Site icon வே. மதிமாறன்

இந்துவா? அது அவுங்க மட்டும்தாங்க

vinayagar.jpg

ஆடு, மாடுகளை பலியிடுதல் பிடிக்காது பகவானுக்கு, சுத்த சைவம்.

இஸ்லாமியர் ரத்தம் என்றால்… அது தான் ஆனைமுகத்தானுக்கு கிருஷ்ணா ஸ்வீட்..

இந்து மதம் என்பது ஜாதிதான் என்று கூறுகிறீர்கள். அப்படியானால் அங்கே மத உணர்வே கிடையாதா?
-எஸ். விக்னேஸ்வரன்

இஸ்லாமியர்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியை தூண்டுவதற்கும், அவர்கள் மீது வன்முறையை ஏவுவதற்கும் முழுக்க முழுக்க இந்துமத ‘உணர்வு’ தான் பயன்படுத்தப்படுகிறது.

இந்த இந்து உணர்வு பக்தி சார்ந்தோ அல்லது இந்துக்கள் ஜாதி வித்தியாசம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளவோ பயன்படுவதில்லை.
பெரும்பாலும் வணிக நோக்கம் கொண்டதாகவும், அரசியல் காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

மொத்த வியாபாரத்தில் இஸ்லாமியர்களோடு போட்டி போடுகிற இந்து மற்றும் இஸ்லாமியர்கள் அல்லாத மதத்தைச் சேர்ந்த,

குறிப்பாக மகாவீரரை கடவுளாகக் கொண்ட ஜெயின மதத்தைச் சேர்ந்த  மார்வாடி சேட்டுகளும் (சமண சமயம்) சில பகுதிகளில் கிறிஸ்துவ முதலாளிகளும், சில சீக்கிய முதலாளிகளும் – ஆர்.எஸ்.எஸ்.,  இந்து மதவெறி கும்பலுக்கு கணிசமான ‘நன்கொடை’ தருகிறார்கள்.

இன்னொருபுரம், ‘இந்துக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம், இஸ்லாமியர்கள்தான். பாருங்கள் அவர்கள் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள். அரசின் மூலமாக எவ்வளவு சலுகைகளை அனுபவிக்கிறார்கள். ஆனால் நமக்கு ஒன்றுமே இல்லை.’ என்ற பொய் பிரச்சாரத்தின் காரணமாக இந்துக்களின் ஓட்டைப் பெற, இஸ்லாமியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்த அடித்தட்டு மக்களிடம் இந்து என்கிற ‘உணர்வு’ ஊட்டப்படுகிறது.

சூத்திரர்கள், தீண்டத்தகாத மக்கள் என்று  எளிய மக்களை அவமானப்படுத்துகிற அந்த இந்து மேல் ஜாதி உணர்வுதான், இஸ்லாமியர்களுக்கு எதிராக பொய்யான இந்து என்கிற பொது உணர்வில் அணித்திரட்டப்படுகிறார்கள்.

இந்தத் தந்திரத்தை எளிதாக புரிந்துகொள்ள வைக்கிறது உயர்ஜாதிக்காரர்களின் இந்த செயல்பாடு:

தாழ்த்தப்பட்ட ‘இந்துக்கள்’ வாழ்கிற தெரு வழியாக சாமி ஊர்வலத்தையோ, தேரோட்டத்தையோ அனுமதிக்காத அந்த இந்து உயர்ஜாதி வெறிதான், இந்துமதத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லாத  இஸ்லாமியர்கள் வாழும் தெருவழியாகத்தான் வினாயகர் ஊர்வலத்தை நடத்துகிறார்கள். அரசு தடை விதித்தாலும் தடையை மீறியும் நடத்துகிறார்கள்.

அப்படி நடத்தப்படுகிற அந்த ஊர்வலத்தில் தாழ்த்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கே முன்னுரிமை தருகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

மார்ச்21, 2008

Exit mobile version