Site icon வே. மதிமாறன்

சிதம்பரம் கோயிலில் பல ரவுடிகளும் ஒரு நாயகனும்

பெரியவர் ஆறுமுகசாமியுடன் சசி, வெங்கட், நிதி, முத்துக்குமார்

சிதம்பரத்தை சேர்ந்த நண்பர் அருள், ஜப்பானில் வேலை செய்கிறார். அவரின் தங்கை திருமணம் 14-6-2009 அன்று கடலூரில் காலை  நடைபெற்றது. மாலை சிதம்பரத்தில் மணமக்கள் வரவேற்பும் நடைபெற்றது.

இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொளள வேண்டும் என்று நண்பர் அருள் ஜப்பானில் இருந்தே பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சென்னைக்கு நேரில் வந்தும் அழைத்தார். போதகுறைக்கு சென்னையிலிருந்து செல்வதற்கு ஏசி வசதிகொண்ட கார் வசதியும் செய்து கொடுத்தார். அதன்பிறகும் போகாமல் இருப்போமா?

நண்பர்கள் சசி, வெங்கட், முத்துக்குமார், கலாநிதி, ஸ்ரீதர் (வந்தவாசி) சனி இரவே 12.00 மணியளவில் (13-6-2009) கடலூர் போய் சேர்ந்துவிட்டோம். 14-6-2009 காலை கடலூரில் திருமணத்தில் கலந்து கொண்டோம். பெங்களுரில் இருந்து நண்பர் கை. அறிவழகனும் வந்திருந்தார். திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அருள் தொகுத்த ‘சங்க இலக்கியம் தமிழர்களின் அடையாளம் என்கிற நூல் (ரூ.30 பெருமானமுள்ள) இலவசமாக கொடுக்கப்பட்டது.

‘மாலை சிதம்பரம் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் நீங்கள் பிச்சாவரத்தை சுற்றி பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்‘ என்று அருள் அதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். உடன் சிதம்பரத்தைச் சேர்ந்த நண்பர் அன்புமணியும் வந்தார்.

‘சிதம்பரம் கோயிலுக்கு கண்டிப்பாக போக வேண்டும். பெரியவர் ஆறுமுகசாமியை பார்க்க வேண்டும்’ என்ற வெங்கட்டின் விருப்பம், எல்லலோரின் விருப்பமாக மாறியது. பிச்சாவாரம் முடித்து சிதம்பரம் சென்றோம். (நான் ஏற்கனவே அந்தக் கோயிலுக்கு போயிருக்கிறேன். அரசுடமை ஆன பிறகு இப்போதுதான்.)

கடுமையான வயிற்றுவலியின் காரணமாக ஸ்ரீதர் வண்டியிலேயே சாய்ந்துவிட்டான். மற்ற ஆறு பேரும் மாலை சிதம்பரம் கோயிலுக்குள் சென்றோம்.  வாட்ட சாட்டமாக அடியாட்களைப் போல் இருந்த தீட்சதர்களைப் பார்த்துபோது பரிதாபத்திற்குரிய உருவம் கொண்ட பெரியவர் ஆறுமுகசாமி ஞபாகத்திற்கு வந்தார்.  முறுக்கேறிய உடலமைப்போடு நவீன ஆயுதங்களோடு லெபனான் பள்ளத்தாக்கையும் அந்த எளிய மக்களையும் தாக்கிய இத்தாலி இராணுவ ரவுடிகளும்,  அவர்களை எதிர்த்து வீரோத்தோடு போர் புரிந்த தள்ளாதக் கிழவன் உமர் முக்தரையும் நினைத்துக்கொண்டேன்.

தீட்சிதப் பார்ப்பனர்களிடம் பெரியவர் ஆறுமுகசாமி பற்றி விசாரித்தால்…. என்ற யோசனை வந்தது.

