்படை – 2: அதேதான் இதுவும் என்றால் So Sad! – தலித் விரோதமும் திராவிட இயக்க எதிர்ப்பும்

Nagaraja Cholan MA MLA

மிழ் இன உணர்வாளர் நடிகர் மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படை இரண்டாம் பாகம் வெளியாகிறது. அதையாவது நீங்கள் ஆதரிப்பீர்களா? என்று சலிப்போடு சிலத் தோழர்கள் கேட்கிறார்கள்.

இரண்டாம் பாகம் தமிழ் உணர்வு படமா என்பதை பார்ப்பதற்கு முன், அவருடைய முதல் பாகமும் முந்தைய படங்களும் என்ன உணர்வில் இருக்கிறது என்று பார்க்க வேண்டியது கட்டாயமல்லவா?

இயக்குநர் பாலாஜி சக்திவேல், ‘இந்தப் படம் ஓடினால்தான் தனக்கு வாழ்க்கை’ என்ற நிலையிலிருந்து தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் முயற்சிக்காத வடிவத்தில், தன் வாழ்க்கையை பணயம் வைத்து எளிய மக்களின் அவலம் நிறைந்த வாழ்க்கையை,  தியாக உள்ளத்தை, போர்குணத்தை உயிர்ப்போடு தனது ‘வழக்கு எண் 18/9’ படத்தில் காட்டியிருந்தார்.

சங்ககிரி ராஜ்குமார், தனது முதல் படத்திலேயே பெரியாரின் பகுத்தறிவு கொள்கையை பிரச்சாரம் செய்வதற்காக தன் வீட்டை விற்று ‘வெங்காயம்’ என்று படம் எடுத்தார்.

இயக்குநர் மணிவண்ணன் 49 படங்களை இயக்கியிருக்கிறார். இந்த 49 படங்களும் மணிவண்ணன் அடிக்கடி மேடையில் உச்சரிக்கிற மார்க்சிய அரசியல், மாவோ கண்ணோட்டம், பிரபாகரனின் போர் தந்திரம், தமிழர் அரசியல், தமிழர் துயரம், தமிழின் சிறப்பு, ஈழத் தமிழர் துயரம் என்ற உள்ளடக்த்தோடு எடுக்கவில்லை என்பதுகூட பிரச்சினையில்லை;

மாறாக பெண்களுக்கு எதிராக, எளிய மக்களுக்கு எதிராக, தமிழர்களுக்கு எதிராக, தமிழுக்கு எதிராக, பொறுக்கித் தனமான வசனங்களுக்கு கதாநாயக அந்தஸ்த்தும் அந்த வசனங்களை ரசிக ஆண்கள் பெண்களைப் பற்றி பேசிக் கொள்வதற்குமான ஒரு வழக்கத்தையும் தமிழகத்தில் ஏற்படுத்திய ஒரே இயக்குநர் ‘மவோ’ மணிவண்ணன் மட்டுமே.

தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே கொன்ற ஜெயபிரகாஷ் என்பவர் ‘நான் அந்தக் கொலைகளை செய்வதற்கு மணிவண்ணன் இயக்கிய நூறாவது நாள் படம்தான் காரணம்’ என்று சொன்னதை இந்தப் பட்டியலில் நான் சேர்க்கவில்லை.

தன்னுடைய வசதியான வாழ்விற்காக தமிழ் மக்களை தன் திரைப்படங்களால் சூறையாடியவர்தான் இப்போது தமிழனின் வீழ்ச்சிக் குறித்து சூளுரைக்கிறார்.

சரி, அது படத்திற்குள் அவர் பேசியது. வெளியே,

‘தமிழ் நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும். தமிழ் நாட்டில் தமிழனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்’ என்று அவர் அதிகம் பேசுகிறார்.

ஆனால், நடிகர் மோகனை தனது 16 படங்களில் கதாநாயகனாக நடிக்க வைத்தார். அவர் ஒரு கன்னடர். தனது மகளின் திருமணத்தில் பல பச்சைத் தமிழர்கள் இருந்தபோதும் கன்னடரான ரஜினிகாந்தை ‘தாலி’ எடுத்து கொடுக்க வைத்துதான் திருமணத்தை நடத்தினார்.

