Site icon வே. மதிமாறன்

இரண்டாயிரம் ஆண்டுகளின் விஸ்வரூபம் டாக்டர் அம்பேத்கர்

இந்தியாவின் மிக சிறந்த அறிவு ஜீவி என்று நீங்கள் யாரை சொல்வீர்கள்?

நா.சுந்தரன்,கோவை. 

டாக்டர் அம்பேத்கரை. இரண்டாயிரம் ஆண்டுகளில் இன்றுவரை இப்படி ஒரு அறிவாளியை இந்தியா கண்டதில்லை.

அவரின் பார்ப்பன எதிர்ப்பு. இந்து மத எதிர்ப்பு இவைகளுக்காக மட்டும் சொல்லவில்லை. விஷயங்களை அவர் அலசி ஆராய்கிற முறை, அந்த தர்க்கம் அலாதியானது. உலகத் தரம் வாய்ந்தது.

விவாதங்களில் எதிரிகளை மிகச் சரியாக கணித்து, மிகச் சிறப்பான தயாரிப்புகளோடு லாவகமான வார்த்தைகளால் அவர்களை தகர்த்தெறிகிற அம்பேத்கரின் முறை அழகோ அழகு.

பார்ப்பனப் பெண்கள் உட்பட இந்தியப் பெண்களுக்கு இன்று இந்துச் சட்டத் திருத்தத்தின் மூலம் கிடைத்திருக்கின்ற குறைந்தபட்ச பாதுகாப்பே அம்பேத்கர் போராடி பெற்று தந்தது தான்.

பெண்களுக்கான சொத்துரிமை, விவாகரத்து, ஜீவனாம்சம், ஒரு தார மணம், வன்கொடுமைகளுக்குத் தண்டனை இவைகளை சட்டமாக்க அவர் பட்ட சிரமமும், அவமானமும் அதிகம்.

அந்த மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்ட பார்ப்பனர்கள், பண்ணையார்கள், பிரபுக்கள், ராஜாக்களிடையே அம்பேத்கர் பாய்ந்தும், பதுங்கியும் நடத்திய விவாதம் ஒரு ராஜ தந்திரம் தான். (நம்ம ஊர்ல இருந்து போன பட்டாபி சீதாராமய்யர், .வி.அளகேசன், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் போன்ற ஜாதி வெறி பிடித்த, பெண்களுக்கு எதிரான கருத்துக் கொண்ட லூசுகளும் அதில் உள்ளடக்கம்.)

அதேபோல் வட்டமேசை மாநாட்டில் அவர் தனிநபராக இருக்க, காந்தி உட்பட எதிரிகளை அம்பேத்கர் தன் வாதங்களால் தூக்கிப் போட்டு பந்தாடிய முறையை, படிக்க படிக்க பரவசமூட்டும்.

அது ஆயிரம் ஆண்டு கோபம். விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்து நின்றானாமே சிவன், அதை விட உயரம், வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கரின் விஸ்வரூபம்.

வே. மதிமாறன்

மே 2007 சமூக விழிப்புணர்வு

வே.மதிமாறனிடம் கேளுங்கள்

Exit mobile version