வருகிறவர் போகிறவர்களை மடக்கி, ‘சார் மதுரையா.. வாங்க சார் கோவையா.. இங்க வாங்க சார்’  என்று காய்கறி வாங்கப்போனவரை மடக்கி ஆம்னி பஸ்ஸில் மதுரைக்கு அனுப்பி வைக்கும் புரொக்கர் போல்,  ‘பணம் கட்டினால் வீட்டுக்குத் தபாலில் பிரசாதம் அனுப்பிவைப்போம்’ என்று பக்தியை மார்க்கெட் பண்ணிக்கொண்டிருந்த ஒரு தீட்சிதரிடம்  – நான், வெங்கட், அன்புமணி சென்றோம்.

வெங்கட் அவரிடம், ‘பெரியவர் ஆறுமுகசாமி எங்கிருக்கறார்?’ எனறு கேட்டதற்கு,  ‘அப்படி யாரும் இங்க இல்ல’ என்றார் தீட்சிதர். விடாமல் வெங்கட்,  ‘இல்ல டிவியில எல்லாம் காட்டுனாங்களே அவரு…’ என அப்பாவிப்போல் கேட்க,

கடுமையான தீட்சிதர், ‘அவன் ஒரு பிச்சக்கார நாய்… எங்கேயாவது தெருவுல பிச்சை எடுத்துக்கிட்டு இருப்பான்.’ என்று அன்பே சிவமாக பேசிவிட்டு,  ‘நீங்க பணம் கூடுங்க வீட்டுக்கு பிரசாதம் வரும்’ என்றார்.

‘யாரு பிச்சைக்கார நாய்?’ நினைத்துக்கொண்டேன்.

பிறகு நண்பர்கள் மன்னை முத்துக்குமார், நிதி இருவரும் சென்று அதே திட்சீதரிடம் பெரியவர் ஆறுமுகசாமியை பற்றி விசாரித்தனர். அவர்களிடமும் இப்படியே, காதலாகி… கசிந்துருகி…. பதில் அளித்திருக்கிறார்.

பக்தர்கள் சிதம்பரம் கோயிலுக்கு சென்று நடராஜனை தரிசிக்கிறார்கள். பகுத்தறிவாளர்கள் சிதம்பரம் கோயிலுக்கு சென்று ஆறுமுகசாமியை சந்திக்கிறார்கள் என்று ஆகியிருக்கிறது இப்போது.

ஒரு வழியாக பெரியவர் ஆறுமுகசாமியை கண்டுபிடித்தோம். அவர் நடராஜனுக்கு மேற்கு பக்கத்தில் அமர்ந்திருந்தார். சந்திக்க வருகிறவர்களிடம் உற்சாகமாக பேசினார். அவருடன் நின்று நாங்கள் படம் எடுத்துக்கொண்டோம். கர்ப்பகிரகத்தில் இருந்து கடுமையான குரல்  எச்சரித்தது,  ‘இங்கே போட்டோ எடுக்கக்கூடாது.’

கர்ப்பகிரகத்தில் இருந்து எச்சரித்தது நடராஜன் அல்ல. தீட்சிதர்தான். ஆனால் எங்களுக்கு அருகிலேயே ஒரு இளம் பெண் கோயிலை படம் எடுத்துக் கொண்டிருந்தார். அவரிடம் பல்லைக் காட்டிக் கொண்டிருந்தார் ஒரு தீட்சிதர்.

இவ்வளவு விரோதமும் அடியாட்களைப்போல் உருவமும் கொண்ட தீட்சிதர்களை, ஐந்தாண்டுகளுக்கு முன் தனிநபராக சென்று அவர்களோடு மோதிய பெரியவர் ஆறுமுகசாமியின் வீரம் போற்றுதலுக்குரியது. இவருக்கு முன் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு  அப்படிமோதிய வள்ளலாரை தீட்சிதர்கள் அடித்து வீதியில் வீசியிருக்கிறார்கள். அதில் கோபிததுக் கொண்டு இனி சிதம்பரமே வருவதில்லை என்று போன வள்ளலார் வடலூரில் ஒரு சிற்றம்பல மேடையை ஏற்படுத்தினார். ஆனால் ஆறுமுகசாமியோ, தீடசிதப் பார்ப்பனர்கள் அடித்து வீதியில் வீசிய போதும் துணிந்து எதிர்த்து நின்றார்.