அடுத்த ஜாதிக்காரனிடம் தமிழ் உணர்வு பேசிவிட்டு, தன் ஜாதிக்காரனிடம் ஜாதி உணர்வோடு பழகுகிற ஒரு ஜாதிய தமிழ்த் தேசியவாதியைப்போல்,

எந்த இனத்தாரோடும் சேர்ந்து பிழைப்புவாதத்திற்கு எது பொருத்தமோ அதை தன் சொந்த வாழ்க்கையில் செய்வதும், தமிழன் உணர்வை கடைபிடிக்கச் சொல்லி அடுத்தவர்களுக்கு போதிப்பதும்தான் திரைக்கதை யுக்தி.

வேதம் புதிது, கடலோரக் கவிதைகள், பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்ற படங்களில் கண்ணியமான, அழுத்தமான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வந்த சத்யராஜை; பெண்களை பாலியல் ரீதியான கண்ணோட்டத்தில் மிக மோசமாக, ஊதாரித்தனமாக வசனங்கள் பேச வைத்து அவரை ‘பெண் பித்தன்’ வடிவத்திற்கு மாற்றிய புகழும் ‘மார்க்சின் மாணவன்’ மணிவண்ணனையே சேரும்.

அவருடைய புகழ்பெற்ற அமைதிப்படை படத்தின், ‘வில்லன் மனோபாவம்’ கொண்ட நாயகனுக்கு பெயர் அமாவாசை.

‘அமாவாசை’ என்பது தலித் குறியீடு. தலித் மக்கள் எந்தவகையிலும் தங்களை உயர்வாக காட்டிக் கொள்ளக் கூடாது. அவர்கள் பெயர்கள்கூட இழிவானதாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்து சமூக அமைப்பின் முறை.

அதனால்தான் அமாவாசை, மண்ணாங்கட்டி போன்ற பெயர்களை தாழ்த்தப்பட்ட மக்களிடம் மட்டுமே பார்க்க முடியும். அதுபோலவே அவர்களுக்கு எந்த சொத்தும் இருக்கக்கூடாது.

அதன் அடிப்படையிலேயே அமைதிப்படையில், அமாவாசை கதாபாத்திரம் ரோட்டில் தேங்காய் பொறுக்கிக்கொண்டு அறிமுகமாகும்.

‘அமாவாசை’ அரசியல்வாதியாக மாறிய பிறகு நாகராஜசோழனாக பெயர் மாறுவது திராவிட இயக்க குறியீடு.

‘புனைப் பெயர், தோளில் துண்டு’ இதுபோன்ற குறியீடுகள் திராவிட இயக்கத்தை மட்டுமே அடையாளப்படுத்துகிறது.

அமாவாசை என்கிற தலித், தன்னுடைய திராவிட இயக்க பாணியிலான அரசியல் முறையால் சட்டமன்ற உறுப்பினராகி, தான் வாழ்கிற ஊரையே சூறையாடுகிறான்.

பரம்பரை பரம்பரையாக பணக்காரராக இருக்கிற அப்பாவியான ராஜ பரம்பரை அல்லது பண்ணையாரை ஏமாற்றி அவரின் ஒரு பாவமும் அறியாத மிக அப்பாவியான மகளை திருமணம் செய்து கொள்கிறான். அவர்களின் சொத்தை தன் வசப்படுத்திக் கொள்கிறான்.

ராஜ பரம்பரை என்பது காங்கிரஸ் குறியீடு. பண்ணையார் எல்லாம் காங்கிரஸ்காரன்தானே?

‘பாரம்பரியமிக்க புனிதர்களான காங்கிரஸ் ஆட்சியை தன் தந்திரத்தால் தோற்கடித்துவிட்டு, ஆட்சிக்கு வந்தது திமுக.’ – இதுதான் அமைதிப்படை முதல் பாகம் முன்மொழிந்த அரசியல்.

இந்தத் தொடர்ச்சிதான் வரப்போகிற இரண்டாம் பாகத்திற்கும் என்றால்… So Sad!

தமிழ்த் தேசியத்தின் நேர் எதிர் அரசியல் இந்திய தேசியம், மத்திய அரசு. அதைக் கட்டி காப்பாற்றும் மாநில அரசுகள்.

