Site icon வே. மதிமாறன்

‘புலவர் என்றால் சொந்தபுத்தி இல்லாதவன், புளுகன்’- பெரியார் வைக்கும் குட்டு – 6

https://i0.wp.com/www.vikatan.com/av/2008/mar/26032008/p215d.jpg?w=1170

பெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்- 1

‘ஜாதியை குறிக்கும் சொல் தமிழில் இல்லை’- மொழிப் பற்றிய பெரியாரின் பார்வை -2

திராவிடர் என்ற சொல் தமிழர்களைத்தான் குறிக்கிறது’ பெரியாரின் நுட்பம் – 3

‘தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான்’-பெரியாரின் விசாலம்-4

‘தமிழனை, தமிழைக் கெடுத்தவர்கள், தமிழ்ப்பண்டிதர்களே’-பெரியாரின் வீச்சு -5

கவி, சிங்கப்பூர்

மிழ்ப்புலவர்களைப் பற்றி இன்னமும் கூறுகிறார் பெரியார்,

நான் தமிழை அறியாதவனல்ல. தமிழ்ப்புலவர்களை மேதாவிகளைத் தெரியாதவன் அல்ல. தமிழ் இலக்கியங்களின் தன்மையை உணராதவனல்ல.

இன்றையப் புலவர்கள் தமிழ் அபிமானிகள் தியரிடிகல் புத்தகம் படித்த புலவர்கள் என்றால், நான் பிராக்டிகல் தமிழ் அறிவு உடையவன் என்று கருதி இருப்பவன். 1920 வரை என்னிடம் வந்து வாதம் செய்யாத, கை நீட்டாத தமிழ்ப் புலவர்கள் குறைவென்றே சொல்லுவேன்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளையை எனக்குத் தெரியாது. சாமிநாத அய்யரை எனக்கு நன்றாய்த் தெரியும். சாமி வேதாச்சலத்தையும் தெரியும். கலியாண சுந்தர முதலியார் தரத்திலுள்ள பிரபல தமிழ்த் தென்றல்களையும் தெரியும்.

ஒரு சமயத்தில் நாங்கள் காங்கயம் சேஷாசல நாயுடு, முத்துசாமிக் கவிராயர், சங்கரதாஸ் (சங்கரம் பிள்ளை சங்கரதாஸ் ஆனபின்) இவர்களுடன் பேசிக் கொண்டு இருந்த போது, வள்ளுவரை  மன்னிக்கலாம். மற்ற எந்த புலவனையும், எந்த இலக்கியத்தையும் மன்னிக்க முடியாது. படிப்படியாக ஆயுள் தண்டனை, தூக்குத் தண்டனை வரையில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஆவார்கள் என்று சொன்னேன். அவர்கள் பெரும் சிரிப்பு சிரித்து கை தட்டினார்கள். இது சுமார் 1900 முதல் 1920 வரை உள்ள காலத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.

சுமார் 50. 60 வருடங்களுக்கு முன்பெல்லாம் புலவர்கள் யாராயிருந்தாலும் பிச்சை எடுத்தே தீருவார்கள். பெரிய புலவர்களுக்கு எல்லாம் மாதம் ரூ 15 முதல் ரூ 30 வரை சம்பளம் தான் சாதாரணமாக இருக்கும். அவர்கள் தகுதி எல்லாம் இலக்கியங்களை உருப்போட்டு ஒரு சொல்லுக்குப் பல பொருள் சொல்லி, மக்களை மருகச் செய்து, காசு வாங்குவதுதான் உயர்ந்த தொழிலாகும்.

புலவரைப் பற்றி என் கருத்து புலவர் என்றால் சொந்தபுத்தி இல்லாதவன், புளுகன் என்றுதான் உரை கூறுவேன். நா.கதிரை வேற்பிள்ளை என்கின்ற ஒரு தமிழ் வாயாடிப் புலவர் என்னிடம் வந்த போது, ஒரு நிகழ்ச்சியில் புலவர்களுக்குப் பகுத்தறிவு கிடையாது என்பது என் கருத்து. அதை உங்களிடமும் கண்டேன் என்று சொன்னதற்கு உன்னிடம் வந்ததே தவறு என்று சொல்லி வாங்கிக் குடித்த பாலை விரலை விட்டு வாந்தி எடுத்து விட்டார்.

இப்படி கூறிய பெரியார் இன்னும் ஒரு படி மேலே போகிறார்,

இது வரை நாட்டுக்கு, மனித சமுதாயத்திற்கு இந்த நாட்டில் எந்தப் புலவனாலும் வளர்ச்சி , அபிவிருத்தி காரியமும் ஆனது கிடையாது. அதற்கு தகுதியான புலவன் இன்று இங்கு யாரும் இல்லை. எந்த புலவனாலும் இதுவரை நமது நாட்டுக்கு சிறு மதிப்பிற்குரிய முன்னேற்ற நூல் கூட உண்டாக்கப்பட்டதில்லையே! கம்பராமாயணத்திற்கும் பெரிய புராணத்திற்கும் புதிய பொருள் எழுதிப் பணம் சம்பாதிப் பார்கள்.

இன்று தமிழில் மேதாவிகள் டாக்டர்கள் ஏராளமாக ஆகி விட்டார்கள். பூச்சும் பொட்டும் நாமமும் தான் இருக்கிறது. அவர்கள் தலையில் இருக்க வேண்டியது அறவே இல்லை. புலவரை இடித்துரைக்க இந்த நாட்டில் என்னைத் தவிர வேறு எவரும் முன்வரப் பயப்படுகிறார்கள்.

எவனைப் பக்குவப்படுத்தினாலும் மரியாதை, விளம்பரம் வந்தவுடன் தமிழைக் காக்க அல்லவா புறப்பட்டுவிடுகிறார்கள். புலவன் பொறுக்கித் தின்ன இலக்கியங்களைக் காப்பதுபோல் பொது தொண்டு மக்களும் இப்போது பலன் அடையத் தமிழைப் பயன்படுத்திக் கொண்டு வெட்கமில்லாமல் தமிழைக் காக்கிறேன் என்கிறார்கள். என்னைக் குடிகாரர் போல் வைவதில் சமாதானம் ஏற்பட்டு விடாது. கையிலுள்ள சரக்கைக் காட்ட வேண்டும்.

அட கெடுவாய் பல தொழிலுமிருக்கக் கல்வி (தமிழ்)

அதிகமென்றே கற்றுவிட்டோம். அறிவில்லாமல்

திடமு³மோ கனமாடக் கழைக் கூத்தாடச்

செப்பிடு வித்தைகளாடத் தெரிந்தோமில்லைத்

தடமுலை வேசையராகப் பிறந்தோமில்லைச்

சனியான தமிழைவிட்டு தையலார் தம்

இடமிருந்து தூதுசென்று பிழைத்தோமில்லை

என்ன சென்ம மெடுத்து உலகிலிரக்கின்றோமே

“தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்கவில்லை. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதைத்தவிர வேறு உயிர்வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு இதற்காகச் செலவு செய்த காலத்தை வேறுதுறையில் செலவிட்டால் வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதையும் 100 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தமிழ்க் கற்ற அனுபவப் புலவர் மேற்கண்ட பாடல் மூலம் எடுத்திக் காட்டியிருக்கிறார்”. (விடுதலை தலையங்கம் 16.3.1967)

-தொடரும்

Exit mobile version