பெரியவர் ஆறுமுகசாமியுடன் வெங்கட், நிதி, நான், அன்புமணி

பக்தர்களின் உரிமைக்காக போராடிய பெரியவர் ஆறுமுகசாமியின் சுயமரியாதைக்கும் அவரின் வீரத்திற்கும் துணை நின்ற, எனது இனிய நண்பர் வழக்கறிஞர் ராஜு தலைமையிலான மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்களுக்கும், மக்கள் கலை இலக்கியக் கழகத்திற்கும் நமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

சிதம்பரம் கோயிலை அரசுடமை ஆக்க பெரும் முயற்சி எடுத்துக்கொண்ட மக்கள் கலை இலக்கிய கழகத்திற்கும் வழக்கறிஞர் ராஜு தலைமையிலான மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்களுக்கும்  நமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தக் காலத்திலேயே இவ்வளவு சிரமங்கள் பட வைக்கிற பார்ப்பனர்கள் 1925ல் என்ன பாடுபடுத்தியிருப்பார்கள்? அதுவும் திருப்பதி உட்பட ஒட்டுமொத்த தென்னிந்திய கோயில்களையும் அரசுடமை என்றால்….. பார்ப்பனர்கள் மட்டுமா சைவ மட ஆதினங்களும் எதிராக நின்றார்கள்.

அந்த எதிர்ப்பை எல்லாம் சமாளித்து, பெரும்பாடுபட்டு, அவமானப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பலபோராட்டங்களுக்கு பின் இந்தியாவிலேயே முதல் முறையாக 1925ல் இந்துமத பரிபாலன சட்டம் என்கிற பெயரில் இநதுக் கோயில்களை அரசுடமை ஆக்கும் சட்டத்தை, இந்து அறநிலையத்துறையை கொண்டு வந்த நீதிக்கட்சியின் முதல்வர் பனகல் அரசரை பெருமிதத்தோடு நினைத்துப் பார்க்கிறோம்.

சிதம்பரம் கோயிலில் அடைந்த வெற்றி, தந்தை பெரியாருக்குக் கிடைத்த வெற்றி என்பதை விட,  பனகல் அரசருக்கு கிடைத்த வெற்றி என்பது கூடுதல் பொறுத்தம் உள்ளதாக இருக்கும்.

காங்கிரசில் இருந்த பெரியார், பனகல் அரசரின் இந்துமத பரிபாலன  சட்ட மசோதாவால் பெரிதும் கவரப்பட்டார். கோயில்களின் சொத்துக்களை மருத்துவமனை போன்ற மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்துகிற நீதிக்கட்சி அரசின் முயற்சி பெரியாரை பெரிதும் கவர்ந்தது. பனகல் அரசர் மீது மிகுந்த மரியாதை கொண்டார். 1925 ல் அந்த மசோதா சட்டமான அதே ஆண்டுதான் காங்கிரசில் இருந்து வெளியேறினார் பெரியார்.

சிதம்பரம் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்ததின் பொறுட்டு இந்து அறநிலையத்துறையை உருவாக்கிய, தந்தை பெரியாரின் மரியாதைக்குரிய நீதிக்கட்சியின் முதல்வர் ராமராய நிங்கர் என்கிற பனகல் அரசரை, மிகுந்த மரியாதையுடன் நினைவு கூறுவோம்.

தமிழ்மணத்தில் வாக்களிக்க

தமிலிஷில் வாக்களிக்க

Exit mobile version