தமிழ்த் தேசியம் பேசிகிறவர்கள் இவைகளுக்கு எதிராக பேசுவதுதான் அடிப்படை அரசியல். அதன் பிறகே திராவிட இயக்க எதிர்ப்பு இன்னும் பிற…

மாறாக இதை பேசுவதற்கு பயந்து, எதிர்கட்சியாககூட இல்லாத திமுகவையும் அதன் தலைவரையும் மட்டுமே விமர்சிப்பதும் கண்டிப்பதும் வடிவேல் பாணியிலான வீரம். அப்படி மட்டும் விமர்சிப்பதால். அதிமுக அரசின் ஆதரவை பெறலாமே தவிர, வேறு ஒரு வௌக்கெண்ணை வேலையும் நடக்காது.

இன்றைய நிலையில் இதை இப்படி சொல்லலாம், ‘இது இந்திய தேசிய ஆதரவு பெற்ற தமிழ்த் தேசியம்’

இந்த வடிவேல் பாணி வீரத்தில் படம் எடுத்துவிட்டு, ‘என் வீட்டில் கல் விழுந்தால்… நடக்கிறதே வேற’ என்று வடிவேல் பாணியிலேயே வசனம் வேறு.

விஜய் டி.வியில் நடிகர் பிரகாஷ்ராஜ், ‘சினிமாவில் ஜாதி இருக்கிறது. தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிரான கவுரவக் கொலைகள் நடக்கிறது. ரெட்டை டம்பளர் முறையும் இருக்கிறது. இதை குறித்து வாழும் காலத்தில் கலைஞனாக நான் என் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது என் கடமை. நாளை என் மகள் என்னை கேள்வி கேட்டால் நான் என்ன சொல்வேன்?’ என்று குற்றம் உணர்வோடு பேசிய அந்த நேர்மை ‘மவோ’ மணிவண்ணனிடம் ஒருபோதும் வெளிபட்டதில்லை.

ஜாதி இந்துவின் தலித் விரோதத்தை படமாக எடுங்கள், அதுதான் வீரம். அப்படி எடுத்தா, ‘விட்ல கல்லு விழாது. கழுத்துல கத்தி விழும்’ அப்படிங்கற பயம்தானே?

**

சீமான் பற்றி இப்போது உயர்வாக பேசும் மணிவண்ணன், 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ம் தேதி கோவையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய கூட்டத்தில் சீமான் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.

சீமானை தனிமைப் படுத்தி, தமிழகம் முழக்க அவருக்கு எதிராக ஆர்ப்பட்டத்தையும் நடத்தியது.

இராம. கோபாலன் திரைத்துறையினரையும் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்த இராம. நாராயணனையும் சந்தித்து ‘சீமானை சினிமாவை விட்டு வெளியேற்ற வேண்டும்’ என்று மனு கொடுத்தபோது, ஒரு தமிழ் உணர்வாளராககூட அல்ல, ஒரு சினிமாககாரராககூட தனது கண்டனத்தை தெரிவிக்காதவர்தான் இந்த மவோ மணி.

அன்று தனியாக நின்ற சீமானுக்கு ஆதரவாக களம் இறங்கியவர்கள் மார்க்சிய-லெனினிய அமைப்புகளும், தலித் இயக்கங்களும், பெரியார் தொண்டர்களும்தான்.

ஆனால், இன்று தன் பிணத்தையே சீமானிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அளவிற்கு நெருக்கமாகியிருக்கிறார் மணிவண்ணன்.

ஆமாம், சீமானிடம் மணிவண்ணனின் பிணத்தை ஒப்படைத்துவிட்டு, அவருடைய வீடு உட்பட்ட சொத்துக்களை அவர் மகனிடம் ஒப்படைத்துவிடுங்கள்.

அதுதான் தமிழ்த் தேசியத்திற்கு அவர் செய்யும் தொண்டு.

தொடர்புடையவை:

இயக்குநர் மணிவண்ணனின் ‘ஆன்மா’ பாரதிராஜா-விகடனை மன்னித்தாலும் துரோகத்தை மன்னிக்காது!

பூணூல் Vs துண்டு – பார்ப்பனியம் Vs திராவிட இயக்கம்

இந்து மதவெறியர்களை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

தங்கர்பச்சான், பாரதிராஜாவின் இன உணர்வு அல்லது தமிழ் சினிமா இயக்குநர்களின் பெர்பாமன்ஸ்!